ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்

தன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து “நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது” சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள். இது சுரேஷ் பிரதீபின் “மையல்” சிறுகதையில் வரும் விவரணை ஒன்று. இந்த நுணுக்கமான அவதானம் ஒன்று போதும். சுரேஷின் கூர்மையான அவதானங்களைக் காட்ட.

பெரும்பாலான பெண்கள் அணிந்துகொள்ளும் ஒரு புனைவு உடல் மொழி இந்தக் குழந்தைத்தனம். மிகச்செயற்கையாக விரிக்கும் இந்த உடல்மொழியின் பின்னால் கழிவிரக்கமும், தம்மீதான கவனிப்பைக் கோரும் தன்மையும் இருக்கும். ஒளிர் நிழல் நாவலில் இருக்கும் பலமே மானிட உறவுச்சிக்கல்களுக்குப் பின்பே இருக்கும் உளவியலைத் தொட்டுப்பேசியதன் ஆழமே என்று சொல்வேன்.

ஒளிர் நிழல் நாவலில் வரும் இரு காதப்பாத்திரங்கள் அருணா,சக்தி. சக்தியைக் கவர்ந்திழுக்க அருணா தன்னை ஆழமாகக் காயம்பட்ட பரிதாபத்திற்குரிய பெண்ணாக சித்தரிப்பாள். தன் பழைய காதலையும் அதன் தோல்வியையும் தற்போதைய திருமண வாழ்வில் இருக்கும் வீழ்ச்சிகள், குழந்தை வளர்ப்பில் இருக்கும் தியாகங்கள், கணவனிடம் இருக்கும் போதாமைகள் போன்றவற்றை உருக்கத்துடன் சக்தியிடம் குறிப்பிடுவாள். சக்தியிடம் இருந்து ஆதரவான பற்றுதல் கிடைக்கும் என்று நம்புவாள். உண்மையில் அவள் சக்தியிடம் வெளிப்படுத்தும் தோரணை ஒரு புனைவே. அதேபோல் சக்தியிடம் இருந்து வெளிப்படும் கனவான்தன்மையும் அவளின் காயங்களுக்கு மருந்துதடவுவதுபோல் அவன் பேசுவதும் ஒரு புனைவே. இருவரும் நெருங்கிவருவதற்கான வாய்ப்பாக அவை இருக்கின்றன. தெரிந்தே இருவரும் அந்தப் போலி நாடகத்தை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தும் சக்தியின் பார்வையில் மிக நுட்பமாக சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும். இவர்கள் இருவரது புனைவும் அவர்களின் உடல் கலவிவரை சென்று பின்பு நீர்ந்துபோகும். அதன்பின் அருணா சக்தியை பல இடங்களில் வெல்லமுடியாமல் தவிக்கும்போது புண்பட ஆரம்பிக்கிறாள். அதைப்பார்த்து உள்ளூர நிரம்பவே சக்தி ரசிக்கிறான், கூத்தாடுகிறான், திருப்தியடைகிறான். ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள் மிக நுட்பமான கலையாக இந்தப்பகுதியில் நிறைந்திருக்கின்றது. சுரேசின் பெண்கள் மீதான கூர்மையான அவதானிப்பு உண்மையில் வியப்பு கொள்ளச் செய்கிறது.

இந்த நாவலின் வடிவம் புனைவுக்குள் புனைவைக் கொண்டது. நாவலுக்குள் நாவல் ஒன்று வருகிறது. அந்த நாவல் எழுதி முடிக்கப்பட்டதா இல்லையா என்று சரிவரத் தெரியவில்லை. காரணம் அதன் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். நாவலின் சில அத்தியாயங்களும் அதன் பின்னைய நிகழ்வுகளும் வருகின்றன. இவற்றின் தொகுக்கப்பட்ட வடிவமே புனைவாக இருக்கின்றன.

சித்தரிப்புகளில் அதிகமான வார்த்தைகளை சுரேஷ் பயன்படுத்துவதில்லை. விரைவாகவே சொல்லவந்ததை காட்சிபூர்வ சித்தரிப்பின்றி சொல்லிவிடுகிறார். நிகழும் சம்பவங்கக் களங்களின் புறவய சித்தரிப்புகள் இல்லை, கதாப்பாத்திரங்களின் உருவக வர்ணனைகள் இல்லை. ஆனால், அகவய உணர்வுகளின் சித்தரிப்புகள் அபாரமாக வருகின்றன. அகவயத் தேடல் அலைகழிந்து அலைகழிந்து எழுந்து சரிகிறது. அதே நேரத்தில் புறவய சித்தரிப்பில் நல்ல கூர்மையான உவமைகளும் சில இடங்களில் வரத்தான் செய்கின்றன. ( உதாரணம் – 1 விரல் சுண்டினால் அறை ஒளிர்வதுபோல என் முகம் சுண்டியது அவளை ஒளிரச் செய்தது, 2 – நிறைந்த கருமையில் எச்சில் துப்பியது போல, நாங்கள் பயணித்த பேருந்து அந்தச் சாலையில் ஒளியையும் ஒலியையும் கலங்கடித்துச் சென்றது. பேருந்துக்கு வெளியே இருள் அடர்த்தியாகத் திரண்டிருந்தது. முழித்துப் பார்க்கும் கண்களென இடையிடையே தென்பட்ட குடிசைகளின் வெளிச்சம் என்னை அதிரச் செய்து கொண்டிருந்தது. வெளிச்சங்கள் தென்படாமலாகி அடர் இருள் சூழ்ந்துகொண்டபோது தனித்து விடப்பட்டவன் போல உணர்ந்தேன்.) சுரேஷ் தனக்கான மொழிவடிவத்தை கண்டுகொண்டுவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

மற்றொரு மிக முக்கியமான சித்தரிப்பாக கருதுவது கோமதி மீதான வன்புணர்வு சம்பவத்தை. அதுவொரு நிகழ்வாகச் சொல்லப்படாமல் அங்கிருக்கும் உணர்வுகளாகச் சொல்லப்படுகின்றன. கோமதியை வெற்றிச்செல்லவன் தீண்டச் சீற்றமடையும் கோமதி அவளைப் புண்படுத்த அங்குத் தோன்றும் அகங்காரச் சீற்றம் பாலியல் ஈர்ப்பாக மாறி மனித விலங்குகளின் கொண்டாட்டமாக மாறுகின்றது. கோமதி கெஞ்சும் போது, அந்த கெஞ்சல் இன்னும் உத்வேகத்தைக் வெற்றிக்கும் அவன் நண்பர்களுக்குக் கூட்டுகின்றது. அதே நேரத்தில் கோமதி தன்னை மீறி எழுந்த கெஞ்சுதலை எண்ணி வெட்கப்படுகிறாள். இந்த நிகழ்வுக்குப் பின்னால் இயங்கும் மானுட மன அவதானங்களை தேர்ந்த கற்பனை மூலம் சொல்லிச் செல்லும் முறையே இதனைக் கலைப்படைப்பாக மாற்றுகின்றது.

இந்த நாவல் முழுவதும் சக மனிதன் மீதான ஒவ்வாமையும், வீரகத்தியும் இருந்துகொண்டே இருக்கின்றது. அன்பின் மீதும் கருணை மீதும் நம்பிக்கையின்மையைக் கொண்டிருக்கின்றது என்றே தோன்றுகின்றது. அது எதனால்? இன்று இருக்கக்கூடிய உலகமயமாதல் சூழலில் கூட்டுவாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்து தனிமனிதனாக தன்னை உணரத்தொடங்குவதால் ஏற்படும் பதற்றத்தின் வெளிப்பாடா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகின்றது.

சுதந்திரமாக இருக்கவேண்டிய மனிதன் தகப்பனாக, தாயாக, மகனாக, சகோதரனாக, சகோதரியாக, மகளாக பல்வேறு பொறுப்புகளுடன் இருக்க நேர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் குடும்பம் என்கிற அதிகார அமைப்பே. இந்த அதிகார அமைப்பு தாய்மை,அன்பு,பாசம், சகோதரத்துவம் என்கிற நிலையற்ற அளவீடுகளில் சிக்கித்தவிக்கின்றது. இதை நீக்க நிதியடிப்படைகள் உருவாக வேண்டும் என்றும் அதனை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் இந்தப் புனைவுக்குள் இருக்கும் உபபிரதி ஆராய்கிறது. ஆனால், இதற்கு முற்றிலும் எதிர்த்திசையில் மிகுதிப் புனைவுகள் நகர்கின்றன. இந்த இரண்டு வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள முயல்வதுதான் இந்த நாவலின் தரிசனமாக இருக்கக்கூடும் சிலருக்கு. எப்படியோ இந்த நாவலின் மையம் இதுதான் என்று வரையறுக்க முடியாமலே இருக்கிறது.

இந்த நாவலை வாசித்து புரிந்துகொள்வதில் இருக்கக்கூடிய சிக்கல் என்பது, கதாப்பாத்திரங்களை பொருத்திப்பார்பதிலும் அவர்களுக்கு இடையிலான தொடர்பை புரிந்துகொள்வதில் இருக்கும் தெளிவின்மைதான். அதன் இடர்பாடுகளைக் களைந்து வாசிப்பது சவாலாகவே இருக்கிறது. வாக்கிய அமைப்புகளில் ஜெயமோகனின் பாதிப்புகள் சுரேஷிடம் இருக்கத்தான் செய்கிறன. புனைவில் சுரேஷ் விரிக்கும் உலகம் அவருக்கு உரியதாகத்தான் இருக்கிறது. அதை அவர் விரித்து எடுப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.

“ஒளிர் நிழல்” அளவில் சிறிய நாவல், எனினும் அடர்த்தியானது. சுரேஷ் சகவயதில் இருக்கும் எழுத்தாளர். இது இவரது முதல் நாவல். மிகத்தீவிரமான வாசிப்பிலும் இலக்கிய இயங்கு தளத்திலும் இருப்பவர். இவரது மனிதர்களின் உணர்வுகள் மீதான பார்வை என்பது சமகாலத்தில், சகவயதில் உள்ளவர்களாலோ அல்லது அதற்குச் சற்று மேலே உள்ள எழுத்தாளர்களாலோ இத்தனை நுட்பமாக எழுதப்படவில்லை என்றே துணிந்து சொல்லவைகின்றது.

ஒரு கலைஞனை சக நண்பனாக இலக்கிய உலகில் வரவேற்பதை மகிழ்வுடன் பதிவுசெய்கிறேன்.

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

சுரேஷ் பிரதீப்பின் வலைத்தளம் செல்ல இங்கே சொடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *