மூன்று புத்தகங்கள்

1

அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி

சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும்.

உசுல.பி.விஜய சூரிய ஆங்கிலத்தில் இலங்கை எழுத்தாளர். அவர் எண்பதுகளின் இறுதியில் எழுதிய நாவல் “அம்பரய”; இந்த நாவல் தற்சமயம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ‘தேவா’வினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

நாவல் என்ற வடிவத்தில் பதிப்பாளர்களினால் குறிப்பிடப்பட்டாலும், வடிவம் சார்ந்து குறுநாவல் வடிவத்திலேயே அம்பரயவை அணுக வேண்டியுள்ளது. கடல்புரம் சார்ந்த மீனவக்கிராமம் ஒன்றில், ‘சுமனே’ என்கிற பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவனையும் அவனது சிறிய குடும்பத்தையும் சுற்றி நகருகின்றது கதை. சிறை சென்ற அவனது தந்தையால் அவர்களது குடும்பப் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கின்றது. வயதில் இளையவனாக இருக்கும் சுமனே குடும்பப் பொறுப்பைச் சுமக்கிறான். அதிகாலை எழும்பி, கடற்கரையில் ஒதுங்கும் பொருளான திமிங்கிலத்தின் உடலில் இருந்து கிடைக்கும் ஒருவகையான கொழுப்புத்தலையான ‘ஆம்பலை’ தேடிச் செல்கிறான். அதனை விற்பதன் மூலம் பெருவாரியான பணத்தை ஈட்ட முடியும். இரு சகோதரிகளுக்கு நன்றாகக் கல்வியறிவை புகட்டுவதையும், சொந்தமான இருப்பிடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காகவும் பொருளாதாரத்தை நோக்கி தன் பாடசாலை படிப்பை இடைநிறுத்திவிட்டு அல்லல்படுகிறான். உண்மையில் அவன் தேடும் ஆம்பல் என்பது, அவனது குடும்பத்தின் சுயகௌரவமாக வாழும் ஸ்திரம்தான். அதை நோக்கிச் செல்லும் தருணங்களும் முரண்பாடுகளும் எதிர்ப்படும் மனிதர்களின் வஞ்சமும்,குரோதமும்,அன்பும்தான் இக்குறுநாவலின் இயங்குதளம்.

கதைக்களத்தில் எதிர்ப்படும் மனிதர்கள் மிக எளிமையானவர்கள் அன்றைய பொழுதுகளே மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அவர்களுக்குத் தருகின்றன. பொருளாதாரம்தான் எல்லோருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சினை. எனினும் அந்தக் கிராமத்தில் செல்வம் மிக்கவர்களும் இருக்கிறார்கள். இங்கிருக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் அன்பு மிக்கவர்களாகவும் மற்றைய குடும்பங்களுடன் முரண்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் தங்களுக்குள்ளே மோதல் கொண்டாலும், வெளியேயிருந்து ஒரு பிரச்சினை அவர்களுக்கு வரும்போது ஒற்றுமையாகத் திரண்டு தங்களின் ஒருவனை விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கிறார்கள். இந்தக் குணாம்சத்தை நாம் தமிழர்களிடமும் மற்றைய இந்திய இனக்குழுக்களிடம் அவதானிக்கலாம். நுட்பமாக அவதானித்தால் சிங்களவர்களுக்ம் தமிழர்களுக்கும் இடையிலான பல ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று.

சுமனே மெல்ல மெல்ல எழுவதும், பின் தடுமாறி வீழ்வதும் உணர்வெழுச்சியில் தத்தளிப்பதும் நிகழுகின்றது. கருணை மிக்கவனாக இருந்தாலும், தீமையின் எல்லையில் அவன் இருப்பதும் சிறிது காலத்தில் அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்வதும் கதையில் இயல்பாக நிகழ்கிறது. முதிர்ச்சி வாய்ந்த, பெரியவர்கள் போல் கதைக்கும் சுமனேயை பதின்மவயதுச் சிறுவனாக உள்வாங்க மனம் மறுக்கின்றது. எனினும் அவன் அனுபவத்தால் திரட்டிய அறிவு அவனின் முதிர்ச்சியை நியாயப்படுத்துகின்றது. விஜேய மஹத்தையா,நோணா போன்ற பாத்திரங்களின் கருணையும், அன்பும் மென்மையான சலனங்களுடன் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

நாவலில் இழையோடும் மதம் சார்ந்த நம்பிக்கைகளையும், அவர்களின் பண்பாடுகளையும் அவதானித்து உள்வாங்கும்போது அவர்களிடம் இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியையும் அவதானிக்கலாம்.

மொழிபெயர்ப்பு என்பது எந்த இடத்திலும் சறுக்கவைக்காமல் சீராக வாசிக்கவைகின்றது. சிங்கள நாவல் என்பதை வாசிக்கும்போதே உணர்ந்துகொள்ள இயலுகின்றது. கொல்லோ, நோனா போன்ற வார்த்தைகள் மொழிபெயர்ப்பின் கச்சிதம் கருதி அப்படியே உரையாடல்களில் வருகின்றது.

குக்கிராமம் ஒன்றின் கடல்புரத்தில் நிகழும் இக்கதை வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” நாவலை நினைவு படுத்தலாம். அதே களம், மனிதர்களின் குணாம்சங்களும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால், தேடலும் தரிசனமும் வெவ்வேறானவை.

வடலிப்பதிப்பகம் இந்தநாவலை கட்சிதமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

2

I know why the cadge bird sings

நுண்மையாக அவமானப்படுத்தல் இனவாதத்துடன் கலந்தது. ஏதோவொரு இடத்தில் பெரும்பான்மையினர் முன் சற்று தலை குனிய வேண்டியிருக்கும் சிறுபான்மையினர். அந்தத் தருணங்கள் மிகக் கசப்பானவையாக இருக்கும். செயற்கையான தாழ்வுச்சிக்கலை விதைத்து எப்போதும் சிறுபான்மையினரை அந்நியப்படுத்தி வைப்பதில் பெரும்பான்மையினர் குறியாக இருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ அதன் உள்ளடக்குகளில் சிக்கி சிறுபான்மையினரும் அதற்குத் துணையாக இருக்கிறார்கள். ‘மாயா ஏஞ்சலோவின்’ சுயசரிதைப் புத்தகமான “I know why the cadge bird sings” இதன் பல்வேறு அடுக்களைச் சுயசரிதைத் தன்மையுடன் சொல்கிறது. அதற்கப்பால் யோசிக்க நமது மூளை உழைப்பைச் செலவிட வேண்டியிருக்கின்றது. சிறார்களின் மீதான பாலியல் துஷ்பிரயோகம், உளவியல் வன்முறைகளின் தொடர்ச்சி என்பவற்றை ஒருவரின் நேரடி வாழ்க்கையிலிருந்து உண்மையாக அறிந்துகொள்ளும் போது கிடைக்கும் நடுக்கம் உக்கிரமானது. அதற்குள்ளிருந்து எழுந்து வருதல் ஆசாத்தியமானது. மாயா ஏஞ்சலோ அதைத்தான் செய்திருக்கிறார். ஆப்ரோ- அமெரிக்கர்கள் நுண்மையாகச் சந்தித்த இனவாத ஒடுக்குமுறைகள் பெரும் கடல், அதிலொரு துண்டு இந்தப் புத்தகம்.

I know why the cadge bird sings
Maya Angelou

3

Framed as a terrorist

அதிகாரத்தைக் கொண்டிருக்கும் System ஒரு பக்கத்தில் தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தனிமனிதன் அதற்குள் இரையாக்கப்பட்டும் போது அது ஈவிரக்கம் பார்ப்பதில்லை. அதற்குத் தனியாக மூளையோ இதயமோ இருப்பதில்லை. அதிகார அமைப்புகளில் இருப்பவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சாடிவிடுவதிலே தங்கள் சுயத்தைப் பாதுகாக்கிறார்கள். கூட்டாக அவர்களுக்கு ஒரு மனம் இருப்பதில்லை.

“மொகமது ஆமிர் கான்” தன் பத்தொன்பதாவது வயதில் இந்திய உளவுத்துறையினால் கடத்தப்படுகிறார். மிக மோசமான உடல் வதைகள் அவரின்மேல் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. 150 வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கி 24 குண்டுவெடிப்பு வழக்குகளில் புனைந்து போலியாகச் சிக்கவைக்கிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணம்தான் அனைத்துக்கும் காரணம். சிறைவாழ்க்கை இந்து பாசிசத்தையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் விளைவுகளையும் கொடூரமாகக் காண்பிக்கிறது. அனைத்து விளைவுகளையும் இஸ்லாமியன் என்ற தனிமனித அடையாளத்துக்காக அனுபவிக்க நேர்கிறது. இருந்து எப்படியும் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை வற்றாமல் இருக்கிறது மொகமது ஆமிர் கானிடம். அது வெல்லவும் செய்கிறது ஆனால், அனைத்துப் போலியான வழக்குகளில் இருந்து விடுதலையாகி வர பதினான்கு ஆண்டுகள் செல்கிறது. மிக முக்கியமான இளமை பருவத்தைச் சிறைக்குள் தொலைக்க வைக்கப்பட்டிருக்கிறார். மொகமது ஆமீர் கானின் தன் வரலாற்றுப் புத்தகமான “Framed as a terrorist” வாசிக்கும்போது உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மையினரின் பிரச்சினை ஒட்டுமொத்தமாக ஒரேமாதிரியே இருப்பதாகத் தோன்றுகின்றது. இலங்கையில் வெறுமே சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு இன்னும் விடுதலையாக்கப்படாமல் இருப்பவர்களின் நிலையும் இது போன்றதுதான்.

கூட்டு மனநிலைக்குத் தனிமனித மனநிலை பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை. விரும்பியோ விரும்பாமலோ தேசிய அடையாளங்களைத் துறப்பதும் சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. ஏதோவொரு வகையில் அவை இணைந்தே வெளியிலிருந்து பார்க்கப்படுகின்றது.

உடலியல் வன்முறையையும் தாண்டி மொகமது ஆமிர் கானுக்கு உருவாகிய உளவியல் நெருக்கடி அதியுச்சமானது. இருந்தும் அதிலிருந்து வெளியேறிய மனநிலை கடும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

Framed as a terrorist
Mohammad Aamir Khan and Nandita Haksar

One thought on “மூன்று புத்தகங்கள்

  1. Pingback: அம்பரய | வடலி வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *