தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17

எனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார்.

அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை.

அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்” என்கிற சிறுகதையை வாசித்தேன். உமா வரதராஜனைப் பற்றி எழுதும் போது “அரசனின் வருகை” சிறுகதையை வைத்தே எழுத வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். மிக நேர்த்தியான படிமங்களால் ஆன கதை அரசனின் வருகை. இவர்தான் அரசன் என்று ஊகிக்கும் போது அதன் விம்பம் தகர்ந்து அது ஒட்டுமொத்த அதிகாரத்தின் படிமமாக ஆகிறது. அதே அக்கதையின் விரிவு. எக்காலத்திலும் எல்லா மொழியிலும் நின்று பேசக் கூடிய மகத்தான கதைகளில் ஒன்றாக அரசனின் வருகையைத் துணிந்து சொல்வேன்.

இருந்தும் ‘தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்’ எனக்கு எழுதும் உந்துதலைத் தருகிறது. அதைப்பற்றி ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற பதற்றம் இயல்பாக எழுகிறது.

ஆறுமாதகாலத்தின் பின் வீடுவரும் வரதனின் பார்வையில் நகரும் கதை. உதிரியான புறவய சம்பவங்கள் கதை சொல்லியான ‘வரதனின்’ பார்வையில் சொல்லப்படுகின்றது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடுவருகிறான், வரும் போது ஆறுமாத காலமாக ஏற்பட்ட ஊரின் மாறுதல்களை அவதானித்துக் கொண்டு வருகிறான். அந்த அவதானிப்பில் ஒரு வெறுப்பு, சலிப்பு , விரத்தி மெலிதாக இருக்கவே செய்கிறது. அ.யேசுராசாவின் ‘தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்‘ தொகுப்பை வாசிக்கும்போது இதே மனநிலையை அங்கிருக்கும் கதை சொல்லிகளும் கொண்டிருப்பதைக் கண்டேன். தனிமையின் மீதான சலிப்பு, பிரிவின் வெறுப்பு போன்றவையே மையம் கொள்கின்றன. எழுபதுகளில் இளைஞர்களாக இருந்தவர்களின் பொது மனநிலையாக அது இருந்திருக்கக் கூடும்.

ஆனால், உமாவரதராஜனிடம் இளமைக்குரிய துள்ளலும் அதன் படபடப்பும் இருக்கிறது. அனைத்துக் கதைகளிலும் பொதுப்பண்பாக அவை இருக்கவே செய்கிறது. நீருக்குள் ஓடும் விரால் மீன் போல் சலிப்புக்குள் ஒரு அன்பு நீந்தவே செய்கிறது. அந்த அன்பின் ஏங்குதல் மீதா அயர்ச்சி எங்கோ அடியாழத்தில் இருப்பதைச் சற்றென்று கண்டேன். திரும்பத் திரும்ப அவர் படைப்புகளில் அவை வருகின்றன.

வசந்தாவின் பிரிவும், உறவினர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பும் வரதனை தள்ளியிருக்கச் செய்கிறது. வீடுவரும்போது சீழ்க்கை அடிக்கும் இயல்பான துள்ளல் அவனிடம் இருக்கிறது. எதிர்ப்படும் மனிதர்களிடம் அன்பாக நோக்கினாலும் அவர்கள் மீது நம்பிக்கையீனமே இருக்கிறது. நண்பனைப் பார்க்கும் போதும் அதுவே, பெண்கள் அவனின் சிகையலங்காரத்தை பார்த்து இனிமையாகச் சிரிக்கும்போதும் அதுவே. அந்த நம்பிக்கையீனமே முள்ளாக அவனை எச்சரிக்கை செய்கிறது.

கிணற்றுக் கட்டுக்குச் செல்லும்போது பாசி வழுக்கும் என்று அம்மா சொல்லும் எச்சரிக்கை, தம்பியின் விசாரிப்புகளில் இருக்கும் உண்மையைத் தரிசிக்க முடிகிறது. அங்கு ஆழத்தில் ஒலிக்கும் எச்சரிக்கை இல்லை.

தேங்காய் துருவும் போது கிளறும் ஒலியும், நீர் இறைபடும் ஒலியும் சேர்ந்து பிரயோகமாகும் சித்தரிப்பை கேட்கும்போது ஈழத்துக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறை பாசிபடிந்த வாசத்துடன் கிளர்ந்து வருகிறது. மிக நுட்பமான சித்தரிப்புகள் அவை. வரதன் சைக்கிள் மிதிக்கும்போது பெய்த மழையால் தேங்கிய நீரை வீதியில் கிழித்துச் செல்லும் காட்சி மீண்டும் அந்தக் குதூகலத்துக்குள் அழைத்துச் சென்று அவை எத்தனை அழகிய தருணங்களை கொண்டது என்று எனக்குக் காட்டி புலன்களைச் சீண்டுகின்றது. கேசத்தை அதிகமாக வளர்க்கும்போது அதை வெட்டச் சொல்லும் அனைத்து அம்மார்களும் அதே பரிதவிப்புடன் வருகிறார்கள்.

ஓர் கூட்டுக் குடும்ப உறவு வலையமைப்பு இருந்தாலும் அவை தரும் மகிழ்ச்சியை விட மறைமுகமாகச் செலுத்தும் ஆதிக்கம் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் என்றே வரதன் அஞ்சுகிறான். நீண்டநாட்கள் கழித்துச் சந்திக்கும்போது ஏற்படும் உணர்வுகள் மிகை உணர்ச்சியால் ஏற்படும் ஒன்றா? அல்லது அது காரணங்கள் கொண்ட மானுட சுயநல பிரதிபலிப்பா என்ற கேள்வியையே தரிசனமாக இட்டுச் செல்கிறது. அதனாலேயே இந்த சம்பவக் கோர்ப்புக்கள் என்னளவில் நல்ல கதையாகின்றது. ஒருவகையில் அந்நியமாதலையே இக்கதை சொல்கிறது.

எங்கோ ஓர் இடத்தில் தட்டுப்படும் அன்பைப் பார்க்க வண்ணதாசனின் கதையுலகம் எனக்குள் மின்னியது. எழுத்தாளர்             எஸ் .ராமகிருஷ்னுணம் அதை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததை அறிந்தேன்.

உமா வரதராஜனின் பாத்திர அமைப்புகள் வலுவானவை. அதீத தனிமனித இருத்தலுக்குள் தள்ளப்பட்டவை. அதனாலேயே அவரின் எளிமையான சம்பவத் தொகுப்புகள் வலுவான கதைகளுக்கான voidடை எடுத்துக் கொள்கின்றன. சொல்லிச் செல்லும்போது உமா வரதராஜனின் நடையில் ஒரு கிண்டல் இருக்கின்றது. அது எழுத்தின் பலமாகவோ பலவீனமாகவோ இல்லை.

பெரும்பாலும் தன்னனுபவங்களையே கதையாக்குவதாகத் தெரிகிறது. வெளிப்புற உலகின் அழகை, எங்கையோ தவிக்கும் அன்பின் கதறலை தேர்ந்த சித்திரமாக ஆக்கும் உமாவை அதிகமாகவே பிடிக்கிறது. மீண்டும் ஒரு சிகிரட்டை பற்றவைத்துக் கொண்டு அவரின் கதைகளை நினைக்கின்றேன். ஆம் அவர் ஒரு எழுத்தாளன் தான்.

One thought on “தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17

  1. Omar

    வீரகேசரி பதிப்பகத்தால் பல நாவல்களை வெளியிட்ட G.நேசன் அவர்களின் நாவல்களான அடிமை பெண் , உமையாள்புரத்து உமா , பாலைவனத்து ரோஜா போன்றவற்றுக்கும் மதிப்புரை எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *