ஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு

“அமரிக்கக்காரி” என்ற சிறுகதையை ஒரு சஞ்சிகையில் வாசித்தபோது யார் இந்த அ.முத்துலிங்கம் என்று வியப்பாகவிருந்தது. இதற்கு முதல் அந்தப்பெயரைக் கேள்விப்பட்டது கிடையாது. அவர் ஓர் ஈழ தமிழ் எழுத்தாளர் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. இதற்கு முன் வாசித்த ஈழ எழுத்தாளர்கள் அவ்வாறான கசப்பான அனுபவத்தையே தந்திருந்தார்கள். ஈழ எழுத்தாளர்கள் மீது கட்டிவைத்த விம்பத்தை அப்போதுதான் கிரனைட் வீசித் தகர்த்தேன். அவர்களால் சிறுகதைகள் எழுத முடியும் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தது அப்போதுதான். [ஷோபாசக்தி அப்போது அறிமுகமில்லை] அதற்குப் பிறகு அவரின் புத்தகத்தைத் தேடித்தேடி வாசிக்க அலைந்தேன். ஒரு மதிய வெயிலில் கொழும்பு புறக்கோட்டைக்கு முன்னுள்ள தமிழ் புத்தகக் கடைகளில் அ.முத்துலிங்கத்தின் புத்தகங்கள் இருகின்றததா என்று தேடியலைந்தது நினைவுக்கு வருகின்றது. படிப்படியாக அவரின் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தபோது இணைய வசதியும் எங்கள் ஊரான யாழ்ப்பாணத்தில் கிடைக்க ஆரம்பித்திருந்தது. இணையத்தில் பலபுதிய/பழைய ஈழ தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமாகத் தொடங்கிய காலம் அது.

suyanthan_AMuttu-1

                        அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கத்திடம் கவர்ந்தவிடயம் என்று மூன்றைச் சொல்லுவேன். புறவய சித்தரிப்பில் புகுத்தும் கட்டுக்கடங்காத தகவல்களின்/தரவுகளின் எண்ணிக்கை. தேய் வழக்கற்ற, கற்பனையில் அவ்வளவு இலகுவில் எட்டாத உவமைகள். மானுட துன்பத்தை மிக இலகுவாக வேடிக்கையாகச் சொல்லி நகர்ந்துவிடும் வித்தை. இந்த மூன்று விடயங்களும் அவரது அனைத்துச் சிறுகதைகளிலும் இருக்கும். தன்கதைகள் ஊடாக அந்தரங்கமாக அவர்தேடி கண்டடையும் உண்மையென்பது சின்ன தருணத்தின் விரித்தெடுத்த வடிவமாக இருக்கும். அதற்குள் சுழலும் ஏராளமான புறவய சித்தரிப்புகள் கதையை சுவாரசியப் படுத்தும்; வாசிப்பின் இன்பத்தைத் தக்கவைத்துக்கொண்டேயிருக்கும்.

புறவயமான சித்தரிப்புக்கள் அ.முத்துலிங்கத்தின் கதைகளில் அதிகமாக இருக்கும். அகவயமான உணர்வுகள், அதன் சித்தரிப்புகள் பெரும்பாலும் குறிப்பிடப்படுவதில்லை. புறவய சித்தரிப்பில் இருந்து அகவயத்தை விரித்துப் புரிந்து கொள்வது வாசகனின் கடமையாகின்றது. அதற்கான திறப்புகள் கதைகளில் படிமமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சொல்லாகவோ கூட இருந்துவிடுகிறது. இவற்றைக் கவனிக்காது மொழியின் சுவாரசியத்தில் அவரின் கதைகளை வேகம் வேகமாக வாசிக்கும் ஒருவருக்கு வாசித்து முடியக் கிடைக்கும் உணர்வுகள் சட்டென்று வெறுமையைத் தரும். கதைக்குள் உள் நுழைய இயலாமல் கண்ணாடிச் சட்டத்தில் மோதும் குளவிபோல் தவிக்க நேரிடும்.

“ஆட்டுப்பால் புட்டு” சிறுகதைப் புத்தகம் அ.முத்துலிங்கத்தின் சமீபத்தைய சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன.

முதலாவது சிறுகதையான “இன்னும் முன்னேற இடமுண்டு” சிறுகதை இத்தொகுப்பில் ஆகப்பிடித்த கதை. கணவன் மனைவிக்கு இடையிலான உறவுச்சிக்கல்களைச் சொல்லும் கதை. இதேவகையான உறவுச்சிக்கல்கள் கதைகள் மீண்டும் மீண்டும் பல்வேறு விதத்தில் எழுதப்பட்டாலும் அ.முத்துலிங்கத்தின் நுண்சிதரிப்புகளும் கதையில் இழையோடும் மெலிதான நகைச்சுவையும் கதையை முக்கியமான சிறுகதையாக்குகின்றது. கண்ணீரும் அழுகையும் இல்லாமல் மெலிதான அன்பின் பாதையுடனும் பயணித்துச் சட்டென்று ஓர் உச்சக்கட்டத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமாமல் இடையே நிற்கின்றது. அந்த அவஸ்தை சுவாதியின் வெறுமையை மற்றொரு கோணத்தில் சொல்லிவிடுகின்றது. எளிமையான மனைவியின் பதற்றமும் வெகுளித்தனமும் பல்வேறு கதைகளில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டாலும் அவர்களின் வெறுமையை யூகிக்கவிட்டு சிறுகதையாக்கும் விதத்தை அ.முத்துலிங்கதுக்கே தனித்துரியது. குடும்பப் பெண்களின் பெருந்துயர் என்பது இக்கதையின் அடியாழத்தில் கசப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் புறவய சித்தரிப்பின் பின்னே மறைந்திருக்கின்றது.

சிம்மாசனம் சிறுகதை இலங்கையில் சிங்களவர்கள் வாழும் சிறிய கிராமத்தில் நிகழும் கதை. கதை சொல்லிமட்டும் தமிழன். மரக்காலை ஒன்றில் கதை நிகழ்கிறது. சோமபாலா என்கிற சிங்கள தொழிலாளிக்கும் கதை சொல்லிக்கும் இடையிலான சம்பாஷனையே கதை. மரங்களை நேசிக்கும் சோமபாலா உதிர்க்கும் மரங்களைப் பற்றிய தகவல்கள் கதையை தனியே மானிடர்களின் உறவுமயமான கதையாக அன்றி நிகழும் களத்தின் நம்பகத்தன்மையை விரித்தெடுக்கும் கதையாக நுண்மையாக விரிகின்றது. சிங்களவர்களின் சாதியம் பற்றிக் குறிப்பிடும் இடங்களும் சிம்மாசனம் தயாராகும் இடங்களும் இன்னொரு தளத்தில் குறியீடுகளாக முன்வைக்கப்படக்கூடியவை. சோமபாலாவுக்கு கிடைக்க இருக்கும் விருது கிடைக்காமல் போகும்போது மேலாளர் “அவனுக்குப் பரிசு கொடுப்பதிலும் பார்க்க ஒரு தமிழனுக்கு கொடுக்கலாம்” என்று சொன்னதாக குறிப்பிடப்படும் இடங்கள் கதையின் போக்கை அதிர்ச்சியில்லாமல் மென்மையாக மாற்றிவிடுகின்றது. வேலையைவிட்டு நீங்கப்போவதாக அடிக்கடி சொல்லும் சோமபால இறுதிவரை அங்கேயே இருக்கக் கதை சொல்லி வேலையைவிட்டு விலகிச் செல்கின்றான். கதையின் முடிவு வலுவான முடிச்சுடன் அமிழ்ந்து போகின்றது.

“ஸ்டைல் சிவகாமசுந்தரி” அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நிகழும் கதை. செல்லமாக வளர்க்கும் மகள் துளிர்க்கும் காதலினால் இளைஞன் ஒருவனுடன் ஓடிச்சென்று விடுகின்றாள். மகளின் அக உணர்வுகளோ, அப்பாவின் அக உணர்வுகளோ எவையும் சொல்லப்படவில்லை. வெறுமே புறவயமான சித்தரிப்புடன் கதை நகர்கின்றது. இறுதியில் மகளைச் சந்திக்கும் அப்பா, அதே பாசத்துடன் அவளின் கோலத்தைப் பார்த்துக் கலங்குகிறார். உருவத்தில் உருக்குலைந்து இருந்தாலும் அவளின் குரல் தொனியில் மீண்டும் பழைய மகளை அடையாளம் கண்டுகொள்கிறார். எல்லாம் முடிந்தபின்பும் அப்பாமீது இருக்கும் அதே பாசம் விட்ட இடத்திலே இருக்கின்றது. அவள் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடினாள் என்பதற்கு விடையே இல்லை. கதையின் முடிவிலும் மகள் அதையே குறிப்புணர்ந்துகின்றார்.

“சிப்பாயும் போராளியும் சிறுகதை” உரையாடல் வடிவில் நிகழும் கதை. வழமையான முத்துலிங்கத்தின் கதைகளில் வரும் புறவயமான வர்ணனைகள் சித்தரிப்புகள் எதுவும் இல்லை. கைது செய்யப்பட்ட போராளி ஒருவரைக் கொலை செய்யச் சிப்பாய் ஒருவன் தயாராகுகின்றான். அவனுக்கு இது முதல் கொலை. அவனின் துப்பாக்கியில் சிறுபிழை; அதனைச் சரிசெய்ய சிப்பாய் முயன்றுகொண்டிருக்கப் போராளி பேச்சுக்கொடுக்கின்றான். அவர்கள் இருவரின் உரையாடலே கதையினை விரிக்கின்றது. உரையாடலில் இருக்கும் உணர்ச்சிகளின் மெய்மையை வாசகனே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த மெய்மை கதையின் முடிவில் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கலாம். நாகடமாக இதை எழுதியிருந்தால் சிறந்த காண்பியக்கலையாக உருவாக்கியிருக்கலாம். சிறுகதையாக வரும்போது வலுவான முடிச்சின்றி, வெகுஜன இதழ்களில் வரும் கதைகளின் முடிவு போல் சலிப்பைத் தருகின்றது. “புத்தியுள்ளவன் பலவான்” என்ற தோரணையில் நீதிக்கதையை நினைவூட்டும் கதையாக இது எஞ்சி நிற்கின்றது.

இத்தொகுப்பின் பெயரைக் கொண்ட சிறுகதையான “ஆட்டுப்பால் புட்டு” சிறுகதை எளிமையான மனிதர்களுடன் இருக்கும் கீழ்மையை சிறு உரசலாகச் சொல்லிவிடுகின்றது. இரு மாதங்களுக்கு ஒரு முறை “ஆட்டுப்பால் புட்டு” உண்பதற்காகவே யாழ்தேவி புகையிரதத்தில் ஏறி கொழும்பிலிருந்து வீடு வரும் சிவப்பிரகாசத்திற்கும் அவனின் வீட்டில் வேலைபார்க்கும் ‘நன்னன்’ என்ற வேலையாளுக்கும் இடையே இடம்பெறும் சம்பவம்தான் கதை. “எட்டாம் வகுப்பு நன்னனும் பத்தாம் வகுப்பு பத்துமாவும் ஒரு குழந்தையை உண்டாகிவிட்டார்கள். அதற்குப் பட்டப்படிப்பு ஒன்றுமே தேவையில்லை” என்று கதை சொல்லி குறிப்பிடும் இடங்களில் மெலிதான மேட்டிமைத்தனமான பார்வையும் நக்கலோடு பிணைந்திருக்கின்றது.

மெல்லிய தொகுப்பாக இருந்தாலும் இந்தத் தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதைகளும் பல்வேறு களங்களில் நிகழ்பவை. மாறுபட்ட கதைப்புலங்களில் கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. துபாய், ஜிந்தோட்ட ,கனடா, ஆப்பிரிக்க, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் என்று கதைகளின் களங்களும் அதில் வரும் மாந்தர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகத் தொகுப்பை வாசித்து முடித்தபின் பல்வேறு நிலங்களுக்கூடாக பயணித்து வரும் திகைப்பை சாதுரியமாகத் தந்துவிடுகின்றது. தனித்தனியே சஞ்சிகைகளில் வாசிப்பதைவிட ஒட்டுமொத்த தொகுப்பாக வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவம் என்பது மகத்துவமான கதை சொல்லியின் கைகளின் இருக்குப்பிடியில் சிக்குண்டு இருப்பது போல. அ.முத்துலிங்கம் எழுத ஆரம்பித்தபோது மார்க்சிய சித்தாந்தத்தப் பார்வையைக் கொண்ட அப்போதைய செழிப்பான விமர்சகர்களான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களின் கைகளில் சிக்குப்பட்டு அழியாமல் எழுந்து வந்தது ஆச்சர்யத்தை அளிக்கின்றது. இன்று அ.முத்துலிங்கம் சிறந்த கதை சொல்லியாக இருப்பதற்கான காரணங்களில் அதுவும் நிச்சயம் ஒன்று.

அ.முத்துலிங்கம் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் எல்லோருக்கும் வாய்க்காத ஒன்று; அந்த அனுபவத்தில் கிடைத்தவற்றை இறைமீட்பது போல மெல்ல மெல்லக் கதைகளாக உருவாக்குகின்றார். அவை வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கதை சொல்லல் முறையில் இருந்து முற்றாக மாறுபட்டுச் செல்கின்றது. ஈழத் தமிழராக அ.முத்துலிங்கம் இருந்தாலும் அவருக்கு இருக்கும் வாசகர்கள் அதிகம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். “இத்தனை சனம் இறந்துவிட்டார்கள், இதை எழுதாமல் முத்துலிங்கம் என்ன எழுதுகிறார்” என்று கோஷம் வைக்கும் ஈழத்தவர்களால் என்றுமே புரிந்துகொள்ளப்பட முடியாத மகத்துவமான கதைசொல்லி அ.முத்துலிங்கம். அவரால் மட்டும் எழுதக்கூடியவற்றை அவர் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருக்கிறார். முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் மானுட வாழ்க்கையின் துன்பத்தை வேடிக்கையாக துழாவி கண்டடையும் உண்மை இலக்கிய வாசகர்களை மென்மையாக அதிரச்செய்துகொண்டே இருக்கும்.

அ.முத்துலிங்கம் சிறப்பிதழாக வெளிவந்த சொல்வனம் இதழில் பிரசுரமாகிய கட்டுரை.

http://solvanam.com/?p=48298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *