மூன்றாம் நதி

1

தொடர்ச்சியாக இணையத்தில் வாசிப்பவர்களுக்கு வா.மணிகண்டனை தெரியாமல் இருப்பது ஆச்சர்யமிக்கதொன்றாகவே இருக்கும். நிசப்தம் வலைத்தளத்தில் சளைக்காமல் எழுதிக்கொண்டு இருப்பவர். அதே நேரத்தில் நிசப்தம் அறக்கட்டளை மூலம் எண்ணற்ற உதவிகளைத் தேவையானவர்களுக்குச் செய்துகொண்டிருப்பவர். தினமும் வலைத்தளத்தில் எழுதுவதற்கு அவருக்கு விடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். எப்படி எழுத்துப்பிழைகள் இல்லாமல் வேகவேகமாகத் தட்டச்சு செய்யது இணையத்தில் தினமும் இரண்டு மூன்று கட்டுரை என்று எழுத முடிகிறது என்று ஆர்ச்சர்யமகவே இருக்கும். கவிதைகள் எழுதுவதிலும் கவிதைகளுக்கு மதிப்பீடு எழுதுவதிலும் நிறையப் பக்கங்களைச் செலவழித்தவர். இவரது சிறுகதை தொகுப்பும், கவிதைத் தொகுப்புக்களும் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. மௌனமாக அவரது வலைத்தளத்தை ரசித்து வாசித்துவிட்டுச் செல்வதுண்டு. ஆங்காங்கே எழுதும் சிறுகதைகளைப் படித்ததுண்டு. மூன்றாம் நதி இவரது முதலாவது நாவல். அவரது வலைத்தளத்தின் மீதான ஈர்ப்பில் மூன்றாம் நதி நாவலை வெளிவந்தவுடனே வேண்டி வாசித்தேன்.

நகர வாழ்க்கையின் மத்தியில் கவனிக்க மறந்த எளிய பொருளாதாரத்தில் வாழ்பவர்களை நோக்கிப் பார்க்க முயலும் கதை. பெங்களூர் நகரத்தை கதைக்களமாகக் கொண்டு பவானி என்கிற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்திப் பேசிச் செல்கின்றது.

பாவனியின் கணவன் தீமூட்டி எரிந்து முடிவதில் ஆரம்பிக்கின்றது நாவல். எரிந்த உடலைப் பார்த்து அவளின் கதறல் ஒலித்துக்கொண்டிருக்க அடுத்த அத்தியாயங்கள் பவானி எப்படிப் பெங்களூர் வந்தாள் என்பதைப் பேசிச் செல்கின்றது. அவள் அப்பா அமாவாசை கிராமத்தில் நீரில்லாமல் பஞ்சத்தில் சிக்கி வாழ்வதற்கு வழிகளின்றிப் பெங்களூரில் இருக்கும் நண்பனைச் சந்தித்துக் கூலித்தொழில் செய்யக் கிளம்புகிறார். பெங்களூர் எதிர்பார்த்தது போல் இல்லை. அதன் அச்சுறுத்தல் ஏதோவொருவிதத்தில் அவரைப் பதற்றம்கொள்ளச் செய்கின்றது. பவானி அப்போது கைக்குழந்தையாக இருக்கின்றாள். பெங்களூர் வாழ்க்கை அமாவாசையை இன்னுமொரு பக்கம் மொத்தமாகத் திருப்பிப்போடுகின்றது. மனைவியை இழக்க நேர்கின்றது. குழந்தையான பவானியை பார்த்துக்கொள்ள மீண்டும் ஒரு திருமணம் செய்கிறான். ஆனால், அவருக்கு அந்தத் திருமணம் பவானியை பார்த்துக்கொள்ளமட்டுமன்றி அல்ல என்று தெரிகிறது. அவருக்குள் எழும் காமத்தை எதிர்கொள்ள அவருக்குத் துணைதேவையாக இருக்கின்றது.

பவானி பெங்களூரில் வளரவளர அவளோடு சேர்ந்து நகரமும் வளர்கின்றது. ஒரு கட்டத்தில் அவளின் வளர்ச்சியை மீறி நகரத்தின் வளர்ச்சி மிகப்பிரமாண்டமாக இருக்கின்றது. எக்கச்சக்கமான இலத்திரனியல், தொழில்நுட்பவியல் நிறுவங்கள் தோகைவிரித்துக் காலூன்றுகின்றன. அவற்றில் வேலை பார்க்க யுவன் யுவதிகள் குவிகின்றனர். அவர்களின் கையில் பணம் அதிகமாகப் புழங்குகின்றது. பிஸா, கே.எப்.சி போன்ற அதிநவீன சொகுசு உணவுக்கூடங்கள் முளைக்கின்றன. வேக வேகமாக அத்தியாயங்கள் நகருகின்றன.

பெங்களூர் என்னும் மாநகரத்தின் வளர்ச்சி அப்பெண்ணில் அறிந்தும் அறியாமலும் தனிப்பட்ட வாழ்கையில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நீள்கிறது. பாடசாலை கல்வியைப் பூரணமாகக் கற்றுமுடிக்காத அவளால் கன்னடமும், ஆங்கிலம் பேசமுடிகிறது. ஒரு குடும்ப வாழ்க்கையை நோக்கிப் பயணிக்க முடிகிறது. எல்லாம் அவள் திட்டமிட்டு ஏற்படுத்திக்கொண்டதல்ல.

போதிய நீர் இல்லாமல் கிராமத்தில் தங்களது விவசாய வாழ்க்கையைத் துறந்து நகரம் நோக்கி பவானியின் குடும்பம் வந்தது. அவளுடைய வாழ்க்கை நீரினால் நுட்பமாக மாறுகின்றது. நகரத்தில் நீரை விற்கும் போட்டியும் வன்முறையும் முளைக்கின்றது. அதில் சிக்குண்டு அவள் வாழ்க்கை சரிகின்றது. இறுதியில் அவளுக்கு எதுவும் எஞ்சாமல் போகின்றது. எந்த நீருக்காக அவள் குடும்பம் கிராமத்தைவிட்டு நீங்கியதோ அதே நீரினால் அவளுடைய குடும்பம் பெங்களூரில் சிதருண்டு மண்ணாகின்றது.

பவானியின் முதலாளியான பால்காரர் தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளுக்கு நீர் போதாமல்போக அவற்றுக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் முகமாக ஆழ்துளை கிணறு தோன்றுகின்றார். பூமிக்குள் அடியிலிருந்து நீர் சீறிக்கொண்டு அவருக்காக எழுகின்றது. தண்ணீரின் கொள்ளளவைப் பார்த்து மலைத்துப்போகிறார். அதை வைத்து அவர் ஏக்கர் கணக்காய் விவசாயம் செய்யலாமே என ஒருவர் கூறுகிறார். ஆனால், பால்காரர் தன் மனதுக்குள் நீரை விற்றுப் பணம் புரட்டலாம் என்று கணக்குப் போடுகிறார். நீரை விற்க ஆரம்பிக்கின்றார். பணம் செழிப்பாகப் புரள்கிறது. அவரிடம் போதிய பணம் இருந்தாலும் ஏன் பணத்தை நோக்கி மறுபடி மறுபடி செல்கிறார் என்பதே பவானிக்கு புரிராத புதிராக இருக்கின்றது. இருந்து ஒரு கட்டத்தில் அவளுக்குத் தெரிகிறது, அது அதிகாரத்தைநோக்கிய பயணமாக இருக்கின்றது என்பது. அதிகாரத்தின் மமதை அவரைத் தொடர்ந்து ஆட்டிப்படைக்கின்றது.

பவானியின் கணவன் இயல்பில் வெகுளியானவனாக இருந்தாலும் முரடனாக இருக்கின்றான். அவனது முரட்டுக் குணத்தின் மத்தியிலுள்ள நெகிழ்வான பக்கத்தைக் கண்டுகொள்வதனால் பவானிக்கு அவன் மேல் ஈர்ப்பு உருவாகியது. பால்காரருக்கு விசுவாசமாக இருக்கும் அவளது கணவன், விசுவாசத்தினாலே அவன் அபாயத்தில் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாலும் பவானியால் அவனை மீட்கமுடியவில்லை. ஒரு வகையில் அவள் எதிர்பார்த்த அழிவுதான் கடைசியில் அவனைப் பற்றிக்கொள்கிறது.

பவானியின் வாழ்க்கையை முழுக்க முழுக்கப் பெங்களூரின் பின்புலத்தில் முற்றுமுழுதாகச் சொல்லிவிடுவதே கதையின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், பெங்களூர் நகரத்தின் எழுச்சியும், பிரச்சினைகளும் பவானியின் கதையைவிட அதிகம் அழுத்தம் நிறைந்ததாகவும் பவானியின் கதையைவிட அதிகம் சுவாரஸ்யம் தருவதாக இருக்கின்றது. பவானியின் இளவயது சம்பவங்கள் மிகக்குறைவாக இருக்கின்றன. அவளுக்கு வருண்மீது முளைக்கும் பதின்மவயது சல்லாபங்களுடன் அவள் இளவயது சம்பவங்கள் நிரப்பப்படுகின்றன. ஆங்காங்கே சித்தியின் கொடுமை.

வா.மணிகண்டன் கதையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். உரையாடல் வழியாகவும் சம்பவங்களின் சித்தரிப்பு ரீதியாகவும் கதை சொல்லல் நகர்த்தப்படவில்லை. இதன் காரணமாகக் கதையோர் புனைவுக்கான தன்மையைக் கொண்டிருகமால் விவரணப் படத்திற்கான தன்மையைக் கொண்டிருக்கின்றது. இவ்வுத்திகள் கதையைக் காட்டவில்லை; கதையைச் சொல்கிறது.

ஒரே மூச்சில் நாவலை வாசித்துவிட முடிகின்றது. அப்படி வாசிப்பை இலகுவாக்கியது என்வென்று யோசித்தால் நாவலின் நடையிலுள்ள இலகுவான நேரடியான நடையும் சுவாரசியமான கதை சொல்லல் மொழியே என்றே தோன்றியது. இதே மொழிவழக்கைத்தான் கொஞ்சமும் பிசகாமல் நிசப்பதம் வலைத்தளத்திலும் வா.மணிகண்டன் பிரயோகிப்பார். அதே மொழியில் வாசிக்க ஏனோ நிசப்தம் வலைத்தளத்தைத் தொடர்ச்சியாக வாசித்து முடித்ததுபோல் இருந்தது. பிரத்தியேக நாவலுக்கான நடையென்று எதுவும் இல்லை.

பக்கங்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டது போல்தான் பாத்திரங்களின் சிருஷ்டிப்பைப் பார்க்கத் தோன்றுகின்றது. எல்லாப் பாத்திரங்களும் அழுத்தம் இல்லாமல் சுருங்கப்பட்டதாகவே இருக்கின்றன. அமாசை, பவானி, உமா, லிங்கப்பா, பால்காரர், வருண், திருமணம் செய்யாமல் தங்கியிருக்கும் தம்பதிகள் என்று அனைத்துப் பாத்திரங்களின் பின்னே மிகப்பெரிய வாழ்வு இருக்கின்றது. பவானி குழந்தையாக இருக்கும்போது அமாவாசையைத் திருமணம் செய்துகொள்ளவரும் உமாவின் வாழ்க்கை சொல்லப்படவேயில்லை. வருண் மீதான ஊடலைப்பற்றி ஓரளவுக்குப் பவானியின் பக்கம் இருந்து சொன்னாலும் வருணின் பக்கம் வெற்றிடமாகவே இருக்கின்றது. அந்த வாழ்க்கை வெறும் சில பக்கங்களில் சுருங்கிவிட்டது. நாவலின் களம் மிகப்பெரியது. இந்தக்களத்தை வெறும் நூற்றிநாலு பங்கங்களில் எழுதி குறுநாவலாக முடித்திருப்பதைவிட இன்னும் அதிக சிரஷ்டையோடு விரிவாக எழுதி இருக்கலாம்.

ஜீலை -செட்டம்பர் புதுவிசை இதழில் வெளியாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *