கொல்வதெழுதல் 90 – அலைக்கழிப்பின் நாட்கள்

கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் எழுதிய புதினம் ‘கொல்வதெழுதல் 90’. போர்க்காலத்தில் சாதாரண கிராமத்து இசுலாமிய இளைஞன் ஒருவனின் கதை. தொண்ணூறுகளில் கதை நிகழ்கின்றது. நாலா பக்கமும் இடம்பெறும் இன முரண்பாடுகள், மிகச்சிறிய சமூகமான இசுலாமிய சமூகத்தை அழுத்திப்பிசைகிறது. இலங்கையில் வசிக்கும் இசுலாமிய சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகளையும், அச்சமூகத்தின் கடந்தகால வரலாறுகளையும் இலக்கியப் பதிவாக எழுதப்படுவதில்லை என்ற பரிதவிப்பு இசுலாமிய சமூகத்துக்கு தொடர்ச்சியாக இருந்துவருவதுண்டு. அப்பரிதவிப்பை ஓரளவுக்கு குறைத்துவைத்திருக்கின்ற படைப்பாக்கமாக கொல்வதெழுதல் 90 நாவலைக் கருதலாம்.

image13-800x800

கிழக்கிலங்கையிலிருக்கும் பள்ளிமுனைக்கிராமம்தான் கதையின் களம். மிகுந்த நெருக்கடியால் அவதியுறும் கிராமம். போர் அழுத்திக்கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் இந்திய இராணுவமும் அவர்கள் துணைக்குழுக்களும் வன்முறையில் இருக்கின்றார்கள். இன்னுமொரு பக்கம்  புலிகள் இராணுவத்தினரோடு மோதலில் இருக்கின்றார்கள். அதன் விளைவுகள் பள்ளிமுனைக்கிராமத்தையும் வெகுவாகத் தாக்குகிறது. விவசாயத்துக்கு செல்பவர்கள் கண்ணிவெடியில் சிக்கி காலை இழந்திருக்கின்றார்கள். பாதைகளை கடக்கும்போது கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல்கள் நிம்தியைக் குலைக்கின்றது. இராணுவத்தினாலும் புலிகளாலும் தொந்தரவுகளை எந்நேரத்திலும் அடைய நேர்கின்றது. இறப்பு விழுந்த வீட்டில் பெரும் ஓலம் எழும்போதுகூட கேட்பவர்கள் “புலிப்படை புகுந்திட்டோ” என்று யோசிக்கின்றார்கள். அவ்வாறான போர்ச்சூழலில் முடிந்தளவு இயல்புவாழ்கை என்பது சிக்கல் நிறைந்ததாக இருகின்றது. ஆனால், இந்நாவல் போர்காலத்தை முற்றிலுமாகப் பேசமுனையவில்லை. போரின் உக்கிரம் ஏற்படுத்தும் அநீதியில், இசுலாமிய மக்கள் தமக்கான அரசியல் எழுச்சியை வளர்த்தெடுக்கும் காலத்தில் அதன் அலையில் நிகழும் போர்க்காலக் காதல் கதைதான் இது. அக்காதலின் கதை வாயிலாக போரியல் சம்பவங்களும் அதன் துன்பங்களும் இலக்கியமாகப் பதியப்படுகின்றன.

முத்துமுகமதுவையும் அவனது காதலியான கிளிக்குஞ்சு மைமுனாவையும் ஒட்டிநகரும்கதை. சப்புசுல்தான் என்பவன் முத்துமுகமதுவுக்கு மிகுத்த எரிச்சலை தூண்டுபவனாக இருக்கின்றான். அவனின் மேல் பாலியல் குற்றச்சாட்டுகள் நிரம்பிவழிகின்றன. சப்புசுல்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊரிலுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுப்பவன். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வீட்டிலிருக்கும் வறுமையான பெண்களை அனுப்பிவைக்கின்றான். அனுப்பி வைக்கும் சாட்டில் கொழும்புக்கு  அழைத்துச்செல்லும்போது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துவிடுகின்றான் என்ற பாலியல் குற்றச்சாட்டு அவன்மீது நிரம்பிவழிகிறது. அவனின் மீதான வெறுப்பும், தனது காதலியின் உம்மா சப்புசுல்தானின் பேச்சுக்கு இசைந்து அவளை மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு அனுப்பத் தீர்மானித்து வைத்திருப்பதும் அவனை துன்புறவைக்கின்றது. அதன் அழுத்தங்கள் முத்துமுகமதுவின் பார்வையில் தொடர்கின்றன. தனது கிரமத்தையும், தனக்கு வருங்காலத் துணையாக வர இருக்கின்ற கிளிக்குஞ்சு மைனாவையும் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவி இளைஞன் ஒருவனின் மனம் அலைந்துகொண்டிருக்கின்றது.

பள்ளிமுனைக்கிராமம், முத்துமுகம்மது, முத்துமுகமதுவின் காதலியான மைமுனா, அவளது தாய், மைமுனாவின் தம்பி யாஸின், பள்ளித்தலைவர், சப்புசுல்தான், இசுலாமியக்கட்சித் தலைவர் எம் எச் எம். இஸ்ஹாக், உதுமான், தேநீர்க்கடை நெய்னார், செய்லான் ஹாஜி, உதுமான் மகன் அன்வர் என்று எக்கச்சக்கமான பாத்திரங்கள் நாவலில் ஊடுபாவுகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொருவிதாமான மனநிலையைக் கொண்டவை. சிலர் மிகக்கனிவானவர்கள்; சிலர் பொறமையானவர்கள். ஒட்டுமொத்த பாத்திரங்களும் தங்கள் இயல்புக்குள் சித்திக்கின்றன. அப்பாத்திர சிருஷ்டிப்புத் திறன் நாவலை முழுமைமிக்கதாக நகர்த்துகிறது.

நாவலை வேகவேகமாக ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்தபோது அப்படி என்ன கவர்ந்தது என்று யோசித்தால் நாவலின் வட்டாரவழக்கு என்றே தோன்றியது. சம்பவ விவரிப்பு எழுத்து மொழியிலும், உரையாடல் வட்டாரவழக்கிலும் எழுதப்பட்டுள்ளது. அதிக நாடகீயத் தருணம் கொண்ட மிக எளிய கதைதான், ஆனால் பாத்திர வடிவமைப்பும் சிருஷ்டிப்புத்திறனும் நாவலை வேறோர் தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. நாவலின் பிரதான பாத்திரமான முத்துமுகமதுவின் எளிய ஆசைகளும், பரிதவிப்பும் வெளிப்படும் இடங்கள் உச்சக்கட்ட படைப்பாக்கமாக உருவாகியிருக்கின்றன. சப்புசுல்தான் மேல் முத்துமுகமதுவுக்கு எழும் வெறுப்பும் இன்னொரு பக்கம் அழுத்தும் தாழ்வுமனப்பான்மையும் நுட்பாமக நாவலின் உள்ளுறையாக ஊடுபாவுகின்றது.

முத்துமுகமது சாதரண இசுலாமியக் குடும்பத்திலிருந்து வந்து மெல்ல மெல்ல மேல்நோக்கி எழுகின்றான். உண்மையில் எழ  வைக்கப்படுகிறான். இசுலாமிய கட்சியில் சாதாரண அடித்தொண்டனாக இருந்த அவனின் மங்கலான அறைபோன்ற வாழ்கை சட்டென்று ஒளிர்வடைகின்றது. அவன் எழுச்சி அவன் எதிர்பார்க்காதவொன்று. தனது தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொண்டு உச்சத்துக்குச் செல்கின்றான். சடுதியாக ஒரு கணத்தில் உதிர்ந்து தனது இடத்தைக் கண்டுகொள்கின்றான். ஆனாலும் அவன் முன்னேறிக்கொண்டேயிருக்கின்றான். அவனது விசுவாசம் அதனை மிக எளிமையாகப் பட்டாம்பூச்சி காற்றில் பறப்பதுபோல் நிகழ்த்திவிடுகின்றது.

பள்ளிமுனைக்கிராமம் என்பதைதவிர அவன் வேறு இடங்களைப் பார்க்காதவன். சிங்களத்தில் ஒரு வார்த்தை அறியாதவன். கொழும்பில் சப்புசுல்தானின் சூழ்ச்சியில் சிக்கி அல்லலுறும்போது மொழியின் அந்நியம் அவனைக் கொல்கிறது. ஒரு விலாசத்தை விசாரிக்கும்போது ஏற்படும் எதிர்வினைகள் அவனை மதம் கடந்து தமிழ்பேசுவனாக சித்தரிக்கிறது. முஸ்லிம் என்ற அடையாளம் காணமல்போய் மொழியடிப்படையில் தமிழன் என்ற அடையாளம் உருவாகும் தருணம் அது.

முத்துமுகமது மீதான இசுலாமிய கட்சித்தலைவர் எம் எச் எம். இஸ்ஹாக்கின் கரிசனை எதனால் உருவாகிறது என்று யோசித்தால், அவனின் விசுவாசம் என்றே தோன்றுகின்றது. எதையும் மறைக்காமல் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் தன்மை. தன்னை அற்பனாக கருதி அடிக்கடி பலவீனமான தருணங்களில் தலைவரின் காலில் விழுகின்றான். காலில்விழுதல் மார்க்கத்துக்கு முரணானவொன்றாக இருகின்றபோதும் அவனின் பலவீனங்களையும் விசுவாசத்தையும் காட்ட அதுவொரு குறியீடாகவிருக்கின்றது.

வெறும்விசுவாசம் என்பது கட்சியின் தலைமைத்துவத்தை நோக்கிச்செல்வதற்கே போதுமானதாக இருக்குமா என்பதை யோசிக்கும்போது இல்லை என்ற பதிலே கிடைக்கும். முத்துமுகமதுவின் தனித்திறன்கள் மீதான பார்வையை செலுத்தும்போது அவை பாத்திரச் சித்திகரிப்பில் விடுபடல்களை காட்டுகின்றது. அவனின் சமூகத்தின் மீதான பார்வையும், புரிதல்களும் ஊகித்தறிய முடியாமல் இருக்கின்றன.  ஒட்டுமொத்தமான நாவலாக படிக்கும்போது கதை நாடகீயத்தனமாக இருப்பது நாவலின் பெரிய குறைபாடாக இருகின்றது. ஆனால், இசுலாமிய பண்பாட்டுச்சூழலை எழுத்தில் கொண்டுவந்திருப்பது இவ்நாவலின் பெரும்பலமாக இருகின்றது.

தனது உம்மாவை மத்தியகிழக்கு நாடு ஒன்றில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி கொழும்புக்கு அழைத்துச்சென்று பாலியல் சேட்டை புரிந்து, அவளை தற்கொலை நோக்கித் தள்ளிய சப்புசுல்தானைக் சொலைசெய்ய அவரின் மகனான அன்வர் முயற்சிக்கிறான். சப்புசுல்தானை பழிவாங்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைகின்றான். அங்கே அன்பு என்ற பெயரில் போராளியாக மாறுகின்றான். விடுதலைப்புலிகளின் லட்சியத்துக்காக அன்றி வேறு காரணங்களுக்காக இசுலாமியர்கள் புலிகளில் இணைந்தார்கள் என்ற சித்திரத்தை அது வழங்க முற்படுகின்றது. அது அந்தப் பாத்திரந்தின் தனித்துவமான தன்மையாக இருக்கலாம். ஆனால், விடுதலைப்புலிகளின் இலட்சியத்தை ஆதரித்து அவ்வமைப்பில் இணைந்த இசுலாமியர்களைப் பற்றி நாவல் பேசவில்லை.

ஒரு காதல்கதையை அரசியலின் புறச்சூழலைக் கலந்து நகர்த்திச்செல்கின்றார். உதிரிகளாக புலிகள் இசுலாமியர்கள்மேல் நிகழ்த்திய படுகொலைகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஆங்காங்கே கர்த்தால்கள் கடையடைப்புக்கள் நடக்கின்றன. புலிகள் இராணுவத்தின்மீது நடத்திய தாக்குதல்களில் சாதாரண இசுலாமியர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையை, அதன் பக்க விளைவுகளை இந்நாவல் முற்றிலுமாக பதிவுசெய்யவில்லை. ஒரு காதல் கதையில் உதிரியான சம்பவங்களாக சிலவற்றை சொல்வதோடு கதை முடிகிறது.

உரையாடல்கள் நாவலுக்கு பெரும்பலம் சேர்கின்றன. ஏனைய புறச்சூழலின் வர்ணனைகள், உணர்வுகளின் வர்ணனைகள் இல்லாமல் வெறும் உரையாடல்களின் நீட்சி பாத்திரங்களின் உணர்ச்சி நிலைகளைத் தடங்கள் இன்றி வாசிப்பவருக்கு ஒப்பேற்றுகின்றது.

இந்நாவல் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியாகியது. மொத்த  வடிவம் தொடர்கதைக்குரியதாக இருந்தும், ஒட்டுமொத்தமாக நாவல் வடிவில் கொண்டுவரும்போதும் கிடைக்கும் நாவல் எனும் அனுபவம் பூரமணமாக கொல்வதெழுதலில் இல்லாமல் இருகின்றது. ஆனால், அதன் விடுபடல்கள் நாவலை தரம் தாழ்த்தும் வண்ணம் இல்லை. எளிய கிராமத்து இளைஞனின் அப்பாவி அகத்தை உரையாடல் மூலம் வெளிக்கொணர்வதில் இதன் அழகியல் வென்றதாகின்றது.

 ஜீன் – ஆகஸ்ட் “நடு”  இணைய இதழில் வெளியாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *