இரண்டு சிறுகதைகள்

1

காலம் இதழில் ‘சிறில் அலெக்ஸ்’ ‘ஒரு ருமேனியனுடன் உரையாடுவது எப்படி?’ என்ற குறுங்கதையை இங்கிலாந்தை மையப்படுத்தி எழுதி இருக்கிறார். ருமேனியர்கள் என்றில்லாமல் பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பியர்களும், ஏனையவர்களும் தான் அதிகமான உடல் உழைப்பு கூடிய வேலைகளைச் செய்கிறார்கள். தொழிற்சாலைகள், பண்ணைகள் என்று எங்கும் அவர்களைக் காணவியலும். பூர்விக ஆங்கிலேயர்கள் உடல் உழைப்பை அதிகம் கொடுக்க தயங்குபவர்களாக இருக்கிறார்கள். வருவாய் குறைந்தாலும் மாநகரசபை அடிப்படை செலவுகளைப் பொறுப்பு ஏற்கும் என்பதால் அதிகம் பொருளாதாரம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. படையெடுக்கும் ஐரோப்பியர்கள் குறைந்த அடிப்படை சம்பளத்தில் வேலைபார்க்கத் தயாராக இருப்பதால், அவர்களுக்கு வேலை குமிகிறது. அவர்களை கசப்பான பார்வையுடன் அணுகும் போக்கு பெரும்பாலான உள்ளூர் மக்களுக்கு இருக்கவும் செய்கிறது. பிரெக்ஸிட்டுக்கு இவர்களின் படையெடுப்பும் காரணம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. உடைந்த ஆங்கிலத்தில் முடிந்தவரைப் பேசி, கொடுத்த வேலையை சிறப்பாகவே ஐரோப்பியர்கள் செய்கிறார்கள். இப்படி வேலைக்காகப் படையெடுக்கும் ஐரோப்பியர்களுடன் பழக நேரும் போது முதலில் எதிர்ப்படும் சுவர் கலாசாரம் தான். ஆங்கிலேயர்களுக்கு இயல்பிலே ஒரு கனவான் தன்மைக்கான பாவனை இருக்கும். ‘ஹாயா’ சொல்வதிலும் புன்னகைப்பதிலும், நன்றிக்கு மேல் நன்றி சொல்வதையும் நுட்பமான உடல் மொழியூடாக வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். அது தவறும்போது கடும் சமநிலைக் குழைவை அடைகிறார்கள். இது வெளியிலான ஒரு சுவராக இருப்பினும் அவர்களது உள்ளம் கடும் இறுக்கமானது. தங்களது தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே சுற்றியுள்ள அனைத்தையும் அணுகுவார்கள். பிரித்தானியர்கள் தவிர்த்த மிகுதி ஐரோப்பியர்களிடம் உடல்மொழியிலும் வார்த்தைகளிலும் பயிற்றுவிக்கப்பட்ட ஆங்கிலேயக் கனிவு இருக்காது. இதனால் அவர்களை அணுக ஆரம்பிப்பது கடினமாக இருக்கும் ஆரம்பத்தில், பின்னர் இலகுவாகிச் செல்லும். பெரும்பாலானவர்கள் குடும்ப அமைப்பில் நம்பிக்கை இழந்தவர்களாக, திருமணம், நீண்டகால உறவில் இருத்தல் என்பதிலிருந்து விலத்தி முற்றிலும் இன்னோர் தளத்தில் இருப்பவர்கள். கீழைத்தேய மனநிலையோடு அவர்களை புரிந்துகொள்வது சிரமமானது. சிறில் அலெக்ஸ் எழுதிய இக்கதை அப்புளியைத் தொடுகிறது. மென்பொருள் துறையில் வேலையில் இருக்கும் மூன்று இந்தியர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் ருமோனியாவை சேர்ந்த இன்னுமொருவரும் புதிதாகத் தங்க வருகிறார். தொழிற்சாலை ஒன்றில் கடைநிலை ஊழியராக இருக்கும் அவனை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆங்கில உச்சரிப்பைத் திருத்திக்கொண்டு பலகோடி மக்களின் சுகாதாரத்தை முடிவு செய்யும் மென்பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் தங்களால் ‘ருமானி’ என வெறுக்கப்படுகிற ருமேனியனும் ஒரே வீட்டில் எப்படி வந்து சேர்ந்தோம். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று திகைக்கிறார்கள். சமையலறைக்குள் சந்தித்துக்கொள்ளும் கதைசொல்லியும் ருமேனியனும் உரையாடும் உரையாடல்தான் இக்கதை. அவனின் உலகத்துக்குள் சட்டென்று நுழைய வாசல் திறக்கிறது. அதைப் படிப்படியான வார்த்தைகளில் சித்தரித்து, இந்திய மனநிலையை மெல்லக் கலைத்து, ஆங்கில மனதாக பாவனை செய்து, ஐரோப்பிய விளிம்புநிலை தொழிலாளியின் தனிப்பட்ட உலகத்தைச் சொல்வதன் ஊடாக இக்கதை வெல்கிறது.

சிறுகதையாக இப்புனைவைக் கொள்ள முடியாது என நினைக்கிறேன். ஒற்றைப் புள்ளியில் உச்சத்தை அடையும் கதைகள் முழுமையாக உணரப்படுவதில்லை. இன்று சிறுகதைகள் விரிவான பல சாத்தியங்களை பரிசீலனை செய்யும் இடத்திலுள்ளது. பன்முகமான தளங்களைத் தொகுத்துப் பிணைக்கும் கதைகளே தற்போதைய சிறுகதையாகக் கொள்ள இயலும். சுருங்கச் சொன்னால் குறுநாவலுக்கான இடத்தை தற்போதைய சிறுகதைகள் பிடிக்கத் தொடங்குகின்றன. இக்கதையைச் சிறந்த குறுங்கதையாகக் கொள்ள முடியும்.

2

ஜீலை மாத தமிழினி இணைய இதழில் ரா.கிரிதரன் ‘மரணத்தைக் கடத்தல் ஆமோ’ என்கிற சிறுகதையை எழுதியிருக்கிறார். மகாத்மா காந்தியை கதாப்பாத்திரமாக வைத்து எழுதப்படச் சிறுகதை. காந்தியின் இறப்பு வன்முறையால் நிகழும் துர்மரணமாக இருக்கும் என்பதை காந்தியின் மீது பற்றுக் கொண்டிருக்கும் ஜோதிடர் கண்டறிகிறார். அது தரக்கூடிய அலைக்கழிப்பில் காந்தியிடமே சொல்ல தத்துவ விவாதமாக நம்பிக்கை, கர்ம வினை பலன், எடுக்கக்கூடிய முடிவுகள் என்பவற்றுக்கு இடையிலான விவாதமாகக் கதை நீள்கிறது. ராஜாஜியும் கதையில் வருகிறார். காந்தியின் ஒத்த அலைவரிசையில் சிந்தித்து தர்க விவாதத்தில் ஈடுபடுகிறார். காந்தி தன் நிழலுடன் உரையாடுவது போல.

ஆச்சிரமத்தில் சிறுவன் ஒருவன் மீதான காந்தியின் கண்டிப்பு வன்முறையைப் பிடித்துவிட அதுதரும் அகச் சஞ்சலத்தின் சித்தரிப்புகள் மூலம் ஊழ்வினைப் பயனும் நாமாக எடுக்கக்கூடிய முடிவுகளும் வெவ்வேறானது அல்ல என்பதைக் கதைக்குள் காந்தி கண்டடைகிறார்.

காந்தியின் சுயசரிதையில் குறிப்பிடப்படும் நடால் பண்ணையில் நடைபெற்ற சிறிய சம்பவத்தைப் பிடித்து, சிக்கலான கதைக்கருவை முடிந்தவரை எளிமையாக முரண்பாடுகளால் கதையாகப் பின்னியிருக்கிறார் கிரிதரன்.

நம்பிக்கைக்கும் வரலாற்றின் மூலம் அறிந்த உண்மைக்கும் இடையில் எழுத்தாளர் எந்தச் சார்பையும் எடுக்காமல் அதன் போக்கிலே விட்டிருக்கிறார்.

காந்தியின் மரணம் கதைக்குள் இல்லாவிடினும் கதையின் முடிவு இயல்பாக அவரின் மரணத்துடன் பொருத்திப் போகிறது. வரலாற்றில் காந்தியின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது வெளிப்படை. இக்கதை நிகழும் தருணத்தில் கதையில் அதற்கான முன் முடிவுகள் புனைவுத் தளத்தில் இல்லை. பலவந்தமாக அந்த முடிவை நோக்கி நகர்த்தாத சாமர்த்தியம் தேர்ந்த முதிர்சியுடன் கையாளப்பட்டு
இருக்கிறது.

சமகாலத்தில் எழுதப்படும் சிறுகதைகளில் இக்கதை குறிப்பிடத்தக்க சிறுகதை என்பது எண்ணம்.

கதையைப் படிக்க : மரணத்தைக் கடதல் ஆமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *