ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன்விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலைஇலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன்.

என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்”

– ஷோபாசக்தி

ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில் அவர்களுக்கான இடம் எப்போதும் உண்டு. ஒருவர் ஷோபாசக்தி, மற்றொருவர் அ. முத்துலிங்கம். இருவரும் புலம்பெயர்ந்து வசிப்பவர்கள். ஷோபாசக்தி இன முரண்பாடுகள் அதிகரிக்க விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பிற்பாடு நாட்டை விட்டு அகதியாக வெளியேறியவர். அ.முத்துலிங்கம் பல்கலைக்கழகப் படிப்பை நிறைவு செய்து தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியவர். இருவருக்கும் இடையிலான படைப்புலகம் அடியோடு வேறுபட்டது. இருவரில் மிகக் குறைவாக எழுதியவர் ஷோபா சக்தி, இருந்தும் அவரது ஒவ்வொரு கதையும் காத்திருந்து படிக்கப்படும். நிதானமாக எழுதினாலும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு இருப்பவர். 2014-இல் எழுதிய ‘மாதா’ சிறுகதை வரையிலான கதைகள் தொகுக்கப்பட்டு தனிப் புத்தகங்களாக வந்து விட்டன. இறுதியாக வந்த கண்டிவீரன் தொகுப்பைத் தவிர்த்து மேலதிகமாக நான்கு கதைகளை இக்கட்டுரை எழுதப்படும் வரையில் எழுதியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ஃபிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு “Friday et Friday” தொகுப்பாகச் சமீபத்தில் வெளியாகியும் உள்ளது.

ஷோபா தன்னுடயை அரசியலைச் சொல்லத்தான் கதைகளை எழுதுவதாகச் சொல்கிறார். இருப்பினும் அவரது கதைகள் வெறுமே பிரச்சாரமாக இருப்பதில்லை. அந்த முக்கியக் கூறே அவரைப் பல ஈழ எழுத்தாளர்களிடம் இருந்து விலத்திக் காட்டுகிறது. ஷோபாவின் பெரும் பலமே பகடிதான். பகடிகள் ஊடாகத் தொடர்ந்து புனித மரபுகளையும் கலாச்சாரத்தையும் கவிழ்க்கிறார். விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களை எள்ளலாகக் கதைகளில் சித்தரிக்கும் போது உறுதியாக நிறுவப்பட்ட பல இலட்சிய விம்பங்களை உடைக்கிறார். இந்தப் பகடிகளுக்குப் பின்னே கடும் சீற்றம் ஒளிந்திருக்கிறது. அங்கதங்கள் ஊடாக அவற்றை வெளிப்படுத்தும் போதும் கலையம்சங்களைத் தவறவிடுவதில்லை. கூரிய எள்ளல்களைக் கதையாக்க முடிகிறது. ஆனால், பகடியை மட்டும் முன்னிறுத்தும் எழுத்தாளர் அல்ல. கூர்மையாகச் சமகால வரலாற்றையும் அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார். விமர்சனம் சார்ந்து அரசியல் மறுப்பும் இருக்கத்தான் செய்கிறது.

அல்லைப்பிட்டி, புளியங்கூடல் என்ற இரண்டு கிராமங்கள் ஷோபாசத்தியின் கதைகளில் நிகழும் களமாக பெரும்பாலும் அடிக்கடி வரும். மீண்டும் மீண்டும் ஒரே மண்ணிலிருந்தே தனக்கான கதா மாந்தர்களை உருவாக்கிக் கொள்கிறார். தான் பிறந்து வளர்ந்த நிலத்தையும் வாழ்க்கைப் புலத்தையும் ஏன் கதைகளின் பின்னணியாக வைக்கிறார் என்றால் அவர் அந்த நிலத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினாலேயே அவை அவரின் உள்ளத்துக்குள் புகுந்து தொடர்ச்சியான படிமங்களையும் நுட்பமான சித்தரிப்புகளையும் உருவாக்க வழியமைக்கிறது. ‘எழுத்தாளன் அவன் பிறந்து வளர்ந்து உளம் உருவான சூழலைத் தன்னியல்பாக நுட்பமாக வெளிப்படுத்துவது தான் கலை’ என்கிற ஜெயமோகனின் கூற்று ஷோபா சக்திக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஷோபா சக்தி அல்லைப்பிட்டியைப் பல்வேறு கோணத்தில் தனக்குள் தேடிக் கொண்டே இருக்கிறார். வன்முறை மீதான வெறுப்பு என்பதை விட வன்முறை மீதான எள்ளல் என்றே அவரின் கதைகளைச் சுருக்கலாம். பகடியை முன்னிறுத்தும் பஷீரின் கதைகளில் ஆன்மீகத் தேடல் இருக்கும். ஷோபாவின் உலகம் பௌதிகமானது. அவரை Materialist எனலாம். அதனால் தான் அங்கதத்தைக் கடந்து உச்சமான கவித்துவ தரிசனங்களை அவரின் புனைவுகள் அடைவதில்லை. அ.முத்துலிங்கத்திற்கும் ஷோபாவுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளில் இதைக் கவனிக்கலாம்.

‘கறுப்பு அணில்’ என்கிற அ.முத்துலிங்கத்தின் சிறுகதையில் அகதியாக கனடாவுக்கு வந்து தங்கியிருக்கும் ஒருவன், தன் துன்பம் நிறைந்த சலிப்பு உலகத்தை கறுப்பு அணில் ஒன்று பனியில் செய்யும் அசட்டுத்தனமான செய்கையைப் பார்த்து ஒரு விடுதலையை அடைவான். நுட்பமான படைப்பூக்கம் வெளிப்படும் இடம் அது. அதனைப் புறவயமாக விளக்கிப் புரிந்து கொள்ள வைப்பது சிரமமானது. அகவயமகவே சிலவற்றைக் கண்டடைய முடியும். அந்த இடங்களே உன்னதமாக்கலை உருவாக்கும். ஷோபா சக்தி எழுதிய மாதா சிறுகதையின் முடிவில் ஏற்படும் உணர்வும் உச்சத் தருணம் ஒன்றை உருவாக்குவது தான். ஆனால், மொத்தக் கதையும் அந்த உணர்வுப் புள்ளியை நோக்கியே செல்கிறது. அதை முறித்துக் கொண்டு தனக்குள் எந்தக் கண்டடைதலையும் அகவயமாகச் செய்யவில்லை. புறவயச் சம்பவங்களின் ஊடாக மெல்லுணர்ச்சியைப் பிசையும் நுட்பமான நாடகத் தருணங்களை உருவாக்குவதிலே ஷோபா சக்தி வெல்கிறார்.

ஷோபாவும் முத்துலிங்கமும் ஒன்றிணையும் இடம் இருவரும் கதை சொல்லிகளாக இருப்பது தான். இருவரும் கதைகளை நிகழ்த்திக் காட்டுவதில்லை, சொல்கிறார்கள். ஆசிரியரால் அல்லது கதை மாந்தர்களால் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. இந்தப் பாவனை உண்மையில் புனைவு உருவாகுவதை இலகுவாக்கி விடுகின்றது. ஷோபாசக்தி பெரும்பாலான கதைகளில் மையச்சரடாக இருந்து கதைகளைக் கோர்க்கிறார். தன் பாத்திரங்களைத் தனக்கூடாக இணைக்கிறார். முத்துலிங்கமும் அவ்வாறே. இதுவே இவர்கள் இருவரது கதை சொல்லலுக்கு சுவாரஸ்யத்தை அடிப்டையில் தந்து விடுகின்றது.

ஷோபாசக்தி தன் கதைகளை மையமாக நின்று இணைத்தாலும், கதைக்குள் சமாந்தரமாக இன்னுமொரு உத்திக்கூடாக கதைகளை நகர்த்துகின்றார். அது பொருட்கள் ஊடாக. கப்டன் கதையில் நீலக்கற்கள் பதித்தத் தோடு, ரூபம் கதையில் தொலைக்காட்சிப் பெட்டி, மிக உள்ளக விசாரணையில் வைரவர் கோயில் விளக்கு, தங்கரேகையில் பவுண். இப்படியாக அந்தப் பொருட்களை வைத்து சம்பவங்களைப் பிணைக்கிறார். இயல்பான வாழ்க்கையில் இருக்கும் போது அந்தப் பொருளுக்கும் கதை மாந்தர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு, பின்னர் யுத்தம் நடக்கும் போது, பின்னர் யுத்தம் முற்றாக முடிந்த பின்னர் என்று அவற்றைப் பிரித்து சம்பவங்களாக அடுக்கி கதைகளைப் பின்னுகிறார். அதனால் தானோ என்னவோ ‘ஆயிரத்தொரு சொற்கள்’ போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது கரிக்கட்டையை எடுத்து எழுதக்கூடும் என்ற முடிவுக்கு முன்னரே வர முடிகிறது.

‘காயா’ சிறுகதை ஷோபாசக்தியை Materialist என்ற வகைக்குள் மட்டும் அடைத்து விட இயலாது என்பதற்கு சவால் விடுகிறது. அக்கதை தத்தளிப்புகள் நிறைந்த கதை. மீட்புக்கானத் தவிப்பை வைத்து பின்னப்பட்ட கதை. பொதுவாக ஷோபாசக்தி இந்த வகையான குற்றவுணர்வு, தவிப்பு, மீட்சி என்பவற்றுக்குள் செல்வதில்லை. ஆனால், இக்கதையில் அவரையும் மீறி அவை நிகழ்ந்தே இருக்கின்றன.

இளவயதில் இலட்சியத்திற்காக அடையப்படும் காமம் அதன் எல்லைகளைக் குறுக்கிக் கொள்கிறது. சுய இன்பத்தைத் தவிர வேறு வழிகளும் இல்லாமல் போகிறது. பின்னர் சிதைவடைந்த காமம் அவனையும் மீறி பாவத்துக்குள் தள்ளிவிடுகிறது. அதிலிருந்து மீள்வதற்கான எத்தனத்தைக் கண்டறிவதில் தடுமாற்றம் கொள்கிறான் கதை சொல்லி. கிறிஸ்தவ உள்ளத்தை வெளிக்காட்டும் கதை. ஷோபாவின் ஆரம்பகால கிறிஸ்தவ வளர்ப்பும், ரஷ்ய இலக்கியங்கள் மீதான ஈடுபாடும் இந்தக் குற்றவுணர்வு, மீட்பு என்ற படைப்புலகத்தை நோக்கித் தள்ளியிருக்கலாம். மாதா சிறுகதையில் இதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் காயா சிறுகதையில் ஒளிவுமறைவு இன்றி தனியே தென்படுகிறது.

சமகாலத்தை எழுதுவதில் ஷோபாவுக்கு அதிகமான விருப்பம் உண்டு. சமகாலச் சிக்கல்களை புனைவுக்குள் கொண்டு வரும்போது அவை ஆழமின்மையை உருவாக்கலாம். வெறும் உணர்ச்சிவசப்படும் அலைகளால் மட்டுமே தெரிவது சமகாலம். அதற்கான பெறுமதி உருவாகக் குறிப்பிட்ட காலம் ஆகலாம். இன்று ஒட்டுமொத்த ஈழ விடுதலை ஆயுதப்போராட்டம் உருவாக்கிய விளைவுகளை தொகுத்துப் பார்க்கவே அதன் மற்றொரு பரிமாணம் புலப்படுகிறது; அதற்கு ஏற்பட்ட கால அவகாசம் என்பது ஏறக்குறைய மூன்று தசாப்தங்கள். இருந்தும் ஷோபா சமகாலத்தை எழுதுவதற்கு உத்திகளைக் கையாள்கிறார். ‘மிக உள்ளக விசாரணை’ சிறுகதையும் ‘அந்திக் கிறிஸ்து’ சிறுகதையும் நேரடியாக இலங்கை அரசியலை விமர்சிக்கிறது. பின்போர் சூழலுக்கு பின்னால் உருவாகிவரும் நெருக்கடிகளை குறியீட்டுத் தளத்தில் பேச முனைகிறது.

மிக உள்ளக விசாரணை சிறுகதை எழுதப்பட்ட நேரம் நல்லிணக்க முயற்சிகள் இலங்கையில் ஏற்படுத்த முயலப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி. போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் வாழும் இனங்கள் நல்லிணக்கமாக பழையதை மறந்துவிட்டு இணைந்து வாழ வேண்டும் என்ற தொனி வலியுறுத்தப்பட்டது. ஒருபக்கம் தமிழர் தரப்பினர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச ரீதியிலான விசாரணைகள் தேவை, அரசாங்கம் முன்வைக்கும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை; ‘குற்றம் செய்வதும் ஒருவர், விசாரிப்பதும் ஒருவர், தண்டனையளிப்பதும் அதேயோருவர் எனின் என்ன வகையான நீதியை எதிர்பார்க்க முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரசாங்கமோ உள்ளக விசாரணையே போதும் தமிழ்த் தரப்போடு சேர்ந்து நாமே தீர்வை நோக்கிச் செல்வோம் என்றது. எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் தமிழர்கள் தரப்பில் நல்லிணக்கத்தை முன்னெடுக்க கடுமையாக முனைந்தார்கள். தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறந்துவிட்டு தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் கோஷமாக இருந்தது.

இந்தச் சமகால அரசியல் கெடுபிடிகளையும், அவலத்தையும் ஷோபா சக்தி சிறுகதையாக எழுதுகிறார். ஊரிப்புலம் என்கிற கற்பனையான கிராமத்தை சிருஷ்டித்து, அங்கு நடந்த படுகொலை நல்லிணக்கம் என்ற பெயரில் எப்படி கடந்து செல்லப்படுகிறது என்பதை நுட்பமாக எழுதியிருக்கிறார் ஷோபா சக்தி. வழமையாக நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருக்கும் வடிவப் பிரக்ஞை இக்கதையில் மீறப்பட்டிருக்கும். ஷோபாவின் கதைகளின் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டாலே கதை சரிந்து விழுந்து விடும். இந்த இறுக்கம் மொழியிலும் சம்பவத்திலும் சிதறுண்ட போக்கை இக்கதையிலிருந்து சமீபத்தில் எழுதிய ‘பிரபஞ்ச நூல்’ சிறுகதை வரையிலும் நோக்க இயலும். ஷோபாசக்தி தன் கதைகளில் அந்தரங்கமாக தேடிவரும் கேள்வி என்பது இக்கதையில் இருந்து விலத்திச் சென்றிருப்பதால் இது நிகழந்திருக்கலாம். புலிகள் இருக்கும் வரை அவர்களது வன்முறையையும், இராணுவத்தின் வன்முறையையும் தன்னுடையை நேரடியான அனுபவங்கள் ஊடாக எதிர்கொண்டார் கற்பனைத் தளத்தில். தன் துண்டுப் பிரசுரங்களாகச் சொல்லப்படும் கதைகளில் மீள மீள அதையே செய்தார். உண்மையில் எதிர்த்தார்.

புலிகள் அழிக்கப்பட்ட காலத்தின் பின்னர், தன் தேடலை மாற்றி அமைக்கிறார் ஷோபா சக்தி. இப்போது அவரின் கதைகளில் தமிழர் தரப்பு நியாயங்களின் மீதான குரலும், அவர்களின் துயரங்கள் மீது பங்கெடுக்கும் வலிமையான குரலுமே படைப்புகளின் ஊடாக ஓங்கி ஒலிக்கிறது. யுத்தத்தின் பின்பான விளைவை தனிமனிதனை அலகாகக் கொண்டு தனிப்பட்ட சிக்கல்களை காயா கதையாகப் புனைகிறார். வரலாற்றோடு இணைத்து மிக உள்ளக விசாரணையில் எழுதுகிறார்.

பிரபஞ்ச நூல் என்கிற சிறுகதையும் ஏறக்குறைய காயா சிறுகதையோடு ஒப்பிடக்கூடியது. குற்றவுணர்வைக் கடந்து செல்வதை மையப்படுத்தி எழுதப்பட்ட கதையாகக் கொள்ள இயலும். ஆனால், அகவயமான குற்றவுணர்வு சார்ந்த அலைக்கழிப்புகள் காயாவில் இருந்தது போலல்லாமலே இக்கதை இருக்கின்றது. உரையாடல் தன்மையான கதையாகச் செல்கிறது. பால்ய காலத்தைச் சித்தரிக்கும் போது கொடுக்கப்படும் ஊர் சார்ந்த நுண்ணிய விபரணைகள் ஆகட்டும், பாலியல் தொழிலாளியை சித்தரிக்கும் விதத்தில் ஆகட்டும் கூர்மையாக உருவகப்படுத்தல்களை வழமை போல் முன்வைக்கிறார். இதே புறவய பிரக்ஞை சித்திரை லிங்கத்தின் மன உள்ளோட்ட சித்தரிப்பில் இல்லாமலே இருக்கிறது. பாலியல் தொழிலாளியிடம் இருந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ புத்தகத்தைக் கவர்ந்துவிட்டு, நண்பர்கள் ஐவருமாக சேர்ந்து துஷ்பிரயோகப்படுத்திவிட்டுச் செல்கிறார்கள். இதையெல்லாம் இயக்கமாக தம்மைக் கருதி வெளிப்படுத்திய பாவனையில் வருவது. அது கொடுக்கும் அசாத்திய துணிச்சலில் செய்து முடிக்கிறார்கள். பின்னர் மறந்தும் கூட தங்களுக்குள் அதைப் பற்றி பேசிக் கொள்ளமல் செல்கிறார்கள். விடலைக் காலத்தில் செய்த விபரீதம் வயதாகிய பின்னர் வாட்டுகிறது. பிரபஞ்சனின் சிறுகதை நூல் கதையின் இறுதி வரை வருகிறது.

இக்கதையில் ஊடுபாவும் மேற்கோள்கள் ( நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, அலெக்ஸ்பாரதி (புனைவு), ஜெயமோகனின் மகாபாரதத் தொடர் ) கதையை இன்னும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவலாம். ஆனால் இலக்கியத்தில் மேற்கோள் எழுத்து முறை எப்போதும் இரண்டாம் பட்சம்தான். உடனடியாக ஒரு புனைவை வாசிக்கும் போதும், வாசித்து முடிக்கும் போதும் அது கொடுக்கக் கூடிய அனுபவத்தில் இருந்தே வாசிப்பனுபவத்தைப் பெற முடியும். Reference எழுத்து முறை அவற்றைத் தடை செய்கிறது. ‘நான்கு நாட்கள் தாமதமாக, இன்று பிரபஞ்சன் இறந்திருந்தால் அவரது வாழ்நாள் கேள்விக்கு விடை கண்டுபிடித்திருப்பார்’ என்ற கதையின் முக்கிய குவிமையம் தனியாகச் சொல்லப்படுகிறதே தவிர கதையில் உணர்த்தப்படவில்லை. ஷோபாசக்தியின் படைப்பு மனம் பெளதீகமாக இருப்பதாலேயே இக்கதையை அதன் அடுத்தத் தளத்துக்கு நகர்த்த அவரால் இயலவில்லை.

கற்பனையாக கிராமங்களை உருவாக்கி, அல்லைப்பிட்டி மண்ணின் தொடர்ச்சியாகவே அவற்றை எப்போதும் காட்டுவார் ஷோபா சக்தி. அவரின் ஆளுள்ளமும் கனவுகளும் அந்த மண்ணின் மீதே முளைக்கின்றன. இன்னும் அந்த மண்ணை வைத்து சொல்ல வேண்டிய கதைகள் ஆயிரம் இருக்கலாம். ஷோபாவிடம் சொல்ல நிறையை கதைகள் உண்டு. ஆனால் சொல்லும் முறையில் புதிய சாத்தியங்களை வடிவ ரீதியாகவும், உத்தி ரீதியாகவும் தேடிக் கொண்டே இருக்கிறார். கட்டிறுக்கமான வடிவத்தில் இருந்து தன் கதைகளை சமகாலத்தில் கலைத்துப் பார்க்கிறார் ஷோபா. அவரின் படைப்பூக்கம் வயதாகியும் அடர்த்தி குறையாத அவரின் கேசம் போல அடர்த்தியாவே உள்ளது.

ஷோபாசக்தியின் கதைகளை வாசிக்க:

  1. மாதா – http://www.shobasakthi.com/shobasakthi/2014/12/30/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/
  2. அந்திக் கிறிஸ்து – http://www.shobasakthi.com/shobasakthi/2018/03/26/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/
  3. மிக உள்ளக விசாரணை – http://www.shobasakthi.com/shobasakthi/2016/10/10/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88/
  4. காயா – http://www.shobasakthi.com/shobasakthi/2017/03/11/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *