மதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15

இருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம். ஆனால் இவ்வகையான உணர்வுகளில் ஒருவர் பீடிக்கப்பட்டு இருக்கும்போது அவர்களை விளங்கிக்கொள்ளவதும் கடினமாக இருக்கும்.

                     திருக்கோவில் கவியுகன்

திருக்கோவில் கவியுகன் எழுதிய சிறுகதைகளில் “மதிப்பீடு” என்கின்ற கதையை ஏறக்குறைய இவ்வாறான அகச்சிக்கலை பேசும் சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடுவேன். இக்கதையின் கூறுநிலை ஒரு சிங்களப் பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகின்றனது. பல்கலைக்கழகத்தில் சிங்களப் பெண்ணொருவர் தமிழ் வாலிபன் ஒருவருடன் சிநேகிதமாக இருக்கிறார். அவனோடு பேசுவதும் உரையாடுவதும் அவளுக்கு போதிமரத்தின் கீழ் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றது. வெளிப்படையாகவும் உறுதியாகவும் தன் கருத்துகளை பேசும் அவன் வல்லமை,  அவனுடன் அதிகம் சிநேகம் கொள்ளச் செய்கிறது.

தமிழ் அடையாளத்துடன் இருக்கும் அவன் பொலிசாரினால் ஒருநாள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகின்றான். அவனைப் பார்க்கத் தேடிச் செல்லும் அவள், அவனின் பேச்சால் கொஞ்சம் தடுமாறுகின்றாள்.

சிங்களவராக இருக்கும் நீங்கள் சிறைச்சாலைக்குக்கூட சுதந்திரமாக வந்துவிட்டுச் செல்வதைப்பார்த்து, தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக சுதந்திரமாக வெளியே நடமாட முடியாமல் கைதுசெய்யப்பட்டு இங்கே அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் மிக மனம் வருந்துவார்கள் என்று தன் தோழி மீது சஞ்சலப்படுகிறான். தனக்காக தன்னைத் தேடி பரிவுடன் வந்திருக்கும் அவளின் தூய அன்பை புரிந்து கொள்ளும் நிலையில் அவனும் இல்லை. அதற்காக அவள் அதிகம் வருந்தவுமில்லை.

பத்து நாட்களின் பின் விடுதலையாகும் அவனின் போக்கு மெல்ல மெல்ல விசித்திரம் அடைகிறது. அவனோடு கதைத்து அவனின் அகம்சார்ந்த பிரச்சினையை விளங்கிக் கொள்வதில் தோழி சிக்கல் அடைகிறாள். அவளது இருத்தலும் சிந்தனையும், தமிழ் இளைஞானான அதிதீவரப் போக்குக் கொண்ட அவனது சிந்தனைப் போக்கை புரிந்துகொள்வதில் சிக்கலே தருகின்றது. அவனது தமிழ் நண்பர்கள் கூட அவனை முற்றிலும் புரிந்து இருப்பார்களா என்றால் சந்தேகாமவே இருக்கிறது. அவன் எழுதும் கவிதைகளின் அர்த்தங்களைக் கூட அவர்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை.

இக்கதையை வெளியே இருந்து வாசிக்கும் வாசகர் அத்தோழியின் மனநிலையையும், தமிழ் வாலிபனின் மனநிலையையும் தங்களது கற்பனையின் ஊடாக நிரப்பி கதையை புரிந்து கொள்ளலாம்.

வாழ்கையின் மகிழ்வையும், அதன் இன்பங்களையும் நோக்குமாறு சுட்டிக்காட்டும் போது “பூத்துக் குலுங்கும் வாகையைப் பார்த்தீர்களா எவ்வளவு அழகாய் இருக்கிறது” என்கிறாள், அதற்கு அவன் தூரத்தில் செத்துக்கிடக்கும் எலியைக் காட்டி “பார்த்தீர்களா எவ்வளவு அருவருப்பாய் கிடக்கின்றது” என்கிறான். இருவரது இனத்தவர்களின் பொதுப்பார்வை வேறுபடும் இடம் இங்கே நுட்பமாகக் குறிப்புணர்த்தப்படுகின்றது.  தொடர்ந்து அழிவுகளுக்குள் மிதக்கும் ஓர் இனம் எப்படித் தங்கள் பார்வைகளை விரித்துக்கொள்கிறார்கள் என்பதை அச்சித்திரிப்புக்களில் இருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால், அவற்றை விளங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் தோழியின் மனநிலை முக்கிமான திறப்புப்புள்ளியாக இருக்கிறது. அதை அவளின் இனத்துடன் சேர்த்தே யோசிக்க வேண்டியுள்ளது.

திருக்கோவில் கவியுகனின் கதைகள் வாழ்வின் மீதான சலிப்பையும், தன் நம்பிக்கைகள் சரியும் இருட்டில் மெலிதாகத் துலங்கத் தொடங்கும் புள்ளிகளின் இருப்பிடத்தைக் காட்டுகின்றது. இருந்தும் அப்புள்ளிகள் மீது அதிகம் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டியுள்ளது. கதைகளை வாசித்து முடிக்கும் தருவாயில் சோர்வும், விரக்தியும் கிளர்ந்து எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. மதிப்பீடு என்னும் இக்கதை “வாழ்தல் என்பது” எனும் சிறுகதைத்தொகுப்பில் உள்ளது. இத்தொகுப்பில் இருக்கும் மொத்தக்கதைகளும் இயல்புவாத எழுத்தாக அமைகின்றன. பல கதைகளின் ஆண், பெண், வயதுச் சித்தரிப்புகளில் ஒத்த கூறுநிலைத் தன்மையைக் கொண்டிருப்பதை பலவீனமாக கருத முடிகிறது. நுண் சித்தரிப்புக்களையும், சம்பவ வர்ணனைகளையும் அதிகம் தவிர்க்கும் கவியுகன் அக உணர்வுகளை சிருஷ்டிப்பதிலே கவனத்தை குவிகிறார். தத்தளிக்கும் கவிதையைப்போல.

பின் குறிப்பு

‘மதிப்பீடு’ சிறுகதை  ‘வாழ்தல் என்பது’ எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *