மக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14

பேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.

                                             எஸ்.எல்.எம்.ஹனீபா

கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத் தரும் மிகக்கூர்மையனா சிறுகதையாக இருக்கிறது. அன்பை ஒரு தளத்தில் பேசி அவை எஞ்சும் முடிவுப் புள்ளியை கேள்விகளாக எழுப்பி மானுட வாழ்க்கையின் புரிந்துகொள்ள முடியாத சிக்கல்களை நோக்கிச் சிந்திக்க வைக்கின்றது. மற்றொரு தளத்தில் கிழக்கிலங்கை இஸ்லாமிய பண்பாட்டை அத்தனை நுட்பமாகக் கதைகளினூடு இயல்பாகப் பதிவு செய்கிறது.

இஸ்லாமியர்களின் பெருநாள் பண்டிகைக்கு முன்னுள்ள நாளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியும் அதன் கலகலப்பு சூழலும் வட்டார வழக்குடன் மண்வாசனை மணக்க மணக்க எழுத்தில் கிளர்ந்து வருகின்றது. ஒரு வகையில் இக்கதையின் நுட்பமான வெற்றி அச்சித்தரிப்பில் தங்கியிருக்கின்றது.

சிலம்பாட்டப் போட்டியில் இருக்கின்ற ஈடுபாடும் அதில் மோசமான வகையில் அநீதியாகத் தோற்கடிக்கப்படும் ‘நூகுத்தம்பி மஸ்தானின்’ அகங்காரமும் அதன் சீற்றமும் முப்பது வருடம் பின்னர்  மீண்டும் அதே போட்டியில் ஈடுபடத் துடிக்க வைக்கின்றது. இருந்தும் அதே போட்டியில் எதிர்த்துப் போட்டியிடுபவரான ‘அகமதுலெவ்வை அண்ணாவியாரின்’ மீது படர்ந்திருந்த கசப்பின் மீது அன்பு பூசப்படுகின்றது.

சாதீயம் சார்ந்த வேறுபாடுகள் முஸ்லீம் சமூகத்தில் இருக்கிறனவா இல்லையா என்ற சர்ச்சைகள் எழுவதுண்டு. முஸ்லீம்களில் சாதீயம் உண்டு இஸ்லாத்தில் இல்லை என்கிற பதிலே மீண்டும் மீண்டும் இச்சர்ச்சைக்குப் பதிலாகச் சொல்லப்படுவதுண்டு.

‘மக்கத்துச் சால்வை’ சிறுகதை கிழக்கிலங்கை முஸ்லீம் சமூகத்தில் இருக்கும் சாதீயம் சார்ந்த வேறுபாடுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் நுட்பமாகக் குறிப்பிடுகிறது. இங்கு தீண்டாமை இல்லை, ஆனால் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பதையே கதைகளின் ஊடக சித்தரிக்கின்றது. நூகுத்தம்பி மஸ்தானின் சிலம்பாட்ட போட்டியின் வெற்றி அவர் கரையான் என்ற சாதியைச் சேர்ந்ததால் மறுக்கப்படுவதாக உள்ளுறையாகக் கோடிட்டுக் காட்டுகின்றது.

இங்குச் சிலம்பப் போட்டியை  வாழ்க்கையின் குறியீடாகவும் பார்க்கலாம். வெற்றி தோல்வி அகங்காரங்கள் அனைத்துக்கும் அப்பால் வாழ்க்கை முடிவுறும் தருணத்தில் உதிர்ந்து எஞ்சுவது கட்டற்ற அன்பாக இருக்கின்றது. அது  ஏன் முடிவுறும் தருணத்தில் தான் ஏற்படுகின்றது. இதன் உண்மையைக் கண்டறிய வாழ்கையில் நிறையை அலைக்கழிப்பைச் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்றே தோன்றுகின்றது.

பின் குறிப்பு

“மக்கத்துச் சால்வை”  ‘மக்கத்துச் சால்வை” என்கின்ற தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *