ஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13

                                 எஸ்.பொன்னுத்துரை

எஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார்.

தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை.

அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால் திரட்டப்பட்டது. கூர்மையான அவதானங்களைக் கொண்டது. யாழ்ப்பாண நிலம் சார்ந்தும் அதன்மேல் கட்டப்பட்ட பண்பாடுகள் பற்றியும் கதைகளில் இயல்பாக எழுதுவிடுவார்.

எஸ்.பொ ‘ஆண்மை’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாகச் சிறுகதைகள் எழுதிவந்தார். அதில் ஆண்மை-13 சிறுகதை, காமம் சார்ந்த அக நெருக்கடியை நனவிடைதோய்தல் உத்திமூலம் பேசி அதிலிருந்து ஓர் உண்மையைக் கண்டடையும் முறையில் எழுதப்பட்ட கதை. புறவயமான சித்தரிப்புக்கள் கதைகளில் அதிகம் வந்தாலும், கதையின் மைய தரிசனம் அகம் சார்ந்த தேடலிலே நிறைவு பெறுகின்றது. அதனால் இக்கதை அகம் சார்ந்த நெருக்கடியைப் பேசும் கதையாக நிறுத்தலாம்.

மத்தியதர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கதைகளையே எஸ்.பொவின் படைப்புலகத்தில் அதிகம் வருவார்கள்; அவர்களின் நெருக்கடியே கதையாக விரியும், ஆண்மை சிறுகதையும் நடுத்தரவர்க்கம் சார்ந்தவர்களின் கோணத்தில் நகரும் கதையாக இருக்கிறது.

சந்திரசேகரத்திற்கு அயல்வீட்டில் வசிக்கும் ‘பூரணம்’ என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு வருகின்றது. பூரணம் அவர்கள் இருவர் வீட்டுக்கும் இடையிலுள்ள வேலி இடைவெளியால் சந்திரசேகரத்தின் வளவுக்குள் நுழைந்து நீர் அள்ளி காலில் அணிந்திருக்கும் பாதசரம் குலுங்கச் செல்வது வழமை. சந்திரசேகரம் அவளுக்கு எழுதிய காதல் கடிதம் அவர் தந்தையின் கையில் சிக்குப்பட்டு விஷயம் வெளியே வருகின்றது. பூரணம் ஒருவகையில் சந்திரசேகரத்தின் தாய் வழி உறவினர்தான், இருந்தும் அந்தஸ்து காரணமாகத் திருமணத்திற்கு மறுக்கிறார் சந்திரசேகரனத்தின் தந்தை சாம்பசிவத்தார்.

அவர்கள் வராமல் இருக்க வேலியை ஒழுங்காக அடைக்கவும் உத்தரவிடுகிறார் சாம்பசிவத்தார். மகனுக்கு உபதேசம் வழங்கி கொழும்பில் வேலையும் எடுத்துக்கொடுத்து, வேறோர் பெண்ணையும் சந்திரசேகரத்திற்குத் திருமணம் செய்து வைத்துத் திருப்தியடைகிறார். காலங்கள் திருப்தியாக ஓடினாலும் இனிமையாகப் பூரணத்தின் நினைவுகள் சந்திரசேகரத்தின் நினைவடுக்கில் புதைந்திருக்கின்றது. மீண்டும் அவளைச் சந்திக்கும்போது அவள் இருக்கும் பொருளாதார நிலைமையும் அவளின் ஆளுமையும் கண்டு உள்ளுக்குள் திருப்தியடைகிறார். தான் கிளார்க்காகச் சாதாரணமாக இருக்கும் நிலையையும், பூரணம் உயர்ந்த நிலையில் இருப்பதையும் தனக்குள் அவதானிக்கிறார். அந்த உயர்ச்சி அவளின் மீது பெருமிதம் கொள்ள வைகின்றது. இதுவரை இருந்த சிறுமைகளில் இருந்து ஒரு விடுவிப்பு அவரை அறியாமல் நிகழ்கிறது.

மீண்டும் வேலியடைக்கும் போது, இருவீட்டார்களுக்கும் இடையில் ஓர் இடைவெளி விடுகிறார்கள். அது ஒரு தூய்மையான உறவின் பாலமாக இருக்கின்றது. வேலியின் நீக்கல் இங்கே உறவின் படிமாக எஞ்சுகிறது.

எஸ்.பொ உபயோகிக்கும் வட்டார வழக்கு மொழியென்பது 60-70 களில் இருந்த யாழ்ப்பாணத்து வட்டார வழக்கு மொழி. அச்சசலாக அவ்மொழியை உபயோகிக்கும் திறன்தான் அவரின் பலமும் பலவீனமுமாக இருக்கின்றது. சில கதைகளில் அலங்காரமான சித்தரிப்புகள் வட்டார வழக்கை உபயோகிக்கும் இடங்களில் தோன்றிவிடுகின்றது. அவை தேவையற்றதாக இருக்கும் சமயத்திலும் படைப்புகள் உள்நுழைய கடினத்தன்மையையும் தருகிறது. வட்டார வழக்கை அப்படியே உபயோகிப்பதைவிட அவற்றின் கூறுகளைப் பயன்படுத்தி எழுதுவதே இன்னும் உகந்ததாக இருக்கும். எஸ்.பொ அதிலிருந்து மீறி இயல்புவாத எழுத்தை நோக்கிச் செல்லும் ஒருவராகவே இருந்தார். அவர் படைப்புகள் வழியே இன்னும் இருக்கிறார். இருப்பார்.

பின் குறிப்பு

‘எஸ்.பொன்னுத்துரை’ பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையையும்,ஜெயமோகன் எழுதிய இக்கட்டுரையையும் வாசிக்கலாம்.

‘ஆண்மை-13’ சிறுகதையை இச்சுட்டியில் அழியாச் சுடரில் வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *