“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்.

“அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது.

நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’.

ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த் இணைந்து ருத்ரைய்யாவின் நெறியாள்கையில் உருவாகிய திரைப்படம். எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனின் பங்களிப்பும் இத்திரைப்படத்தில் நிறையவே உண்டு.

மூன்று வெவ்வேறு மனநிலைகளைக் கொண்டவர்களின் ஊடக பயணிக்கும் உறவுச்சிக்கல்கள் சார்ந்த, பெண்ணிலைவாதத்தை அக்காலத்தில்(1970-80) இருந்த சிந்தனை போக்கின் ஊடாக வெளிப்படுத்தும் கதையமைப்பைக் கொண்ட திரைப்படம்தான் ‘அவள் அப்படிதான்’

‘ஸ்ரீ பிரியா’ மிகத்தெளிவாக முதிர்ச்சியாக அவளிடம் அணுகும் ஆண்களைக் கையாள்கிறாள். ஆண்களில் மன அடுக்குகளில் இலகுவில் நுழைந்து அவர்களின் சிந்தனைகளைப் புரிந்து மிக எளிமையாகக் கையாள்கிறாள். தன் கடந்தகால அனுபவங்களிலிருந்து கிடைத்த கசப்பான சம்பவங்களின் மூலம் ஆண்களை எவ்வாறான வகையானவர்கள் என்பதையும் அவர்களின் கையாளும் தந்திரத்தை அறிந்தவளாகவும் இருக்கிறாள். இது அவளை முற்போக்காகச் சிந்திக்கவும் வைக்கின்றது. இருந்தும் அவளுக்குள்ளும் தடுமாற்றங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் ஒரு ‘காபரே நடனக்காரியின்’ நடன காணொளி துண்டைப் பார்த்துவிட்டு அதனை ரசிக்கும் ஆண்களின் மனநிலையைக் கண்டு வெறுப்படையும் அவள்தான் சோப் விளம்பரத்தில் நடிக்கும் பெண்ணிடம் இன்னும் கவர்ச்சியான வகையில் உடையணியப் பரிந்துரைத்து அதனை நியாயப்படுத்துகிறாள். இதேவகையான இரட்டை(Binary) மனநிலைக்கு இடையில் தடுமாறும் பெண்ணாகத்தான் ஸ்ரீ பிரியா’வின் கதாப்பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்காந்த் கையைச் சுழற்றி சிகரெட்டை புகைத்துக்கொண்டு, ஆணாதிக்கக் கருத்துகளைப் புன்னகையுடன் உதிர்த்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். மனத் தடுமாற்றம் அடைந்து ரஜினியுடன் உரையாட வரும் கமலுடன் எப்போதுமே பெண்களை உடல் ரீதியாகப் போதைப்பொருளாகக் கொண்டாடுவதைப் பற்றி வகுப்பெடுக்கிறார். அவர் கையில் எப்பவும் மதுவும், சிகரெட்டும் இருக்கின்றது. உண்மையில் ஆண்மைவாதச் சிந்தனை என்பது பெருவாரியாகச் சமூக மைய நீரோட்டத்தில் பிணைந்து அனைத்து ஆண்களிடமும் உள்ளுறைந்து இருக்கும் ஒன்று. மதுவும், சிகரெட்டுடனும் இருக்கும் ஆண்களிடம் மட்டும்தான் இருக்கும் என்றில்லை. ஆனால், அந்த ஆண்களின் ஒட்டுமொத்த சிந்தனைகளைத் திரட்டி உருவம் கொடுத்த பாத்திரமாகத்தான் ரஜினியின் பாத்திரம் இருக்கும். திரைமொழியின் இலகுத்தன்மைக்குக் கொடுக்கப்பட்ட உத்தியாகத்தான் அவரின் பாத்திரத்தை கருத இயலுகிறது. எதையும் ஓர் இலகுத்தன்மையுடன் கடந்து செல்வார். ‘ஜட்ஸ் லைக் தட்” என்று வாழ்பவர்.

ஸ்ரீ பிரியாவும் ரஜினியும் தனித்திருக்கும் சூழல் வாய்க்கும் அப்போது ரஜினி கொஞ்சம் நாகரீகமாக ஸ்ரீ பிரியாவை உடல் உறவுக்கு அழைக்கும் வகையில் செயல்படுவார். அவருக்குத் தக்க பாடம் புகட்ட காத்திருந்த ஸ்ரீ பிரியா ரஜினியின் கன்னத்தில் அறைந்துவிடுவார். மறுநாள் ஸ்ரீ பிரியாவை சந்திக்கும் ரஜினி நடந்த நிகழ்வைப்பற்றிய எந்தவித குற்றவுணர்ச்சியோ,தயக்கமோ இல்லாமல் உரையாடத்துவங்க, திகைத்துப் போய் நிற்கும் ஸ்ரீப்ரியாவிடம் இப்படிக் கூறுவார்.

“ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனுமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்.”

கமலஹாசன் பெண்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இருப்பவர். அவருக்குப் பெண்கள் மீது கடும் கழிவிரக்கமே இருக்கின்றது. இந்தக் கழிவிரக்கம் பெண்களை ஒருவித பரிதாபத்துடன் அணுக வைக்கிறது. ஆனால், அவருக்கு உதவியாளராகப் பணியாற்றும் ஸ்ரீ பிரியாவின் மீது மனத் தடுமாற்றமே ஏற்படுகின்றது. அது அவளின் ஆளுமை மீது ஏற்பட்ட பிரமிப்பால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். கமலின் தடுமாற்றம் அவரின் தாழ்வுச்சிக்கல் என்று கூடச் சொல்ல இயலும் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீ பிரியாவுக்குக் கழிவிரக்கம் பிடிப்பதில்லை. தனக்கு யாரும் வருத்தப்பட்டால் அதனை மறுக்கிறாள். உறுதியுடன் தான் இப்படிதான்; எனக்குப் பிடித்த வகையில் நான் இருப்பேன், இது என் சுதந்திரம் நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற கருத்துப்படக் கூறிவிட்டு உறுதியுடன் நகர்பவளாகவும் இருக்கிறாள். இருந்தும் கமலுடன் ஏற்பட்ட மோதலின்பின் தன்னுடையை அந்தரங்க பிரச்சினைகளையும் கடந்தகால நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறாள். அதைக் செவிமடுக்கும் கமலுக்கு அவளின் மீது கழிவிரக்கம் ஏற்படுகின்றது. அது வளர்ந்து காதலாகவும் மாறுகின்றது. இருந்தும் அவரின் தாழ்வுச் சிக்கல் அவளிடம் காதலை தெரிவிக்கத் தடை போடுகிறது.

பெண்களின் மீது ஏற்படும் கழிவிரக்கத்தை அல்லது கட்டமைக்கப்படும் கழிவிரக்கத்தை வைத்துக்கொண்டு இன்னும் விரிவாகப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

பெண்களை ‘புனிதப்படுத்துவது’ எப்படிப் பெண்களை அடக்கவும் அதிகாரம் செலுத்தவும் பயன்படும் உத்தியாக இருக்கிறதோ, அதேபோல்தான் பெண் என்ற பாலின வேறுபாட்டுக்காகவே அவர்கள் மீது இரக்கம்/கழிவிரக்கம் கொள்வதுமாகும். இந்தக் கழிவிரக்கம்/இரக்கம் ஊடாகவும் அதிகாரம்,அடக்குமுறைகள் அவர்களிடம் செலுத்தப்படுகின்றன. இந்த அதிகாரத்தை உடைப்பதன் ஊடாகவே பெண் விடுதலை என்பது சாத்தியமாத் தொடங்கும்.

எளிமையான உதாரணத்துடன் பார்க்கலாம். மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயல்பான உயிரியல் நடத்தை. இந்த நடத்தையை ஒரு விதமான அந்தரங்கமான விடயமாகக் கருதி, அதனை மற்றைய பாலினத்திடம் இருந்து அந்நியப்படுத்திப் புனிதப்படுத்தி அல்லது இரக்கப்படுத்தும் செயற்பாடாக சமூகம் வைத்திருக்கின்றது.

மாதவிடாய் என்பது வலிக்கும்,கொடுமைப்படுத்தும் அந்த நாட்கள் கடினமானவை என்று தெளிவாகத் தெரிகின்றது. ஆம், அதுவொரு உயிரியல் செயல்பாடு, அப்படிதான் இருக்கும். ஆனால், அதைவைத்துக் கழிவிரக்கம் ஏற்பட்டுத்தும் முயற்சிகள் ஒருவகையான சலுகையைக் கோரி என்னை இன்னும் அடக்குங்கள் என்று சொல்வதற்கு ஒப்பானதுதான். மாதவிடாயை வைத்துக் கழிவிரக்கம் ஏற்படுத்தும் வகையில் கவிதைகள் தொடர்ச்சியாக எழுதப்பட்டுச் சமூகத்தில் முன்வைப்பது கூட, சமூகத்திடம் இருந்து சலுகையைக் கோரும் ஒருவித மனபாவமே. இந்தச் செயற்கைத்தனம் ஏன் தேவை? உண்மையில் தன்னைத் தாழ்த்தி சலுகையைக்கோரி சுகபோகங்களைச் சுக்கிபதை பெண்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வியும் சேர்ந்தே எழும்புகிறது. இந்தப் பாலின வேறுபாடுகளைக் கழிவிரக்கத்தின் ஊடக ஏற்படுத்தும் உத்திதான் பெண்களை இன்னும் பாலின வேறுபாட்டில் அந்நியப்படுத்துகின்றது.

பெண்கள் பிள்ளை பெறுவதும் அவ்வாறான ஒன்றுதான். குட்டியை ஈன்று கொள்வதென்பது பெண் உயிரினத்திற்கு உள்ள உயிரியல் செயற்பாடு. ஆரம்பக் காலங்களில் பெண் தனியாகவே ஆர்பாட்டம் இன்றி குழந்தைகளை ஈன்று கொள்வது நிகழ்ந்தது. இன்று சமூகக் கட்டமைப்பில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்படுத்தும்/நிகழ்த்தும் செயற்பாடாகப் பிள்ளை பெறுதல் எனும் நிகழ்வு இருக்கின்றது. ஒரு எழுத்தாளர் இவ்வாறான கருத்தை சொன்னார் “என் மனைவி குழந்தை பெரும் போது, அது பற்றி அக்கறையின்றி நான் நண்பர்களுடன் இலக்கியம் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்” என்பதாக. அதற்குப் பெண்ணியச் செயற்பாட்டளர்களாகத் தங்களை முன்னிறுத்தும் பலர் அந்த எழுத்தாளரை கடுமையாகத் திட்டி எழுதியிருந்தார்கள். இது ஆணாதிக்கச் செயற்பாடு என்றும் திமிர் என்று விமர்சித்து இருந்தனர்.

இந்த இடத்தில் பல கேள்விகள் எழுகின்றன, ஒரு தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பெண்ணின் மூலமே நிகழும். அதுதான் படைப்பின் சூச்சுமம். அதை மாற்ற இயலாது. அந்தப் பெண் கர்ப்பம் அடைகிறாள் குழந்தையைப் பெறுகிறாள். இந்த நேரத்தில் அவளுடையை ‘பார்ட்னர்’ அவளுடன் இருப்பதோ, பணிவிடைகள் செய்வதோ அவர்களின் அந்தரங்கம் சார்ந்தது. அவர்களின் அன்பு,காதல் சார்ந்த பிரச்சினை. இங்கு ஆண் நோக்கு ,பெண் நோக்கு என்பதற்கு இடமில்லை. பெண் பிரசுரம் கொள்ளும் நேரத்தில் ஆண் அருகில் இல்லை எனின் அவர்களுக்கு இடையில் தனிப்பட்ட முரண்கள், உடன்பாடுகள் இருக்கலாம். இதனைப் பொதுமைப்படுத்துப் பெண்கள் ‘பிள்ளை’ பெரும் போது ஆண்கள் அருகில் இருக்கவேண்டும் என்று சொல்வது, பெண்ணைப் பலவீனப்படுத்திக் கழிவிரக்கத்தை ஏற்படுத்திச் சலுகையைக் கோரும் விடயம்தான். இங்குக் குழந்தை பெற்றுக்கொள்வதைப் புனிதமாக்கி பெண்ணை அடக்கும் சமூகக் கட்டமைப்பையே பெண்ணியச் செயற்பாட்டாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்துபவர்களில் சிலர் ஆதரித்துப் பேசுகிறார்கள் என்பது உச்ச முரண்.

இப்படிக்கூடப் பார்க்கலாம், ஒரு லெஸ்பியன் இணை குழந்தை பெற விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பார்ட்னர் கருவை சுமக்கச் சம்மதிக்கிறார். அவருக்குச் செயற்கையான முறையில் கருத்தரிப்புச் செய்யப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். இப்போது கர்ப்பகாலம் நெருங்க நெருங்க மற்றைய இணையான பெண், கர்ப்பம் தரித்த பெண்ணிடம் அதிகம் நேரம் செலவிடாமல் தவிர்த்து வேறு வேலைகளில் இருக்கிறார் எனின், அப்போது நாம் இதைப் பெண்ணாதிக்கவாதம் என்று சொல்ல இயலுமா?

நிச்சயம் முடியாது. ஏன் என்றால் அது அவர்கள் அந்தரங்கம் சார்ந்த பிரச்சினை. அங்கு இருப்பது அன்பு(love) சார்ந்த பிரச்சினையே, இன்னும் பாலின வேறுபாடுகளைப் புகுத்த முடியாது.

சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் சுஜாதா விருதுகளை விமர்சித்தவர்களைக் கடுமையாகத் திட்டி எழுதி இருந்தார். அவர் திட்டியவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. மனுஷ்ய புத்திரன் மோசமாகத் திட்டியதைக் கண்டிக்கத்தான் வேண்டும். அதே நேரத்தில் திட்டு வாங்கிய பெண்களில் சிலர், அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துகளைப் பகிர்ந்தவர்களில் பலர் “ பார்த்தீர்களா பெண் என்பது கூடப் பார்காலம் திட்டி விட்டார், மனுஷ்யபுத்திரன் ஒரு ஆணாதிக்க வாதி என்ற கோஷத்தை எழுப்பினார்கள். இங்குத் தான் சிக்கல் ஆரம்பமாகிறது. பெண் என்றால் திட்டக் கூடாதா? ஆண் என்றால் அப்ப திட்டலாமா? மனுஷ்யபுத்திரன் பாலின வேறு பாடுகள் இன்றியே திட்டி இருந்தார், எனினும் பெண்களும் சில ஆண்களும் சமூகத்திடம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் “பெண் என்றும் பாராமல்” திட்டி விட்டார் என்ற கருத்தை முன்வைத்தார்கள்.

“பெண் என்றும் பாராமல்” என்பது உண்மையில் பெண்களைத் தாழ்த்துகிறது, அதற்கூடாகச் சலுகைகளைக் கோரி சமூகத்திடம் கழிவிரக்கத்தை முன்வைக்கிறது. இந்தத் தாழ்தல் என்பது ஒடுக்குமுறைக்குத் துணை செல்வதுதான். இதைப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் என்று சொல்பவர்கள் முன்வைப்பதும் நகைச்சுவையானது. இந்தப் பாலின வேறுபாடுகளைச் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

அவள் அப்படிதான் திரைப்படத்தைப் பார்க்கும்போது இந்தச் சிந்தனைகள் எல்லாம் என்னுள் எழுந்தன. கமலின் கழிவிரக்கம் என்பது கூடப் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை ஊக்குவிக்கும் ஒன்றாகவே தெரிகிறது. ‘ஸ்ரீ பிரியா’ கழிவிரக்கத்தை வெறுக்கிறாள். மிக நேர்த்தியாகத் தனக்குப் பிடித்ததைச் செய்கிறாள். இருந்தும் இருவருக்கும் இடையில் அன்பு கசியும் இடத்தில் ஒரு கழிவிரக்கம் ஏற்படுகிறது.

கமல் இறுதியில் வேறு பெண்ணைத் திருமணம் முடித்துக் காரில் வரும்போது ரஜினியும், ஸ்ரீ பிரியாவும் அவர்களுடன் பயணிப்பார்கள். அப்போது ஸ்ரீ பிரியா கமலின் மனைவியிடம் “பெண் விடுதலை பற்றி என்ன நினைகின்றீர்கள்?” என்று கேட்பார். அதற்குப் பதில் இல்லாமல் திகைக்கும் கமலின் புதிய மனைவி தனக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது என்பார். அதற்கு ஸ்ரீ பிரியா “அதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்” என்பார். பின் நடுவழியில் தான் இறங்கும் இடம் வந்துவித்தாகச் சொல்லிவிட்டு இறங்கிக்கொள்வார். படம் முடிவடையும். இந்தக் காட்சிப் படிமங்கள் உணர்த்துவது இதைதான்.

ஆண் மையவாதச் சிந்தனையை ஏற்று அதற்குள்ளே வாழும் பெண்களுக்குத் தாங்கள் எவ்வளவு ஒதுக்கப்படுகிறோம் என்பது புரிவதில்லை. அதிலிருந்து வெளியேறிச் சிந்திக்கும் போது ஒடுக்கு முறைகள் புரியும். அப்படி வெளியேறிச் சிந்திக்கும் பெண்கள் நடைமுறை வாழ்வில் ஒரு கட்டத்தில் இறங்கிக் கொள்ளவே நேர்கிறது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல, சிந்திப்பதைச் செயல் வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் பற்றியே யோசிக்க வைக்கிறது. என்னதான் முதிர்ச்சியாக இருந்தாலும், உள்ளிருக்கும் பிற்போக்குத் தனம்தான் பலதை தீர்மானிக்கிறது. ஸ்ரீ பிரியாவின் பாத்திரமும், கமலின் பாத்திரமும் அதையே பிரதிபலித்துச் சிந்திக்க வைக்கின்றது. இந்த இடத்தில் இருந்தே நாம் பல உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *