மதிப்பீடுகளின் வீழ்ச்சி – ஈழத்து இலக்கிய விமர்சனப்போக்குகள் பற்றிய சில புரிதல்கள்

rtnkkj5pc

ஆகஸ்ட் மாதம் வெளியாகிய  தடம் மூன்றாவது இதழில் ஜெயமோகனின் நேர்காணல் குறித்தான விவாதங்களில் மிக அதிர்ச்சி தரக்கூடிய நிலைத்தகவல்கள் சிலவற்றை முகநூலில் கண்ணுற்றேன். ‘தமிழக இலக்கியவாதிகள் போனால் போகட்டும் என்று ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம் என்று ஓரிருவரை அங்கீகரித்தவர்கள், இன்று சயந்தன், குணா கவியழகன், யோ. கர்ணன், தமிழ்நதி என்று வெளிக்கிளம்பி வரும் படைப்பாளிகளை ஓர் ஒவ்வாமையோடு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயமோகனுக்கு நன்கு தெரியும், இன்றைக்கு ஈழத்துப் படைப்பாளிகள் உருவாக்கக் கூடிய படைப்புகளை, அவை காட்டும் உலகத்தைத் தம்மால் நினைத்தும் பார்க்க முடியாது என்று. ஈழத்திலிருந்து மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகள் எழுதப்படுகின்றன என்றும் அதனாலே ஜெயமோகன் போன்றவர்கள் காழ்ப்புணர்ச்சியில் பிதற்றுகின்றார்கள்’ என்ற கருத்துப்பட அந்நிலைத்தகவல்கள் இருந்தன. அவற்றை எழுதியவர்கள் ஈழத்துப் படைப்பிலக்கியம் சார்ந்த கூட்டங்களையும் புத்தக அறிமுகக்கூட்டங்களையும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்துபவர்கள். அந்நிலைத் தகவல்களைப் பார்த்தபின் அதிர்ச்சியில் மெய்மறந்து உறைந்திருந்தேன். எந்தவிதமான மதிப்பீடுகள் – திறனாய்வுகளுமின்றி அனுமானத்தில் ஒன்றை நிறுவும் ஆற்றல் எத்தகையது! இவர்கள் விரைவில் நோபல் பரிசை ஈழத்து எழுத்தாளருக்கு வாங்கிக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

உண்மையில் ஈழத்தில் இருந்து வரும் படைப்புகளில் படைப்பாக்கம் சார்ந்த நிலைமை என்ன? தீவிரமாக ஈழத்து இலக்கியம் மட்டுமன்றி சர்வதேச இலக்கியத்தை ஓரளவுக்கு வாசித்து வருபவர்களால் ஈழத்து இலக்கியத்தின் தற்கால நிலையை இலகுவில் ஊகிக்கக்கூடும். வெறுமே அனுபவமின்றி, சொற்களாலும் கட்டுரை மொழிகளாலும் மானுட அகத்தின் நுட்பத்தையும், மானுடத்தின் நேசத்தையும் பேசாமல் வெறுமே அரசியலைப் பேசிவிட்டுச் சென்றுவிடும் தட்டையான படைப்புகளே ஈழத்தில் அதிகமாக வெளியாகின்றன. பொருட்படுத்தக்கூடிய தமிழக இலக்கியவாதிகள் தற்சமயம் பல்வேறு ஈழத்துப் படைப்புகளைத் தட்டிக்கொடுக்கின்றனர். உண்மையில் அவை படைப்பாக்கத்தின் மீதான சிறப்பால் அல்ல. அனுதாபத்தினால் ஏற்படும் கழிவிரக்கத்தினாலே அவ்வாறு தட்டிக்கொடுக்கப்படுகின்றன. முப்பது வருடம் அடிவேண்டியவர்கள் அவர்களின் வலிகளைச் சொல்லும் போது எதற்குச் சீரான விமர்சனத்தை வைக்கவேண்டும் என்று அவர்களே சமரசம் செய்துகொள்கிறார்கள். படைப்பில் இருக்கும் அழகியலையும் படைப்பாக்கத் திறனையும் பேசாமல் மேம்போக்கான சில விடயங்களையே கறாரான தமிழக இலக்கியவாதிகள் விமர்சனங்களில் தொட்டுச்செல்கின்றனர். தமிழகத்தில் இடம்பெறும் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுக-விமர்சனக் கூட்டங்களின் காணொளிப்பதிவுகளைப் பார்க்கும்போது இதுவே தோன்றுகின்றது. ஆனால், ஈழ இலக்கியம் சார்ந்த விமர்சகர்கள் அல்லது அவ்வாறு கூறிக் கொள்பவர்களில் பலர் அவ்வாறான மிகத்தட்டையான படைப்பை உலக இலக்கியம் என்றும் அதனை வாசிக்காதவர்கள் பாவிகள் என்றும் மிகைப்படுத்திவிடுகின்றனர். ஒரு நாவலை விமர்சிக்கும்போது அந்த நாவலில் இத்தனையாவது பந்தியை வாசிக்கும்போது கண்கலங்கிவிட்டேன். சில இடங்களில் அழுதேவிட்டேன், என்று உச்சிமுகர்ந்து அப்படைப்பை எழுதியவரைப் புகழுகின்றார்கள். முற்று முழுவதுமாக நாவலை வாசிக்காமல் குறிப்பிட்ட பக்கங்கள் வரை வாசித்துவிட்டு முகநூலில் அதனைப் பகிர்ந்து கண்ணீர் மல்கினேன், மிகுதிப்பக்கங்களைப் புரட்ட மிகுந்த அச்சமாக இருக்கின்றது. இப்படைப்பை எழுதியவர் ஆகச்சிறப்பானவர் என்று கருத்துகளைப் பகிர்ந்துவிடுகின்றனர்.

ஒரு புத்தகத்தை வாசித்து அழுதுவிட்டால் அது சிறந்த படைப்பா? அழுவதற்கும் கண்ணீர் சிந்துவதற்கும்தான் படைப்பா? என்னால் இதை  விளங்கிக்கொள்ளவே முடிவதில்லை. ஈழத்து இலக்கியம் போர்க்காலத்தைப் பற்றி அதிகம் பேசும், அதிலிருக்கும் துன்பத்தைப் பேசவேண்டும். எது கூடுதலாக அழவைக்கின்றதோ அதுதான் சிறந்த படைப்பு என்று தான் பல புரிதல்கள் அற்ற மேம்போக்கு விமர்சகர்கள் கருதுகிறார்கள். அப்படியென்றால் தினமும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்துக் கண்ணீர் சிந்தலாமே என்ற அய்யம் எனக்கு வருவதுண்டு.

போர்க்காலத்தின் பின்னால் இருக்கும் மானுடர்களின் வலியின் வாழ்க்கையைக் கண்டடைய வேண்டும். அதைத்தான் ஒரு விமர்சகர்  தனது கோணத்தில் எழுதவேண்டும். ஆனால், அவ்வாறான வாழ்க்கையைக் காட்டும் படைப்புகள் எம்மிடம் மிகக்குறைவு; விமர்சகர்கள் அறவேயில்லை எனலாம். போலிப் புகழுரையும் துதிபாடுதலும்தான் இங்கே அதிகம். இலக்கியம் என்றால் என்ன என்ற புரிதல் பலரிடமும் இல்லை. அவ்வாறானவர்கள் தொடர்ச்சியாக ஈழத்துப் படைப்புகளைத் தகுதிக்கு மீறிப் புகழ்ந்துரைக்கின்றார்கள். அவ்வாறு நம்ப வைக்கின்றார்கள். அவ்வாறு நம்ப வைக்கும்போது இலக்கியம் தெரிந்தவர்களால் சும்மா இருக்கவும் முடியாது. அவர்கள் கிளர்ந்தெழுவர். இது இப்போதுதான் அபூர்வமாக நடந்தேற ஆரம்பித்துள்ளது. அது செறிவாக நடக்க வேண்டும்.

ஈழம் குறுகிய நிலப்பரப்பைக் கொண்டது. வெவ்வேறு மாற்று அரசியலால் நிரம்பியது. ஈழத்து இலக்கியமும் அரசியலால் நிரம்பியது. தற்போதைய நிலவரப்படி அரசியல் மட்டுமே ஈழத்து இலக்கியம் என்றுகூடத் தயங்காமல் சொல்லலாம். ஒவ்வொரு அரசியற் கருத்தைக் கொண்டவர்களும் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களைச் சீண்டவும் இலக்கியத்துக்குள் ஊடுருவி மாறி மாறிக் கல்லெறிகின்றார்கள். பெரும்பாலான கற்கள் வெறும் அரசியலைப் பேசும் தட்டையான கற்கள். பெரும்பாலானவை படைப்பாக்கமும் கற்பனை வளமும் அற்றவை.

இலக்கியப் படைப்புகள் என்று குவிந்திருக்கும் எண்ணற்ற குப்பைகளை நீக்கி ஆகச்சிறப்பான படைப்பு ஒன்றைக் கண்டடையும் வாசகர், அப்படைப்பில் இருக்கும் அரசியலை மட்டும் கண்டுகொள்ள மாட்டார். அதன் அனுபவத்தைக் கண்டடைவார். அந்தப்படைப்பைச் சிலாகித்து அவர் பேசினால் அப்படைப்பை எழுதியவரின் அரசியற் கருத்தை ஆதரிப்பவரில் ஒருவராகச் சிலாகிப்பவரை ஈழத்துச் சமூகம் நோக்கும். அதன் பின் அப்படைப்பை எழுதியவருக்கு எதிரான அரசியற் கருத்தைக் கொண்டவரின் படைப்பு ஒன்றைப் பாராட்டினால் குழம்பிப்போவார்கள். இவர் யார் பக்கம் என்று சந்தேகக்கண்ணோடு நோக்குவார்கள். நாற்பது வருட ஈழத்து அரசியல் இவ்வாறான சந்தேகக்கண்களைத்தான் வளர்த்துவிட்டிருக்கின்றது. படைப்பின் மீதுள்ள படைப்பாக்க நுட்பத்தைச் சிலாகித்து அதனை நோக்கி வற்றாத இன்பத்துடன் நகர்பவரை இவர்களால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. இந்தக்கருத்தைப் பேசும் எழுத்தாளரை எப்படிச் சிலாகிக்க முடிகின்றது என்று படைப்பினோடு நோக்காமல் அந்த எழுத்தாளரது அரசியற் கருத்தோடு நோக்குவார்கள். ஒரு விமர்சகர் படைப்பாக்கத்தை வியந்து, அதனது அழகியலை விமர்சிக்கும்போது எழுத்தாளரின் சொந்த அரசியலைப் பொருட்படுத்தமாட்டார். படைப்பிலிருந்து அதன் அரசியலைக் கண்டடைந்து அதன்மீது வியாக்கியானம் செய்வார். இவற்றைப் புரிந்துகொள்ளும் தன்மை, அறிவார்ந்த சிந்தனைகள் பொதுவாகப் பெரும்பான்மையான ஈழத்து இலக்கியவாதிகளிடமும் வாசகர்களிடமும் குறைவு. ஒரு படைப்பை விமர்சிப்பவரது அரசியல் என்ன? இவர் யார் பக்கம்? என்று கண்டுபிடிப்பதிலே நேரத்தைச் செலவழிப்பார்கள். ஷோபாசக்தியின் பிரதி ஒன்றை நல்லவிதமாகப் பேசினால் ‘சரி இவர் அந்தக் குழு’ என்று முடிவெடுப்பார்கள். தீபச்செல்வனின் பிரதி ஒன்றை நல்லவிதமாகப் பேசினால் ‘சரி இவர் இந்தக் குழு’ என்று முடிவெடுப்பார்கள். இந்த இருவரதும் பிரதியொன்றை ஒருவர் நல்லவிதமாக அழகியல் நோக்கோடு விமர்சித்தால் சமூகம் குழம்பிப்போகும்; இறுதியில் சமநிலையடைய அழகியல் பற்றி அதிகம் பேசுகிறார் அதனால் இவர்கள் இந்தியக்கைக்கூலிகள், ஜெயமோகன் குழு என்று முடிவெடுப்பார்கள். இதுதான் அவர்களின் உச்சபட்ச இலக்கியத் திறனாய்வு.

போர்காலச் சூழல் முடிவடைந்தபின் ஓரளவுக்குப் புனைவிலக்கியங்கள் எழுதப்படுகின்றன. சமீபத்தில் தொடர்ச்சியாக எழுதுபவர்கள் வரிசையில் சயந்தன், குணா கவியழகன், ஆர்.எம்.நெளஷாத்,ஜே.கே,தமிழ்நதி, இளங்கோ, சித்தாந்தன், நெற்கொழுதாசன், தமயந்தி, தர்மினி, திசேரா, இராகவன், கோ.நாதன், றியாஸ்குரானா, யதார்த்தன் போன்றோர்களை வைக்கலாம். இவர்களின் பெயர்கள் பொதுவாக பொதுவெளியில் அதிகம் தெரிபவை. இன்னும் அதிகமான புதிய எழுத்தாளர்கள் வீரியம்கொண்டு எழுதிக்கொண்டு இருகின்றார்கள். இவர்களையும் சரி, இவர்களுக்கு முன்னுள்ளவர்களையும் சரி, இவர்களின் இலக்கிய இடம் தெளிவாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றதா? எத்தனை கட்டுரைகள் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன என்று நோக்கும்போது ஏமாற்றமே எஞ்சுகின்றது. பெரும்பாலான ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பாக்கத்தைப் பற்றிச் சிறப்பாகக் கூர்மையாக மதீப்பீட்டுக் கட்டுரைகளை எழுதியவர்கள் தமிழக எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். ஈழத்தில் வெளியாகிய சிறந்த நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் என்ற பட்டியல்கள் எத்தனை உள்ளன? ஒட்டுமொத்த ஈழத்து இலக்கியத்தின் இடம் சர்வதேசத்தில் என்ன என்பது போன்ற எத்தனை ஆக்கபூர்வமான விமர்சன, மதீப்பீட்டுக் கட்டுரைகள் உள்ளன? இக்கேள்விகளுக்கான விடை மிகுந்த ஏமாற்றம் அளிக்கக்கூடியவை. எம் படைப்பை விமர்சிக்கவும் அதன் படைப்பாக்கத் தன்மையை அளவிடவும் எம்மிடம் விமர்சகர்கள் இல்லை என்பது மறைக்க முடியாத உண்மை. அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதனால் சக புனைவிலக்கியம் எழுதும் எழுத்தாளரே விமர்சனக் கட்டுரைகளை எழுதவேண்டி இருக்கின்றது. எழுதவரும்போதே சக எழுத்தாளர் , சக எழுத்தாளரை விமர்சிக்கவேண்டி இருப்பது மட்டுமல்லாது அவர்களுக்கு முந்தைய எழுத்தாளர்களையும் விமர்சிக்க வேண்டிய தேவை கண் முன்னே இருக்கின்றது. இதனைப் பலர் சகிப்புத்தன்மையற்ற ஒன்றாகவே பார்க்கின்றார்கள். ஒருவர் ஒரு படைப்பைத் தரமற்றதாக விமர்சித்தால் எழுதிய எழுத்தாளர் கோபப்படுவதில் நியாயம் கிஞ்சித்தும் இருக்க முடியாது. பொது வெளியில் ஒரு படைப்பு முன்வைக்கப்படும் போது வெவ்வேறு விமர்சனங்களை உரசிச்செல்லும். அவற்றிலிருந்து தேவையானதைப் பொறுக்கிக் கொள்ளுதலும், விடுதலும் எழுத்தாளரின் சுயவுரிமை சார்ந்தது. ஆனால், விமர்சனங்களைத் தடுக்க முனைவது முற்றிலும் முதிர்ச்சியற்ற மொண்ணைத்தனமானது. இதனை உடைத்துக்கொண்டு எழுத்தாளராகவும், விமர்சகராகவும் உருவாக வேண்டியவர்களின் தேவை ஈழத்து இலக்கியச் சூழலுக்கு இப்போது அவசியம் தேவை. எத்தனை மோசமான புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதப்படலாம், வாசிக்கப்படலாம், விற்பனையில் சாதனை படைக்கலாம். அவற்றில் எந்தச் சிக்கல்களும் ஒருபோதும் இருப்பதில்லை. ஆனால், அவ்வாறான படைப்புகள் ஆகச்சிறந்த படைப்புகள் என்று வரையறுக்கப்படும்போது, எழுதப்படும்போது அதன் போலித்தன்மையை கட்டுடைக்க, சுட்டிக்காட்ட வேண்டியது சிறந்த விமர்சகர்களின் கடமையாகின்றது.

ஈழத்து எழுத்தாளர்கள் புத்தகம் அச்சிடுவது பெருந்துன்பியல் சம்பவமாகவே இருக்கின்றது. பெரும்பாலான பதிப்பகங்கள் ஈழத்து எழுத்தாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுவிட்டு அச்சிட்டுக்கொடுக்கின்றன. அபூர்வமாகச் சில எழுத்தாளர்களின் புத்தகச் செலவைப் பதிப்பகம் ஏற்றுக்கொள்ளும். அனேகமான எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்தவர்கள், செழிப்பான தொகையை பதிப்பங்கள் வேண்டிவிடுகின்றன. அச்சிட்டுக்கொடுக்கப்பட்ட புத்தகங்களை எழுத்தாளரே விற்கவேண்டும். புத்தக அறிமுகக் கூட்டத்தை அவர்களே ஒழுங்கமைக்க வேண்டும். கடைகளிடமும் அவர்களே ஒப்படைக்க வேண்டும். விநியோகஸ்தர்களிடம் தங்கியிருக்கும் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் பணத்தொகையைத் திரட்ட வேண்டும். இந்த அழுத்தத்தில் படைப்பாக்கத்தையும் செய்யவேண்டும். எத்தனை இம்சைகளை ஓர் ஈழத்து எழுத்தாளர் தாங்குவார்? புத்தகம் அச்சடிக்கப்பட்ட பணத்தின் பாதித்தொகையைப் புரட்டவே நாக்கு வெளியே வந்துவிடும். இதிலிருந்து மீளும் வகையில் என்ன வகையான பொறிமுறையை அமைக்கலாம்? பணம்  பெற்றுக்கொள்ளாமல் அச்சிடும் பதிப்பகங்களை எமக்காக உருவாக்குவதில் என்ன சிரமம்?  நாம் இவற்றை நோக்கிச் சிந்திக்க வேண்டும்.

பெரும்பாலான ஈழத்து எழுத்தாளர்கள் தென்னிந்தியப் பதிப்பகங்களையே நாடுகின்றார்கள். முதற் காரணம் தரமான அச்சுப்பதிப்பு. மற்றையது பரந்துபட்ட வாசகர்களைத் தமிழகப்பதிப்பகங்களில் பதிப்பதால் பெறலாம் என ஈழ எழுத்தாளர்கள் நினைக்கின்றனர்; தமிழகத்தில் விநியோகம் நிகழ்வதால் அவை ஓரளவுக்கு சாத்தியம் ஆவதுண்டு. இதனாலேயே பல படைப்புகள் தென்னிந்தியப் பதிப்பகங்களை நோக்கி நகர்கின்றன.

ஈழத்தில் அச்சிடப்படும் புத்தகங்கள் விநியோகம் இன்றித் தேங்கிவிடுகின்றன. அச்சிடக்கொடுத்த தொகை தேறுவதும் இல்லை. இதற்கு இருக்கும் ஒரே வழி அச்சிடப்படும் புத்தகங்களின் சிறுதொகை புத்தகங்களைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் விற்பனைக்குக் கொடுப்பது தான். டொலர்களிலும், யூரோவிலும் விற்கும் தொகை அச்சிடக்கொடுத்த பணத்தை ஓரளவு திரும்பித்தரும். இது வணிகநோக்கத்தை முதன்மையாக்குவதில்லை. ஓரளவுக்கேனும் கைக்காசைப் போட்ட எழுத்தாளர் அடுத்த புத்தகம் எழுதுவதற்கான தென்பைக் கொடுப்பதை முதன்மையாக்கும்.  ஈழத்து இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்த தேசங்கள் முழுவதுக்குமாகப் புத்தக விற்பனைக்கான வலையமைப்பை ஏற்படுத்தவேண்டும். ஒருவருக்கொருவர் புத்தகங்களை விற்றுக்கொடுப்பதையும், அறிமுகக்கூட்டங்களை நடத்துவதையும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க வேண்டும். சரி இப்போது பூனைக்கு முதலில் மணி கட்டுவது யார்?

ஈழம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு வருடாவருடம் விருதுகள் கொடுப்பதற்காக எத்தனை நிறுவனங்கள், அமைப்புகள் நம்மிடம் இருகின்றன? உண்மையில் எழுத்தாளர் ஒருவரின் ஒரு பிரதியை மட்டும் முதன்மைப்படுத்தி விருதுகள் கொடுக்காமல், குறிப்பிட்ட காலத்தில் அவர்களின் இலக்கியத்துக்கான பங்களிப்புகள் என்ன என்று நோக்கி அவர்களின் பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் வண்ணம் எக்கச்சக்கமான விருதுகள் உருவாக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் கனேடியத் தமிழ் இலக்கியத்தோட்டம் என்ற ஒரு அமைப்பின் விருதுகளின் அறிவிப்பைப் பார்த்துவிட்டுச் சட்டையைக்கிழித்து உருண்டு, புரண்டு சண்டைகள் போடுவதில் அர்த்தமில்லை. நாம் அதேபோல் பல்வேறு விருதுகளை உருவாக்க வேண்டும். நிறைய மூத்த எழுத்தாளர்களைக் கௌரவப்படுத்த வேண்டும். வெறும் விருதின் பெயர்பொறித்த சின்னங்களைக் கொடுக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணப்பரிசுகள் கொடுக்கப்பட வேண்டும். எமது பிரதேசம் சார்ந்த பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் இவற்றை யோசிக்க வேண்டும். அனைத்தையும் எழுத்தாளர்களே செய்துகொண்டிருக்க முடியாது. அவர்களைச் சுதந்திரமாக எழுதவிட்டு அறிவுச் சமூகம் பல்வேறு பொறுப்புகளைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். இவற்றில் கரிசனை கொள்ள மெல்லமெல்ல ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனித்து நெஞ்சை நிமிர்த்தும். அந்த மகத்தான  கனவு சாத்தியமாக்கப்பட வேண்டும்!

ஆக்காட்டி இதழ் 12-இல் வெளியாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *