அஞ்சலி: தெளிவத்தை ஜோசப் (1934–2022)

தெளிவத்தை ஜோசப் அவர்களைக் குளிர் நிரம்பி வீசிய பின்னேரப் பொழுதொன்றில் மலையகத்தில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்பில் முதன்முதலாகச் சந்தித்திருந்தேன். தன் வெண்ணிறத் தலைமுடியைச் சீராக அழுத்தி வாரி, கன்னங்களைச் சவரம் செய்து, மீசையைக் கச்சிதமாக நறுக்கிவிட்டுச் சட்டையை உட்செலுத்திய நேர்த்தியான தோற்றத்தில் சுறுசுறுப்பாகப் பேசியவாறு இருந்தார். அன்றைய நாளில் அவர் தலைமைதாங்கிய அரங்கில் உரையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. முன்னர், அவர் எழுதிய ‘குடைநிழல்’ குறுநாவலை வாசித்துவிட்டு விரிவான குறிப்பொன்று எழுதியிருந்தேன்; அதையொட்டி அவருடன் தொலைபேசியில் பேசவும் இயன்றது. ஆனால் முதன்முதலில் சந்தித்தது அதன் பிறகே. அதுதான் முதலும் இறுதியுமான சந்திப்பாகவும் அமைந்துவிட்டது. அதன்பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாவிட்டாலும் இணையத்தின் ஊடாக அவரை நேர்காணல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. அளவில் சற்றுப் பெரிதான நேர்காணலை அகழ் இணைய இதழில் பதிவேற்ற அவருடன் பல மணிநேரம் உரையாடியிருந்தேன். மலையக மண்ணுடன் பிணைந்த தன் இளமைக்கால நிகழ்வுகளை மனம்விட்டுப் பேசியவாறு இருந்தார். அவர் பேசிய அனைத்தையும் எழுத்துவடிவத்தில் தொகுத்தாலும், பலவற்றை அவர் கத்தரித்துச் செப்பனிட்டு வெளியிடவே விரும்பியிருந்தார்.


தெளிவத்தை ஜோசப் எழுத்துலகில் நுழைந்த போது, அவருக்கு முன்னோடி என்று எவரும் இருக்கவில்லை; கதைகளைப் படித்துவிட்டுக் கதைகளின் வழியே பிரதியெடுத்த கதாமாந்தர்களை உருவாக்கி எழுதவந்த எழுத்தாளராக அவர் இருக்கவில்லை; நேரடியான வாழ்க்கையைப் பார்த்து அங்கிருந்து எழுதவந்தவர் அவர். இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி என்று தெளிவத்தை ஜோசப்பைத் தயக்கமின்றிச் சொல்லலாம். மலையக மக்களின் வாழ்வியலைப் பிரச்சாரம் இன்றி முற்போக்கு அம்சத்துடன் எழுதியவர் அவர். மலையகச் சமூகத்தில் ஊடுருவியிருந்த சுரண்டலும் ஒடுக்குமுறையும் அவரது புனைவுலகத்தின் அடிநாதமாக ஒலித்தன. அவரது கதாமந்தர்கள் பெரும் தத்தளிப்புச் சிக்கல் கொண்டவர்கள் அல்லர். மாறாக எளிய அன்றாடப் பிரச்சினைகளில் சிக்கி அழுத்தப்படுபவர்கள். ஜோசப்பின் படைப்புலகம் எளிய மனிதர்களின் அன்றாடச் சுமையின் துயரம்தான். சிலசமயம் அந்தத் துயரில் ஒளி ஒரு கீற்றாக வெளிப்படுகிறது. எந்தவிதமான கட்சிச் சார்போ, கோட்பாடு சார்ந்தோ இயங்காத படைப்புலகம் அவருடையது. அதனால் மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பல கோணங்களில் தயக்கமில்லாமல் அவரால் நோக்க முடிந்தது.


தெளிவத்தை ஜோசப் இன்று எவராலும் புறக்கணிக்க இயலாத எழுத்தாளர். தன் வலுவான படைப்புகள் ஊடாக அதனை நிறுவிவிட்டார். ஆனால் அவர் எழுதவந்தபோது அவருக்குச் சூழல் ஏற்பாக இருக்கவில்லை. அவரது புனைகதைகள் சில விமர்சனங்களையும் பல்வேறு வசைகளையும் எதிர்கொண்டன. அப்போது பலமாக இருந்த முற்போக்கு எழுத்தாளர் அணியினருக்கு ஜோசப்பின் செயற்பாடு கடும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது பிரதான காரணம். “இவர்களிடம் கூடுதலாக ஏச்சு வாங்கிய ஒருவன் நான். அதை வசைபாடல் என்றுதான் சொல்லுவேன்” என்று நேர்காணலில் பதிவும் செய்திருக்கிறார் அவர். அதற்கான காரணங்களில் விரிவுரையாளர் ஜெயசீலன் குறிப்பிடும் இந்த அவதானம் முக்கியமானது, “தெளிவத்தை ஜோசப் ஒரு முற்போக்கான எழுத்தாளர். ஆனால் மார்க்ஸிசக் கோட்பாடுகளைத் தன்னுடைய பாத்திரங்கள் மூலமாக வெளிக்கொண்டுவரும் தன்மை அவரிடம் இல்லாததால் முற்போக்கு அணி அவரைக் கவனத்தில் எடுக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார். இது மிக முக்கியமான உண்மை.


தெளிவத்தை ஜோசப் தொழிற்சங்கங்களில் இயங்காவிடிலும், முற்போக்கு அணியில் இருந்திருக்க வேண்டும் என்று அந்த அணி எதிர்பார்த்தது. அதனை அவரும் தெளிவாக உணர்ந்திருந்தார். ஆனால் எந்த அணியிலும் இருந்துகொண்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் தன்னைச் சட்டம்போட்டு மாட்டுவதை அவர் விரும்பவில்லை. சுயாதீனமாகத் தனித்தே இருந்தபடி எழுதிக்கொண்டிருந்தார். இது அவர்களைச் சீண்டியது. பேராசிரியர் கைலாசபதி, “எழுத வந்த பலருக்கு தெளிவத்தை ஜோசப் ஆதர்சனமாக இருப்பார். ஆனால் அமைப்புரீதியான இயக்கங்களைக் கிண்டல் செய்வார்; மக்களுடைய போராட்டங்கள் அவருடைய கதைகளில் இருக்காது” என்றும் குறிப்பிடுகிறார். தன் கதைகளைச் சரிவர உள்வாங்காமல் சொல்லப்படும் விமர்சனம் இது என்ற ஆழமான வருத்தம் தெளிவத்தையிடம் இருந்ததை அவருடன் பேசும்போது உணரவே செய்தேன். அவரின் புனைகதைகள், அமைப்பை நகையாடுவதில்லை; உண்மையில் அவருக்கு அமைப்பு பற்றிய பிரக்ஞை பெரிதாக இல்லை. அமைப்பின் பின்னே எங்கோ நசுங்கிக் கிடக்கும் மனிதர்கள் பற்றியே எழுதினார். அவரது கதைகளில் பிரபல்யமான ‘மீன்கள்’கூட அவ்வாறான கதைதான். மார்க்ஸியத் தத்துவங்களைக் கதாமாந்தர்களின் உரையாடலில் புகுத்தியோ அல்லது கதைக்கருவில் பொருள்முதல்வாதத்தை மையப்படுத்தியோ தீர்வை எட்டும் கதைகளை எழுதவில்லை. அன்றைய இலங்கை எழுத்துச் சூழலில் வீசிய போக்கிலிருந்து வெகுவாகத் தள்ளிநின்றது அவரது புனைவுலகம்.


ஒரு மாட்டை மையப்படுத்தி ‘லில்லி’ என்ற கதையையும், குரங்கை மையப்படுத்தி ‘அது’ என்ற கதையையும் அக்காலத்தில் எழுதியிருந்தார். கலைமகளில் வெளியான ‘அது’ சுந்தர ராமசாமி எழுதிய ‘கிடாரி’க்கு ஒப்பானது என்று சில விமர்சகர்களால் பேசவும்பட்டது. ஆனால் முற்போக்கு அணி விமர்சகர்கள், ‘இங்கே மனிதர்கள் சாகின்றார்கள், இவர் மாட்டைப்பற்றியும் குரங்கைப்பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்’ என்று கடுமையாக விமர்சனம் வைத்தார்கள். இது ஜோசப்பைக் கடுமையாக வருத்திப் போட்டது. இதனால் பாதிப்புற்று அதன்பின்னர் பத்து வருடங்கள் எழுதாமல் இருந்தார். “நான் மரியாதையாக இருக்க விரும்புகிறவன். எழுதவந்த இடத்தில் ஏன் இவர்களிடம் ஏச்சு வாங்க வேண்டும் என்ற காரணத்தாலேயே ஒரு பத்து வருடங்கள் பேனாவைக் கீழே வைத்துவிட்டேன்” என்று எழுத்தில் பதிவும் செய்திருக்கிறார். எழுத்தாளர் இவ்வகையான அச்சுறுத்தல்கள், நிராகரிப்புகள், வசைகளுக்கு அஞ்சி அல்லது சோர்வுற்று எழுதாமல் போவது எனக்கு வியப்பாக இருந்தாலும், குழுவாதம் அன்று எவ்வாறு எழுச்சியுற்று மற்றொரு எழுத்தாளரை முடக்கும் அளவுக்கு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. “ஒரு விமர்சகன் எழுத்தாளனை நெறிப்படுத்த வேண்டும். வேறு வேறு காரணங்களுக்காக வசைபாடி வசைபாடி அவனை முடக்கிவிடக் கூடாது. எழுதவரும் அனைவருமே சமூகத்திற்குத் தேவையானவர்கள் என்றார் மு. தளையசிங்கம். அவரும் இவர்களால் மறுக்கப்பட்டவரே” தளையசிங்கத்தின் கூற்றை உதாரணம் காட்டி, தான் எழுதாமல் போன காலத்தின் நினைவை அவர் பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.


காலனிய காலத்தில் தெளிவத்தை ஜோசப்பின் தந்தையார் திருச்சியில் இருந்து தோட்டத்து ஆசிரியர் வேலைக்காக இலங்கை வந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் ஆசிரியர் வேலைக்கு விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு அதில் ஆசிரியர் வேலையில் இணைபவருக்குத் தனி வீடும் கொடுக்கப்படும் என்ற அடிக்குறிப்பால் கிளர்ச்சியுற்று அவரது தந்தையார் கிளம்பி வந்திருந்தார். ஆனால் ஆசிரியர் வேலை கிடைத்ததே தவிர அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டபடி வீடு கிடைக்கவில்லை. தோட்டத்துத் தொழிலாளர்கள் வசிக்கும் லயத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன. சிறிது காலத்தில் வீடு தரப்படும் என்று மீண்டும் சொல்லப்பட்டதே தவிர, அது ஒருபோதும் உண்மையாகவில்லை. அங்கே தோட்டத்து ஆசிரியா் வேலையைப் பொறுப்பேற்ற இரண்டு மூன்று மாதங்களின் பின் மீண்டும் இந்தியா சென்று திருமணம் செய்து திரும்பி வந்தார். அங்கேயே ஜோசப்பும் மற்றையோரும் பிறந்து வளர்ந்தார்கள். ஜோசப் அந்தக் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. மூத்தவர், அண்ணா ஞானப்பிரகாசம். ஊவாக் கட்டவளை என்ற தேயிலைத் தோட்டம் பதுளையிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் ஒதுக்குப்புறமாக இருக்கின்றது. அந்தத் தோட்டத்தில் தான் அவரது தந்தையார் ஆசிரியராக வேலை பார்த்தார்.


அப்போதைய காலத்தில் தோட்டத்து ஆசிரியா் என்பவா் உண்மையில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பவர் அல்ல. கற்பிக்கிறோம் என்ற பெயரில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை ஒரு சிறிய மண்டபத்தில் அடைத்துவைத்திருப்பார்கள்; முறையான பாடங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; அதனைக் கண்காணிக்கவும் அதிகாரிகள் இல்லை. ஆங்கிலேய நிர்வாகிகள் பெயருக்கு அதனை நடாத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும். ஜோசப்பின் தந்தை அதற்கு நேர்மாறாக இருந்தார். படிக்கவரும் பிள்ளைகளுக்குப் படிப்பிக்க வேண்டும் என்று அவா் விடாப்பிடியாகச் செயற்பட்டார். ஜோசப்பும் அவரது அண்ணாவும் தம் தந்தையிடம்தான் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்கள். அவரது குடும்பம் தனியாக ஒரு வீட்டில் இல்லாமல் தொழிலாளா்கள் வசிக்கும் அந்த லயத்தின் முதல் இரண்டு அறைகளில் இருந்ததால் அந்த லயத்துத் தொழிலாளா்களுடைய பிள்ளைகளுடன் பழகவும் விளையாடவும் இவர்களுக்குச் சந்தா்ப்பம் கிடைத்தது. அதனால் நெருக்கமும் ஏற்பட்டது. பிற்காலத்தில் எழுதவந்தபோது இயல்பாகவே அவரால் தோட்டத்துத் தொழிலாளர்களது அடித்தள வாழ்க்கையை மிகையற்றுப் புனைவு உலகத்தில் சிருஷ்டிக்க இயன்றதற்கு அவரது இளம்பிராயத்தில் தோட்டத்துத் தொழிலாளர்களுடன் இருந்த நெருக்கமே காரணம்.


அண்ணனுக்குத் தெளிவத்தை தோட்டத்தில் கிளார்க் வேலை கிடைக்க அவர் அங்கே கிளம்பிச் சென்றுவிட்டார். அது பெரிய எஸ்டேட். கட்டவளைத் தோட்டத்தைவிட நான்கு மடங்கு பெரியது. தெளிவத்தையில் வேலைசெய்வது பெரிய கௌரவமாக அன்று கருதப்பட்டது. அங்கே அவருக்குத் தனி பங்களா, அலுவலகத்தில் உத்தியோகம். “அண்ணா தனியாகத்தானே இருக்கின்றார். நீ அவருடன் போய் இரு என்று அம்மா கூற நான் அண்ணாவுக்குத் துணையாகவும் அவருக்குச் சமையல் செய்வதற்குமாக அங்கு வந்து சோ்ந்தேன். தெளிவத்தை என்னுடைய பெயரில் இடம்பிடித்தது இப்படித்தான்” என்று அவர் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பிரதேசத்துக்கு வந்தபின்னர் அண்ணாவுக்குப் பணிவிடை செய்வதிலே நேரம் கழிந்திருக்கிறது. அதற்குப்பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வாசிப்புப் பக்கம் நகர்ந்தார். இதனை “சோம்பல் உற்றிருக்கும் ஒரு மனிதனின் மனம் சாத்தானின் வசிப்பிடம் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கின்றது. என்னுடைய இந்த வாசிப்பும் எழுத வேண்டும் என்ற ஆா்வமும் என்னுடைய மனத்தைச் சோம்பல் நிலையிலிருந்து மீட்டு எடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தையை ‘ஆஞா’ என்றே விளிப்பார். அவரது படைப்புகளில் வரும் தாய் தந்தையர் எல்லோரும் மிகக் கனிவானவர்கள்; நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பின் ஊடாகவே அவ்வாறான சித்திரிப்புகள் அவரிடம் இருந்து வெளிப்பட்டன. அவரது தந்தையார் உபதேசம் செய்ததில்லை. எதையும் நிர்ப்பந்தித்ததும் இல்லை. ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என அவர் தன்னுடைய வாழ்க்கையினூடாக வாழ்ந்து காட்டியவர். இலக்கியவாதியாக மலர்வதற்கான அடித்தளம் தந்தையிடம் இருந்தே அவருக்குக் கிடைத்தது.


தெளிவத்தை பிரதேசத்தில் அண்ணாவுக்கு ஒத்தாசையாக இருந்தபோது, அங்கேயே ஒரு ஆசிரியா் வேலை நிரப்பப்பட வேண்டிய சந்தர்ப்பம், 1956இல் பண்டாரநாயக்கா ஆட்சிக்குப் பிறகு இலங்கையில் இருக்கும் Temporary Permit ஆட்களை அனுப்பிவிட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்டது. இலங்கையில் இருப்பவா்களுக்கே உத்தியோகம் இல்லாதபோது அவா்களை இங்கு கொண்டுவந்து தற்காலிகப் பிரஜைகளாக வைத்துக்கொண்டிருப்பது ஏன் என்று அவர்களை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். தெளிவத்தையில் இருந்த ஒரு பாடசாலை ஆசிரியருக்கும் ‘Send him immediately’ என்று நோட்டிஸ் அனுப்பப்பட்டதால் அவரையும் அனுப்பினார்கள். திடீரென ஒரு ஆசிரியரை அனுப்பிவிட்டதால் அந்தப் பாடசாலைக்கு ஆசிரியா் வேலைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நிர்வாகிகள் தடுமாறியபோது அந்த வேலைக்கு வந்து சேர்ந்தார் தெளிவத்தை ஜோசப். அங்கு மாதாந்த வருமானம் வர ஆரம்பிக்க மேலும் சந்தா கட்டிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பெற்று வாசிப்பதின் ஊடாகத் தன் எல்லைகளை விரிவாக்கினார். அங்கிருந்தே கதை எழுத ஆரம்பித்தார். அப்போது வீரகேசரி நாளிதழ் மலையகப்பகுதி எழுத்தாளர்களுக்காகத் ‘தோட்ட மஞ்சரி’ எனும் ஒரு பகுதியைத் தொடங்கியிருந்தது. அதில் மலையகம் சம்பந்தமான எது வேண்டும் என்றாலும் எழுதலாம். ஆனால் சிறுகதைகள் எழுத இயலாது; பக்கம் சிறியது. அப்படி இருந்தும் சின்னதாக ஒரு கதை எழுதி அனுப்பினார் ‘படிப்பு’ என்ற பெயரில். அதுதான் அவருடைய முதல் படைப்பு. தோட்டத்திலுள்ள மக்களின் கல்வியறிவு எந்தளவில் இருக்கின்றது என்பதைப் பற்றிய கதை. ‘படிப்பூ’ என்ற தலைப்பில் அக்கதை வெளியாகியிருந்தது.


இவரின் கதைகள் மலையகப் பிரஜைகளின் பல்வேறு நுண்மையான கேள்விகளை எழுப்பிச் சென்றாலும், அவை விமர்சகர்களால் புரிந்துகொள்ளப்பட்டதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 1963இல் மலைமுரசு பத்திரிகையில் ‘நாம் இருக்கும் நாடு’ என்ற தலைப்பில் எழுதிய கதையில் வயதான ஒருவர் தள்ளாத வயதில் மரக்கறிச் சந்தைக்குப் போய் மரக்கறி இலைகளைப் பொறுக்கி, சுமக்க முடியாமல் சுமந்து, பன்றி வளர்க்கும் ஒரு முதலாளியிடம் கொடுத்துவிட்டு அவர் கொடுக்கும் சாப்பாட்டைக் கூலியாக வாங்கிச் சாப்பிடுவார். அவர் இளைஞனாக இருந்த வேளை அவரது நண்பன் ஒருவன் கூறுவான், ‘இந்த இடத்தில் ஒரு நிலம் இருக்கு. வாங்கிப்போடு. தங்கத்தை விதைத்தா தங்கமாக விளையும் இது. கொட்டைப் பாக்கை வைத்துத் தட்டுவதற்கு ஒரு பொட்டுக் கல்கூட இல்லாத மண் இது. வாங்கிப் போடுப்பா இலகுவாக இருக்கும்’ என்று. அதற்கு அவர் ‘இந்தச் சிங்களவன் நாட்டில் நான் நிலம் வாங்குவனா? இந்தியாவில் கடல்போன்ற அந்தப் பூமியில் நிலம் வாங்க நான் காசு அனுப்பிக் கொண்டிருக்கின்றேன்’ என்பார். இவர் அனுப்பின காசு அங்கே போய்ச் சோ்ந்ததா, அவர் நிலம் வாங்கினாரா என்றால் இல்லை. இப்போது எந்தச் சொத்தும் இல்லை. தான் இருக்கின்ற நாடு தம்முடையது என்ற உணர்வு இருந்திருந்தால் அப்பவே அந்த நிலத்தை வாங்கியிருப்பார். அதில் ஒரு குடிசை கட்டியிருப்பார். இவையெல்லாம் ஜோசப்பின் கதைகள் எழுப்புகின்ற நுண்ணிய கேள்விகள், சிந்தனைகள். ஆனால் அதை எந்த விமர்சகரும் அன்று விரிவாகப் பார்க்கவில்லை. “இந்தியாவுக்குக் காசு அனுப்பி ஒருவன் வீணாகப் போய்விட்டான் என்று சொல்கிறார்” என்று சுருக்கிவிட்டார்கள். இன்று இக்கதையை மலையகத் தேசியத்துக்கான கூறுகளைக்கொண்ட கதையாகச் சொல்ல முடியும். ஆனால் அவர் எந்தக் கருத்தையோ இசத்தையோ முன்னிறுத்த அவற்றை எழுதவில்லை. காலம் அவற்றிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அவர் எழுதியது இலக்கியத்தை. விமர்சகர்களின் நுண்ணுணர்வுப் பற்றாக்குறை சார்ந்து ஜோசப்பிடம் நேரிடையாகவே கவலை இருந்தது. “ஒரு மரம் இருக்கின்றது. பல பேருக்கு அது மரம் என்று தெரியும். சில பேருக்கு அந்த மரத்திலேயும் அந்த இலைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கும் காய்கள் தெரியும். இன்னும் சில பேருக்கு அந்தக் காய்கள் பழுத்திருப்பது தெரியும். இன்னும் சில கெட்டிக்காரர்களுக்கு அந்தப் பழத்துக்குள் விதை இருப்பது தெரியும். ஆனால் அந்த விதைக்குள் இன்னொரு மரம் இருப்பது யாருக்குத் தெரிகிறதோ அவன்தான் உண்மையான விமர்சகனாக இருக்க முடியும். ஈழத்தில் ஒரு காத்திரமான விமர்சன முறை இல்லை. ஓர் எழுத்தாளன் நெறிகொள்ளும் அளவுக்கு யாரும் விமர்சனம் செய்வதில்லை. நூல் அறிமுகங்களே கூடுதலாகவும் கூடுமானவர்களாலும் செய்யப்படுகின்றன. படைப்பாளிகளை விடவும் விமர்சகர்களே கூடுதல் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது இலங்கை. இந்தியாவில் தமிழ் இலக்கியம் என்றதும் மனத்தில் எழும் பெயர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி என்று தொடங்கும். ஆனால் இலங்கையில் கைலாசபதி, சிவத்தம்பிதான், இலங்கையர்கோன், வைத்திலிங்கம், சம்மந்தன் என்றோ டானியல், கணேசலிங்கன், அரசரத்தினம் என்றோ வருவதில்லை. ‘படைப்பே முதல் படைப்பாளியே முதல்வன்’ என்று பேச நமது முன்னோடி விமர்சகர்கள் முன்வரவில்லை. தங்களுக்கான உச்ச இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றார்களே தவிர ஒரு விமர்சனப் பரம்பரையை உருவாக்க முயலவில்லை” என்று தனது இறுதியான விரிவான நேர்காணலில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறார்.


மலையக இலக்கியம் 1960க்குப் பின்னர்தான் எழுச்சி பெற்றதென்றாலும், அதற்கான பாதை 1930களிலேயே போடப்பட்டிருக்கிறது. நடேச ஐயர், மீனாட்சி அம்மாள், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை, கிருஷ்ணசாமி என்று வலுவான அடித்தளம் உள்ளது. தெளிவத்தை ஜோசப் இலக்கியவாதியாக ஆன பின்னரே இவர்களையெல்லாம் தேடித் தேடிக் கண்டடைந்தார். தனக்கான பாதையை அவர் உருவாக்கிய பின்னர், தன் மண்ணின் மீதான வரலாற்றைப் பார்த்தார். அந்தவகையில் நவீன மலையக இலக்கியத்தில் தெளிவத்தை ஜோசப் தனித்துவமான முன்னோடி. அவருக்குப்பின் ஏற்பட்ட மறுமலர்ச்சி சிறுகதைத் தரப்பில் புதிய வாசல்களைப் பலருக்குத் திறந்துவிட்டது. முன்னோடிக்கு என் அஞ்சலிகள்.

-2022 மார்கழி மாத காலச்சுவடு இதழில் வெளியாகிய கட்டுரை-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *