மீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12

நாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது.

                                                    தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”. வர்க்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை நுண்மையாக வாழ்வனுபவங்களோடு சித்தரித்து மீண்டும் மீண்டும் ஒதுக்கப்படும் உழைப்பாளியின் அவலங்களைத் தேர்ந்த அவதானிப்புகளுடன் எழுதப்பட்டுள்ள, லயங்களில் வாழும் மலையாக மக்களின் கதையாக இருக்கின்றது.

குடியிருக்கச் சரியான வீடில்லை. அளவில் மிகச்சிறிய படுத்துறங்கக்கூடப் போதிய அளவற்ற சிறிய வீடு. உண்மையில் அது வீடு கூட அல்ல அது. ஓர் அறை. நான்கு சுவர் கொண்ட ஒரு சதுரம். இருபதாண்டு காலத்திற்கு முன் வரும்போது அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அது. இப்போது அவனுக்கு ஆறு பிள்ளைகள். எல்லோரும் வளர்ந்து வருகிறார்கள். பெண் பிள்ளைகளின் வளர்ச்சி பேய் வளர்ச்சியாக இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கவே அபரிமிதமாக வளர்கிறார்கள். வீட்டில் வசிப்பதற்கு இடம் போதவில்லை. துன்பங்கள் குளிர்போல் சுற்றிப் படர்ந்திருந்து தினமும் இம்சை செய்கிறது.

கதையின் ஆரம்பம் உக்கிரமான தொடக்கத்தைக் கொண்டிருக்கின்றது. வேலையிலிருந்து நள்ளிரவு வீடு திரும்பும் அவனுக்குக் கடுமையான களைப்பு. மனைவி படுத்திருக்கும் இடத்தைத் தேடி படுக்கச்செல்ல, அங்குப் படுத்திருப்பது மகள் என்று தெரியவருகின்றது. உடல் வெலவெலத்துப் போகின்றது. சற்று முன்னம் மனதில் எழுந்த எண்ணங்கள் கடும் கசப்பைத் தருகின்றது. அந்த நேரத்தில் தீப்பெட்டியை உரசிக்கொண்டு விளக்கோடு எழும் மனைவியை நிமிந்து நோக்கக்கூட இயலாமல் கிள்ளப்பட்ட கொழுந்தாய் தலைதொங்க வெளியேறுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. மிக அந்தரங்கமான வலிமையான பிரச்சினை அது.

மாற்று இடத்துக்காக அவனும் எத்தனையோ தடவை அலுவலகத்துக்குச் சென்று அவனின் துரையிடம் கெஞ்சியும் பார்த்துக் கொஞ்சம் குரலை உயர்த்திச் சண்டையிட்டும் பார்த்துவிட்டான். பெரிய கங்காணியின் பக்கம் கையைக் காட்டுவதைத் தவிரத் துரை வேறெதுவும் செய்யவில்லை. கங்காணியிடமும் கோரிக்கையை முன்வைத்தாயிற்று. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

இறுதியில் அவனுக்கு ஒரு வீடு கிடைக்கும் தருணம் வாய்க்கின்றது. ஆனால் அதுவும் பிழைத்துவிடுகின்றது. வாய்ப்பை வேறொருவன் தட்டிவிடுகிறான். அந்த வேறொருவனும் இவனைப் போன்று அங்கு வேலைபார்க்கும் ஒருவன்தான். அவனுக்கு இவனைப்போல் பிரச்சினை இருந்திருக்கும். மலையகத்தில் லயன்களில் வசிக்கும் மக்களின் பிரச்சனை ஒரேமாதிரியிருக்கின்றன. கிள்ளி எறியப்பட்ட ஒருவனின் வாழ்வின் குறுக்குவெட்டை பொதுமைப்படுத்திப் பார்க்கலாம்.

ஒரேவகையான பிரைச்சனையைக் கொண்டிருக்கும் தொழிலாளிக்கு மற்றோர் தொழிலாளி எதிரியா? என்று ஒருகணம் யோசிக்க வைக்கலாம். தொழிலாளியும் ஒரு சக உயிர்தான். விரும்பியோ விருப்பமில்லாமலோ மனித உயிர் தன் இருப்புக்காக எல்லாவிதமான காரியங்களையும் செய்யவேண்டியிருக்கிறது. தான் முன்னேற சக மனிதர்களையே கீழே தள்ளி வீழ்த்துகின்றது. போலியாக அதிகாரத்திடம் குலைகின்றது. தட்டி அடித்துப்பறிப்பதற்குச் சமமான செயலையும் செய்யத் தூண்டுகிறது.

மீன்கள் சிறுகதை, மலையாக மக்களின் வாழ்க்கையை, அவலங்களை மிகையுணர்ச்சியுடன் சித்தரிக்காமல் தேவையற்ற அலங்காரங்கள் இன்றிக் கூர்மையாக வலுவான சிறுகதையாகச் சொல்லிவிடுகின்றது. கற்பனைக்குள் விரிந்துகொண்டே செல்லும் மிகநுட்பமான கதையாகத் தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கிறார். மீண்டும் மீண்டும் ஏதோவொரு விதத்தில் இக்கதை தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றது. வாழ்வின், அபத்தங்களையும், சரிவுகளையும் சொல்லி ஒரு மெல்லிய திடுக்கிடலை உருவாகினாலும், அந்த வாழ்க்கை எத்தனை உக்கிரம்கொண்டது என்பதை இவ்வாறான கலைப்படைப்புகளே பதற்றத்துடன் கோடிட்டுக் காட்டுகின்றன.

பின் குறிப்பு

‘மீன்கள்’ சிறுகதை நற்றிணை வெளியீடாக வந்த ‘மீன்கள்’ தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *