ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பதின்மவயதினர் அவர்கள் வாழும் சூழலில் ஒரு குழாமாகவோ நண்பர் வட்டமாகவோ ஆகிவிடுவார்கள். ஊரிலுள்ள சனசமூகநிலையங்களில் அந்த அந்தக் குழுக்கள் தனியே தமக்குள் விளையாடிக்கொண்டோ, அரட்டையடித்துக்கொண்டோ இருக்கும். அவர்களுக்குக்கிடையில் இருக்கும் நட்பும் உரையாடலும் புரிந்துணர்வும் மிக வலிமையானதாக இருக்கும். ஒத்த ரசனையோ,விளையாட்டோ ஏதோவொரு விடயம் அந்த நட்பு வட்டத்தின் ஆதார சுழற்சி மையமாக இருக்கும். அது அசாதாரணமானது; நீண்ட நாட்கள் அந்த வட்டத்தில் இருந்தாலும் ஒவ்வொரு தேவை நிமிர்த்தம் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலுக்குள் பயணப்படும்போது அந்த வட்டம் சுருங்கும், ஒவ்வொருவராக விலகுவார்கள். கண்ணுக்குத் தெரியாமல் அந்த வட்டம் குறுக்கிக்கொண்டுவந்து ஒரு கட்டத்தில் முற்றாகக் கரைந்துபோகும். எப்போது முற்றாக விலகினோம்; எங்கே அது நிகழ்ந்தது என்பது அறியாமலே நிகழ்ந்திருக்கும். எந்தப் பெஞ்சில் இருந்து அரட்டையடித்தமோ அதே பெஞ்சில் இன்னுமொரு குழு சிரித்துப்பேசி அரட்டையடித்துக் கொண்டிருக்கும். ஒரு கணம் திகைத்துப் பார்க்க வயதாகி எங்கையோ தொலைந்து முற்றாக அந்நியமாகியிருப்பது சின்னத் திடுக்கிடலுடன் தெரியும்.

இளம் வயதிலிருந்து கூட வந்த அதே நண்பர்கள் அதே வட்டம் என்பதை எதைக்கொண்டும் இலகுவில் நிரப்ப இயலாது. சின்னச்சின்ன சிறுவயது விடயங்களில் இருந்து பல்கிப்பெருகி பலதை உள்வேண்டி உருவாகிய சிநேகிதம். வெவ்வேறு புது நண்பர்கள் காலப்போக்கில் வந்தாலும், மனம் பழைய நண்பர்களையும் அதே குதூகலத்தையும்தான் தேடும். அதேபோல் இறுக்கமான நண்பர்கள் குழாம் மறுபடியும் உருவாவதென்பது சாத்தியமற்றது. அவை அசாத்தியமாகச் சோர்வூட்டக்கூடியது. பழைய நண்பர்கள் அற்றுத் தனித்திருத்தல் என்பது மிக மனதளவில் வெறுமையைக் கூட்டி, மாரிக்கால அட்டையைப்போல் சுருண்டுபோக வைத்திருக்கும்.

Jesurasa

அ.யேசுராசா

அ.யேசுராசா எழுதிய “ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது…” சிறுகதை பழைய நண்பர்கள் அற்றுத் தனித்திருக்கும் சோர்வுக்குப் பின்னிருக்கும் மனதின் உருக்கத்தை,பிறந்து வளர்ந்து உலாவிய அதே தெருக்களில் நுட்பமாக அந்நியமாகி நிற்பதையும் சின்னத் சின்னத் தருணங்களாக வெட்டியெடுத்து ஒரு சிறுகதையாக வார்த்திருக்கின்றது. வெறுமை கொள்ளல் என்பது தனியே நண்பர்களால் மட்டும்தான் நிகழுமா? அதை நிரப்ப குடும்பத்திலுள்ள அன்பும் சிநேகிதமும் போதாதா? என்றால் உண்மையில் ஓர் இளைஞனாக இருக்கும் ஆணுக்குக் குடும்பத்தில் இருந்து கிடைக்கும் அன்பும் நெருக்கத்தைவிட, நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், சீண்டலும், குதூகலமும்தான் இயல்பு நிலையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது பொதுப்படையான உண்மையாக இருக்கின்றது. இச்சிறுகதை மிகயதார்த்தமாக அதை உசாவிச்செல்கிறது.

பழகிய அதே தெருக்கள், அதே தேநீர்க்கடை; ஒரு வருடத்தின்பின் கொழும்பிலிருந்துவிட்டு வந்தபின் அவையெல்லாம் அந்நியமாகித் தெரிகின்றன. நண்பர்கள் எல்லோரும் மெல்லமெல்ல விலகிவிட்டது உரைக்கின்றது. அடுத்தடுத்த நண்பர்கள் வட்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிராமத்துக்கு வந்த கதை சொல்லி சட்டென்று தான் அந்நியமாகியிருப்பதை உணர்ந்து தத்தளிக்கிறார். இதே உணர்வுகளை நட்புவட்டத்திலிருந்த மற்றைய நண்பர்களும் வெவ்வேறு தருணத்தில் உணர்ந்து ஒரு கண்ணீர்த்துளியை இழப்புக்காகப் பரிசளிக்கலாம். அந்தச் சோர்வும்; மெலிதாக இழையோடும் பதற்றமும் வாசிக்கும் எனக்கும் தொற்றச்செய்து என் பதின்மகால நண்பர்களையும் என்னிலிருந்து விலகிய நண்பர்களையும் நினைவுகூரச் செய்து ஓர் ஆழ்ந்த அமைதியில் தள்ளிவிடுகிறது. இன்னுமோர் சூழலுக்குள் புக முடியாமல் தடுமாறுவது எத்தனை உருக்கம் நிறைந்தது! அவ்வாறான தருணங்களைத்தான் ஒரு தேர்ந்த கதை சொல்லி சிறுகதையாக்குவார். இக்கதை 1969-களில் எழுதப்பட்டு இருந்தாலும் இன்னும் அதே மனித உணர்வுகளுடன் மாறாமல் இருக்கும் மானுட இயல்பை அப்பட்டமாகச் சொல்லிவிடுகிறது.

பின் குறிப்பு

01. ‘ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது’ சிறுகதை ‘’ சிறுகதைத்தொகுப்பில் வெளியாகியது.

02. “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” புத்தகம் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் இச்சுட்டியில் தரவிறக்கக்கொள்ள இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *