அடர் பனிக் குளிரின் பயங்கரம் – எவரெஸ்ட்

திரையனுபவம்

CMYK base

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையுச்சிக்குப் பயணிக்கும் பயணிகளின் உணர்வுபூர்வமான கதையினைக்கொண்ட ஆங்கிலக் கதைப்படம் எவரெஸ்ட். 1996 – இல் நடந்த திகிலூட்டக்கூடிய விபத்து ஒன்றின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்படமாகப் படமாக்கியுள்ளார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வந்திறங்கியிருக்கும் குழுவின் அறிமுகத்தோடு திரைப்படம் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் சிநேகமாக அறிமுகமாகிக் கொள்கிறார்கள். மிக உயரமாக எழுந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை திறந்த விழிகளுடன், பரவசமாகப் பார்கிறார்கள். சில்லென்று குளிர் காற்று சீண்டுகின்றது. திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் எம்மீதும் குளிர் காற்று பற்றிக்கொள்கிறது. அவர்களின் வியப்பில் நாமும் ஒன்றத் தொடங்க திரைப்படம் நகருகின்றது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புபவர்களை அங்கிருக்கும் நிறுவனங்கள் பாதுகாப்புடன் வழிகாட்டி அழைத்துச்செல்கிறது. அவர்களுக்கான கட்டணம் கட்டிவிட்டால் போதிய பயிற்சியுடனும், தற்காப்பு உபகரணங்களுடனும் அனுப்பி வைகிறார்கள். அவ்வாறான ஒரு நிறுவனம் “அட்வென்ச்சர் கொன்சல்டன்ட்ஸ்”; இவ் நிறுவனத்தில் வழிகாட்டியாக இருக்கும் “ராப்” புதிதாக மலையேற வந்திருக்கும் எட்டுப்பேரை பொறுப்புடன் அழைத்துச்செல்லத் தயாராகிறார்.

படிப்படியாக மலையேற்றம் ஆரம்பமாகிறது. முகாம்கள் அமைக்கப்பெற்று மருத்துவ பரிசோதனைகள், உடல் நிலையின் ஆரோக்கியம் என்பவை கணிக்கப்பெற்று கூர்மையான கண்காணிப்புடன் மலையேற்றம் தொடர்கிறது. 9000 அடியில் முதல் முகாம், பிற்பாடு 12000,17000 அடிகளில் மற்றைய முகாம்கள். மூன்றாவது முகாமில் அவர்களுக்கு, மருத்துவவும் தொலைதொடர்பு உதவியும் கிடைக்கும். அதற்குப் பிறகு எவையும் இல்லை. மலை ஏறுபவர்களே சிறிய கூடாரங்களை அமைத்துத் தங்கவேண்டும். கொட்டும் பனியில் கடும் குளிரயும் தாங்கும் கனத்த உடைகளுடனும், ஒக்சிசன் குடுவைகளுடனும் கடினப்பட்டுப் பயணிக்கும் பயணத்திற்கு பின்னுள்ள உழைப்பையும், நீண்ட திட்டமிடலையும் திரைப்படம் காட்சிப்படிமங்களோடு விலாவாரியாகச் சொல்கிறது.

வழிகாட்டியாக இருக்கும் ராப்பின் மனைவி கர்பமாக இருக்கின்றாள். யூலை மாத்தில் குழந்தை பிறந்துவிடும்; அதற்குள் ராப் தன்னுடையை குழுவை எவரெஸ்டில் பாதுகாப்பாக வழிகாட்டி ஏற்றி, மீண்டும் இறக்கிவிட்டு வீடுசெல்ல உணர்சிகள் ததும்பக் காத்திருக்கிறார். மலையேற்றம் தொடர்கிறது; ராப்பின் மனைவி பிறக்கப்போவது பெண்குழந்தை என்ற தகவலைச் சொல்கிறார். உற்சாகமாகத் தன் பயணக் குழுவினரிடம் அதனைப் பகிர்ந்து மகிழ்ந்துகொள்கிறார். மகளுக்கு “சாரா” என்ற பெயரை வைக்கலாம் என்று மனைவியோடு இனிமையும் காதலும் ததும்ப்ப பனிமலையிலிருந்து சட்டலைட் தொலைபேசியில் உரையாடுகின்றார். அவரைப்போலவே மலையேறும் குழுவிலுள்ளவர்களும் தங்களது குடும்ப நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத மெல்லிய இழையொன்று எவரெஸ்டில் இருந்து அவர்களது வீட்டைப் பிணைத்து வைத்திருக்கின்றது. அதன் ஆதார சுழற்சியிலே அவர்களது பயணத்தின் தன்னம்பிக்கை பிறக்கின்றது.

இரவுநேரத்தில் முகாமில் ஓய்வெடுத்துக்கொள்ளும் போது ஏன் மலையேறுகின்றீர்கள் என்ற கேள்வி அவர்களிடம் இயல்பாக எழுப்பப்படுகின்றது. யப்பானில் இருந்து வந்திருக்கும் பெண்மணியொருவர் இதுவரை ஆறு சிகரங்களைக் கடந்துள்ளார். இது ஏழாவது. அவரிடம் இக்கேள்வி வைக்கப்படும்போதும் அவரிடம் சரியான பதில் இல்லாமல் இருக்கின்றது. மலையேறுவது தீராத இன்பமாக இருக்கலாம்; ஆனால் அவளால் சரியான பதிலை உடனடியாகச் சொல்ல முடியவில்லை. எல்லோரும் அக்கேள்வியைக் கேட்டவுடன் ஏன் இத்தனை கடுமையைத் தாண்டி மலை ஏறுகின்றோம் என்ற கேள்விக்கு விடைகண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒருவர் மட்டும் தன்னால் உலகின் மிகப்பெரிய சிகரத்தைத் தொட்டு, மற்றவர்கள் இயல்பில் பார்க்காத அழகை மலையுச்சியில் இருந்து பார்க்க முடியும் என்றும்; அதோடு மலையேறுவது குற்றமற்ற ஒன்றும் அதனால் மலையேற விரும்புகிறேன் என்கிறார்.

காலையில் எழுந்து மீண்டும் ஏறி நடக்கத் தொடங்குகிறார்கள். காலநிலை மாற்றத்தை அவ்நிறுவன முகாமிலுள்ளவர்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். பனியும் காற்றும் உக்கிரமாகவும், சில சமயம் மெலிதாகவும் வீசுகின்றது. மலையேறுவதின் சுமையை படம் முழுவதும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சறுக்கல்கள், சிறிய விபத்துகள் நிழந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து விலத்தி முடிந்தவரை பாதுகாப்பாகப் பயணிகளை வழிநடத்த ராப் முயல்கிறார்.

இயற்கையின் சீற்றத்தோடு போராடுகிறார்கள். எளிமையாக மனிதர்கள் அங்கே செல்வதை சீற்றம் தடுக்கின்றது. தொந்தரவு கொடுக்கின்றது. மலையடிவாரத்தில் மிகுந்த அழகாக இருந்த எவரெஸ்ட் சிகரம் மேலே செல்லச்செல்ல பயமுறுத்தத் தொடங்குகின்றது. பாறைகள் உருண்டு விழுகின்றன. பனிச்சரிவுகள் வேகமாக எதிர்பார்க்காத இடங்களில் சடுதியாக ஏற்படுகின்றன. அவற்றைத் தாண்டி பயணக்குழுவினர் எவரெஸ்ட்டை தொடுகின்றனர். ஆனந்தக்கூச்சல் இடுகின்றனர். கண்ணீர் முகத்தில் இருந்து வழிந்தோடி உதட்டை நனைக்கின்றது. யப்பான் நாட்டைச்சேர்ந்த பெண்மணி சிறுமிபோல் பரவசமடைகின்றாள். “நன்றி நன்றி” என்ற வார்த்தையைத் தவிர அவள் வாயிலிருந்து வேறுசொற்கள் வர மறுக்கின்றன. பையிலிருந்த சிறிய யப்பான் நாட்டு தேசியக்கொடியை உணர்ச்சிப் பெருக்குடன் பறக்க விடுகின்றாள். ராப் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றார். கட்டற்ற வெற்றிப்பெருக்கு ஒவ்வொருவரின் முகத்திலும் தென்படுகின்றது; பாதுகாப்பாக உச்சியை அடைந்ததை முகாமுக்கு அறிவுறுத்த அங்கிருப்பவர்களும் ஆசுவாசம் அடைகிறார்கள்.

உச்சியை அடைந்தவுடன் அனைத்தும் முடிந்துவிடவில்லை. மீண்டும் கீழிறங்கும் போதுதான் சிக்கல் ஆரம்பமாகின்றது. பனிக்காற்றின் வேகம் அதிகரிக்கின்றது. நிலைகொள்ள முடியாத அளவுக்கு காற்று உக்கிரமடைகின்றது. ஒக்சிசன் தீர்ந்துவிடத் தொடங்குகின்றது. பயணக்குழு சிதறுகின்றது. ராப், தாமதமாக மலையேறிய அவரது குழு உறுப்பினரான “டக் ஹேன்ஸனோடு” மேல்சிகரத்தில் மாட்டிக் கொண்டு விட நிலைமை மேலும் சிக்கலாகின்றது. மிக உக்கிரமான கொடிய போராக இருகின்றது. மிகப்பெரிய எதிரியாக இயற்கை கண்முன்னே விரிந்து நிற்கின்றது. எந்த ஆயுதம்கொண்டும் சமாளித்துவிட முடியாத எதிரி முன், சாமானியர்களாக மனிதர்கள் நிர்கதியாக நிற்கின்றார்கள். பனி மெல்ல மெல்ல பயணக்குழுவினரை வேட்டையாடத் தொடங்குகின்றது. சிலர் இறக்கிறார்கள். சிலர் ஒக்சிசன் இல்லாமல் சுவாசத்துக்கு போராடத் தொடங்குகிறார்கள். படம் பார்த்துக்கொண்டிருக்கும் எமக்கு முள்ளந்தண்டும் சில்லிடுகின்றது.

பனியில் சிக்கி, உறைந்து இறந்து வீழ்ந்துகிடப்பவர்களின் உடல்கள், மிகப்பெரிய போரில் சிக்கி, போரிட்டு மாண்டவர்களின் உடல்களைபோல் பனிச்சரிவில் சிதறிக் கிடக்கின்றது. ராப் ஒக்சிசன் இல்லாமல் தவிக்கின்றார். பயணக் குழுவினரை மீட்க அனுப்பப்படும் அணி உக்கிரமான காலநிலை சீற்றத்தினால் மேலேறிச்செல்ல முடியாமல் பாதிவழியிலே திரும்பவேண்டி ஏற்படுகின்றது. ராப் வயர்லெஸ் வழியாக பேஸ் முகாமில் இருபவர்களோடு பலவீனமான குரலில் பேசுகின்றான். அவர்கள் தொடர்ந்தும் தன்னம்பிக்கை கொடுக்கின்றனர். அவர் மனைவிக்கு நிலைமையை விளக்கி ராப்போடு உரையாட வைக்கின்றனர். அவர்கள் இருவரின் உரையாடல்களும், உயிர்பிழைக்க ஏங்கும் ஆசையில் பரிமாறும் வார்த்தைகளும் மிக நெகிழ்விக்க கூடியவை.

ராப்பையும் மிகுதி பயணக்குழுவில் உயிர்பிழைத்துள்ளவர்களையும் காப்பாற்ற எடுக்கும் மிகுதி முயற்சிகளே மிகுதிக்கதையை பரபரப்பாக நகரத்துகின்றது. இரண்டு மணிநேரம் அனைத்தையும் மறந்து நாமும் எவரெஸ்ட்டில் பயணித்து இறங்குகின்றோம். நாடி நரம்புகள் முழுவதும் குளிரே உள் நுழைந்து உறைய வைக்கின்றது. இறுதி முடிவு மிக நெகிழ்சிகரமானது. அவை நிசமாக நடந்த சம்பவம் என்று எண்ணும்போது நாமும் இயல்பாகக் கலங்குகிறோம்.

படத்தில் ஒளிப்பதிவு ஆகச்சிறப்பாக இருகின்றது. பனிமலையை ஒளிப்படம் பிடிக்கும் இடங்கள் மிக அற்புதமாக இருக்கின்றன. மலையேறும் குழுவினை மிகப்பரந்து விரிந்த வைல்ட் ஷோட்டோடு ஒளிப்படம் பிடிக்கப்பட்ட இடங்கள் எவரெஸ்ட் மலையின் அழகை சில்லென்று உணர்விக்க வைகின்றது. Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 2015 இறுதியில் வெளியாகியிருந்தது.

ஜூன் ஜீவநதி இதழில் பிரசுரமாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *