ஜூட் – சிறுகதை

tired_dog1

வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது .

கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு ஏதும் இல்லாத தற்செயலான ஒன்றாகவே கொள்ளமுடியும். அவசரமாக பல்கலைக்கழகம் புறப்பட வெளிக்கிடும்போது வீட்டு முற்றத்துக் குறோட்டன்களுக்கிடையில் வெட்டப்பட்ட பாத்திகளிலுள்ள செம்மண் ஒட்ட கலாதியாக சுருண்டு படுத்திருந்ததினை பார்த்தபோது கீர்த்தனாவுக்கு இரக்கம் நெஞ்சின் அடியாழத்தில் கமுகமரம்போல் சீராக வளர்ந்தது. அதனை தூக்கி மார்போடு சேர்த்து அணைத்தாள். அதன் ஈரமான உரோமத்தில் ஒட்டியிருந்த குளிர்ந்த செம்மண் அவளிடம் ஒட்டிக்கொண்டது. திடீர் ஸ்பரிசத்தை உணர்ந்து முகத்தை நீட்டி முகர்ந்து நாக்கால் அவளின் நாடியை நக்கி தனது சிறிய வாலை ஆட்டி முகமன் சொன்னது. ஊர்நாய்போல் இருந்தாலும் அது சாப்பிடும் சாப்பாடுகள் மிக உயர்தரமானவை. ஜெர்மனியில் இருந்து வரும் நாய்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டினை விரும்பியுண்ணும்.

பிரான்ஸிலுள்ள அண்ணா பிரத்தியேகமாக நாய்க்கான பிஸ்கட்டினை வேண்டி பொதிசெய்து யாழ்ப்பாணமுகவரிக்கு அனுப்பிவிட கப்பலில் ஆடியசைந்து பருத்தித்துறைக்கு வந்துசேரும். கீர்த்தனா அதனை பரவசமாக வாரியெடுத்து தத்தெடுத்தபோதே ஜூட் என்று பெயரிட்டுக்கொண்டாள். ஜூட் என்ற பெயருக்குப்பின்னாலும் நீண்ட வரலாறு ஒன்று இருந்தது. தொண்ணூற்றியைந்தாம் ஆண்டு இடம்பெயர்வில் அவர்களுக்குப்பின்னே சாவச்சேரி வரை ஓடிவந்து தொலைந்த நாயின் பெயர் அது.

ஜூட்டினை கட்டிவைப்பதில்லை. அது எப்போதும் வீட்டுவாசலிலே தடித்த முன்னங் காலினை நீட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு படுத்திருக்கும். யாரவது “தொபக் தொபக்” என்று ஓடினால் அதற்குப் பிடிக்காது, உரத்த குரலில் குலைக்கத்தொடங்கும். சிறுவர்கள் பேசும் ஒசையும் அதற்குத் துண்டறப்பிடிக்காது. குலைத்து வீட்டையே அதிரச்செய்யும்.

வெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது.  ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.

பிரதான சாலையில் இருந்து கிளைவிடும் செம்மண்படிந்த ஒழுங்கையில் கீர்த்தனாவின் வீடிருந்தது. கீர்த்தனாவின் அப்பா ராஜாரத்தினம் ஊரில் ஓய்வுபெற்ற அஞ்சல் அதிபர் என்ற மரியாதையுடன் இருந்தார். சீமைக்கிளுவைகள் வரிசையாக வளர்ந்து அவர்களின் வீட்டு மதிலுக்குமேலாக வளர்ந்து இடப்புறத்தினை மறைத்துக்கொண்டிருக்கும். அதுவே அவர்கள் வீட்டை யாரவது தேடிவந்தால் “இப்படிப்போய் வலதுபக்கம் திரும்பிபோனா சீமைக்கிளுவைகள் நிக்கும் அந்த வீடுதான்” என்று அடையாளப்படுத்த உதவியாகவிருந்தது. கார்த்திகை விளக்கீட்டிக்கு பந்தம் பிடிப்பதற்கும் செத்தவீட்டுக்கு பந்தம் பிடிப்பதற்கும் சீமைக்கிளுவைத்தடி வெட்ட ஊராரின் ஒரே தெரிவாக போஸ்ட்மாஸ்டர் ராஜாரத்தினத்தின் வீடிருந்தது. வீடு தேடிச்செல்பவர்கள் போஸ்ட்மாஸ்டர் ராஜரத்தினத்தின் வீடு எதுவென்று கேட்டால் எல்லோருக்கும் ஏதோவொரு விதத்தில் தெரிந்திருக்கும். ஜூட்டின் சமீபகால குழப்படிகளினால் அவரின் வீடு இன்னும் பிரசித்திபெற்றிருந்தது. போஸ்ட்மாஸ்டர் ராஜரத்தினதுக்குப் பதிலாக நாய்வீடு ராஜரத்தினம் என்ற அடையாளப்பெயரும் ஊரில் வலுப்பெற ஆரம்பித்திருந்தது.

ராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம். அதுவும் இரவுநேர கடமையில் நோயாளிகளுக்கு பேச்சு இரட்டிப்பாகவிருக்கும். தாய்க்கு கொஞ்சமும் சளைக்காமல் கீர்த்தனாவும் வாய்காரியாகவிருந்தாள். பாடசாலையில் மாணவர் தலைவியாக இருந்தபோது அவளின் ராங்கித்தனத்தினையும் சுள்ளென்று விழும் பேச்சையும் பார்த்து மிரண்டுபோனவர்கள் அதிகம். கீர்த்தனா அக்கா என்றாள் ஆறாம் ஆண்டில் கல்விகற்கும் சிறுமிகளுக்கு தொடைகள் இரண்டும் ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளும்வரை நடுங்கும்.

கீர்த்தனா உயிரியல் துறையில் படிக்கும்போது அவர்களின் நண்பிகளுடன் குழாமாகப் போய்வருவாள். இவர்களது குழாமை இலக்குவைத்து இவர்களின் பின்னே நாலு பொடியன்கள் எப்போதும் வகுப்புமுடிய வருவார்கள். அவர்களில் ஒல்லியாக உயரமாக எப்போதும் சிவத்த தொப்பிபோட்டு சைக்கிள் பாரில் இருந்து ஒருவன் வருவான். விசில் அடித்து “ஹலோ மிஸ்… பேர்பில் ஸ்கேர்ட்….கொப்பி கரியரில இருந்து விழுது” என்று அடிக்கடி சேட்டை செய்வான். ஆரம்பத்தில் அசட்டை செய்யாமல் இருந்தாலும் ஒரு கட்டத்தில் “ஹலோ மிஸ் இன்டைக்கு வெள்ளை அண்டர்ஸ்கேரட் இல்லையா கருப்புப்போல..” என்று வார்த்தைகள் விழ சைக்கிளினை நிறுத்தி மெயின்ரோட் என்றும் பார்க்காமல் சேட்டைவிட்ட பொடியளுக்கு நேரடியாக செருப்பைக் கழற்றி இலுப்பையடி சந்தியில் வைத்து கிழித்திருக்கின்றாள். சந்தியில் இருந்த காம்பிலுள்ள ஆமிக்காரர்களே வெலவெலத்துப்போய் நீண்ட துவக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

கீர்த்தனாவுக்கு விக்னேஷ் என்ற மூத்த சகோதரம். விக்னேஷ் உயர்தரம் எடுத்து சாதரணமான முடிவுகள் வர ராஜரத்தினம் பிரான்சிலுள்ள தனது தம்பியார் கணேசலிங்கத்தின் உதவியுடன் அவனை பிரான்ஸ் அனுப்பிவிட்டார். கீர்த்தனாவுக்கு விவசாயபீடத்தில் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்க ராஜரத்தினம் சந்தோஷமாக தனது பெருங்கடமைகள் எல்லாம் முடிந்தது என்று முற்றத்து பிலாமர நிழலில் நிம்மதியாக இருந்து பேப்பர் படிக்கத்தொடங்கினார்.

ஜூட்டினை குளிக்கவார்க்கும்போது மட்டுமே சங்கிலியால் கட்டுவார்கள். அந்தநேரத்தில் கூட திமிறிக்கொண்டிருக்கும். நீர்த்துளிகள் தன்மீது விழப்போகின்றது என்று உணரும்போதே விரிவான குரலில் ஊளையிடத்தொடங்கும். அதனை அமுக்கிப்பிடித்துத் தேய்த்து அப்பாவும் மகளும் கதறக்கதற குளிக்கவார்ப்பார்கள். பிரஷ்ஷினால் தேய்த்து கால்கள் விரல்கள் எல்லாம் சுத்தப்படுத்தி கவனமாகவே நீராட்டுவார்கள். என்னதான் தன்னைப்படித்து வலுக்கட்டாயமாக சுத்தப்படுத்தினாலும் குளித்துமுடிய மிக உற்சாகமாக வீட்டு கேரட்டின்களை சுத்தியோடி வீட்டினை ஈரமாக்கி ராஜரத்தினத்துடன் பேச்சு வேண்டி முற்றத்தில் விழுந்துருண்டு உடம்பு முழுவதும் மண்ணைப் பிரட்டி ஒழுங்கை முழுவதும் ஓடித்திரிந்து பெரும் அட்டகாசம் செய்யும்.

சம்மந்தமேயில்லாமல் போவோர் வருவோரை துரத்துவதற்கு ஜூட் எப்படிக் கற்றுக்கொண்டது என்பதினை சரிவர உறுதிப்படுத்த முடியவில்லை. வீட்டில் இருந்து புறப்பட்டு ரோட்டுக்கரைக்குச் சென்று வேடிக்கை பார்த்தவாறு இருக்கும். சாரத்துடன் சைக்கிள்களில் வருபவர்களைப்பார்த்தவுடன் அதன் வால் நட்டுக்கொள்ளும். காதுடமல்கள் விரிந்து இரத்தவோட்டம் அதிகமாகும். உற்றுப்பார்த்துக்கொண்டு தன்னைக்கடக்கும் அபூர்வ தருணத்துக்கு பரவசமாக காத்திருக்கும். சைக்கில் மிதிப்பவர் கிட்டவரும்போது “கிரர்ர்ர்ர்…” என்று உறுமிக்கொண்டு தீட்டிய கத்தரிக்கோல் போன்ற கூர்மையான வெண்பற்களை பாதி காட்டிக்கொண்டு துரத்த ஆரம்பிக்கும்.

சுருண்டு படுத்திருந்த நாய் திடீரென்று பாய்ந்து துரத்துவதினை சைக்கிளில் வருபவர் சற்றும் எதிர்பாராமல் தடுமாறுவதினைப்பார்த்து மகிழ்ந்து இன்னும் உற்சாகம் பீறிட்டுப் பாயும். கால்களை தூக்கிக்கொண்டு “அடிக் சூய் சூய்…” என்று சைக்கிளில் பதற்றம் அடைந்தவர் விரட்டுவார். நாய்கள் துரத்தும்போது சைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே படிக்காது என்ற விடயம் எப்படியோ யாழ்ப்பாண மனிதர்களுக்கும் அதிஷ்டவசமாகத் தெரிந்திருந்தது.

ஜூட்டின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. ராஜரத்தினத்தின் வீட்டைத் தேடிவருபவர்களுக்கு “இப்படிப்போய் வலப்பக்கம் திரும்புங்க கடுவன் நாயொன்று படுத்திருக்கும். அதிட்ட கவனமாயிருங்கோ… அந்த லேனுக்குள்ள இருக்கிற வீடுதான், நாய் அவயளின்டதான். கோதாரிகள் அதை கட்டிவைக்கிறதில்லை. பார்த்துப்போங்க..” என்று சொல்லியே அனுப்புவார்கள். என்னதான் ஜூட்டினைப் பற்றி முறைப்பாடுகள் போனாலும் ஜூட்டுக்கு எந்தவித தண்டனைகளும் கிடைப்பதில்லை. குறைந்த பட்சம் சங்கிலியால் கட்டிக்கூட வைப்பதில்லை. கேட்டினை பூட்டிவைத்தாலும் சீமைக்கிளுவைகள் நிற்கும் வேலிப்பக்கமுள்ள கதியால் இடைவெளிக்குள் புகுந்து கலாதியாக ஓடிவந்து ஒழுங்கை தொடக்கத்தில் படுத்திருந்து தனது கடமையை கொஞ்சமும் பிசகாமல் தினமும் பார்த்துக்கொள்ளும். கடுப்பாகிய ஊர்சனம் முனிலிசிபாலிட்டியிடம் சொல்லுவமோ என்று சிந்தித்தாலும், நாய்கள் பிடிப்பதினை அப்போதைய ஸ்ரீறிலங்கா அரசாங்கம் தடைசெய்து மனிதர்களைப் பிடிப்பதையே அமுல்படுத்தியிருந்தது அவர்களின் திட்டத்தினை நிறுத்தியது.

கீர்த்தனாவுக்கு வீட்டில் நிற்க நேரம் கிடைப்பதே இரவு ஏழுமணிக்குப் பின்புதான். பல்கலைக்கழக நெட்போல் அணியில் இருந்தபடியினால் தினமும் பயிற்சி முடித்து நண்பிகளுடன் அரட்டையடித்து வேர்வை வழிய ஹெட்லைட்டை ஒளிரவிட்டு முதுகில் கனத்த முதுகுப்பையை கொழுவிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடுவர முற்றிலுமாகக் களைத்திருப்பாள். ஒழுங்கைக்குள் அவளின் மோட்டார் சைக்கிளின் சத்தம் கேட்டவுடன் படுத்திருந்த ஜூட் துள்ளி எழுந்து அவள் பின்னால் குதித்துக்கொண்டு ஓடிவந்து ஆரவாரித்து ஊளையிட்டு கொஞ்சிக்குலாவும். காது ரெண்டையும் மடித்து நீண்ட தடித்த வாலினை கழன்றுபோகும் அளவுக்கு ஆட்டும். அதன் தலைகளை தடவிக் கொடுக்கும்வரை ஆர்ப்பரிக்கும். அம்மா வீட்டிலிருந்தாள் நெஸ்டமோல்ட் கிடைக்கும், இல்லாவிட்டால் மின்சாரக் கேத்தலில் தண்ணீர் கொதிக்க வைத்து தானே போட்டுக்கொள்வாள். ஜூட்டின் கோப்பையிலும் கொஞ்சம் வார்ப்பாள், அதனை ஆறவிட்டு மிச்சம் விடாமல் குடித்து முடிக்கும். விவசாய பீடத்தில் இறுதியாண்டில் இருப்பதினால் வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு புத்துணர்ச்சி பெற்று வேறுவேலைகள் பார்க்காமல் படிக்க ஆரம்பிப்பாள்.

சியாமளனின் தம்பி வாசன் எட்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். பாடசாலை முடிந்த கையோடு அடித்துப்பிடித்து வீடுவந்து அவசரமாக சாப்பிட்டு உடைகள் மாற்றிவிட்டு தனது சிவப்புநிற முக்கால் சைக்கிளின் பின்கரியரில் நடராஜ் கொம்பாஸ் பெட்டியையும் நோட்டு புத்தகங்களையும் திணித்துவிட்டு தனியார் வகுப்புக்கு ஓடுவான். எப்படியும் கீர்த்தனா வீட்டு ஒழுங்கையால் நுழைந்தே செல்லவேண்டியிருந்தபடியால் ஜூட்டின் உபத்திரத்துக்கு நித்தமும் ஆளாகவேண்டியிருந்தது. வாசனின் சிவப்புநிற சைக்கிளைக் கண்டாலே ஜூட் உற்சாகமாகிவிடும். ஒழுங்கை முடியும்வரை ஜூட் துரத்திக்கொண்டு செல்லும். வாசன் சைக்கிளில் வேகமாக வந்து தனது கால்கள் இரண்டையும் தூக்கிக்கொண்டு நாயினைக் கடக்கும்வரை புஷ்பகவிமானத்தை ஓட்டுவதுபோல வினோதமாகச் செல்வான். இதே செயல்பாடுகள் தினமும் நடக்கும். ஒவ்வொரு முறையும் ஜூட் வாசனிடம் தோற்றுக்கொண்டேயிருந்தது.

பலமறை ஜூட்டினால் உபத்திரப்பட்டதினால் வாசன் தன் அண்ணா சியாமளனிடம் சொல்லியிருந்தான். ஜூட்டின் விரிந்த செந்நிறம் கலந்த கூர்மையான கண்களை உற்றுப்பார்க்க நிஜமாகவே வாசன் உள்ளூர நடுங்குவான். நாய்களைப் பார்க்கும்போது ஏற்படும் பயம் விவரிக்கக் கொஞ்சம் கஷ்டமானது கூட, உடல் ஒருமுறை குளிர்ந்து வியர்த்து அடங்கும்.

சியாமாளன் மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். மின்கம்பங்களில் ஏறி வயர்களை சோதித்து பழுதுகளை விரைவாக தீர்ப்பதில் தேர்ந்த வல்லவனாக இருந்தான். எப்படியும் மின்சார சபையில் நிரந்தர வேலையை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. பலமுறை வாசனின் தந்தையார் தங்கராசு ராஜரத்தினத்திடம் நாயின் தொல்லையைப்பற்றி விரிவாகவே சொல்லியிருந்தார். குறிப்பாக தனது மகனுக்கு தொடர்ந்தும் இடைஞ்சல் தருகின்றமையினை சொல்லி நாயினை பிடித்துக் கட்டாவிட்டால் விதானையாரிடம் சொல்லப் போவதாகக்கூட மீன்சந்தையில் திருக்கைமீன் வேண்டிக்கொண்டிருந்த ராஜரத்தினத்தினை எதேச்சையாகக்கண்டு சூடாகவே சொன்னார்.

தங்கராசின் எதிர்பராத கோபமான பேச்சு சூடான இரத்தத்தினை ராஜரத்தினத்தின் தலைக்குள் பாய்ச்சி சற்றும் எதிர்பார்க்காத தன்மானப்பிரச்சினையாக உருவெடுத்தது. விதானையிட்ட போவன் என்று சொன்ன வார்த்தை கோபத்தின் உச்சிவிளிம்புக்குக் கொண்டு சென்றது. போஸ்ட்மாஸ்டராக இருந்த என்னைப்பார்த்து இவர் எப்படி உப்படிப் பேசலாம்?

“நீர் எங்க வேண்டாலும் போம்… என்ட நாயை எப்படி வளர்க்கிறது என்று எங்களுக்குத்தெரியும் நீர் உம்மட வேலையைப்பாரும்.. முதல் உம்மட பொடியன ஒழுங்கா லேனுக்குள்ள போகச்சொல்லும்.. சும்மா படுத்துக்கிடக்குற நாயக்கண்டு வெருண்டடிக்கிறது, விசிலடிக்கிறது.. பிறகு நாய் திரத்தாம என்ன செய்யும்.. மசிரவிடும்?” என்று மீன் துண்டுகளை பையில் அடைந்துகொண்டு முகத்துக்கு நேராகச் சொன்னார்.

அதற்குப் பிற்பாடும் ஜூட் வழமைபோல ஒழுங்கையின் தொடக்கத்தில் படுத்திருந்து தனது கடமையத் தொடர்ந்துகொண்டிருந்தது. அப்பாவுக்கு போஸ்ட்மாஸ்டர் மசிர என்று பேசிட்டாராம் என்ற செய்தி காது மூக்குவைத்து ஊதப்பட்டு சியாமளன் காதுக்கு மீன் சந்தையிலிருந்து வந்து சேர்ந்தது. அதற்குப் பின்னே அவன் இதில் கவனம் செலுத்தத்தொடங்கினான்.

“எனி கிளாசுக்கு போகக்க அந்த நாய் சேட்டைவிட்டா என்னட்ட சொல்லு” பின்நேரம் தேநீர் குடிக்கும்போது வாசனிடம் சியாமளன் தீர்க்கமாகச் சொன்னான். அவன் சொல்லி அடுத்தநாளே வாசன் அந்த நாய் மறுபடியும் துரத்துகின்றது என்று முறைப்பாடு செய்தான்.

கைக்கு வளமாக வெட்டிவைத்த பூவரசு விறகுக்கட்டையை எடுத்துக் கொண்டு சைக்கிளில் ஏறி ராஜரத்தினம் ஒழுங்கைக்கு ஒரு முடிவோடு கிளம்பினான். பொழுது இருண்டு இரவாகத் தொடங்கியிருந்தது. வௌவால்கள் தூரத்தே பறந்துகொண்டிருந்தன.

ஒழுங்கை ஆரம்பத்திலே ஜூட் படுத்திருப்பதினை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தான். முன்னங்காலை நீட்டி தலையை நிலத்தோடு ஒட்டிப் படுத்திருந்த ஜூட் சந்தேகக் கண்களோடு சியாமளனை பார்த்தது. சைக்கிளினை நிறுத்திவிட்டு பூவரசு விறகுக்கட்டையை முதுகுப்பின்னால் மறைத்துக்கொண்டு சிறுகச் சிறுக பாதங்களை நகர்த்திக்கொண்டு மழைகால நாரைபோல் முன்னேறினான். ஜூட்டுக்கு என்னவோ சந்தேகமாக உரைக்கத்தொடங்கியது. வாலை சிலிர்ப்பி “க்ர்ர்ரர்ர்ர்ர்..” என்று உறுமத்தொடங்கியது. சியாமளனுக்கு நாயின் மிதமிஞ்சிய வளர்ச்சியும் அதன் உறுமலும் உள்ளூர கொஞ்சம் ஆட்டம்காண வைத்தது. விட்டால் நாய் பாய்ந்துவிடலாம் என்ற தருணம் வாய்த்துவிடும். சற்றும் தாமதிக்காமல் விறகுக்கட்டையை தூக்கிக்கொண்டு நாயின் முன்னால் பாய்ந்தான். ஜூட் அவன்மேல் பாய அவன் ஜூட்மேல் பாய பெரும் கூச்சல் குழப்பம் எழுந்தது. இரண்டு மரணஅடி ஜூட்டின் காலில் விழுந்தது. ஒருகாலை இழுத்துக்கொண்டு ஜூட் பின்வாங்கத்தொடங்கியது. அது எழுப்பிய ஒலி பரிதாபமாக வித்தியாசமாக இருந்த்து.

ஒழுங்கைக்குள் இருந்து ஜூட் தனது வீட்டுக்குள் நுழைய காலை இழுத்துக்கொண்டு ஓடியது. சியாமளனும் விறகுக்கட்டையை தலைக்குமேல் பிடித்துக்கொண்டு வேகமாக ஜூட்டினை விரட்டிக்கொண்டு பாய்ந்தான். அந்தநேரத்தில் கீர்த்தனா பல்கலைக்கழகம் முடித்து நெட்போல் பயிற்சியையும் முடித்துக்கொண்டு ஒழுங்கைக்குள் மோட்டார் சைக்கிளினை திருப்பி வீடுவந்துகொண்டிருந்தாள். ஜூட் அலறியடிப்பதினை பார்த்து திகைத்து அதனை ஒரு மனிதன் விறகுக்கட்டையுடன் துரத்துவதினைக்கண்டு ஒருகணம் சிலிர்த்து மோட்டார் சைக்கிளினை நிறுத்துவிட்டு எஞ்சினை நிறுத்தாமல் அவசரமாகப் பாய்ந்துவந்து சியாமளனின் தோள்பட்டையை பின்னால் நின்று எட்டிப்பிடித்து இழுத்தாள்.

திடீரென்று மென்மையான கையொன்று தன்மேல் விழுந்ததினை சுய பிரஞ்சையில் உணர்ந்து சியாமளன் திரும்பிப்பார்த்து ஒருகணம் திகைத்து அடங்கினான். குவிந்த இதழ்களுடன் கோபம் சுடர்விடும் உக்கிரமான கண்களையும் இறுக்கமான மேல்சட்டையின் மேடுபள்ளங்கள் மேல் இரட்டை சடைகள் முன்னால் விழுந்து அசைவதையும் கீர்த்தனாவையும் பார்த்தான்.
“உங்க நாய்… பிடிச்சுக்கட்டும் அடிவேண்டி சாகப்போகுது..” என்றான்.

“யோ…. இப்ப இது உமக்கு என்ன பண்ணினது என்று அடிக்கப் பொல்லோடு வந்தனீர்..?” கீர்த்தனாவின் வாய் சூடாக வேலைசெய்யத் தொடங்கியது.

“ஏய்.. என்ன கத்துறீர்… ரோட்டுல அவுட்டுவிடுரியல் மண்டைக்குள்ள ஒன்றும் இல்லாமல்.. மிச்ச ஆக்கள் யாரும் போய்வாரதில்லையே…இதுவென்ன உங்க கொப்பன் போட்ட ரோட்டே .?”

“விசரா.. மடையா நாயை இப்படியா அடிக்குறது..”

அழகால் பிரமிக்கவைத்த இளம்பெண்ணிடம் இருந்து “விசரா.. மடையா” என்ற சொற்பிரயோங்களை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சத்தம் கேட்டு ராஜரத்தினம் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்தார். ஜூட் கேட்டின் இடைவெளியால் வீட்டினுள்ளே புகுந்திருந்தது. எதிர்பாராத சம்பவம் ஜூட்டினை ஆட்டியசைத்து பயங்கொள்ளச் செய்திருந்தது. ஓடிவந்த ராஜரத்தினத்தினம் சியாமளனின் கையில் இருந்த விறகுக்கட்டையை பார்த்து விபரீதத்தினை உணர்ந்தார். பக்கத்தில் நின்ற கீர்த்தனாவின் கோபம் கொப்பளிக்கும் கண்களையும் பார்த்து நிலைமையை உடனே புரிந்து படபடப்பானார்.

“நீர் என்ட அப்பாவைப்பார்த்து மசிர என்டனீரோ? என்று சியாமளன் கத்தினான்.

ராஜரத்தினம் பேசி சமாளித்து சியாமளனை அனுப்பிவைக்கப் பெரும்பாடாகிப்போனது. ஜூட் அதுவரை வேலியை விட்டு வெளியே வரவேயில்லை.

இனி நாயினால் எந்தப்பிரச்சனையும் இல்லை என்று தம்பி வாசனிடம் உறுதி கூறினான். சனிக்கிழமை சாப்பிட்டுவிட்டு மதியத் தூக்கத்தில் இருக்கும்போது சியாமளன் கேட்டின் தடிமான இரும்புக் கொழுக்கியை யாரோ பிடித்து தட்டிக்கொண்டிருந்தார்கள். இடுப்பில் நழுவியிருந்த சாரத்தினை இழுத்துக்கட்டிக்கொண்டு வெளியேவந்தான். நீண்ட முழங்கைச்சட்டைபோட்டு தலைமயிர் கலைந்திருக்க அவன் நின்றுகொண்டிருந்தான்.

“நீங்கதானே சியாமளன்..”

“ஓம் சொலுங்கோ..”

“என்ன ஐசே கீர்த்தனாவின்ட வீட்ட போய் சண்டித்தனம் பண்ணினீராம்..”

“நீர் யார்..?”

“நான் கீர்த்தனாவின் போய்பிரண்ட்..”

“அது சரி.. உமக்கு இப்ப என்ன வேணும்?”

“அவ எண்ட கம்பஸ் ஜீனியர்.. என்கிட்டே சொன்னா.. உமக்கு என்ன பெரிய சண்டியன் என்ற நினைப்பே… வீட்டபோய் அவங்க அப்பாவினை பார்த்து மசிரே என்று பேசினீராம்..” அவன் சியாமளனின் டீஷர்ட் கொலரைப்பிடிக்கப்போனான்.

அதற்குப் பிறகு நடந்ததினை விபரிப்பது கஷ்டமாக இருந்தது. யார்மேல் யார் புரண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கட்டிப்பிடித்து புழுதி பறக்க தெருவில் புரண்டார்கள். இருவர் கடைவாயிலும் இரத்தம் மெலிதாகக் கசிந்திருந்தது. இருவரையும் விலத்திப்பிடிக்க பக்கத்துக்கடையில் இருந்தவர்கள் ஓடிவர அந்த இடமே அல்லகோலப்பட்டது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல வாரங்கள் கழித்தும் கீர்த்தனாவின் குவிந்த உதடுகள் அவன் நினைவில் வந்துகொண்டேயிருந்தன. தினமும் அவளின் முகம் மனதில் எழுந்து எந்தக் கோபத்தையும் எழுப்பாமல் மனதில் பழகியிருந்தது.

ஏழுவருடங்கள் கடந்தும் இன்னும் குவிந்த இதழ்களையும் கீர்த்தனாவின் கோபங்கொண்ட கண்களையும் சியாமளனினால் கொஞ்சமும் மறக்க முடியவில்லை. அந்த ஒழுங்கைக்கு அதற்குப்பிறகு அவன் சென்றதும் குறைவு. செல்லும் நேரங்களில் கீர்தனாவின் வீட்டைக் கவனிப்பதுண்டு. எப்படியாவது திரும்பவும் அவளினை நேருக்குநேர் சந்திக்க முடியுமா என்று இரகசியமாக நினைத்தும் கொள்வான்.

இறுதிவரை நிரந்தரவேலை கிடைக்காமல் சம்பளமும் போதாமலும் வேலையை விட்டு மாமாவின் உதவியுடன் பெருங்கனவுகளுடன் ஒரு குளிர்காலத்தில் லண்டன் வந்து சேர்ந்தபின்பும் கீர்த்தனாவினை அடிக்கடி நினைத்துக்கொள்வான். எங்கயாவது ஒரு நாயினைப் பார்க்கும்போது, விறகுக்கட்டையோடு நாயைக் கலைத்ததும் கீர்த்தனா தோள்பட்டையை பிடித்து இழுத்ததும் “விசரா..” என்ற சொல்லும் நினைவுக்குவர தனிமையில் சிரித்துக்கொள்வான்.

அவனுக்கு சூப்பர் மார்க்கட்டில் சுப்பவைசர் வேலை. கொடிகாமத்தினைச் சேர்ந்த இலங்கைத் தமிழரின் கடை. பொருட்களை பொருத்தமான இடத்தில் அடுக்கிவைப்பதிலிருந்து வாடிக்கையாளர்கள் பொருட்கள் எதையும் தேடும்போது அவர்களுக்கு உதவுவது வரை சியாமாளனின் வேலையாக இருந்தது.

இப்படி நாட்கள் சென்றுகொண்டிருக்க ஒரு தமிழ்ப் பெண்மணி சேலைகட்டி நீலநிறமான காரில் கணவனோடு வந்திறங்கினாள். தலைமயிரினை நீளமாக நீவி தோள்மூட்டு முழுவதும் புரள குதிரைவால் போல் பரவவிட்டிருந்தாள். அவளின் மெல்லிய இடையினை கவனித்த சியாமளன் கனவில் இருந்து சுதாகரித்து அவளின் உதட்டை பார்த்தான். அதே குவிந்த உதடு, குளிர்ந்த கண்கள். அவள் இவனைக் கவனிக்கவில்லை. நீரின்மேல் மிதந்துவரும் குமிழ்போல் மிதந்துவந்தாள்.

ஏதோவொரு பொருளை வேகமாகத் தேடிக்கொண்டிருந்தாள். சியாமளன் தயக்கத்தோடு கொஞ்சம் தள்ளிநின்றான். அவள் கணவன் இன்னும் சற்றுத்தள்ளி கருப்புநிற ஜீன்ஸ் பொக்கட்டினுள் கைகள் இரண்டையும் திணித்துக்கொண்டு நின்றார். கணவனைக் கண்டவுடன் தெருவில் கட்டிப்பிடித்து அவளது போய்பிரண்டுடன் உருண்டது சியாமளனுக்கு நினைவுவர அவன் இன்னும் கொஞ்சம் ஒதுங்கி நின்றான்.

அவள் அவனை நெருக்கி “நாய்களுக்குத் தேவையான பிஸ்கட்கள் எங்கே இருகின்றன? என்று தூய ஆங்கிலத்தில் இனிமையாகக் கேட்டாள். சில நொடியில் அவள் முகம் ஒலிம்பிக் தீப்பந்தம்போல் பிரகாசமாகியது.
சியாமளன் “அங்க இருக்கு” என்று தமிழில் சொன்னான்.

“ஓ…” என்றாள்.

“நான் எடுத்துத்தரவா?” என்று கேட்டுக்கொண்டு பற்கள் வெளித் தெரியாமல் புன்னகையை வெளிவிட்டான். “நாங்கள் முதலும் நாய்க்காக சண்டைபோட்டு இருக்கின்றோம், நினைவு இருக்கின்றதா? அந்த விசரா நான்தான்.” என்றான்.

அவள் மிக இயல்பாக கைகளினால் வாயைப்பொத்தியபடி மாபிள்கிண்ணத்தை சீமெந்து தரையில் விழுத்தி உடைத்ததுபோல் சிரித்தாள். அவள் கண்களில் நீர் மெல்லியகோடாக வழிந்திருந்தது.

நாய்களுக்குத்தேவையான பிஸ்கட்டினை அவன் எடுத்துக்கொடுக்க தனது சிவப்பு நிறச்சாயம் பூசப்பட்ட மெல்லிய கைவிரல்களினால் பற்றிக்கொண்டாள்.

“இது எந்த நாய்க்கு? இப்பவும் நாய் இங்க வளக்குறீங்களா?” என்றான்.

“ஓம்..”

“அந்த நாய்க்கு என்ன ஆச்சு?”

அவள் ஒரு கணம் நிலத்தினை உற்றுப்பார்த்து மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளேயிழுத்து, “நான் கலியாணம் முடித்து லண்டன் வரமுதலே ரோட்டில் வாகனத்தில் சிக்கி செத்திட்டுது..” என்றாள். அவள் கண்களில் சோகம் தீராமல் மிஞ்சியிருந்தது. ஏதோ யோசித்து நீண்ட பெருமூச்சை விட்டாள்.

அவள் விடைபெறும்போது கணவனிடம் “எங்க ஊர்க்காரர்..” என்று அறிமுகப்படுத்தினாள். சியாமளன் பதற்றத்துடனும் கூச்சத்துடனும் கைநீட்டினான். அவர் சிநேகமாக நீண்ட கையினை பொக்கட்டினுள் இருந்து உருவி நீட்டி சியாமளின் கையை அழுத்திப்பற்றி குலுக்கினார். அவர் கை வழமையைவிட குளிர்மையாகவிருந்தது. அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது கணவனை முழுமையாகப்பார்த்தான். தன்னை அடித்து உருண்டுபுரண்டவன் சாயலில் அவர் இல்லாமல் இருந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு ஏதோ கேட்க நினைத்தான். அப்புறம் கேட்டகவேயில்லை. ஒரு பெருமூச்சை ஆழமாக விட்டான்.

2016 ஜனவரி ஜீவநதி இதழில் வெளியாகிய சிறுகதை.

One thought on “ஜூட் – சிறுகதை

  1. Sabes Sugunasabesan

    I like the crisp sentences, humour and social references scattered throughout the story. I liked the humorous portrayal of the characters.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *