ஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10

மிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் மிகுந்த குளிர்ச்சியான தருணங்கள் அவை. இது எதிர்பாலின் மீதும் வரலாம், சகபாலின் மீதும் வரலாம். அவை அன்பு, ஆறுதல் எனும் ஏக்கங்களின் சுழற்சியில் இயல்பாக எழக்கூடிய சுழிகள்.

எத்தனையோ நபர்களுடன் அதிகம் அளவளாவினாலும் சிலரை அகவயமான உணர்வுகளின் அடிப்படையில் பிடிக்கிறது, சிலரை புறவயமான அவதானிப்புகளில் பிடிக்க ஆரம்பிக்கின்றது. ஒரு மணி நேரம் பழகினாலும் கூடச் சிலரை வாழ்கையில் மறக்க இயலாத அளவுக்கு அதிகமாகப் பிடிக்க ஆரம்பிக்கிறது. என்றும் மறக்க முடியாமல் அவர்களின் நினைவுகள் உடலின் ஏதோவொரு பகுதியில் ஒரு துளியாவது எஞ்சி மிஞ்சிவிடுகிறது. நேரம் அதற்குப் பொருட்டேயல்ல.

பிடித்த மனிதர்களிடம் உரையாடியிருப்போம் அல்லது தூரத்தில் இருந்து அவதானித்துவிட்டு மௌனமாக விலகியிருப்போம். மௌனம் கூட இன்முகம் காட்டும் நினைவுகள்தான். இருந்தும் மனதுக்குப் பிடித்தவர்களுடன் உரையாடுவது மிகுந்த சந்தோஷத்தை தரக்கூடியது. ஆனால், சில சமயம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நெருங்க நெருங்க அந்த உறவு நீர்ந்தும் போகலாம். மனித மனதின் விசித்திரம் அவை.

                       குப்பிழான் சண்முகன்

ஈழத்தின் மூத்த கதை சொல்லிகளில் முதன்மையானவர்களில் ஒருவரான ‘குப்பிழான் சண்முகன்’ எழுதிய ‘ஒரு றெயில் பயணம்’ சிறுகதை இதேவகையான மன உணர்வுகளைப் புறவயமான அவதானிப்புகளுடன் நுண்மையாகச் சொல்கிறது. ஒரு றெயில் பயணத்தில் காண நேரும் பெண்ணைக் கதை சொல்லிக்கு நிரம்பவே பிடித்துவிடுகிறது. அது நீண்ட றெயில் பயணமாக இருக்கின்றது. ஒரு கட்டத்தில் அவளுடன் உரையாட ஆரம்பிக்கிறார். அவளும் இயல்பாகப் பேச ஆரம்பிக்கிறாள்.

அப்பெண்ணுக்கு இலக்கியத்தின் மீது அதிகம் ஈர்ப்பு உள்ளதை அவதானித்து, அந்தக்கோணத்தில் உரையாடலை வளர்கிறார். அவளைத் தனக்குச் சிங்களம் படிப்பிக்க முடியுமா என்று கேட்கின்றார். பெரிதாகச் சிரித்து நகைத்த அப்பெண் “நாம் இப்போது றெயிலில், இப்பயணத்தில் நானும் நீங்களும் நண்பர்கள், பின் நான் யாரோ நீங்கள் யாரோ” என்று கூறுகிறாள். சட்டென்று சகல தயக்கங்களையும் களைந்த கதை சொல்லி இந்த றெயில் பயணத்தில் சந்தித்த உன்னை, நான் என் வாழ்க்கை பயணத்திலே மறக்க முடியாது” என்கிறார். அதைக்கேட்ட அப்பெண் கண்கலங்கி மௌனமாக அழுது அவரின் மார்பில் முகம் புதைக்கிறாள். அங்கே ஏதோவொரு ஆறுதல் அவர்களுக்குள் நிகழ்கிறது.

இன்னும் கூர்ந்து பார்த்தல், அப்பெண்ணுக்குப் பின்னால் சொல்லப்படாத, கதை சொல்லிகுத் தெரியாத அப்பெண்ணின் ஆழமான கதை ஒன்று இருப்பது தெரிகிறது. இந்த உணர்வின் உச்சக்கட்டம் மிகைப்படுத்தப்பட்ட நாடகீயமாகத் தோன்றினாலும் ஆழமாக யோசிக்க வைக்கும் ஒரு புள்ளியாகவே தோன்றுகிறது. இதே வகையான தருணத்தைத் தர்மினி ‘பெயர் அறியாத ஒருவனின் முத்தம்’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதியிருப்பார். (இருள் மிதக்கும் பொய்கை தொகுப்பில் அக்கவிதை உள்ளது)

சமநிலையற்று தடுமாறும் நிலைகளைத் திரைப்படங்களில் காட்ட அதிகம் றெயில் பயணங்கள் சார்ந்த பின்னணிகளை அமைப்பார்கள். குப்பிழான் சண்முகம் திரை மொழி, ஒளிப்பதிவு பற்றிய பிரக்ஞை உள்ளவர்; குப்பிழான் சண்முகத்தின் அனேகமான கதைகளில் அவர் காட்சிகளைத் தேர்ந்த ஒளிப்பதிவாளன் நகர்த்துவதுபோல நகர்த்தியிருப்பதை அவதானிக்க இயலும்.

சமநிலையற்ற திட்டங்கள் சடுதியாக அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக் கட்டைகள் குழைந்து வீழ்வது போல வீழ்ந்துவிடும். வலிமையற்ற அத்திவாரங்கள். இக்கதையில் கதை சொல்லியின் கோணத்தில் அவற்றின் அபத்தம் நன்றாக வெளிபட்டிருக்கும். அப்பெண்ணின் பார்வையில் இக்கதை ஆறுதலை நோக்கிச்செல்லும் தருணத்தை மௌனமாகச் சொல்லும்.

வாழ்க்கையின் சலிப்பை, சோர்வை, நெஞ்சை அழுத்திப் பிழிந்து பிசையும் துக்கத்தை இவ்வாறான எதிர்பாராதவர்கள் மனதுக்கு நெருக்கமாகி ஒரு சிறிய கணப்பொழுது களைந்து விடுகிறார்கள். அச்சூழலை ரம்மியமாக வர்ணித்து மிகைப்படாத அகவயமான உணர்வுகளுடன் ‘குப்பிழான் சண்முகன்’ தேர்ந்த சிறுகதையாக எழுதியுள்ளார். நிச்சயம் வாசிக்க வேண்டிய ஈழத்து சிறுகதைகளில் ஒன்று.

பின் குறிப்பு

குப்பிழான் சண்முகன்’ பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கலாம்.

‘ஒரு றெயில் பயணம்’ சிறுகதை ‘கோடுகளும் கோலங்களும்’ தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *