பஷீரின் மதில்கள்

மலையாள எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவரான வைக்கம் முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் நீண்ட காலம் தேடியது. மிகச் சமீபத்தில்தான் வாசிக்கக் கிடைத்தது. பொதுவாகவே மிகக்சிறிய பக்க எண்ணிக்கையைக் கொண்ட கதைகளை எழுதுவது பஷீரின் வழமை. மதில்கள் நாவல் வெறும் 39 பக்கங்களில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

காலச்சுவட்டில் பஷீரின் படைப்புகள் அனைத்தும் குளச்சல் மு. யூசுப்பின் மொழிபெயர்ப்பில் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஆனால், மதில்கள் நாவலை சுகுமாரன் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ஏற்கனவே மதில்கள் நாவலை தமிழில் சுராவும்(சுந்தர ராமசாமி அல்ல) நீல.பத்மநாபனும் மொழிபெயர்திருக்கிறார்கள். சுகுமாரனின் மொழிபெயர்ப்பு மதில்களின் மூன்றாவது மொழிபெயர்ப்பு தமிழுக்கு.

basheer-drawing-by-josh-1s

வைக்கம் முகமது பஷீர்

சிறைச்சாலையில் அரசியல் கைதியாக நுழைகிறார் நாவலின் கதைசொல்லி. இக்கதை சொல்லி பஷீராகவே இருக்கின்றார். தனது சொந்த வாழ்விலும் சிறைச்சாலைக்கு அரசியல் கைதியாகச் சென்றுள்ளார் பஷீர். இக்கதை எழுதப்பட்டது 1965 ஆக இருக்கின்ற போதும், பஷீர் சிறை சென்றது 1946-களில் ஆகும். எனினும் நாவலில் கதை நிகழும் காலங்கள் அதனை ஒட்டியவை.

எக்கச்சக்கமான இடங்களில் சுற்றித் தங்கிவாழ்ந்து, பல இடங்களில் சந்நியாசியாக அலைந்து அனைத்தையும் உதறி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும்போது அரசாங்கத்துக்கு எதிராக ராஜ துரோக குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்படுகின்றார். அரசாங்கத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது, கலகம் செய்தது என்பவைதான் குற்றச்சாட்டுகள். அதனை பஷீரின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சுதந்திரப்போராட்ட கலகமாகப் பார்க்கத்தோன்றும். உண்மையும் அதுவாகத்தான் இருக்கின்றது. நாவலின் கதை சொல்லியின் பெயரும் பஷீர்தான்.

சிறைச்சாலை, பஷீரின் பார்வையில் பகிடியாக நோக்கப்படுகிறது. சிறைக்காவலர்களும் பொலிசாரும்கூட கனிவானவர்களாக இருகின்றார்கள். அனைத்தையும் மிக இலகுவில் சாதாரணமாகக் கடந்துவிடும் பாத்திரமாக பஷீர் இருக்கின்றார். சிறையில் நண்பர்கள் வாய்கிறார்கள். சிலர் ஏற்கனவே தெரிந்த பழைய நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தோட்டம் செய்வது, ரோஜாச் செடிகளை வளர்பதுமாக அவரது பொழுதுகள் கழிகின்றன. சிறையில் இயற்கையை நன்கு ரசிக்கிறார். இரவுப்பொழுதுகள் மிக அழகாக அவருக்குத் தோன்றுகின்றன. இலகுவில் மற்றவர்களோடு நண்பராகிவிடும் பஷீருக்கு சிறைச்சாலையில் கைதிக்கு கிடைக்கக்கூடாத சில்லறைப் பொருட்கள் எல்லாம் கிடைகின்றன. பீடியும் நெருப்பெட்டிகளும் சர்வசாதாரணமாகக் கிடைப்பதோடு, தேநீர் போடுவதற்கான பொருட்களும் அவரிடம் இருக்கின்றன.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாலை தூக்குக்குச் செல்லும் முந்தைய இரவில் தேநீர் குடிக்கவேண்டும்போல் தோன்றும். காவலாலிகள் தகவல் சொல்ல பஷீர் தேநீர் கலந்துகொடுப்பார். சாவை இரண்டு வகையில் வரவேற்கலாம், அழுதுகொண்டு சிரித்துக்கொண்டு.. எனவே சிரித்துக்கொண்டு செல்லச் சொல்வார். ஆனால், அதிகாலையில் தூக்கு நிகழ்ந்து முடியும் வரை சஞ்சலத்தோடு உறங்காமல் அன்றைய இரவுப்பொழுதைக் கழிப்பார். அந்த சாவில் தானும் பங்காளி என்ற குற்றவுணர்வு அவரைத் தாக்கிக்கொண்டுடிருக்கும்.

சிறைச்சாலை அமைதியில் இருந்தாலும் பெண்ணின் நினைவுகள் அவரை இன்புறவைக்கின்றன. சிறைக்கு வரும்போதே அருகில் இருந்த பெண்களுக்காக சிறைக்கூடத்தில் இருந்த பெண்ணின் வாசத்தை நுகர்ந்துவிடுகின்றார். பெண்ணின் படைப்பு உலகத்தின் மிகச்சிறந்த படைப்பாக அவருக்குத்தோன்றுகின்றது. அவ்வாசம் அவரைப் பாடய்ப்படுத்துகின்றது.

image116-250x250

மிகப்பெரிய மதில் ஆண் பெண் சிறைக்கூடத்தை பிரித்துவைத்திருக்கின்றது. அங்கேயிருக்கும் பெண்களை காண முடியாதா என்ற ஏக்கமும் பஷீருக்குப் படர்கிறது. ஒருநாள் தீடீர் என்று சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைகின்றது பஷீரைத்தவிர. பஷீருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அங்கேயே தங்கியிருக்கின்றார்.

தனிமையில் பொழுதுகள் கரைகின்றன. அடிக்கடி பெண்களின் சிறைக்கூடம் இருக்கும் மதில் கரைக்குச்சென்று வருவார். அப்படி ஒருமுறை செல்லும்போது ஒரு பெண்ணின் குரல் கேட்கின்றது. இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள். இருவரின் பேச்சும் தங்களின் தனிமையைக் களைந்து புதிதாக மீட்டுருவாக்கம் செய்ய உதவுகின்றது. பெண்ணின் மீது பஷீருக்கு காதல் சுரக்கின்றது. அப்பெண்ணுக்கும் அவ்வாறே. அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள். அவள் ரோஜாச்செடி கேட்கின்றாள். இவர் மதிலுக்கு மேலால் விசிறி எறிந்து அனுப்புகின்றார், அனுப்பும்போது செடியின் அனைத்துப்பாகத்தையும் முத்தமிட்டு அனுப்புகின்றார். இவ்வாறு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புகிறார்கள் மாறிமாறி.

இருவருக்கும் ஒருவரையொருவர் சந்திக்கவேண்டும் என்ற ஆசை பரந்துவிரிகின்றது. ஒரு நாள் ஆஸ்பத்திரிக்கு வருவதாக அவள் சொல்கிறாள், அங்கு பஷீரும் செல்வதாக முடிவாகின்றது. தன் அடையாளங்கள் அனைத்தையும் சொல்லி கையில் ரோஜாப்பூ கொண்டுவருவதாகச் சொல்வார் பஷீர். சந்திக்கவிருக்கும் நாட்களை எண்ணி உற்சாமாக காதல் மயக்கத்தில் காத்திருப்பார். ஆனால், அன்றைய நாள் விடுதலை செய்யப்படுவார். எதிர்பார்ப்புக்கள் சடுதியாக தரைமட்டமாகியதை உணர்வார். உடல் நடுங்கிபோகும் “ஒய் ஷூட் ஐ பி ஃப்ரீ?… ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?” என்று காவலாளியைக் கேட்பார்.

பெண்ணின் வாசனை சிறைச்சாலையை பஷீருக்கு நறுமணப்பூங்காவாக உருவாக்கிவிடுகின்றது. வெளியே செல்லத் தடைவிதித்துக் கொண்டிருக்கின்றது. அதைத்தாண்டி மீள முடியாமல் பஷீர் இருக்கின்றார். எதிர்பால் இனத்தின் மீதான ஈர்ப்பு ஏற்படும் சூழ்நிலையையும் நுண்மையாகச் சித்தரிப்பதோடு, யார் என்றே தெரியாத முன்பின் அறியாத பெண்ணின் மீது ஏற்படும் வேட்கையும் நுண்மையாகச் சித்தரிக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு உண்மையில் எதிர்பால் இனத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பு சார்ந்த வேட்கையாக இருக்கின்றபோதும், அதையும் தாண்டி சிலகூறுகள் அவர்களின் உறவை புனிதப்படுத்துகின்றன.

இறுதியில் விடுதலை கிடைத்தபோது சிறைக்காவலாளி சொல்வார் “சுதந்திரமான உலகத்துக்கு நீங்கள் போகலாம்” என்று. அதைக் கேட்டவுடன் பஷீர் இவ்வாறு சொல்வார் “சுதந்திரமாவன்.. சுதந்திர உலகம் .. எது சுதந்திர உலகம்.. பெரும் சிறைக்கல்லவா போகவேண்டும்.. யாருக்குவேண்டும் இந்தச் சுதந்திரம்” இதுதான் மொத்த நாவலின் மையச்சரடு. குறுகிய இக்கட்டிலிருந்து வெளியேற மீட்புத்தரும் ஊடகம் கொஞ்சகாலத்தில் அதிலே தொடர்ந்தும் இருக்க விரும்ப வைக்கின்றது.

நாவலின் கதை சொல்லல் போக்கு வழமைபோல பஷீரின் மிக எளிமையான நடையில் நேரடி சித்தரிப்பாக இருகின்றது. நாட்குறிப்புக்களைக் கடப்பதுபோல் வேகவேகமாக சம்பவங்கள் நகருகின்றன. மிகச் சில இடங்களில் வர்ணனைகள் வருகின்றன. அவை மிகக் கூர்மையாய சிலாகிப்பாக இருக்கின்றன. மிகக்குறுகிய பக்கத்தில் வெளியாகிய இவ்குறுநாவல் தந்திவிட்டுபோகும் வாசிப்பனுபவம் அலாதியான ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *