சேரநாட்டு விஜயம் -2

2

ராமின் அலுவகத்திலே மெய்மறந்து அதிகநேரம் செலவிட நேரிட்டதால், வசந்தகுமாரைச் சந்திக்கச்செல்ல இயலவில்லை. “டேய்.. 30 நிமிடம் கழிந்ததும் கண்ணைக் காட்டியிருக்கலாம்தானே..” என்று சயந்தன் சோமிதரனைக் கடிந்துகொண்டார். கடுப்பான சோமிதரன் “இப்ப காலைக்காட்டுவன். பேசாமல் இரு..” என்று கடிந்துகொண்டார். இரவு ஏழு மணிவாக்கில் இளவேனிலையும் நண்பர்களையும் சந்திப்பதாக இருந்தது. இப்பொழுதே ஒன்பது மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. இளவேனில் இரண்டொரு தடவை தொலைபேசியில் “பாஸ் எங்க இருக்கிறீங்க..?” என்று கேட்டார். “இதோ.. வீட்டுக்குப்போயிட்டு ஒரு டாக்சியைப் பிடிச்சு வர்றோம்” என்று சோமிதரன் சொன்னார். “எதுக்கு.. அப்படியே வாங்களேன்..” என்று இளவேனில் கேட்க.. “திரும்பும்போது நான் ஓடமுடியாதில்ல..” என்று சோமி முற்றிட்டார்.

இதற்கிடையில் என்னுடைய ஒரு கடினச்சாவு (Die hard) ரசிகர் ஒருவர் இளவேனிலோடு காத்திருப்பதாக சயந்தன் சொன்னார். அவருடைய பெயர் வெற்றி. தமிழக சிற்றிதழ் ஒன்றில் துணை ஆசிரியராக இருந்தவர். நான் இலங்கையில் இருந்தபோதே என்னுடைய இரண்டொரு கதைகளைப் படித்து பாராட்டியதாகவும், இரண்டொரு கதைகளைப் படித்து மொக்கை என்று சொன்னதாகவும் சயந்தன் செய்தி அனுப்பியிருந்தார். அவரைக் கண்டு பேச நானும் ஆவலாயிருந்தேன்.

சோமிதரன், வீட்டுக்குள் நுழையும் வழியிலேயே “டாக்சி” ஒன்றை மொபைல்போன் செயலியூடக வாடகைக்குப் பிடித்து அமர்த்திக்கொண்டார். இப்போது இதேவசதி இலங்கையிலும் உள்ளது. Pick me எனும் செயலியை உங்கள் செமார்ட்போனில் தரவிறக்கி கடவுச்சொல் ஒன்றைக்கொடுத்து பதிந்துவிட்டால் சரி. தொடுதிரையில் அருகிலுள்ள டாக்சியைக் காட்டும், கிளிக் செய்து உங்களின் அருகில் இருக்கும் டாக்சியை வாடைக்கு அமர்த்திக்கொள்ளலாம். கட்டுப்படியான நேர்மையான விலையாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்கலாம். நாம் சோமிதரனின் வீட்டுக்குள் செல்ல டாக்சியும் வந்துவிட்டது. அவசரமாக, அன்றைய சந்திப்பிற்கான ‘பூஜை’ப் பொருட்களுடன் மீண்டும் பயணமானோம்.

அந்தப்பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. போக்குவரவு நெரிசல்களில் எங்களது பொறுமை உருகி வழிந்துகொண்டிருந்தது. அசதியில் மூவரும் கண்ணயர்ந்து கொண்டோம். மெல்லமெல்ல வண்டிமுன்னேறிக் கொண்டிருந்தது. அடிக்கடி இளவேனில் தொடர்புகொண்டு “எங்கே இருக்கிறீங்க?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். சோமிதரனும் சளைக்காமல் “ரன்னிங் கொமன்றி” கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும் தயாராகி இருப்பார்கள் நாம் தான் போகப் பிந்திவிட்டது என்று நினைக்க அவர்கள் இப்போதுதான் “வெள்ளரிக்காய்!!!!” வேண்டிக்கொண்டு செல்வதாகத் தகவல் கிடைத்தது. அதந்தச் செய்தியினால் அவர்களும் நம்மளைப்போல் பிந்தித்தான் இருக்கிறார்கள் என்று உய்த்தறிந்துகொண்டு ஆசுவாசமாக மேடம்பாகத்திலுள்ள லிவினின் வீட்டுக்குச் சென்றோம்.

லிவின், செந்தூரன் ,வெற்றி, இளவேனில் என நண்பர்கள் எல்லோரும் உற்சகமாக கூடியிருந்தார்கள். லிவினின் மனைவி ஊருக்குப் போயிருந்தார். அதனாலேயோ என்னவோ லிவின் முகத்தில் “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…” பிரகாசம்.

இந்த நண்பர்கள் இணைந்தே ‘எனில்’ (மேலும் ஓர் இலக்கிய இதழ்) www.eanil.com என்ற இணைய இதழை நடாத்திக்கொண்டிருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அதன் ஆசிரியர் குழு. சயந்தன் அந்த ஆசிரியர் குழுவில் ஒருவராயும், அதன் தொழில்நுட்ப விடயங்களைக் கவனித்துக்கொள்பவராயும் இருந்தார். சில மாதங்களான இவ் இதழ் இயங்கவில்லை. அது தொடர்பாகத்தான் இன்றைக்குப் பேச வேண்டும் என்று சயந்தன் எனக்குச் சொல்லியிருந்தார்.

லிவினும், செந்துாரனும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்த இரண்டு பேரும் ஆதிரையை அச்சுக்கு முதலே படித்தவர்கள் என்றும், லிவின் ஆதிரையை ‘மரண மொக்கையான’ நாவல் என்று அப்பொழுதே சொல்லிவிட்டதாயும், செந்துாரன் இன்னமும் வாயே திறக்கவில்லை என்றும் சயந்தன் டாக்சியில் வைத்துச் சொல்லியிருந்தார்.

நாம் பொருட்களை எடுத்துவைத்து ஜெகஜோதியான பூஜைக்குத் தயாராகினோம். நீண்ட கோழி இறைச்சிப் பொரியல், பிரைட் ரயிஸ் என்று கலாதியாகவே நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் வட்டமாகக்கூடி உணவருந்தத் தொடங்கினோம். மெல்ல மெல்ல உடல் அசதி கலையத் தொடங்கியது. அருகிலுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே விசித்திரமாக இருக்கும் பரவச நிலையில், ஆளாளுக்கு என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

image1

எனில் நண்பர்களுடன்

நான் என்னுடைய சிறுகதைத்தொகுப்பிற்கு ‘அசங்கா’ என்றே பெயர் வைத்திருக்கலாமென்றும், அந்தத் தொகுப்பில் ‘அசங்கா’ கதை மட்டுமே வந்திருக்கலாமென்றும் அபிப்பிராயப்படுவதாக சயந்தன் சொன்னார். ‘ஆமாம்.. பல கதைகள் வீரகேசரி வீக்லியில் வருவதைப்போலத்தான் வெயிட் இல்லாமல் இருக்கின்றன’ என்று யாரோ சொன்னார்கள். வெற்றி ‘அப்படி ஒரேயடியாகச் சொல்லமுடியாது’ என்றுகொண்டிருந்தார். எல்லாக் குரலும் எனக்குக் கனவிலேயே ஒலித்தன.

உரையாடல் ஒரு புள்ளியில் ஒருங்குவிந்து இரண்டடி எடுத்து வைப்பதுவும், பிறகு பொலபொலவென்று கலைந்து விழுந்து சிதைவதுமாகவிருந்தது. எனக்கருகில் இருந்த லிவின் பஞ்சமர் நாவலையும், டானியலின் நாவல்களைப் பற்றியும் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். என் பங்குக்கு “பஞ்சமர் நல்லம்தான் ஆனால் அழகியல் இல்லையப்பா.. அழகியல் இல்லையே” என்று நான் சப்புக்கொட்ட, அருகில் இருந்த சயந்தன் அதியுன்னத மயக்க நிலையிலும் “இந்தப்பயல் இப்படிதான் ஊருக்குள்ள எந்த நாவலை எடுத்தாலும் அழகியல்..அழகியல் என்று சாவடிக்கிறான்.. பப்ளிக்கில கடுப்பைக்காட்ட முடியேல்ல.. அது என்ன கோதாரி என்று அவரிட்ட கேளுங்கய்யா..” என்று அவர் பங்குக்குச் சொல்லிவைத்தார். இளவேனில் இலக்கியம் பற்றிய பேச்சு தொடங்கியதால் மிக உற்சாகம் அடைந்தார். “சரி இப்ப அழகியல் என்றால் என்ன? நண்பரே நீங்கள் தயவு கூர்ந்து விளக்கம் கொடுக்கவேணும்.” என்றார்.

‘ரைட்டு..’ எனக்கு உடனேயே புரிந்துவிட்டது… ஆமாம். இது ஒரிஜினல் உற்சாக பானம்தான். சண்முகலிங்கத்தின் அலுவலகத்தில் தனியாக நுழைந்த மாணவி போல் பதற்றப்பட ஆரம்பித்தேன். அதற்கிடையில் யாரோ.. ஒரு தட்டையான பருப்பு வடையை என் மூஞ்சியில் நீட்டி இது ஏன் தட்டையாக இருக்கிறது என்று கேட்டார்கள். வைச்சுச் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

தனக்கும் இலக்கியத்துக்கும் சம்மதம் இல்லைங்க என்ற கணக்கில் சோமிதரன் ஒரு மூலையில் அமைதியாக வெள்ளரிக்காயைக் கடித்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் வட்டவடிவமாக என்னைச்சுற்றி கோலாகலமாகக் கூடிவிட்டார்கள். நான் எதையோ சொல்வதும், இறைச்சித் தொடைகளை தேடியெடுத்து உண்பதுமாக நேரத்தைப் போக்காட்டிக் கொண்டிருந்தேன். அன்றைய இரவு இப்படியே கழிந்துகொண்டிருந்தது.

இரவு பன்னிரெண்டு மணிபோல காற்றுப்பட கொஞ்சம் மேலேயிருப்போம் என்று மொட்ட மாடிக்கு அழைத்துச்சென்றார்கள். அப்புறம் நாலுபேர் என்னையை ஒரு மூத்திரச்சந்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க.. என்ற என்ற வடிவேலுவின் புகழ் பெற்ற வசனத்தை நினைத்துக்கொண்டேன். மொட்டைமாடியில் நல்ல காற்று. நான் நட்சத்திரங்களுக்குள் இடையிலுள்ள இடைவெளிகளை எண்ணிக் கொண்டிருந்தேன். சில சமயம் அவற்றுக்கிடையில் போய் வந்தேன்.

இரவு ஒரு மணிபோல, சயந்தனுடையதும் சோமிதரனுடையதும் இன்னொரு நண்பர் சசீவன் வந்து சேர்ந்தார். இந்த மூன்று பேரும் ஒன்றாகச் சந்தித்து 14 வருடங்களாம்.

நான் மொட்டைமாடியில் சுவருடன் சாய்ந்து அமர்ந்திருந்து செந்தூரனோடு உரையாடிக் கொண்டிருந்தேன். செந்தூரன் நாகர்கோவிலில் வேலை பார்ப்பதால் ஒருமுறை ஜெயமோகனை புகையிரத்தில் சந்தித்த அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இம்முறையும் சோமிதரனே போதும் கிளம்பலாம் என்றார். நண்பர் லிவின் ஜெயமோகன் எழுதிய காடு நாவலை கையொப்பம் இட்டு நினைவுப் பரிசாகத் தந்தார். மறுபடியும் டாக்சி பிடித்து, சோமிதரன் வீட்டுக்கு வந்தோம். படுக்கும்போது, “நாளைக்கு காலையில், ஏழு மணிக்கு எயர்போட்டிற்குச் செல்லவேண்டும். அதற்குப் பிறகு எந்தப் பிளானும் எங்கட கையில இல்லை. அதனால உங்களுக்கு யாருடனாவது பேச வேண்டியிருந்தாலோ சந்திக்க வேண்டியிருந்தாலோ அதுக்கு முதலே முடிச்சிடுங்க” என்றுவிட்டு சயந்தன் டொம் என்று விழுந்துபடுத்துக்கொண்டார். நேரத்தைப்பார்த்தேன். நள்ளிரவு இரண்டரை மணி.

***

ஆறுமணிக்கெல்லாம் எழுந்தோம். எனக்கு கண்கள் மங்கலாகவே இருந்தது. நேற்றைய இரவின் சமாச்சாரம் இன்னும் தெளியவில்லையோ என்று யோசித்துக்கொண்டே, சென்னை மீனாம்பாக்கம் விமானநிலையத்திற்கு நானும் சயந்தனும் ஒரு டாக்சியைப் பிடித்து விரைந்தோம். நாம் சென்று இறங்கிய இடத்தில் முதுகில் சின்னப் பையுடன் குதூகலத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் தமிழினி பதிப்பகத்தின் நிறுவனர் வசந்தகுமார் என்று சயந்தன் சொன்னார். சிநேகபூர்வமாக கையைக் குலுக்கினார். வசந்தகுமாரை வெறும் பதிப்பாளராகத்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், அவருக்கும் நம் ஈழப்போருடன் ஒரு நீண்ட கதை இருகின்றது. எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகள் சென்னையில் இயங்கியபோது, அவர்களது வெளியீட்டுப்பிரிவுக்காக இயங்கியவர். அக்காலத்தைய விடுதலைப் புலிகள் இதழின் வடிவமைப்பாளராகவிருந்தவர். பின்னாளில் இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிகழ்ந்திய அழிவை மொத்தமாக ஆவணப்படுத்திய சாத்தானின் படைகள் என்ற தொகுப்பை வெளியிட்டதற்காக (அத்தனை பிரதிகளும் இந்திய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டன) இந்திய அரசின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுத் தேடப்பட்டவர். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். அக்காலத்தில் நிகழ்ந்த இன்னொரு கொலை வழக்கிலும் இணைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்.

மதுரைக்கு விமானம் புறப்படுவதற்கு சிலமணி நேரங்கள் முன்னரே நாம் விமானநிலையத்திற்கு வந்துவிட்டோம். நேரத்தைப் போக்காட்ட நெஸ்ட்கபே வேண்டிக்கொண்டு, அலுமினிய இருக்கையில் இருந்து உறுஞ்சிக்கொண்டு வசந்தகுமாருடன் அளவளாகத் தொடங்கினேன். யாழ்ப்பாணத்தில் விற்கும் வெங்காயம், தக்காளி விலையில் இருந்து, அனைத்து அன்றாடப் பொருட்களின் விலைகளையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். நாமும் ஞாபக அடுக்களில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தோம். தனி நபர் வருமானம், வீட்டு விலைகள், வாடகைகள், சாப்பாட்டுக்கடை நிலவரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி முதலான நாம் சொன்ன தரவுகளை வைத்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் இதுதான் என்று ஒரு குட்டி வரையறையை முன்வைத்தார்.

மதுரைக்குச் செல்ல “ஜெட் எயார்வேய்ஸ்” விமானம் தயாராகியது. ஒரு குட்டி பேருந்தில் அழைத்துச்சென்று விமானத்தில் ஏற்றினார்கள். இறக்கைகளில் விசிறிகள் பூட்டப்பட்ட இலகுரக பயணிகள் விமானம் அது. எனக்கு சண்டைக்காலங்களில் பலாலியில் இருந்து ரத்தமலானைக்குப் பயணித்த பயணிகள் விமானத்தின் நினைவு வந்தது. இதே வகையான விமானங்கள் அப்போது பலாலியில் இருந்து ஓடிக்கொண்டிருந்தன. “எக்ஸ்போ எயார்”, “லங்கா எயார்”, “செரண்டிப் எஸ்க்பிரஸ்” என்று மூன்று விமான சேவைகள் இயங்கிக்கொண்டிருந்ததாக நினைவு. அதே நேரத்தில் ராணுவம் ஒரு விமானசேவையை வழங்கியது. அதில் பயணம் செய்வது தட்டிவானிலோ அல்லது லான்ட்மாஸ்டரிலோ பயணிப்பதுபோல் இருக்கும்.

விமானத்தின் அளவைப்பார்த்துவிட்டு “இந்த விமானம் ரொம்பக் குலுங்குமே.. மரண பயத்தைக் காட்டுவாங்களோ பரமு… ” என்று சயந்தன் சொன்னார். நான் முழுசிக்கொண்டே ஏறி உட்கார்ந்தேன். விமானம் புறப்பட்டது. நானும் சயந்தனும் பக்கத்துப்பக்கத்து இருக்கை. வசந்தகுமார் இன்னுமொரு பக்க இருக்கையில் இருந்தார். ஆறாவடு எழுதிய அனுபவங்களில் இருந்து, ஆதிரை எழுதியதுவரையான அனுபவங்களையும், நாவலை வளரத்த விதத்தையும் சயந்தன் சொல்லிக் கொண்டிருந்தார். வசந்தகுமார் விமானத்தின் யன்னல் கண்ணாடியூடாக சிறுவயது குதூகலத்துடன் வெளியேதெரியும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். விமானத்தின் முதல் வரிசை இருக்கையில் நாம் அமர்ந்திருந்தோம். நமக்கு நேர் முன்னால் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல அந்த ஒரேயொரு விமானப்பணிப்பெண் உட்கார்ந்திருந்தார். சயந்தன் அவரிடம் இரண்டுமுறை தண்ணீர் வாங்கிக் குடித்தார். விமானம் மதுரையைத் தொட்டது.

மதுரைவிமான நிலையம் மிக அமைதியாக தன்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தது. மதுரை வெயில் செழிப்பான தோள்களை எரித்தது. கண்ணகி எரித்த நகரமாச்சே.

sayyyy

நானும் சயந்தனும் மதுரை விமான நிலையத்தில்.

அ.முத்துக்கிருஷ்ணன் விமான நிலையத்திற்கு டாக்சி அனுப்பி வைத்திருந்தார். நேராக அவர் வீட்டுக்குப் போனோம். வழியில் மதுரையில் மிகப்பிரபலமான தேநீர்க்கடை என்று ஒரு கடையில் நிறுத்தி சொந்தப்பண்ணையிலிருந்து வந்த பாலில் ஒரு தேநீர் அருந்திக்கொண்டோம். அருகிலுள்ள கடையில் நமக்கு இரண்டு தொப்பியும் வேண்டிக்கொண்டு பயணமானோம்.

முத்துகிருஷ்ணனின் வீடு வெண்ணிறத்தில் பளபளத்தது. எங்களைக் கண்டதும் முத்துகிருஷ்ணன் மிகுந்த உணர்ச்சிப்பெருக்கில் அழைத்துச்சென்றார். அ.முத்துக்கிருஷ்ணனைத் தெரியாத இலக்கிய, செயற்பாட்டு நண்பர்கள் இருக்கமுடியாது. சிலமாதங்கள் முன் இலங்கைக்குக்கூட வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் அவருடன் அப்போது அளவளாவுவதற்கு சந்தர்பம் கிடைத்திருந்தது.

அவரின் வீட்டு நூலகத்தை வியந்து பார்த்தோம். ஐந்து மீட்டார் நீளமான மிகப்பெரிய செல்பில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அன்றைய மாலைப்பொழுதில் ஆதிரை நூலரங்கு நடைபெறவிருந்ததால், ஓய்வெடுக்கும் விதாமாக எங்களுக்காக ஒழுங்குசெய்து வைத்திருந்த விடுதிக்குச் சென்று ஓய்வெடுக்கச் சொன்னார் முத்துகிருஷ்ணன். நீண்ட பயணத்தின் முடிவில் உடல் துன்பமாகக் களைத்திருந்தது. சற்று உறங்குவதாகத் தீர்மானித்தோம்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *