சிங்கிஸ் ஜத்மாத்தவ்வின் ஜமீலா – குறுநாவல்

myஜமீலா என்ற சோவியத் குறுநாவலை சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் வாசித்தேன். வாசித்து முடித்தபின் பல்வேறு கேள்விகளை மனதின் அடியாழத்தில் கொந்தளிக்க வைத்தவாரிருக்கின்றது. ஒழுக்க மீறல்கள் எகச்கமாக எமது பண்பாட்டில் நிகழும்போதும், அதனைக் கேள்வியுறும்போதும் ஏற்படும் மெல்லிய அதிர்ச்சிகள் அதிகம் எம்மை யோசிக்கவைப்பதில்லை. நாம் வகுத்துக்கொண்ட அறம், கூட்டுச்சமூகத்தில் சிலரால் மீறப்படும்போது அதற்கான காரணக் காரணியங்களைத் தகுந்த உளவியலோடு அணுகமுடிவதில்லை. வெறுப்பை அவர்கள் மேல் உமிழ்திவிட்டு நகர்ந்துவிடுகின்றது மனம். சமூகத்தில் அறம் தவறியவர்களாகக் கருதுபவர்களின் அவர்பக்க நியாயங்களை அவர்பக்கத்தில் இருந்து கண்டுகொள்ள முடிவதில்லை. இலக்கியங்கள் அதற்கான வழிகளைத் திறந்துவிடுகின்றன. மேலும்மேலும் அதைப்பற்றி அறிவார்ந்ததளத்தில் அறத்தின் கட்டமைப்பையும் சமூகத்தின் பொறுப்பையும் சிந்திக்கவும் உரையாடவும் பல்வேறு சாத்தியங்களைத் திறக்கின்றது.

“கள்ளக்காதல்” என்ற சொற்பதத்தை நாம் தினமும் கேட்கின்றோம். பேச்சுவழக்கில் அதிகம் உபயோகிக்கின்றோம். கணவன் உள்ளபோது இன்னுமோர் ஆடவனுடன் தொடர்பு இருக்கும்போதும், மனைவி உள்ளபோது இன்னுமோர் மங்கையுடன் தொடர்பில் இருப்பதையும் அவ்வாறான சட்டத்தில் பொருத்தி மலிவாகக் கடந்துகொள்கிறோம். ஆனால், இதன் உள்ளரசியலை புரிந்துகொள்ள முற்படும்போது அவற்றை மலிவாகக் கடந்துகொள்ள முடியாது. எந்தக் கணத்தில் அவ்வாறான உறவு முழுமையா உருவாகின்றது என்பதற்குப்பின்னே நீண்ட/செறிவான வாழ்க்கை புதையுண்டு இருக்கின்றது. அப்படியானவொரு செறிவான உணர்வு ரீதியான கருவைக்கொண்ட கதைதான் ஜமீலாவின் கதை.

ஜமீலா கடுமையான உழைப்பாளியாகவும் துடிப்புடன் கூடிய பெண்ணாகவும் இருகிக்ன்றாள். மற்றைய பெண்களைப்போல் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை மட்டும் செலுத்திவிட்டு வெளியே நகைக்காமல், உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும்பெண். துணிவும், மனதில் பட்டதை ஒளிக்காமல் பேசும் சுபாவமும் கொண்டவள். வாழ்கையை கலகலப்பாக வைத்திருப்பவள். நாவலின் கதை சொல்லி இவற்றைச் சொல்லிக்கொண்டு செல்கிறான். கதை சொல்லி இவளின் கொழுந்தன். “கிச்சினே பாலா” என்று ஜமீலாவினால் விளிக்கப்படும் அவன், தன்னுடைய பார்வையில் ஜமீலாவை அருகிலிருந்து பார்த்துக்கொண்டு கதையைச் சொல்லிக்கொண்டு செல்கின்றான். கிச்சினே பாலாவுக்கு அப்போது வயது பதினைந்து. அவனுக்கும் ஜமீலாவுக்கு இடையிலான உறவு முழுவதும் அன்பால் நிறைந்தது. ஏறக்குறைய அவளுக்கும் அவனுக்கும் ஒத்த வயது. இருவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். அவளின் அழகைப்பற்றி அகம் கிளர்ந்து வெளிப்படையாகச் சொல்கிறான். அவற்றில் காமம் இல்லாமல் அன்பும் மரியாதையும் கலந்திருக்கின்றது. அந்த உறவை வாசிக்கும் ஓவ்வொருவரும் விநோதமாக உணரலாம்.

போருக்குச் செல்லும் வீரர்களுக்குத் தானியங்கள் அனுப்பிவைக்க வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன. கூட்டுப்பண்ணையில் விளைந்த தானியங்களைக் குதிரை வண்டியில் சுமந்துசென்று புகையிரதத்தில் ஒப்பிக்கவேண்டும். ஜமீலாவும் கிச்சினே பாலாவும் தினமும் குதிரை வண்டியில் ஒன்றாகச்சேர்ந்து செல்கிறார்கள். அவர்களின் உறவு இனிமையான கவிதையாக வளர்கின்றது. அவளது அழகிலும் துடிப்பிலும் கிராமத்து ஆண்கள் எல்லோரும் மயங்கிக்கிறங்கி இருக்கிறார்கள். பண்ணையில் உடன் பணிபுரியும் இளம் வாலிபர்களின் காதல்,காமத் தொல்லைகளை அடியோடு மறுக்கின்றாள். அவர்கள்மேல் சீறி விழுகின்றாள் உண்மையில் அவள் ஆண்களை அலட்சியப்படுத்துகின்றாள்.

தானியார் என்றொருவன் அறிமுகமாகின்றான். நாடோடியான அவன் இறுதியில் தாய்நாட்டுக்கு வருகின்றான். அதிகம் அமைதியாகத் தன்பாட்டில் இயங்கும் ஒருவனாக இருக்கின்றான். மற்றவர்களோடு அதிகம் உரையாடுவதும் இல்லை. பெரும்பாலும் குதிரைகளை மேச்சலுக்கு இட்டுவிட்டு மலைக் குன்றின்மேல் நின்று இயற்கையை ரசிக்கின்றான்.

இராணுவத்தில் இருந்துவிட்டுப் போர்க்களத்தில் இருந்து சமீபத்தில் திரும்பியிருந்தான். அனாதையான அவன்மீதான இரக்கத்தில் கூட்டுப்பண்ணையில் வேலை கொடுக்கின்றார்கள். கூட்டுப்பண்ணையில் அவனும் ஜமீலாவும் இணைந்து தானியங்களைப் புகையிரதத்துக்கு ஒப்பிக்கச் செல்கின்றார்கள். அவர்களோடு செல்லும் கதை சொல்லியும் அவர்களின் உறவைப்பற்றிச் சொல்லிக்கொண்டு செல்கின்றான்.

ஜமீலா தானியாரை ஆரம்பத்தில் பொருட்படுத்துவது இல்லை. அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் இருக்கின்றாள். அவை கதை சொல்லியை ஆசுவாசப்படுத்துகின்றது. ஆனால், தானியார் ஜமீலாவை வெறித்துப்பார்கிறான். அவள் அழகில் சொக்கிப்போய் நிற்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. அவன் மீது கதை சொல்லி மெலிதாக வெறுப்படைகின்றான். குறும்புக்காரியான ஜமீலா எப்போதும் சாந்தமாக இருக்கும் தானியாரை வம்புக்கிழுத்துச் சேட்டை செய்கின்றாள். கிச்சினே பாலாவும் அவளுடன் இணைந்து சேட்டை செய்கிறான்.

ஒரு கட்டத்தில் அவளின் குறும்பு எல்லைமீறிப்போகக் கடுமையாகத் தானியார் பாதிப்படைகின்றான். அப்போது ஜமீலாவில் புதுவித மாற்றம் எழுகின்றது. கதை சொல்லி அவற்றை ஆச்சர்யமாக அவதானிக்கின்றான். குதிரை வண்டிப்பயணம் நீண்டது. புகையிரத்தில் தானியங்களை ஒப்படைத்துவிட்டு ஸ்தெப்பிப் புள்வெளியால் வருவார்கள். அன்றைய இரவில் அவனுடன் பேச்சுக்கொடுக்க அவனைப்பாடச் சொல்லிக் கேட்கிறாள் ஜமீலா. தானியார் தன் கம்பீரமான குரலில் பாடுகின்றான். அவனின் இசையாளுமையைக் கண்டு ஜமீலாவும் கிச்சினே பாலாவும் திகைக்கிறார்கள். அவனின் பாடல் அத்தனை இன்பமாக இருக்கின்றன. அவனின் பாடல்கள் ஸ்தெப்பிப் புல்வெளியை மகத்துவமாக நிறைக்கின்றது.  ஜமீலானின் சுபாவம் அதன்பின் முற்றிலும் மாறுவதைக் கதை சொல்லி அவதானிக்கின்றான். மெல்ல மெல்ல இருவருக்கும் இடையில் ஒரு உறவு விஸ்தரிக்கின்றது. மிக நுட்பமாக உளவியலோடு அவை பதியப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கிராமத்தைவிட்டு நகர்ந்துவிடுகின்றார்கள். தானியார் மீது ஜமீலாவுக்கு வரும் காதல் மிக நுட்பமாக மூன்றாம் நபர் ஒருவனின் பார்வையில் சொல்லப்பட்டாலும் பலதை ஊகிக்க வைக்கின்றது. இசை அவர்களின் வாழ்க்கையை நிரப்புகின்றது.

ஜமீலா கலகலப்பான பெண்ணாக இருந்தாலும் அவளினுள்ளே தனிமையொன்று படர்ந்திருக்கின்றது. மிகச்சரியாகத் தானியார் அதனை நிரப்புகின்றான். அந்த இடம் ஒழுக்கத்தை மீறியவொன்றாக இருக்கலாம், ஆனால் அவர்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மீட்பையும் அன்பையும் கசியச்செய்யும் இடம்.

இருவரும் ஒன்றாகக் கிராமத்தைவிட்டுச் செல்லும்போது கிச்சினே பாலா அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அதனைத் தடுக்காமல் அவர்களை ஒரு சித்திரத்தில் படமாகத் தீட்டிவைக்க விரும்புகின்றான். அந்தக் கணத்தில் அவன் ஒன்றை அறிந்துகொள்கின்றான். தனக்கும் ஜமிலாமீதான உறவு காதல்தான் என்பதைக் கண்டடைகின்றான். சட்டென்று அவனுக்கு அது புலப்படுகின்றது.

மனித அறங்களையும், சமூகக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெரியும் காதல் இழிவாய்ப் பார்க்கப்படுகின்றது. தனிமனித உணர்வுகளை அமுங்கிப்போகச் செய்கின்ற வேலையைக் குடும்பம் என்ற அமைப்புச் செய்கின்றது. மிகப்பெரிய பலவீனம் அதுவாகத்தான் குடும்ப அமைப்பில் இருக்கும். ஜமீலா, அவர்கள் சமூகத்தையும்,கிராமத்தையும் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையில் உதித்த அன்பை அவள் ஏமாற்றவில்லை. அதில் இருக்கும் சுயநலம்தான் நாவலின் ஒட்டுமொத்த தரிசனத்தையும் வழங்குகின்றது.

கதை சொல்லி தன்னுடைய காதலை கண்டுகொண்டபின்னும், தனக்குத்தெரிந்து அவர்கள் கிராமத்தைவிட்டு நீங்கிய பின்னும் அதன் காட்சியை ஓவியமாக வரைய விரும்புகின்றபோது சொல்வான் “எனது தூரிகையின் ஒவ்வோர் இழுப்பிலும் தானியாரின் இன்னிசை ஒலித்திடுக. எனது தூரிகையின் ஒவ்வோர் இழுப்பிலும் ஜமீலாவின் இதயத் துடிப்பு எதிரொலித்திடுக!”.

நாவலின் இறுதிக்கட்டத்தில் ஜமீலா என்றென்றும் மறக்கமுடியாத பாத்திரமாக எம்முடன் பிணைந்துவிடுகின்றாள்.

my2

சிங்கிஸ் ஜத்மாத்தவ்

சிங்கிஸ் ஜத்மாத்தவ் “கிர்கிஸ்தானிய,ரஷ்ய” எழுத்தாளர். இவரின் “முதல் ஆசிரியர், குல்சாரி, ஜமீலா, அன்னைவயல், லாரி டிரைவரின் கதை” போன்ற புனைவுகள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ரஷ்ய நவீன இலக்கியவாதிகளாக அறியப்பட்டவர்களில் சிங்கிஸ் ஐத்மாத்தேவ் தான் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டவர் என்கின்றார் எஸ்.ரா. 1983ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்ட இவ்நாவல், கையடக்கப் புத்தகமாகப் பூ. சோமசுந்தரம் என்பவரால் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *