அலைதலும் எழுத்தும்

பொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது.

அரியாலையில் வசித்த எங்கள் குடும்பம் சில முக்கிய பொருட்களை மட்டும் மூட்டை முடிச்சுக்களாகச் சுமந்துகொண்டு கொடிகாமத்தை நோக்கிச் சென்றது. மூன்று வயதாக இருப்பினும் அவற்றின் மீதான நினைவுகள் எனக்கு மங்கலாக உதிரியாக நினைவில் இருக்கின்றன. அப்பாவின் சைக்கிள் பாரில் அமர்ந்து எந்தவிதக் கவலையும் அன்றி குதூகலமாகச் சென்றதாக நினைவு. மிளகாய், மரவள்ளி தோட்டப் பயிர்செய்கை என்று பலருடன் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். ஆறுமாதங்களின் பின் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினோம். யுத்தம் ஓய்ந்து வீதிகள் குன்றும் குழியுமாக இருந்தன. எங்களது பூர்வீக வீடு இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்வாங்கப்பட்டு முற்றிலும் சுவீகரிக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் இழந்து செய்வதறியாது திகைத்து நின்ற பெற்றோர் தட்டுத்தடுமாறி வாடகை வீடொன்றில் எங்களைத் தங்கவைத்து வளர்த்தார்கள். அங்கிருந்து என் நினைவுகள் துல்லியமாக உயிர்ப்புடன் இருக்கின்றன.

நானும் என் சகோதரியும் 1995-ல் இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் வசித்த நேரத்தில் அப்பா எடுத்த புகைப்படம்.

சிறுவயதிலே நூலகமும் வாசகசாலையிலுள்ள பத்திரிகை வாசிப்பும் அப்பாவின் பழக்கம் மூலம் கிட்டியது. என்னையும் என் சகோதரியையும் யாழ் பொதுசன நூலகத்திற்கு அழைத்துச் செல்வார். சிறார்களுக்கான இரவல் பகுதியிலிருந்து ஒரு ஆங்கிலப் புத்தகமும் ஒரு தமிழ் புத்தகமும் எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தை அப்போதே புகுத்தினார். அங்கிருந்தே நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். நல் நினைவுகளாக அவை இப்போதும் இருக்கிறன. அப்போது யாழ் நூலகம் தற்காலிகமாக சுண்டுக்குளி பகுதியில் யாழ்.கச்சேரிக்கு முன் பழைய பூங்காவிற்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்தது. சுற்றிவர மகோகனி மரங்கள். குளிர்மையான இனிமையான காற்று என்று அப்பகுதி நிறைந்திருந்தது.

அப்போதெல்லாம் எழுதும் ஆர்வம் இருந்ததில்லை. விறுவிறுப்பாக வாசிக்க இயலுமான புனைவுகளை துரத்தித்துரத்தி வாசிக்கவே மனம் ஓயாமல் அல்லல்பட்டது. இவ்வாறு நாட்கள் நகர இரண்டாயிரம் ஆண்டு, மீண்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் விடுதலைப்புலிகள் தாக்குதலை ஆரம்பித்தார்கள். அன்றைய நாள் நன்கு நினைவில் உள்ளது. காலையில் எழுந்து பாடசாலைக்குச் செல்ல தயாராகும் முகமாக இருக்கும்போது பின்வளவில் இருந்த செம்பட்டான் மாம்பழ மரத்தில் கனிந்த பழம் ஒன்றை பிடுங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்க சடசடவென்று இயந்திரத் துப்பாக்கி ஒலியும் தூரத்தில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைச் சத்தமும் கேட்டன. வீட்டுக்குள் ஓடிப் பதுங்கினோம். ஒரு நாளிலே அனைத்தும் மாறியது. வீதியெங்கும் கவச வாகங்கள் நடமாடுவதைக் கண்டோம். கிபீர் விமானங்கள் இரைச்சலுடன் பறந்து குண்டு வீச ஆரம்பித்தன. மிகத்தாழ்வாகப் பறக்கும் உலங்குவானூர்திகள் சரமாரியாகக் குண்டுகள் பொழிந்தன. ஊரடங்குச் சட்டம் அமுலில் வந்தது. விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக நெடுங்குளம் என்ற கிராமம் வரை ஊடுருவி இருந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து சிலபல கிலோமீற்றர் தள்ளியே அக்கிராமம் இருந்தது.

அன்று மாலை மீண்டும் மூட்டை முடிச்சுக்களுடன் நல்லூர் பகுதியிலுள்ள அம்மாவின் நண்பியின் வீட்டிற்குச் சென்றோம். ஏறக்குறைய மூன்று மாதங்கள் தற்காலிகமாக அங்கிருந்துவிட்டு கொக்குவில் என்ற ஊருக்குச் சென்றோம். அ.முத்துலிங்கத்தின் சொந்தவூர் அது. அப்போதெல்லாம் அவ்வாறு ஒரு எழுத்தாளர் கனடாவில் இருக்கிறார் என்பதை அறியாத பருவம்.

மீண்டும் இரண்டாயிரம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானம் பிறக்கச் சிலகாலம் பின் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தோம். இடம்பெயர்வாலும் கொடூரமான மரணங்களாலும் தொடர்ந்து அல்லல்பட்டுக் களைத்துப்போயிருந்த தமிழ் சனங்கள் இனிமேல் எல்லாம் ஓய்ந்து சமாதானம் வரும் என்றும், வரவேண்டும் என்றும் திவீரமாக விரும்ப ஆரம்பித்திருந்தார்கள். அந்த நம்பிக்கை ஏறக்குறைய நான்கு வருடம் தாக்குப்பிடித்தது.

சுண்டுக்குளிப் பகுதியில் வாடகைக்கு வீடுபார்த்து குடியமர்ந்தோம். வீட்டில் தொலைக்காட்சியோ, சேர்ந்து விளையாடுவதற்கு சகவயது நண்பர்கள் அருகில் இன்மையாலும் வாசிப்பே பொழுதுபோக்காக என்னிடம் தஞ்சம்கொண்டது. நூலகம் அமைந்திருக்கும் இடம் மிக அருகிலே இருந்ததால் தினமும் அப்பகுதிக்குச் சென்று வருவது அன்றாட வேலையாகியது. புனைவு ருசிக்குள் சென்று முற்றாக வீழ்ந்திருந்தேன். இருந்தும் என்னுடைய மனநிலை கடும் தாழ்வுச்சிக்கலுக்குள் சிக்கியிருந்தது. எனது ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்களின் அணுகுமுறையே அதற்கான காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகின்றது. அதிகம் தனிமைக்குள்ளும் நண்பர்கள் இன்றியும் கடும் அவதிக்குள் இருந்திருக்கிறேன். இந்தச் சிக்கல் பதின்ம வயதின் இறுதிவரை இருந்திருக்கின்றது. ஒருவகையில் இலக்கியம் தான் என்னை அச்சிக்கலுக்குள் இருந்து வெளியே எடுத்தது என்றும் சொல்லலாம்.

தொண்ணூற்றி ஐந்தில் சொந்த வீட்டிலிருந்து புறப்பட்ட பின் எங்கள் பூர்வீக வீடு இராணுவத்தின் கைவசமாகி தாக்குதல்களுக்கு உள்ளாகி தரைமட்டமாகி வெறும் அத்திவாரத்துடன் எஞ்சியது. இராணுவம் விட்டுச்செல்ல எஞ்சிய வீட்டை இதுவரை இருந்த சேமிப்பை கொட்டி மீண்டும் வீட்டை புதுப்பித்தார் அப்பா.

                                                                   அப்பா

சமாதானம் வந்தபின்னர் யாழ்பாணம் சுறுசுறுப்பாக இயங்கியது என்று சொல்லலாம். இராணுவமும் விடுதலைப்புலிகளும் புன்னகைத்து கைக்குலுக்கினார்கள். எக்கச்சக்கமான தமிழர்கள் தென்பகுதிக்கு பேருந்தில் சுற்றுலா சென்றார்கள். தென்பகுதி மக்கள் ஒரு வகையில் கசப்பு மேலிட்ட கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களால் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் பகுதிக்குள் நுழைந்து சுற்றுலா ஒன்றை மேற்கொள்வதில் கடும் அச்சத்தை உள்ளார்ந்த ரீதியில் எதிர்கொண்டிருந்தது அதற்கான காரணமாக இருக்கலாம்.

தமிழ்த்தேசிய எழுச்சி இன்னும் பரவலாக புதிதாக வாலிவப்பருவத்திற்குள் நுழைந்தவர்களின் வருகையால் மேலும்மேலும் புத்துயிர்கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் அரசியல்துறை அலுவலகம் அமைத்து மக்களுடன் உரையாடியவாரு இருந்தது. யாழ்.பல்கலைக்கழக இளைஞர்களுடனும் உயர்தர மாணவர்களுடனும் உறவை விஸ்தீரப்படுத்தி மாணவர் பேரவை அமைப்பால் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தம்தொடர்புகளையும் செயற்பாடுகளையும் பரவலாக்கிக் கொண்டிருந்தார்கள். நல்லூர் திருவிழா காலத்தில் பல்வேறு கண்காட்சிகளையும் கலை நிகழ்வுகளையும் விடுதலைப்புலிகள் முன்னின்று நடத்தினார்கள். அனைத்தையும் பரவசம் மிகுந்த விழிகளுடன் சிறுவனாக அப்போது அவற்றை நோக்கியிருந்தேன்.

மண்மீட்பு பயிற்சி என்ற பெயரில் யுவன் யுவதிகளுக்கு ஆரம்ப அடிப்படை ஆயுதப் பயிற்சிகள் விடுதலைப்புலிகளினால் வழங்க ஆரம்பிக்கப்பட்டன. எல்லாவற்றையும் அரசாங்கப்படைகள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. இரண்டாயிரத்தியாறாமாண்டு பின்னேரப்பொழுது மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியது. ஒரேயொரு நாளில் அனைத்தும் மாறியது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பிரதான சாலையான கண்டிவீதி மூடப்பட்டது. யாழ்பாணம் தனிப்பிரதேசமாக தனிமையில் வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் யுத்தம் நிகழாமல் வன்னியில் யுத்தம் ஆரம்பமாகினாலும், யாழ்ப்பாணத்தில் மனித வேட்டை ஆரம்பமாகியது. யார் யார் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் அமைப்புடன் நெருக்கமாக இயங்கினார்களோ அவர்கள் எல்லாம் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். கொடூரமான முறையில் வெட்டியும் சிதைக்கப்பட்டும் சுட்டும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். வீதியில் செல்லும்போது தினமும் ஒரு உயிரற்ற உடலைக் கடந்தே செல்லவேண்டி இருந்தது.

என் பதின்மவயதின் நினைவுகள் இந்த இறந்த உடல்களை கடந்து செல்லும் அனுபவத்திலும், ஆங்காங்கே இராணுவத்திற்கு வைக்கப்படும் கிளைமோர் தாக்குதலில் சிக்கிப் பலியாகிய பொதுசனத்தின் கண்ணீரிலுமே மிதந்தது.

ஒருவகையில் என் புனைவின் அடித்தளம் இங்கிருந்தே ஆரம்பமாகிறது என்று நினைக்கிறேன். வன்முறை மீதான வெறுப்பு இங்கிருந்தே எனக்கு எழும்ப ஆரம்பித்தது. இலட்சியவாதங்கள் கட்டப்படும் முறையிலும் போலி புனிதப்படுத்தல்களுக்கு இறையாகும் அப்பாவி உயிர்கள் மீதான சிந்தனையும் இன்னும் இன்னும் அலைக்கழித்துச் சரியவைத்து. அதன் பின் ஏற்பட்ட வாசிப்பு அப்பின்புலத்தில் யோசிக்க வைத்தது.

இராணுவத்துடன் சேர்ந்து அணிபிரித்து கிரிக்கெட், கால்பந்து விளையாடிய இளைஞர்களும் இருந்தார்கள். ரோந்துப்பணியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்களை காதலித்து திருமணம் செய்த தமிழ் பெண்களும் இருக்கிறார்கள். விரோதமும் வன்முறையும் குடிகொண்ட சூழலில் இவையெல்லாம் ஒருகப்பம் இருந்தன என்பதைச் சொன்னால் பலரால் நம்பவும் கடினமாக இருக்கலாம். இந்த உண்மைகளை உள்ளிருந்து பார்த்தவன் என்ற முறையில் என் புனைவின் அடித்தளம் இவற்றையே உரசி அதற்குள் புதைந்திருக்கும் மானுட உண்மையைப் பார்க்க முயல்கிறது. ஒருவகையில் அதற்கான எத்தனம்தான்.

இலக்கியவாசிப்புக்குள் தட்டுத்தடுமாறி நுழைந்தாலும் ஜெயமோகனின் அறிமுகம் புத்தகம் வழியாக நிகழ்ந்த பின் பலதும் மாறியது. அவரின் ‘புறப்பாடு’ நூல் எனக்குள் எண்ணற்ற அதிர்வலைகளை உருவாக்கிப் புதைந்திருந்த பல உளவியல் சிக்கல்களைத் தீர்த்தது. நான் இலக்கியத்திற்குள் நுழைந்த வாசலாக ஜெயமோகனே இருந்தார். பச்சை நரம்பு சிறுகதை தொகுப்பை இதன் அடிப்படையில் ஜெயமோகனுக்கு சமர்ப்பித்திருந்தேன்.

இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு எழுத ஆரம்பித்தேன். சிறுகதை வடிவமே என் முதல் தெரிவாக இருந்தது. கூர்மையாக ஒன்றை சொல்லிப் பார்ப்பதில் கடும் சவாலைத் தருவது சிறுகதை வடிவம். அதனால் என்னவோ மீண்டும் மீண்டும் அந்த வடிவமே பிடிக்கிறது.

ஆரம்பத்தில் எழுதிய சிறுகதைகளை சில இணைய இதழ்கள் பிரசுரித்தன. பின்னர் ஆக்காட்டி போன்ற இதழ்கள் பிரசுரித்தன. வலைத்தளத்திலும், ஆக்காட்டி இதழிலும் எழுத எழுத ஓரளவுக்கு ஈழத்தில் தீவிரமா வாசிப்பவர்களிடம் நான் அறிமுகமாகத் தொடங்கினேன். பின்னர் தமிழக இதழ்களிலும் எழுத ஆரம்பித்தேன்.

என் முதல் சிறுகதை தொகுப்பைக் கொண்டுவர பல பதிப்பகம் தேடி எவையும் சரிவராமல் போகக் கடைசியில் என் சொந்தக்காசில் புத்தகம் அச்சிட்டு ‘புதியசொல்’ என்கிற இதழின் அடையாளத்துடன் முதல் தொகுப்பு ‘சதைகள்’ 2016-இல் வெளியாகியது. அச்சுப்பதிப்பு, விநியோகம் என்பவற்றில் கடும் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தது. இருந்தும் சிறிய கவனிப்பைப் பெற்றுத்தந்தது.

பின்னர் இன்னும் திவீரமாக சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். இரண்டாவது தொகுப்பு ‘பச்சை நரம்பு’ கிழக்கு பதிப்பகம் ஊடகாக இந்தவருட ஆரம்பத்தில் வெளியாகியது. விநியோகம் சீராக இருந்ததால் வாசிப்பு எனும் இயக்கத்தில் இருக்கும் பலர் வாங்கி வாசித்திருக்கிறார்கள். அவர்களிடம் ஓரளவுக்குச் சென்று சேர்ந்திருக்கின்றது.

இலக்கியம் என்பது தனியே ஒரு தேசிய இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்கள் பிரிவிற்கு உரித்த ஒன்றோ இல்லை. அவர்களை இலக்கு வைத்து எழுதப்பட முடியாது. முற்றிலும் மானுடம் தழுவிய பார்வையை இலக்கியம் வைக்கும். இந்த சர்வதேசத் தன்மையை நோக்கியே என் தேடல் விரிகிறது.

நாவலும், மேலும் சில சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்!

-நன்றி கணையாழி-

கணையாழி ‘வைகாசி மாத’ இதழில் வெளியாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *