லெனின் சின்னத்தம்பி

என்னுடைய பல்கலைக்கழக இரசாயன ஆய்வுகூடத்தில் ஆய்வொன்றைச் செய்தோம். சில மூலப்பொருட்களை நீரில் கரைத்துவிட்டு கரைந்த மூலப்பொருட்களின் இயல்பை நீரில் ஆராய்ந்தோம். நீரின் மூலக்கூற்றின் இயல்பை அவை எடுத்தன. ஆனால், எப்போதும் நீரின் இயல்பில் அவற்றால் இருக்கமுடியவில்லை. சில இடங்களில் தங்கள் சுய ரூபத்தைக் காட்டின. உண்மையில் அவை பாவனைதான் செய்கின்றன. ஓர் அந்நிய நாட்டில் புலம்பெயர்த்து வசிக்கக்கூடிய ஒரு தொகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றுதான். அங்கே பூர்வீகமாக வாழும் மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுச் சூழலுக்குள் நுழைந்து அவர்களுடன் கலந்தாலும், அங்கே அவ்வாறு அச்சூழலுக்கு ஏற்ப வாழ்வதாகப் பாவனைதான் செய்ய இயலுமே தவிர நூறுவீதம் இணக்கமாக நெருங்கிச் செல்வது அத்தனை சீக்கிரம் நிகழமறுப்பதொன்று.

முதலாம் இரண்டாம் உலகமாகயுத்தம் தந்த மானுட அழிவிலிருந்து ஐய்ரோப்பிய மக்கள் பெற்ற சிந்தனை ஜனநாயகத்தின் மீதும் ஒழுங்குகளை மதிக்கும் மனநிலை மீதான பிடிப்பையும் கூட்டியது. வெகுவிரைவில் பல அடிப்படை வாதங்களில் இருந்தும் பிற்போக்கு மனநிலையில் இருந்தும் விடுபட்டு எழுந்து வந்தார்கள். ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொடர்ச்சியாக இவற்றைக் கருதலாம். கீழைத்தேய நாட்டிலிருக்கும் மக்கள் ஐரோப்பிய நாட்டுக்குள் நுழையும் போது மனதளவில் இருக்கும் பல தடைகள் கீறலாகவே தொடர்கிறது.

ஜீவமுரளி எழுதிய ‘லெலின் சின்னத்தம்பி’ நாவலை வாசித்துமுடித்த போது என்னைக் கவர்ந்தது இந்த முரண்புள்ளிகளை தொட்டெடுத்த வித்தைதான். இந்த நாவலின் களம் ஜெர்மனியில் அமைந்திருக்கும் ஓர் உணவு உற்பத்தி தொழிற்சாலையை மையைப்படுத்தியது. தமிழில் இவ்வாறான வாழ்க்கைச் சூழலை வெளிப்படுத்தும் படைப்புகளை வாசிக்க இயல்பான ஆர்வம் கிளர்ந்து வரும். இந்த நிலங்களும் மனிதர்களும் தமிழுக்கு புதியவைதான். ஆனால், இவ்வாறான சூழலில் எழுதப்படும் பெரும்பாலான ஆக்கங்கள் வெறுமே ஆவணப்படுத்தல் என்பதோடு நின்றுவிடுவது துரதிர்ஷ்டவசமானது. ‘லெனின் சின்னத்தம்பி’ நாவல் ஆவணப்படுத்தல் என்பதைத் தாண்டி இலக்கிய படைப்பாக இருப்பது இந்த நாவலைப் பொருட்படுத்த வேண்டும் என்பதின் முதல் தகுதி.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வசிப்பவர் சின்னத்தம்பி. பாத்திரங்களை நீர்ப்பாய்ச்சி கழுவிச் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்துவருபவர். இவர்களோடு இன்னும் பலர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இடையிலான முரண்களும் தனிமனித இயல்புகளும் சேர்ந்து வருகின்றன. இந்த நாவல் லெனின் சின்னதம்பியின் பார்வையில், அவரின் கூறுநிலையில் சொல்லப்படவில்லை. பொதுப்படையான பார்வையில் உணவு உற்பத்தி நிலையத்தை மையப்படுத்தியே சொல்லப்படுகின்றது. சின்னத் தம்பி இலங்கைத் தமிழராக அங்கே வேலைபார்க்கும் ஒருவர் என்பதைத் தாண்டி இந்த நாவலுக்கும் அவருக்கும் உள்ளீடாகப் பெரிதாக சம்பந்தம் இல்லை. அவரும் ஒரு காதபாத்திரம். அவரின் தனிப்பட்ட குண இயல்புகள், அவரின் அகச்சிக்கல்கள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட இயல்பிலே வருகின்றன. அதனால் இந்த நாவலின் தலைப்பு நாவலுக்குப் பொருத்தமானதாக இல்லை. ஏனைய கதாப்பாத்திரங்களின் வெளிப்பட்டுச் சித்திரமும் இவ்வாறே இருக்கின்றது.

2001 செட்டம்பர் 11 இல் அமரிக்காவின் உலக வர்த்தகமையம் மீதான தீவிரவாத தாக்குதல் நடைபெற்றதால் அதன் பாதிப்பு உலகம் முழுக்கத் தொடர்ந்தது. எங்கையோ ஜெர்மனில் இயங்கும் தனியார் உற்பத்தி நிலையமும் தடுமாறுகின்றது. உணவு ஓடர்களின் எண்ணிக்கையும் குறைகின்றது. இதனால் தொழிற்சாலை பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பல தொழிலாளிகள் தாறுமாறாக வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தாக்குதல் நிகழ்ந்த நாட்களில் துக்கம் அனுஷ்டிக்கும் விதத்தில் உணவு ஓடர் கொடுத்த வாடிக்கையாளர்கள் ஓடர்களை தவிர்க்கும் தர்க்கம் சரியாகப் பொருந்தி வருகின்றது. எனினும் அதன் பின்னைய நாட்களில் அதன் தாக்கம் தொடர்வதாலே தொடர்ந்தும் வேலை நீக்கம் நடைபெறுவதாக அங்கு வேலை பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு புனைவு என்பது ஆசிரியரால் நேரடியாக நாவலில் சொல்லப்படுகிறதே தவிர, அந்தப் புனைவை நம்பும் தொழிலார்களின் எண்ணப்போக்கு பற்றிய விவாதங்கள் நாவலில் இல்லாமல்தான் இருக்கின்றது.

இனவாதம், மதவாதம் ஐரோப்பியர்களிடம் பெரும்பான்மையாக இல்லாவிடினும் அவற்றின் கூறுகள் ஆங்காங்கே வெளிப்படவும் செய்கின்றன. இத்தொழிற்சாலையில் வேலைபார்க்கும் இரண்டு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலைபார்க்கும் ‘அக்சல்குருப்ப’ எனும் ஜெர்மானியரால் வேடிக்கையாக ஆழமாகப் புண்படுத்தப்படுவது தேர்ந்த தருணங்களாக உருவாகி வருகின்றன. உணர்வெழுச்சியில் அவருடன் மோதும் அந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். அந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் மீதான பார்வை அவர்களின் தனிப்பட்ட அலைக்கழிப்புடன் விவரிக்கப்படாமல் சுருங்கி இருப்பது இந்த நாவலின் பலவீனமாகவே உள்ளது.

அக்சல்குருப்ப, ஸ்ரைற்ரர் எனும் இரண்டு ஜெர்மனிய தொழிலார்கள் உணவு உற்பத்தி நிலையத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். தொழிளார்களுக்கான உத்தரவுகளைக் கொடுப்பதும் இவர்கள் தான். இருந்தும் இவர்கள் இருவருக்கும் இடையே உரசல்கள் இருக்கவே செய்கின்றன. அக்சல்குருப்ப முழு அதிகாரத்தையும் தனக்குக் கீழே கொண்டுவர விரும்புகிறார். வயதில் மூத்தவரும் நீண்ட கால அனுபவமும் கொண்ட ஸ்ரைற்ரர் கண்டிப்பு மிகுந்தவராக இருக்கிறார். ஓரளவுக்கு தொழிலார்களின் அன்பையும் பெற்றவர். ஆனால், அக்சல்குருப்ப மீது தொழிலார்களுக்கு அவ்வளவு பெரிய செல்வாக்கு இல்லை. இருவரின் அகங்காரப் பிரச்சினை பல்வேறு இடங்களில் முட்டிமோதி வெடித்தாலும் அவர்களுக்கு இடையே தொழிற்சாலை மீது தீவிரமான பற்றும் காதலும் இருக்கவே செய்கிறது. இருவருக்குமான உரசல்கள் நீர்ந்து ஒன்றிப்போகும் அந்தப் பகுதி தேர்ந்த இலக்கியமாக வருகின்றது. இந்த இணக்கத்தை லெனின் சின்னதம்பியால் புரிதுகொள்ளவே முடிவதில்லை. தனிமனித ஆகங்கார மோதல் தவிர்ந்த ஒழுக்குகள், நிர்வாகம் மீதான பற்றுதல் மீதான ஐரோப்பியர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தருணங்கள் அவை.

ஜீவமுரளி

இத்தொழிற்சாலையின் உரிமையாளர் சப்கோஸ்கியின் மனைவியின் பூர்வீகம் ஜெர்மன் இல்லை. அவர் ஸ்பானிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அதனால் அவரின் ஜெர்மன் உச்சரிப்பு வித்தியாசமாகவே இருக்கின்றது. அவற்றைக் கிண்டல் நையாண்டி செய்வதை அக்சல்குருப்ப முன்னின்று நடந்துகிறார். பலதடவை இதை சப்கோஸ்கி முன்னே செய்கிறார். பதிலுக்கு எதுவும் செய்ய இயலாமல் திருமதி சப்கோஸ்கி தடுமாறுகிறார். திரும்பித் தாக்க வார்த்தைகள் தேடி தனக்குள் பலவீனமாகி உதிர்ந்து ஒடுங்கிப்போதல் தேர்ந்த விவரிப்புகளுடன் வருகின்றன.

உணவு உற்பத்தி தொழிற்சாலை என்பது எப்படி இருக்கும், அதன் செய்முறைகள் என்ன என்ன என்பது மிகத்துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. இச்சித்திரம் மனக்கண் முன் உணவு உற்பத்தி கூடத்தை கட்டியெழுப்பவைக்கிறது. புறவய சித்தரிப்புகள் மீதிருக்கும் கவனம் அகவய சித்தரிப்புகள் மீது அவ்வளவாக நாட்டம்கொள்ளவில்லை.

லெனின் சின்னத்தம்பியின் குடும்பம் மீதான விவரிப்புகள் ஒற்றைப்படையாக அவரைத் தூய்மையான மனிதராகக் காட்டுவதிலே நாட்டம் கொள்கிறன. அன்பான கணவராகவும் தந்தையாகவும் இருக்கிறார். அதைத்தாண்டி அவரின் கீழ்மைகள் வெளிப்படும் இடங்கள் நாவலில் இல்லாமலே இருக்கின்றன. அக்சல்குருப்ப மீதான முரண்பாடுகளில் அவரின் பலவீனம் திரண்டு எழுவது ஓரளவுக்குத் தேர்ந்த வடிவத்தில் வருகிறது. அதைவிட முக்கியமாக லெனின் சின்னதம்பியின் சகித்துக்கொண்டு கொடுத்த வேலையை பணிவாகச் செய்யும் குணபாவம் நுட்பமாக நாவலில் ஊடுபாவுகின்றது. அந்த மனநிலை இலங்கைத் தமிழர்களின் பொது மனநிலையாகப் பொதுமைப்படுத்தப்படுகின்றது. அதனாலே சர்மா எனும் அவரின் இலங்கை நண்பரை வேலைக்கு அமர்த்தத் தீர்மானிப்பதாக சித்தரிப்புகள் வருகின்றன. இவற்றின் மீதான உடைப்புகள் நாவலில் இல்லாமல் ஒரே தளத்தில் நகர்வது அடிநிலை வர்க்கத்தைத் தூய்மை செய்யும் தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. அவற்றை மீறிய மானுட இயல்புகளின் விரிவாக்கம் இன்றி இருப்பது செயற்கைக்குள் தள்ளிவிடுகிறது.

இந்த நாவல் எழுதப்பட்ட மொழி தேர்ந்த புனைவு மொழியாகக் குறிப்பிட முடியாவிட்டாலும் தனக்குள்ளே வசீகரத்தைக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாமலே இருக்கிறது. அந்த வசீகரம் எங்கும் நாவலை நிறுத்தும் எண்ணத்தைத் தோற்றுவிக்காமல் இழுத்துச் செல்கிறது. யதார்த்தவாத எழுத்துகளின் முதல் சிறப்பே அவை வாசிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுதான். அன்றாடங்களில் இருக்கும் சம்பவங்களை கோர்த்து அதன் நாடகீயத் தருணத்தை மிகைப்படாமல் விரித்துச் செல்லும்போது சம்பவங்கள் கலையாகத் தொடங்குகின்றன. நாவலின் முதல்பகுதியில் வரும் சித்தரிப்புகள் அதிகம் மானுட அகத்துக்குள் நுழையாமல் புறவயமாக தரவுகள் சார்ந்து இருக்கின்றது. பிற்பகுதி அதிலிருந்து விலகி மானுட நாடகத்தை நோக்கிச் சென்று பல உச்சங்களைத் தொடுகின்றது. கம்பனி திவாலாகி மூடும் போது ஏற்படும் தடுமாற்றங்கள் அனைவரையும் பிசைகிறது. அவை கழிவிரக்கத்தை அதிகம் கோராமல் இயல்பாகக் கடந்து செல்ல விரும்புகிறது. இந்த நாவலின் உண்மையான வெற்றி அந்தவகையான சித்தரிப்புதான்.

வேலை இழந்து லெனின் சின்னதம்பி வெளியேறிய பின் அடுத்ததாகத் தான் என்ன செய்யப்போகிறேன் பொருளாதாரத்துக்கு என்ற கேள்வி அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது ஒரு தொழிலாளி மீதான யதார்த்த சித்தரிப்பை பலவீனம் அடையச் செய்கிறது.

இந்தநாவல் உணவு உற்பத்தி கூடத்தை மையப்படுத்திய தலைப்பின் பெயரில் எழுதப்பட்டிருக்க வேண்டியது. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் கூறுகளை விரிவாக்கி அதன் பின்புலங்களை தொட்டிருந்தால் வேறோர் தளத்துக்கு இந்த நாவல் சென்றிருக்கும் என்பதில் ஐயப்பாடுகள் இல்லை. இறுதிப்பகுதியில் வரும் சப்கோஸ்கியின் தனிப்பட்ட வாழ்கையின் விரிவு, மிகுதி காதாப்பாதிரங்களில் இல்லாமல் இருப்பது சுழல மறுக்கும் கடிகாரமாகத் தன்னை ஆக்கிக்கொள்கிறது.

நாவலின் முடிவுமிகவும் கவித்துவமான தருணத்தை கொண்டது. களைத்துப் போய் லெனின் சின்னதம்பி தூங்க அவரின் கனவுகள் அலைக்கழிக்கும் வேலைத்தளம் சார்ந்த சித்தரிப்புகள் ஊடாக எஞ்சுகிறது. எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்த லெனின் சின்னதம்பி கடும் குளிருக்குள் ஜெர்மனியில் அடிநிலை வேலைபார்த்து வாழ்க்கையை விரட்டி வாழ்தல் எனும் நிகழ்வைக் கழித்து வீழ்தல், ஒரு தொழிலாளியின் ஏக்கத்தைத் திரட்டி ஓர் குழிக்குள் புதைக்கிறது. மானுட சுயநலம் சார்ந்த கேள்விக்குள் நுழைந்து அமிழ்ந்து செல்கிறது.

வெளியீடு : உயிர்மெய்

தமிழகத்தில் விநியோகம் : கருப்புப் பிரதிகள்

விலை : 200 ரூபாய்

***

அம்ருதா May-2018 இதழில் வெளியாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *