இரண்டு திரைப்படங்கள்

பஷன் – 2008 : பாவனைகளின் உலகம்

பண்டங்களை மேலும்மேலும் விற்பதற்குச் செய்யும் விளம்பரங்களின் பின்பே இருக்கும் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது. அழகு கூட ஒரு பண்டம்தான். அழகின் மேல் கட்டப்படும் அன்பும் ஒரு பண்டம்தான்.

பஷன் திரைப்படம் பாவனைகளுக்குப் பின்பே இருக்கும் அரசியலைப் பேசுகின்றது. உடல் மொழியிலிருந்து வெளிப்படுத்தும் உணர்வுகள் வரை செயற்கையாக வெளிப்படும் போலிப் பாவனைகள் எப்போதும் செயற்கையான பிளாஸ்டிக் சந்தோஷ உலகத்தைத் துருத்திக்கொண்டு காட்டும், மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பிய தேசமாகக் காட்டும். ஆனால், அனைத்தும் வேஷங்களும் தங்கள் தங்கள் சந்திப்புகளை முடித்துக்கொண்டு வெளியேற வெற்றிடமும் சுயநலமும் மட்டுமே எஞ்சும். பஷன் படத்தில் வரும் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் அவ்வாறே இருக்கின்றன. வாய்ப்புகள் ஊடாக வாய்ப்புகளை உருவாகிக் கொள்கிறார்கள். முடிந்துபோகக் கச்சாப் பொருட்களாகத் தூக்கிப்போடுகிறார்கள். உடல் கூடக் கச்சாப் பொருட்களாகவே இருக்கின்றன.

மொடலிங் துறையில் நுழையும் பிரியங்கா சோப்பிராவின் வளர்ச்சி தொடர்புகள் ஊடாகவும், அதிஷ்டம் ஊடாகவும் நிகழ்கிறது. இதே நேரத்தில் மொடலிங் துறையில் கொடிகட்டிப்பறக்கும் கங்கனா ராவத், தன் மிதமிஞ்சிய கர்வத்தாலும் போதைப்பொருள் பழக்கத்தாலும் சரிவை நோக்கிச் செல்கிறார். ஒருவகையில் கங்கனா ராவத்தின் சரிவே பிரியங்கா சோப்பிராவின் வளர்ச்சியை எதிர்பார்க்காத அளவுக்கு உச்சத்துக்குக் கொண்டு செல்லும் எரிபொருளாகத் திகழ்கிறது. இந்த எரிபொருள் ஒரு கட்டத்தில் முடிவடைய, ஈர்ப்பு விசையற்ற பெருவெளியில் சீரும் ஏவுகணைபோல், தனக்குக் கிடைத்த இடத்தில் தன்திறமையை மேலும் மேலும் வெளிப்படுத்தி, விரைவிலே மொடலிங் துறையில் தனக்கான மிக உயரமான இடத்தைப் பிரியங்கா எடுத்துக் கொள்கிறார்.

உருவாகும் தொடர்புகளும், விட்டுக்கொடுப்புகளும் இயல்பாகவே நிகழ்கிறது. சரீர உறவுகள் தேவையானவர்களுடன் ஏற்படுகின்றன. உடல் மீதான புனிதங்களின் கரிசனையைக் கட்டிக்காப்பதற்கு நேரமும் இல்லை, எல்லையும் இல்லை. அது சாதாரணமாக நிகழ்கிறது. உச்சிக்குச் செல்லச் செல்ல ஏற்படும் பொதுவான கர்வம், பிரியங்காவுக்கும் வருகிறது. எனினும் அது ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகவே இருக்கிறது. ஆனால், அகங்காரச் சீண்டலும், உணர்வுகள் ரீதியில் அவளைப் புண்படுத்தும் செயல்பாடுகளுக்குப் பழிவாங்க முயலும் அவளின் கோபம் அவளைச் சரிவுக்குள் தள்ளுகின்றது. இந்தச் சரிவையும் எழுச்சியையும் முதலாளித்துவ அதிகாரமே வெளிப்படையாக இயக்குகிறது.

ஒரு கட்டத்தின் பின் பிரியங்கா மீண்டு வருகிறார். இங்கே மீண்டு வரும் இடத்தில் அவருக்கு வாய்க்கும் நண்பர்கள் போலிப் பாவனைகள் அற்றவர்கள். தூய்மையாக இருக்கிறார்கள். நட்பும், கரிசனையும், அன்பும் அவர்களிடம் மிளிர்கின்றன. அங்குத் தெரியும் ஒரு கொடியை கைப்பற்றி மேலே செல்கிறார்.

பஷன் திரைப்படம் மொடலிங் துறையில் இருக்கும் பெண்களின் துயரத்தையும் கொண்டாட்டத்தையும் சொல்லும் படமாகத் தெரிந்தாலும், அடிப்படையில் மனித உறவுகளின் கீழ்மைகளைச் சொல்லும் படமாகத் தான் இருக்கிறது. பஷன் உலகத்தில் இருக்கும் நுண்மையான பிரச்சினைகள் பலவற்றை மேன்போக்காகத் தொட்டு, மீண்டும் மீண்டும் போலிப் பாவனையையும், அதற்காக உருவாகும் செயற்கை மகிழ்ச்சியையும், அதைவைத்து நடக்கும் வியாபாரத்தையுமே பேசுகிறது.

Queen of katwe – 2016 : நிறைந்த இருளில் மிதக்கும் ஒளிக்கீற்று

பயிற்சியின் மூலம் சில திறன்களைப் பட்டை தீட்டி கூர்மையாக்கலாம். ஆனால்,கடும் பயிற்சி இருந்தும் உச்சத்தை அத்துறையில் அடைய சிலர்க்கு கடினமாகவே இருக்கும். அவரை விஞ்சி மற்றொருவர் இருப்பார். என்னதான் பயிற்சி எடுத்தாலும் அவர்களை வெல்லவே முடியாது. காரணம் அவர்கள் அத்துறையில் மீதிறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

மீதிறன் குறிப்பிட்ட துறையில் சிலருக்கு அதிகமாகவே இருக்கும். தொட்டது எல்லாம் அத்துறையில் வெற்றியாகும். உடலியல் கூறிலே அதற்கான வளம் இருக்கும். ஒருவகையில் அது ஜெனட்டிக்கில் நிகழ்ந்த ஜாலம்தான். அவர்களுக்கு மேலும்மேலும் உச்சம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஆனால், எத்துறையில் அந்த மீதிறன் உள்ளது என்பதைக் கண்டறியப்படாமலே கூடப் பலருக்குப் போய்விடலாம். அதைக் கண்டறிந்து ஒழுங்குபடுத்துவதுகூட அதிஷ்டவசமானதுதான்.

இஷ்டப்பட்ட துறையில் மீதிறன் இருந்தால் அதுவொரு மகத்துவமான பேறுதான். அளவான பயிற்சியுடன், அத்துறையின் தொங்கல் வரை சென்று பிரகாசிக்கலாம்.

உகண்டா நாட்டில் சேரிப்புறத்தில் மிக வறுமையான குடும்பத்தில் பிறந்த பெண் போனியா. சகோதரனுடன் சென்று வீதிவழியே அம்மா அவித்த சோளங்களை விற்பதுதான் அவர்கள் வேலை. ஆரம்பத்தில் அவர்களின் வதிவிடத்தைக் காட்சிப்படுத்த ஒளிப்படக்கருவி விரிக்கும் காட்சிகள், செம்மண் படர்ந்த வன்னி நிலப்பரப்பை எனக்கு நினைவுபடுத்தியது. பொருளாதார ஸ்திரமும், கடைகளின் அமைப்பும் அவ்வாறே.

போனியாவின் குடும்பம் மிகக்குறைந்த தினக்கூலியில் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். மிகத்தற்செயலாக மாணவர்களுக்கான சதுரங்கம் (செஸ்) கற்பிக்கும் கழகம் ஒன்றை அணுகுகிறார்கள். பொறியியல்துறையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ரொபேர்ட் செஸ் விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வதினால் அந்தக் கழகத்தை நடத்துகிறார். அவரின் அன்பான அணுகுமுறை போனியாவுக்கும் அவளது சகோதரனுக்கும் பிடித்துப்போக வேலை நேரம் கழிய மிகுதி நேரத்தை அங்கேயே செலவிடுகிறார்கள்.

மிகவிரைவிலே செஸ் துறையின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றறிந்து அனைவரையும் கடும் ஆச்ரியப்படுத்தும் அளவுக்கு ராக்கட் வேகத்தில் போனியா செல்கிறாள். கோர்ச்சர் ரொபேர்ட் போனியாவின் உள்ளே உறைந்திருக்கும் செஸ் துறையில் இருக்கும் மீதிறனை கண்டறிகிறார். மேலும் செம்மைப்படுத்தி உகண்டாவின் நச்சத்திர வீராங்கனையாக்க முயல்கிறார்.

போனியாவின் தயார், மிக உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர். சிறுவயதிலே கணவனை இழந்தவர். செஸ் துறையில் செல்லும் பிள்ளைகளின் ஆர்வத்தைக் கண்டு ஆரம்பத்தில் தயங்கினாலும், கோர்ச்சர் ரொபேர்ட்டின் பொறுமையான விளக்கம் அனைத்தையும் மாற்றுகின்றது. இருண்டிருந்த அவர்களின் வாழ்க்கை மெல்லிய ஒளிக்கீற்றால் வெளிச்சத்துக்கு வருகிறது. துலங்கும் அவர்களின் வாழ்க்கை பொருளாதார நெருக்கடியிலே இருக்கிறது, இருந்தும் உகண்டா செஸ் போர்ட் அவர்களுக்கு அணுக்கமாகவே நடந்துகொள்கிறது. ஆரம்பத்தில் போனியாவுக்குத் தன் வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையான தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, உயர் பாடசாலைகளில் படிக்கும் எதிர் போட்டியாளர்களைப் பார்த்து இவர்களை எப்படி வெல்ல முடியும் என்று அஞ்சுகிறாள், இருந்தும் இலகுவில் வெல்கிறாள். ஒரு திரையை விலக்குவது போல அவளின் தாழ்வு மனப்பான்மை விலகிச்செல்கிறது. ஒரு கட்டத்தில் ஆதீத தன்னம்பிக்கையையும் அது கொடுக்க ஆரம்பிக்கிறது. போதைதான் அது, வெற்றியின் இன்ப ருசி. அது கோர்ச்சர் ரொபேர்ட்டுக்கு அச்சத்தையும் தருகிறது. அவர் நினைத்தது போல் அது போனியாவின் சரிவுக்கும் வித்திடுகிறது. எனினும் அவள் மீள்கிறாள்.

கோர்ச்சர் ரொபேர்ட் பொறியியல் பட்டதாரி, அந்தத்துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், செஸ் துறையின் மீதிருக்கும் அதிவிசேஷ காதல் அங்கேயே இருக்க வைக்கிறது. சரியான வேலை கிடைக்கும்போது அதனைத் தூக்கி எறிகிறார். அவரின் மன எண்ணவோட்டங்களைப் புரிந்து தன் சினத்தை அளவுடன் வெளிப்படுத்தி நிரம்பித் ததும்பும் காதலால் அரவணைக்கும் அவரின் மனைவி உளவியல் ரீதியாகவும் அவருக்கு அணுக்கமாக இருக்கிறார்.

இப்படத்தின் கதை உண்மைச் சம்பவதத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்குவரும் பெரும்பாலான மாந்தர்கள் நிஜத்திலே இருக்கிறார்கள். இது அவர்களின் கதைதான். இங்குச் செஸ் என்பது வெறும் ஒரு கருவிதான். செஸ்க்குப் பதிலாக வேறு விளையாட்டின் ஊடாகவும் இக்கதையைச் சொல்ல இயலும். அதீத நாடகீய தருணங்களும், நெகிழ்ச்சியான தழுவல்களும், அகங்காரச் சீற்றமும் கொண்ட திரைப்படம்.

வீதியில் சோளம் விற்கும் சமயத்தில், போனியாவின் சகோதரன் விபத்தில் சிக்குகிறான்; வைத்திய செலவுக்குப் பணம் இல்லை. திருட்டுத்தனமாக வைத்தியசாலையில் இருந்து வெளியேற நேர்கிறது. வீடுவந்தால் இரண்டு மாதா வீட்டு வாடகை பாக்கி என்று வீட்டிலிருந்து வெளியேற நேர்கிறது. ஓர் இரவு நிரம்பவே கசப்பாக இருக்கிறது. ஒருபக்கம் வலி,பசி இன்னொரு பக்கம் தங்க இடம் இல்லை. சமநிலையற்று வாழ்க்கை தத்தளிக்கிறது. இதிலிருந்து வெளியேற ஒரே மீட்டு ஊடகம் அவர்களுக்குச் செஸ் விளையாட்டுதான்.

பிரச்சினைகள் என்பது கடலில் அலையும் அலைகள் போல் எப்போதும் இருக்கும். அனைத்துப் பிரச்சினைகளும் ஓய்ந்த பின்பு நமது அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பது வெற்று சல்ஜாலுப்புத்தான். இருக்கும் பிரச்சினைகளுக்கு இடையிலே அனைத்தையும் நகர்த்த வேண்டியிருக்கிறது. இங்கு அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட பிரச்சினை அவ்வளவு சீக்கிரத்தில் அவிழ்க்க இயலாதது. இருந்தும் அந்த முடிச்சுக்களிலே தங்கள் உச்ச எல்லைகளை எட்டிப்பிடித்துவிட்டு அமர்கிறார்கள்.

ததும்பும் புன்னகைகளையும், கசியும் காதலையும், வெற்றியின் செருக்குகளையும் காண்பியத்தில் கண்டு நெகிழ்ந்து Queen of katwe திரைப்படத்தில் அனுபவிக்கலாம். இதே பாணியை ஒட்டி பலபடங்கள் நிரம்பவே வந்துவிட்டன. இருந்தும் உகண்டா நிலப்பரப்பும், அவர்களின் வாழ்க்கைச் சூழலும், ஒளிப்படக் காட்சிகளும் ஒருவித ஈர்ப்பைத் தருகிறது. மனித உறவுகளுக்கான நாடகத்தன்மை நிரம்பவேயுண்டு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *