திரைப்பட வட்டங்களும் அதன் தேவையின் தொடர்ச்சியும்…

காண்பியக் கலையின் வீச்சு என்பது ரசிக்கும் மனநிலையைத் தாண்டி மிகக் கூர்மையாக மனதின் ஆழத்தில் பல சலனங்களை நிகழ்த்திவிடும். இன்றிருக்கும் கலைவடிவங்களில் திரைப்படம் என்ற கூட்டுக் கலைவடிவம் ஏற்படுத்தும் தாக்கம், மற்றைய கலைவடிவங்களில் இருந்து அதீத வீச்சுடன் பாயும் செழுமையான கலைவடிவமாக இருக்கின்றது. காட்சிகள் மூலம் அர்த்தங்களை கடத்துதல் என்பது மிக நேரிடையானது. ஒவ்வொரு பிராயத்திலும் நாம் பார்க்கும் திரைப்படங்கள் ரசனை மாற்றத்தில் பலதை நிகழ்த்தி வாழ்கையின் உட்கூறுகளில் நுணுக்கமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாம் சிந்திக்கும், செயல்படும் தளத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

போருக்கு முன்னைய சூழலிலும், போரின் சூழலிலும், போரின் பின்னைய சூழலிலும் திரைப்படங்கள் நமது மனித மனங்களின் நெருக்கத்தில் பின்னிப்பிணைந்து பல்வேறு ஆறுதலையும், மன விடுதலையையும் தந்திருக்கின்றது.

பொழுதுபோக்காக மட்டும் அல்லாது, அனுபவத்திற்காக திரைப்படம் பார்க்கும் சீரிய திரைப்பட ரசிகர் வட்டம் எம்மண்ணில் இருந்திருக்கின்றது, இருந்துகொண்டிருக்கின்றது.

தென்னிந்திய திரைப்பட பரவலாக்கம் ஈழத்தில் தன் இறுக்கமான பிடிக்குள் எப்போதுமே வைத்திருக்கின்றது, ஒத்த மொழியில் வெகுஜன ரசிப்பு மனநிலையை உருவாக்கும் அவ்வாறான திரைப்படங்கள் ஈழத்தில் ரசிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. எனினும் அதைத்தாண்டி வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் பல்வேறு உலக மொழித் திரைபடங்களை பார்த்தல் என்பது சாதாரண ரசிப்பு மனநிலையில் இருந்து மேவி வாழ்கையின் மற்றொரு உணர்வின் தளத்தை கீறிக் காட்டும். அந்தக் கீறல் இடைவெளிக்கால் நோக்கும் புறவய,அகவய உலகம் என்பது கலையின் உச்சமான தருணங்களாக இருகின்றன.

வர்த்தக திரையரங்குகளில் எப்போதும் தென்னிந்திய திரைபடங்களே காட்சிப்படுத்தப் படுகின்றன. மிக அரிதாகக் கிடைக்கும் வேற்று மொழித் திரைப்படங்களை காண்பிக்க திரைப்பட குழுமங்கள் ஈழத்தில் இயங்கிருக்கின்றன. அதன் மூலம் சீரிய ரசனை வளர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பண்பாட்டின் தொடர்ச்சியாக அச்சிறு வட்டங்கள் இயங்கியிருக்கின்றன. அச்சிறு வட்டங்களில் இருந்தே ஈழத்து தமிழ் சினிமா என்ற கனவு வளர்த்து எடுக்கப்பட்டிருக்கின்றது. எரியும் நெய்விளக்கு சுடர் போல. இங்கு எது ஈழத்து சினிமா என்கிற அடையாள உருவாக்கத்தின் மீது அதிகம் விவாதங்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து அதனை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. அவை தனியான விவாதம்.

தென்னிந்திய திரைபடங்களும், ஹாலிவூட் திரைப்படங்களும் அதிகமாக திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட காலப்பகுதியில், வெவ்வேறு மொழிகளில் வெளியாகிய நல்ல கலையம்சம் கூடிய படங்களை தேர்வு செய்து யாழ் திரைப்பட விரும்பிகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை யாழ். திரைப்பட வட்டம்’ அமைப்புக்கே சேரும். 1979 – 1982 காலகட்டத்தில், ஏ.ஜே. கனகரத்தினாவின் தலைமையின் கீழ் ‘யாழ். திரைப்பட வட்டம்’ என்ற அமைப்பு திறம்பட இயங்கியது. 16mm புரஜக்டரில் அகலத் திரையில் ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் சில ஆங்கிலப் படங்களும், இந்திய விபரணப் படங்கள் கொண்ட ஒரு காட்சியும் காட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

இவ்வமைப்பின் தலைவராக ஏ.ஜே. கனகரத்தினா இருந்தாலும், இவ்வமைப்பின் இயங்கு வெளியின் அதியுன்னத வீச்சுக்கு காரணமாக செயல்பட்ட பிரதான செயற்பாட்டாளராக அ.யேசுராசாவையே குறிப்பிட முடியும். அவரின் தனிப்பட்ட ஆர்வமும் ஆளுமைத்திறனும் யாழ்.திரைப்பட வட்டத்தை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது.

சிறுவயதிலிருந்தே திரைப்படங்களைப்  பார்ப்பதில் ஆர்வம் கொண்ட அ.யேசுராசா கொழும்பில் வசித்த காலத்தில், விமர்சகர் கே.எஸ். சிவகுமாரனின் வழிகாட்டலில் பிறமொழிப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தை வலுப்படுத்திக் கொண்டார். வேலை மாற்றத்தினால் கொழும்பு, பேராதனை ஆகிய இடங்களில் அலைந்த போது நூற்றுக்கணக்கான நல்ல படங்களைப் பார்க்க இயலுமான வாய்ப்பு அ.யேசுராசாவுக்கு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாகவே யாழ்.திரைப்பட வட்டத்தின் மீதான அவரின் செயல்பாடு இருந்தது. தான் பார்த்து வியந்த திரைப்படம் பற்றி, திரைப்பட ரசனை சார்ந்து சரியான புரிதல் இன்றி வறண்டு போய் இருக்கும் யாழ்ப்பாண சமூகத்திற்கு திரையிட்டுக் காட்டி ஒரு விவாதத்தை உருவாக்க அவர் முயன்றார். இதனாலேயே யாழ்.திரைப்பட வட்டம் எனும் குழும அமைப்பில் அவர் பங்களிப்பு தனித்துவமாக இருந்தது.

                                          அ.யேசுராசா

இவ்வமைப்பு கலை, இலக்கியத்தின் மீதான தீராத பற்றுக்கொண்ட பல ஒத்தவயது நண்பர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அமைப்புக்கு உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். உறுப்பினர் கட்டணமாக சிறிய தொகை அறவிடப்பட்டது. ஆறுமாதத்திற்கும், ஒருவருடத்திற்குமாக பணத்தைக்கட்டி உறுப்பினராகித் திரைப்படங்களைப் பார்க்கலாம். மொத்தமாக நூற்றுயைந்து உறுப்பினர்கள் அவ்வமைப்பில் இருந்தார்கள். ஓவ்வொரு மாதமும் ஒரு திரைப்படம் காண்பிக்கப்படும்.

திரைப்படங்களை படச்சுருளாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி படங்களை பெற்றுக்கொள்ள அந்த அந்த நாட்டின் தூதரகத்தில் கேட்க வேண்டும். முறையான விண்ணப்ப கடிதத்தில், அமைப்பின் பெயரில் கேட்கும் போது, வெளிநாட்டு தூதரகம் ஒத்திசைவாக நடந்து கொண்டன. கொழும்பில் இருந்து படச்சுருள்களை அ.யேசுராச காவிக்கொண்டு வருவார். மிகுந்த பாரம் கொண்ட அவற்றை பத்திரமாகக் காவிச் செல்வது இன்றைய காலப்பகுதி போலின்றி கடினமானதாகவே அன்று இருந்தது. திரைப்படத்தின் மீதான ஆர்வம் இதனை எல்லாம் பொறுத்துக்கொண்டது. யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் இருக்கும் ‘டிரிம்மர்’ மண்டபத்திலே திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும் திரையிடப்படும் திரைப்படங்களின் பெயரையும்,திகதியையும் குறிப்பிட்டு உறுப்பினர்களுக்கு தபாலில் தகவல் முன்னமே அனுப்பி வைக்கப்படும்.

இதே காலப்பகுதியில் பிரஞ்சு குடியரசின் ‘அலியான்ஸ் பிரான்சேஸ்’ அமைப்பும் யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பிரஞ்சு திரைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தனர். யாழ்.திரைப்பட வட்டத்திற்கு அவர்களின் உதவியும் கிடைத்தது. சில திரைப்படங்களை காண்பிக்க படச்சுருள்ளை வழங்கியும் இருந்தார்கள். ‘அலியான்ஸ் பிரான்சேஸ்’ அமைப்பு காண்பிக்கும் படங்களை பார்க்க சொற்ப நபர்கள் சென்று கொண்டிருந்தார்கள். இன்றும் அதே நிலையே தொடர்கிறது. இருவரோ,மூவர் வந்தாலும் கூட இன்றும் திரைப்படத்தை தொடர்ச்சியாக ஓவ்வொரு வாரமும் காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

                 பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

யாழ் திரைப்பட வட்டத்தின் செயல்பாடுகள் 1982-களில் ஓய்வுக்கு வந்தது. யுத்தமும் அதன் பின் ஏற்பட்ட நிலைமையும் எல்லோரும் அறிந்ததே. இக்காலப்ப்பகுதியில் கலைகளை விட உயிரின் மீதான கவலையே மக்களுக்கு அதிகமாக இருந்தது. பெரும் இடம்பெயர்வுகளும் மனித அவலங்களும் நடந்து முடிந்தன. இதன் பின் 1998-இல்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் இரா.சிவச்சந்திரனின் தலைமயில் “புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம்” என்கிற சுயாதின அமைப்பு உருவாக்கப்பட்டது. ராமரூபன் மற்றும் அ.யேசுராசாவின் பங்களிப்பில் இவ்வமைப்பு ஒவ்வொரு கிழமையும் பிறமொழிப் படங்களையும், குறிப்பிடத் தகுந்த தமிழ்ப் படங்களையும் விடியோவில் காட்சிப்படுத்தினார்கள்; காட்சியைத் தொடர்ந்து கலந்துரையாடலையும் விரிவாக நடாத்தினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஓரளவுக்கு திரைபடத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொண்டனர். இந்த சமயத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் போது நண்பர்கள் கொடுத்த மிகமுக்கியமான திரைப்படங்களில் இறுவெட்டுகள், தேடி வாங்கிய இறுவெட்டுகள் போன்றவற்றை விடியோ நாடாவில் மாற்றி புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டத்தில் அ.யேசுராசா திரையிட்டார். ஆரோக்கியமாக இவ்வட்டம் சென்றுகொண்டிருக்க மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது. 2006-இல் இவ்திரைப்பட வட்டமும் தனது செயல்பாடுகளை ஓய்வுக்கு கொண்டுவந்தது.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற திரைப்பட வடங்களில் மேற்கூறிய வட்டங்களில் செயல்பாடே முதன்மையாக இருந்தன. இது தவிர தனிமனித நண்பர்கள் குழுமமாகச் சேர்ந்து திரைப்படங்களைப் பார்பதையும் தமக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பகுதிகளில் திரு.ஜெய்சங்கர் மற்றும் அவர்களின் நண்பர்கள் குழுமமாக பல திரைப்படங்களை பல்கலைக்கழகங்களிலும், தன்னார்வ குழுநிலை செயற்பாடுகளின் பின்பும் திரையிட்டு இருந்தார்கள். தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழித் திரைபடங்கள் அவர்களால் மக்களுக்குக் காண்பிக்கப்பட்டிருந்தது. சிறிய, பெரிய அளவில் திரைப்பட விழாக்கள் கூட சுவாமி விபுலானந்த அழகியல்கற்றை கல்லூரியால் நடத்தப்பட்டு இருந்தது. இந்தன் தொடர்ச்சி இன்றும் நீள்கிறது.

கொழும்பில் ‘நிகரி திரைப்பட வட்டம்’ என்கிற குழு இயங்கியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மாதம் ஒரு திரைப்படம் புரொஜக்டர் வசதியுடன் அகலத்திரையில் காண்பிக்கப்படும். இவ்வட்டத்தில் அமைப்பாளர்களாக சிவகுமார், கேதாரநாதன், விக்கினேஸ்வரன், தர்சினி போன்றோர் ஆர்வத்துடன் இயங்கினர். பிறமொழிப் படங்களை காட்சிப்படுத்துவதுடன் அது பற்றிய கலந்துரையாடல்களையும் படம் முடிந்த பின்னர் மேற்கொள்ளுவார்கள். நாற்பது தொடக்கம் ஐம்பது வரையிலான எண்ணிக்கையைக் கொண்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வது வழமையாக நீடித்தது. ஆரம்பத்தில் விழுது அமைப்பு புரொஜக்டர் உபகரணத்தை தந்துதவியது. எனினும் பலசமயம் வாடைக்கு புரொஜக்டர் உபகரணத்தைப் பெற்றும் திரைப்படங்களை காண்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டும் இருந்தது. பாத்திரிகைகளில் திரைப்படம் காண்பிக்க இருக்கும் திகதியை குறிப்பிட்டு செய்தி வெளியிடுவார்கள். படம் ஆரம்பிக்க முதல் படம் பற்றிய சிறிய அறிமுகத்தை துண்டுச் சீட்டில் அச்சடித்துக் கொடுப்பார்கள். மொத்தமாக முப்பத்தி ஐந்துக்கு மேற்பட்ட திரைப்படங்கள் இவ்வமைப்பால் திரையிடப்பட்டிருந்தன.

இன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்பட குழுமம், மாதத்திற்கு குறைந்தது இரண்டு திரைப்படங்களை அகலத் திரையில் காட்சிப்படுத்துகிறார்கள். நிகழ்பட குழுமம் மக்களிடம் சென்று நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தல் என்னும் தொனிப்பொருளில் இயங்க தன்னார்வ இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. மக்களிடம் சென்று திரைப்படங்களை காண்பித்து அவர்களின் ரசனையை உயர்த்துவதோடு, ஏனைய பொதுவிடயம் சார்ந்த செயற்பாடுகளை செயற்பாட்டுத் தளத்தில் விரிவாக்கும் முகமாக மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பும் சிந்தனைத் தளத்தில் இயங்குகிறது.

இதன் ஆரம்ப கருத்துருவாக்கம் மதுரன் ரவீந்திரனினால் உருவக்கப்பட்டு, ஏனைய நண்பர்களின்  கருத்துக்களின் உள்ளீடுகளும் உள்வாங்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. நிகழ்பட குழுவின் தன்னார்வ முயற்சியின் கருத்துருவாக்கத்தில் கவரப்பட்ட “புதிய சொல்” நிகழ்பட குழுவுக்கு புரொஜக்டர்,ஒலியமைப்பு உபகரணங்களை வழங்கியிருந்தது.

ஆனாலும், ஏனைய பொருளாதரக்காரணிகள் சாதகமாக அமையாதனதால் இதுவரை பத்து திரைப்படங்களை இவ்வமைப்பால் அரங்கிலே திரையிடப்பட்டிருந்தது. திரைப்படம் முடிந்த பிற்பாடு கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டடிருந்தது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பதினோராவது திரையிடல் ‘பளை பொது விளையாட்டு மைதானத்தில்’ நிகழ்த்தப்பட்டது. திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்படத்தின் முதலாவது முயற்சி அங்கேயே சாத்தியமாகியது. அங்கிருப்பவர்கள் விளையாட்டு விரும்பிகள் என்பதால் உதைபந்தாட்டத்துடன் சம்பந்தப்பட்ட “Goal dream begins” என்கிற திரைப்படம் காண்பிக்கப்பட்டது. உற்சாகமாகத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களிடம் இறுதியில் கலந்துரையாடலும் முன்னெடுக்கப்பட்டது. ஈழத்தில் இருந்து வெளியாகும் குறும்படங்களை பார்க்க அவர்கள் ஆர்வமாக இருப்பதாகச் குறிப்பிட்டார்கள். தொடர்ந்து இரண்டு ஈழத்து குறும்படங்களும் அவர்களுக்காகக் காண்பிக்கப்பட்டது. அடுத்த அடுத்த திரையிடல்கள் தொடர்ச்சியாக சனசமூக நிலையங்களில் காண்பிக்கும் செயல்பாட்டில் நிகழ்பட குழு முனைப்பாக இருக்கிறது.

மதுரன் ரவீந்திரன், ஸ்டீபன் சன்சிகன் இவ்வமைப்பில் தொடர்ச்சியாக இயங்கும் செயற்பாட்டு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இருந்தும், சேர்ந்து இயங்கி மனித உழைப்பை பல சகவயது நண்பர்களும் கொடுக்கிறார்கள்.

“யாழ்.பொதுசன நூலக வாசகர் வட்டம்” வைகாசி மாதத்தில் இருந்து மாதம் ஒரு திரைப்படத்தை நூலகத்தில் காண்பித்து கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொறுமுறையில் இறங்கியுள்ளது. இங்கே மாதம் ஒரு திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு தொடர்ந்து உரையாடலும் நிகழும்.

தமிழ் மொழி பேசுக்கூடியவர்கள் தமது பிரதேசங்களில் உருவாக்கிய இவ்வாறான திரைப்பட வட்டங்கள் சிறிய அளவிலேனும் தமிழ் மக்களிடம் சலனத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றே நம்ம வேண்டியுள்ளது. இவை கண்ணனுக்கு புலப்படதா ரசனை சார்ந்த மாற்றங்களையே உருவாக்கி இருக்கின்றன. இதன் பிரதிபலிப்பை ஏனைய கலை,இலக்கிய செயற்பாட்டில் கூட அவதானிக்க முடிகிறது. முக்கியமாக புதிய கருத்துருவாக்கங்களைக் கூட திரைப்படங்கள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இருந்து உருவாக்க முடிந்திருக்கிறது. அழகியல் ரீதியிலான வடிவ அணுகுமுறையைக் கூட பலரிடம் அதிகம் உருவாக்கி இருக்கிறது. எனினும் கருத்தியல் சார்ந்த விவாதங்களே அதிகம் நிகழ்திருப்பதை அறிய முடிகிறது.

போர் ஓய்வுச் சூழலுக்குப் பின் இப்போதுள்ள சூழலில் திரைப்பட வட்டங்களின் தேவைகள் அதிகமாகவே உணரப்படுகின்றன. இப்போதுள்ள தொழில்நுட்பம் பல சுமைகளை குறைத்திருக்கின்றது. தேவையான திரைப்படங்களை உடனடியாகவே இணையத்தளங்களில் இருந்து தரவிறக்க முடிகிறது. ஃபேஸ்புக் குழுமங்கள் ஊடாக புதிய பல்வேறு மொழித் திரைப்படங்களின் அறிமுகமும், விமர்சனக் குறிப்பும் எழுதப்படுகின்றன. திரைப்படங்களை விவாதிக்க ஏராளமான ஃபேஸ்புக் குழுமங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பங்கு பற்றுபவர்கள் எல்லாம் திரைப்படம் மீது ஏதோவொரு விதத்தில் பரீட்சியம் உடையவர்கள். இயல்பிலே தேடலுக்கான ஆர்வத்தை வளர்த்தவர்கள். இன்னும் கூர்ந்து பார்த்தால் கணினியும் தங்கு தடையற்ற இணையவசதியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால், இவ்வாறான அறிமுகங்கள் இன்றி தமிழ் வெகுஜன சினிமா தாண்டி வேறுவகையான திரைப்பட உலகம் இயங்கிக் கொண்டு இருப்பது தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீதே கலையம்சம் மிக்க திரைப்படங்களை காண்பிக்க வேண்டிய தேவையுள்ளது. அவர்களிடமே சீரிய ரசனையை உசத்த வேண்டும்.  அவர்களே பெரும்பான்மையானவர்கள். அங்கிருந்துதான் மாற்றத்தை ஆர்ம்பிக்க வேண்டியுள்ளது.

சுயாதீன திரைப்பட வட்டங்கள் அரங்கு ஒன்றை மையப்படுத்தியே இயங்குகின்றன. படம் பார்க்க குறிப்பிட்ட மண்டபம் ஒன்றை நோக்கியே மக்கள் வரவேண்டும். மிகப்பெரிய சிக்கலே இங்கேதான் ஆரம்பிக்கின்றது. பொதுவாக இவ்வாறான வட்டங்கள் மீதான பார்வை சாதாரண பொதுமக்களிடம் கண்டு கொள்ளப்படுவதில்லை. காரணம் அவ்வட்டங்களின் செயல்பாடுகள் சார்ந்த பரவலாக்கம் இல்லாமலிருப்பது. இரண்டாவது அவ்வடங்கள், குழுமங்கள் மீதிருக்கும் புறக்கணிப்பும், எள்ளலும் சார்ந்த பார்வைகள். இவை தேவையற்ற செயல்பாடுகள் என்ற கருத்து நமது சமூகத்தில் கடுமையாக ஊறியிருக்கின்றது. துறைசார்ந்த அறிவுக்கும், மனித வாழ்க்கை சார்ந்த ஞானத்துக்கு இடையிலான வேறுபாட்டை நமது ஈழத்து தமிழ் சமூகத்தின் பொதுப்புத்தி தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. திரைப்படங்கள் என்றாலே கலாசாரத்தை சீர்குலைக்கும் கலை வடிவம் என்ற கருத்தே துறைசார் கல்விப்புலத்தில் இருப்பவர்களால் கூட முன்வைக்கப்படுகின்றது. இந்த எதிர் மறை அலைகளை கலைக்க வேண்டிய தேவையும் எம்முன்னே குமிந்திருக்கின்றது.

உண்மையில் மக்களிடமே திரைப்பட வட்டம் செல்ல வேண்டும். மண்டபத்தை மையப்படுத்தி திரைப்படங்களை காண்பிக்காமல், மக்களை மையப்படுத்தி திரைப்படங்களை காண்பிக்கும் வகையில் திரைப்பட வட்டங்கள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊராகச் சென்று திரைப்படங்களை காண்பிக்கப்பட்ட வேண்டும். சனசமூக நிலையங்கள், பாடசாலைகள் ஊடக இதனை நிகழ்த்த வேண்டும். இன்றைய தொழில்நுட்ப உபகரணங்கள் அதற்கு ஏற்து. இவ்வாறான செயல்பாடுகளும் அதன் பின் ஏற்படும் உரையாடலே எமது சமூகத்திலிருக்கும் பிற்போக்கான கருத்துகளை மாற்றும் வல்லமையை அல்லது மாற்ற முயலும் வல்லமையை உருவாக்கும். இன்றைய யுகத்தில் அணைத்தையும் அலம்பி சுத்தப்படுத்தும் கருத்தியல் மாற்றங்களை காண்பியல் கலையே நிகழ்த்துவதற்கான வாய்பை அதிகம் கொண்டிருக்கின்றது. அது அர்த்தங்களை வீரியமாகக் கடத்தும். எழுத்தில் இருப்பதை வாசித்து கற்பனையில் சித்தரித்து ஒரு காட்சியை புரிந்து கொள்வதற்கு எடுக்கும் காலப்பகுதியைவிட, திரைப்படங்கள் ஏற்படுத்தும் புரிதலுக்கான காலம் குறைவாக இருக்கும். நேரிடையான காட்சிகளோடு பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. காண்பியல் கலையின் வல்லமையும் அதுதான், எனவே ஒரு திரைப்படம் காண்பிக்கப்பட்ட பின்னர் விரைவில் அதுசார்ந்த உரையாடலுக்குள் நுழையலாம்.

ஒவ்வொரு பருவங்களின் போதும், ஒவ்வொரு வகையான முதிர்ச்சி ஏற்படும், அதற்கு ஏற்ப கற்பனைத்திறனும் மாறுபடும், நகச்சுவை உணர்வு மாறுபடும், செயல்படும் திறனும் மாறுபடும். எனவே அவ்வாறான பருவங்களின் போது பார்க்கும் சிந்திக்கும் விடயங்கள் ஆழமான சமூக மாற்றத்தை உருவாக்கும். எனவே திரைபடங்களை காண்பிக்கும்போது இருக்கும் தேர்வு முறைபற்றி அதிகமாகவே சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது.

வன்முறையாலும் அதன் பாதிப்புகளாலும் பீடிக்கப்பட்ட எமது சமூகத்தின் உளவியலை ஆற்றப்படுத்தவும், தமிழ்சமூகத்தில்; புரையோடிப் போயிருக்கும் பிற்போக்குத் தனங்களை களையவும் திரைப்பட வட்டங்களில் தேவை அதிகமாகவே உள்ளது. அதே நேரம் திரைப்பட வட்டங்களில் திரையிடப்படும் படங்களின் தேர்வு முறையில் அதிகம் நிபுணத்துவமும் தேவை.

பின் குறிப்பு:-

இக்கட்டுரையை எழுதுவதற்கான தரவுகள், தகவல்களை அ.யேசுராசா மற்றும் கேதாரநாதனை நேரடியாகச் சந்தித்து உரையாடியதன் மூலம் பெற்றேன். திரு.ஜெயசங்கர் ஊடான தொலைபேசி உரையாடலின் மூலம் அவர்களின் செயற்பாடுகளை அறிந்தேன். அவர்களுக்கு என் நன்றிகள்.

இக்கட்டுரை புதிய சொல் இதழில் பிரசுரமாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *