பிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்

1

இலக்கிய வகைப்பாடுகள் அவசியம் தேவைதானா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். அவற்றைப் பிரிவினைக்குள் உட்படுத்துவதற்கு புறவயத் தேவைகள் இல்லை. எனினும் வாசிப்பின் இலகுவுக்கும், மேலதிகமான புரிதலுக்கும் இலக்கியத்தின் வகைப்பாடுகள் தேவையாகத்தான் இருக்கின்றன. விமர்சினரீதியாக ஒரு படைப்பை அணுகுவதற்கும் வகைபாடுகள் தேவையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இங்கேயே பன்மைத்துவமான அழகியல் சாத்தியங்களை கருத்தில்கொள்ளவும் இயலும்.

புகலிட இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட இனவன்செயல், அரசியல், யுத்த நெருக்கடியால் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் உலகின் பல பாகங்களுக்கு கிளம்பிச் சென்றார்கள். இவர்கள் அங்கிருந்து எழுதிய படைப்புகள்தான் புகலிட ஈழ இலக்கியங்களாகப் பெரும்பான்மையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த அடையாளப்படுத்தல் ஒற்றைத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்க முடியும். இருப்பினும் படைப்பின் உட்பொருள் சார்ந்து புகலிட இலக்கியத்தை அடையாளப்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம். படைப்பை எழுதுபவர் மட்டும் புலத்தில் இருந்துகொண்டு தாயகம் சார்ந்த கதைகளை nostalgic ரீதியில் எழுதினால் அது புலம்பெயர் இலக்கியமாகுமா என்றால், ஆகலாம். அது புலம்பெயர் தேசத்தில் நிகழ்ந்த transformation பார்வை படைப்பில் வெளிப்படும் தன்மையைப் பொறுத்தது. அதை அணுகிப் பார்ப்பதற்கு ஒரு விமர்சன அணுகுமுறையும் தனியே தேவையாக இருக்கிறது.

இன்றைய சமகாலத்தில் புகலிட இலக்கியத்தில் படைப்பாக்கத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர்கள் எவர் எவர் என்று பட்டியல் போட்டால், மிகச் சொற்பமானவர்களையே சுட்ட இயலும். அடுத்த தலைமுறையினரில் கண்ணுக்கெட்டிய தூரம் எவரையும் கண்டுகொள்ள இயலவில்லை என்பதும் துக்ககரமானது.

புலம்பெயர்ந்து சென்றவர்களின் அடுத்த தலைமுறையில் பிறந்து வளர்ந்தவர்கள் எழுதும் படைப்புகளைப் புகலிட இலக்கியத்தின் அடுத்த தொடர்ச்சியாகக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் சேர்ந்தே வரும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அவை தமிழில் அல்ல. புலம்பெயர்ந்து வசிக்கும் நாட்டின் பூர்வீக மொழியிலே எழுத ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எழுதுபவை யுத்தத்தின் எச்சத்தின் தொடர்ச்சியாகவும், அது அடுத்த தலைமுறையையும் விரட்டும் போக்கையும் பேசும்போது நிச்சயமாகப் புகலிட/புலம்பெயர் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே கொள்ளவேண்டிஇருக்கிறது. (மேலும் கீழைத்தேய மனநெருக்கடி, இனவாத, நிறவாத சிக்கல்கள்) இங்கேதான் மொழி என்பது உடைகிறது. Exile Literature மொழிக்குள் சுருக்க முடியாததாக எழுகிறது.

கூர்ந்து பார்த்தால் புகலிட இலக்கியத்தின் பொதுப்பண்பாக சிலவற்றை அடையாளம் காண இயலும். அவற்றைச் சுருக்கிப் பார்த்தால் வலியின் வெளிப்பாடே அதன் சாராம்சம் என்பதை அவதானிக்கலாம். நெருக்கடிகளும், சிதைவுறும் மனங்களும் எதிர்கொள்ளும் வலியின் வெளிப்பாட்டு வடிவமாகவே புலம்பெயர் இலக்கியம் இன்றும் உள்ளது.

2

ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம், பார்த்தீபன், சகர்வர்த்தி என்று நீளும் ஒரு பெரும் பட்டியலை புகலிட இலக்கிய செயற்பாட்டளர்களின் முன்னோடிகளாக அடையாளப்படுத்தப்பட்டு பட்டியல் இடப்படுகிறது. ஆனால், க.கலாமோகனைத்தான் புகலிட இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகச் சொல்லமுடியும். இதுவரை அவர் எழுதிய இரண்டு தொகுப்புகளான ‘நிஷ்டை, ஜெயசீந்தன் குறுங்கதைகள்’ போன்றவற்றிலுள்ள கதையின் கலைதன்மைக் கூறுகள் அதற்கான சாத்தியத்தை நிறுவுகின்றன.

நிஷ்டை தொகுப்பிலுள்ள குறிப்பின்படி ‘கந்தசாமி கலாமோகன்’ புலம்பெயரும் வரை கொழும்பில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். அதன்பின் 1983-இல் ஏற்பட்ட இனவன்செயலால் பாதிக்கப்பட்டு பிரான்சுக்கு தஞ்சம் அடைந்தாகத் தெரிகிறது. அதன்பின்பே புகலிடத்திலிருந்து கவிதைகள் கதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். எழுதப்பட்ட சிறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகள் ‘நிஷ்டை’ என்கிற தலைப்பில் சிறுகதைப் புத்தகமாக்கப்பட்டு எக்ஸில் வெளியீடாக 1999-ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. புகலிடத்திலிருந்து எழுதப்பட்டதால் புகலிடச் சிறுகதைகள் என்று கருத்தில் கொள்ளலாம் என்பது கலாமோகனின் வாதமாக இருக்கிறது.

இந்தப் பன்னிரண்டு கதைகளையும் ஒருசேரப் படிக்கும் போது சிலவற்றை தொகுத்துக்கொள்ள இயலுகிறது. கலாமோகனின் படைப்புலகம் சிதறுண்ட தன்னிலைக் கூறில் சொல்லப்பட்டவை, எங்கெயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனமே கதைகளில் சுழல்கிறது. ஒருவகையில் இயல்பான ஒழுக்கு ஒன்றில் பொருந்திக்கொள்ள முடியாத அவதி அங்கே இருப்பதைக் காண இயல்கிறது. புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் எதிர்கொள்ளும் நெருக்கடியில் முதன்மையானது மொழியும், பொருளாதாரமும். இதைவிட வன்முறையின் எச்சம் மனதின் அடியே பதுங்கியிருந்து வெவ்வேறு வகையில் துன்பம் கொடுக்கும், அதே நேரம் காமம் உள்ளேயிருந்து அவதிக்குள்ளாக்கும். இந்த அவதியே கலாமோகனின் படைப்பில் தெறித்துத் தெறிந்து உதிர்கிறது.

கலாமோகனின் சொல்முறை வடிவம் என்பது ஒரு பிடிக்குள் இதுதான் வடிவம் என்று சொல்ல முடியாதவாறு சிதறிக்கொண்டே இருக்கின்றது. இந்த வடிவச் சிதறல் தனக்குள்ளே ஒரு ஒழுங்கை இன்னுமொரு பக்கம் உருவாக்கியும் விடுகிறது. இதனால் கலாமோகனின் சிறுகதைகளை ஒரு வடிவத்துக்குள் வைத்து பார்க்க முடியாமலே இருக்கின்றது.

இதனை ஐரோப்பிய மரபில் மொந்தாஜ் (montage) கலை என்று சொல்வார்கள். வெவ்வேறு சம்பவங்களைத் துண்டு துண்டுகளாக வெவ்வேறு கோணத்தில் ஒன்றின் மீது ஒன்றாகப் பொருத்தி முழுமையான இறுதிவடிவத்தை வளைத்து எடுக்கும் அழகியல். ஒவ்வொரு சம்பவங்களுக்கும் தனியான சுயாதீன பார்வை இருக்கும். இதை ஒன்றோடொன்று பொருத்தும் போது அது தனக்கென்று ஒரு வடிவத்தை எடுக்கும். இங்கே பன்மையான பார்வைகள் பிரமாண்டமான பெரிய பார்வையை உருவாக்கிவிடும். சிதறுண்ட மனங்களையும், இருத்தலியல் இடர்களையும் கலாமோகன் இந்த அழகியல் வடிவத்தில் எழுதியிருப்பது சிறுகதைப் பரப்பில் அவருக்கே உரிய தனித்துவ இடத்தை தக்கவைக்கிறது. இதற்கூடகவே கலாமோகனை அணுகுவது அவரின் ஆக்கங்களை இன்னும் புரிந்துகொள்ள உதவும்.

கலாமோகனின் பெரும்பாலான கதைகளில் தன்னிலையில் இருந்து ஒருவர் இயல்பாக கதையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஏறக்குறைய மூடிய தனியறையில் இருந்து, யாருமேயற்ற சுவரைப் பார்த்து தன் கதையைச் சொல்வது போலவே இருகின்றது. இதன் எதிரொலிகளையே நாம் மறுப்பக்கத்தில் கேட்கிறோம்.

அவர் எல்லாக் கதைகளிலும் கையாளும் மொழிவடிவம் என்பது கவிதைக்கான மொழியை எடுத்துக் கொள்கிறது. கலாமோகன் இயல்பில் கவிஞராக இருப்பதும் அதற்கான காரணமாக இருக்கலாம். சிலகதைகளில் பைபிள் மொழியின் நீட்சியையும் அவதானிக்கலாம் (கனி,இரா). இன்னும் கூர்ந்து பார்த்தால் லா.சா.ராவின் மொழியோடு ஓரளவுக்குப் பொருந்திப் போவதை அவதானிக்க இயலுகிறது. அதீதமாக, மொழியை துண்டாக்கி அழகுணர்ச்சியூட்டிவிடுகிறது. ஆனால் நாம் நம்பும் வாசித்துப் பழக்கப்பட்ட அழகுணர்ச்சிக்கு எதிரான அழகுணர்ச்சியைக் கொண்டிருக்கிறது. அதனால் பலருக்குப் புரிந்து கொள்ளமுடியாத, மொழி மீதான செயற்கையையும் கொடுத்துவிடுகிறது. இந்த அழகியலின் தொடர்ச்சியை சமீபத்தில் வெளியாகிய ‘இடையில்’ கதைவரை அவதானிக்க இயலுகிறது. குறைத்துரைத்து எழுதுதல் எனும் அழகியலில், குறுஞ்சித்தரிப்பாக சம்பவங்களை கோர்க்க இயலுகிறது கலாமோகனால்.

3

புலம்பெயர்ந்த மனிதர்களின் புற நெருக்கடிகளைச் சொல்லும் கதைகளாக உருக்கம், மூன்று நகரங்களின் கதைகளைச் சொல்லலாம்.  இங்கு நெருக்கடி என்பது சூழல் சார்ந்ததாகவே இருக்கிறது. யாழ்பாணம் – கொழும்பு – பாரீஸ் என்ற மூன்று நகரங்களுக்குள் சிக்குண்டு அலைந்த மனம் தகப்பனின் இறப்பின் பின்பே கண்ணீர் விடக்கூட முடியாத அலைச்சலில் தன்னிலை இழந்து நிக்கிறது, ஒரு நீண்ட கதையின் சுருக்கம் போல் ‘மூன்று நகரங்களின் கதை’ தோன்றினாலும் சிதறுண்ட மனதின் உடைந்த துண்டுகளை ஓட்டுவதாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதானலே காலத்தை சுருக்க வேண்டியுள்ளது.

மாமாவுடனான தொலைபேசி உரையாடல் இப்படிச் செல்லும்.

“காசை உடனே அனுப்பிவை”

“ஓம்”

“அவவை உடனைன அங்கை எடு”

“ஓம்”

“நாளைக்கு எனக்கு ரெலிபோன் எடு”

“ஓம்”

இந்த ஒம்களின் பின்னாலுள்ள சிதைவுறுதல் அதீத விபரணைகள் இன்றி குறைத்துரைத்துச்  சொல்லும் அழகியலில் தன்னை நிறுத்துகிறது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறை மொழிப்பிரச்சினை, வேலை திண்டாட்டம், பழக்கப்படாத உணவுப் பிரச்சினை என்று பல்வேறு நுண்மையான வாழ்வியல் இடர்பாடுகளில் இருக்கும்போது அதை எல்லாம் விலாவரியாக நாட்டிலுள்ளவர்களுக்கு சொல்லி விளங்கப்படுத்தும் நிலையையில் இருப்பது கடினம். இரண்டொரு வார்த்தையில் அதன் கடினங்களை கடந்து செல்லவே மனம் விரும்பும். அதை கட்சிதமாகச் சொற்களில் கையாண்டிருப்பார் கலாமோகன். ஆர்ப்பாட்டம் இன்றித் துயரைக் கடந்து செல்லுதல். துயருற்ற மனம் யோசிக்கும் தன்னிலைக் கேள்விகள், தத்துவத்தை நோக்கியும் செல்கின்றன

“இரண்டு பக்கங்களிலும் போலித்தனம் இல்லை. ஒரு வேளை அது என்னிடம்தான் உள்ளதோ? எது போலி? எது யதார்த்தம்? நான் வாழும் விதம் கூட யதார்த்தம்தான். என்னிடம் காசு இல்லை. காசு இருப்பது சிலரின் யதார்த்தமாக இருக்கும் போது என்னுடையதோ அதற்காகத் தவிண்டையடிப்பது. இன்று ஒருமையில் பேசும் பலர் நாளை என் நிலைக்குத் தள்ளப்படும்போது “பாரும், எம்மடை பாடு இப்படியிருக்கு” என்று பன்மையில் பேசுவார்கள். எது ஒருமை எது பன்மை என்பதை விளக்கிக் கொண்டதுதான் எனது இருதலைக்கொள்ளி எறும்பு நிலைக்குக் காரணம் என நான் ஒரு போதுமே சொல்லமாட்டேன். எனது ஒருமை பன்மைகளிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்று. ஒருமைகள் பன்மைகளாகி, பன்மைகள் பன்மைகளாகாமல், இன்னொரு ஒருமையை வாழும் உலகில் நான்.”

இந்தக்கேள்விகள் ஒரு சாமனியன் வெற்றுச்சுவரைப் பார்த்து தனியே கேட்கும் கேள்விகள் போல் தோன்றினாலும், இந்தச் சிக்கல் மொழிகளிடையே இருக்கும் வாழ்வின் மீதான தேடலே இக்கதையை இன்னும் உயர்த்திச்சென்று கலையாக்குகிறது.

உருக்கம் சிறுகதை மிக அப்பாவியான தொழிலாளி ஒருவரின் கதை. முதலாளிக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் தமிழ்-ஸ்ரீலங்கன் தொழிலாளியின் பார்வையில் கதை நகர்கின்றது. இங்கே அத்தொழிலாளியின் அப்பாவித்தனத்தைச் சிறிய சித்தரிப்புகள் ஊடாக சொல்லிச் செல்லப்படுகிறது.

என்ர பத்திரோன் (முதலாளி) நல்லவர் என்று கதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்தே அகவய சித்தரிப்புகள் கூர்மையாக கதையில் நகரும். பத்திரோனின் இரண்டாவது மகள் வளர்க்கும் நாய் மீதான சித்தரிப்பு இப்படி வரும். “நாய்க்குட்டி என்னைப் பார்த்து வாலாட்டிறது. எனக்கு வாலில்லை. இருந்தா அதுக்கு நானும் வாலாட்டியிருப்பேன்”

குறைத்து எழுதுதலின் ஊடாக தன்னிலையை வாசிப்பவருக்கு பகடியாக உணர்த்திக்கொண்டு, தன்னை அப்பாவி என்று சொல்லாமல், அதன்பின்பு இருக்கும் தீவிரத்தைக் காட்டும் சொல்லுமுறையாக இருக்கின்றது. இந்த சித்தரிப்பிலே காலனியாக்க மனபாவத்திற்கு ஒத்த அடிமை மனநிலை மற்றொரு பக்கத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தக் பாவனைகளைக் கிண்டல் கலந்து உடைக்கிறது இக்கதை.

ஒருவகையில் உணர்த்துதல் தான். புறவயமாக அவனைப்பற்றிச் சொல்லாமால், அகவயமாக அவரைப் பேசவிட்டு அதற்குள்ளேயே உடைவுகளைச் செய்கிறார் காலமோகன். இங்கே தொழிலாளியின் பார்வையில் வரும் கூர்மையான அவதானங்கள் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அல்ஜீரியத் தொழிலாளர்களை ‘அடையான்’ என்று தமிழர்கள் சுட்டும் இடங்கள், அதன் பின்பேயிருக்கும் தமிழர்களின் அரசியல் புரிதல்கள், பலவீனங்கள், பற்றாக்குறைகள் வேடிக்கையாக சொல்லப்பட்டாலும் அதன் வீச்சு அதிகம் தான். அவற்றைத்தான் புலம்பெயர் வாழ்கையின் புறவய கூறுகளில் முக்கியமானவையாக நோக்க வேண்டியுள்ளது.

‘கனி’ நிஷ்டை தொகுப்பிலுள்ள இறுதிக்கதை. பகடியாக எழுதப்பட்ட பிறழ்வு உறவைக் குறிக்கும் சிறுகதை. பைபிள் மொழியில், அதீத உணர்சிவயமான கதையை புதிய வடிவம் ஒன்றுக்குள் வார்த்துப் பார்த்ததுள்ள கதை. 1997 – இல் எழுதப்பட்ட கதையாக இருப்பினும், உத்தி வெளிப்பாட்டிலும் சரி, மொழியின் உயயோகத்திலும் சரி இன்றும் புத்தம் புதிய கதையாவே வாசிக்கும்போது தோன்றுகிறது. இங்கே சொல்லப்படும் உறவுச்சிக்கல் என்பது மிக எளிமையான திரும்பத்திரும்ப தற்பொழுது எழுதப்பட்ட கதையாவிட்டது. ஆனால் முடிவை உணர்வெழுச்சியுடன் முடிக்காமல், அழுத்தங்களும் கொந்தளிப்புகளும் இல்லாமல் முடிப்பதாலே அக்கதையை இன்னும் சிலாகிக்க முடிகிறது.

“இதை நீ ஏன் எனக்கு முதலிலே சொல்லவில்லை?

“ஏன் சொல்லவேண்டும்?

“சொல்லியிருப்பின் பொருத்தமான தினங்களை தேர்வு செய்து பிரச்சினைகள் வராமல் நாங்கள் ரகஸியமாக எமது நிர்வாக சாம்ராஜ்ஜியத்தை வாழ்ந்து கொண்டிருக்கலாமே!”

“நான் உங்களது தேகதாகங்களின் தீனி மட்டும்தானா?

“ஏன் நீ மட்டும் உனது தேகங்களிற்கான தீனியை எனது உடலிலிருந்து பெற்றுக்கொள்ளவில்லையா?

உடலின் பங்கீடுகளை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் உடைத்துவிடுகிறது இக்கதையில். கழிவிரக்க மன்றாடல்களை எழுதிப்பி ஒரு பாலினத்தை மட்டும் அதிகாரம்மிக்கதாக்காமல், இருவரின் இச்சையையும் மானுடம் நோக்கித் தள்ளிவிட்டு வெளியே சென்றுவிடும் உத்தியை இவ்வுரையாடலில் நோக்கலாம்.

திருமணம் முடித்து பிள்ளை இன்று வாழ்ந்து வரும் கதைசொல்லிக்கு ஓரு பிறழ்உறவு உண்டு. அவர் உறவிலிருக்கும் பெண், வாரிசு அற்றவர். அவரின் கணவர் உடலியல் போதாமையால்தான் அவரால் பிள்ளை பெற்றுக்கொள்ள இயலவில்லை. கதை சொல்லியினால் தற்பொழுது கர்ப்பம் தரித்துவிட்டார். அதன்பின் நடக்கும் உரையாடல்தான் கதை. சம்பவ விபரணைகளின்றி நேரடியான உரையாடல்களாக உணர்வுகள் கூட சித்தரிக்கப்படாமல் சொல்லப்படுகிறது. இந்த உரையாடலில் இருக்கும் பகிடியும் கிண்டலும், கதையை உணர்வுக் கொந்தளிப்பன்றி சித்தரித்துச் செல்கிறது.

நிழல் சிறுகதை பெண் X ஆண் உறவுச்சிக்கல் சார்ந்த கதைதான். ஆனால், இக்கதை முற்றிலும் படிமரீதியில் சொல்லப்படும் கதை. ஆகவேதான் இக்கதை வழமைக்கு மறான கதையாக தோன்றுவதோடு, புதிய வாசிப்பு சாத்தியங்களையும் திறந்துவிடுகிறது. இங்கு நிழலாக வரும் படிமம் அகங்காரம்தான். இந்த அகங்காரத்தை நிழல் எனும் படிமமாக உருமாற்றும் கற்பனைத்திறன் சுவாரஸ்யமாக வாசிக்க வைக்கிறது. பிடிகிடைக்கவும், பிடியை நழுவவும் செய்யும் சொல்முறை. அதனால் என்னவோ ஒருவகையான மயக்கத்திலே வாசிக்க வேண்டியுள்ளது.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் முப்பது தொடக்கம் முப்பத்தியேழு வயதுகளில் கலாமோகன் எழுதியவை. இந்த வயதில் அவருக்கு இருக்ககூடிய முதிர்ச்சி எல்லாமே புனைவில் கைகூடி வெளியே வந்திருக்கிறது. ஏக்கம் மற்றும் தேவைகளுக்கிடையே நடமாடும் ஆழ்மனத்தின் வெளிப்பாடு கலாமோகனின் கதைகளில் இன்னுமொரு பொதுத்தன்மையாக தெரிகிறது. எனினும் அடையாள வீழ்ச்சியும், நாடற்று, தேசமற்று அலையும் மனிதனின் (எனது தேசம்) அகங்கள் தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபத்தில் வருகின்றன.

கலாமோகன் தன் படைப்புகள் ஊடாகத் தேடும் கேள்விகள், ஒவ்வொரு படைப்பிலும் மாறியவரே இருக்கிறது. இருத்தலின் மீதான சந்தேகங்களை அணுகிப்பார்ப்பதாகவே அவை எனக்குத் தோன்றுகிறன. புலம்பெயர்ந்த பின் தமிழர்களின் அடையாளங்கள் இழந்து செல்வதை வெளியே நின்று அது நல்லதா கெட்டதா என்று அலட்டிக்கொள்ளாமல் நோக்கும் தன்மையும் கலாமோகனிடம் உண்டு, அவர் தீர்வுகள் வழங்குவதில்லை கேள்விகளையே கேட்கிறார். எல்லாக் கதைகளும் முதலாவது வரியிலே ஆரம்பித்து விடுகின்றன. ஒரு கலக்கமான வார்த்தையுடன், தனக்குத்தானே கேட்பது போல, அல்லது யாருக்கோ சொல்வது போல ஆரம்பித்துவிடுகிறன்றன. அதில் ஒரு கேள்வி இருக்கும். இந்த வினா எழுப்பும் தன்மை, கதைகளில் அதை மட்டும் எழுப்பிவிட்டுச் சென்றுவிடுவதில்லை. அதற்கான விடைகளை வெவ்வேறு சம்பவங்களில் கண்டுபிடிக்கவும் பார்க்கிறது. ஆனால், முழுமையாக கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவது போலவே எழுதப்படுகிறது. மிகுதியை வாசகர்தான் இட்டு நிரப்பவேண்டியுள்ளது. அதுவே கலாமோகனின் படைப்பாக்க உத்தியாகவுள்ளது.

கலாமோகன் வேறு புனைபெயர்களிலும் சஞ்சிகைகளில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ஜெயந்தீசன் என்ற பெயரில் எழுதிய குட்டிக்கதைகளில் பெரும்பாலானவை கனடாவிலிருந்து வெளிவரும் ‘தாயகம்’ இதழில் பிரசுராமாகியுள்ளன. மித்ரா வெளியீடாக வந்த இக்கதைத் தொகுப்பின் முன்னுரையில் இக்கதைகளை Satire கதைகள் என்று எஸ்.பொ குறிப்பிடுகிறார். அதாவது அங்கதச்சுவை கொண்டவை என்கிறார். இக்குருங்கதைகள் தனியே சிறிய தருணங்களை காட்டிவிட்டுச் செல்லும் தற்கால குறுங்கதை வடிவத்தில் இருந்து வித்தியாசப்பட்டது என்றும் சொல்லலாம். நீண்ட  விவாதத்திற்குறியவற்றைக் கூட உரையாடலில் கிண்டலடித்து, பகிடிசெய்த்து உடைத்துச் செல்வதை கலாமோகன் குறுங்கதைகளாக்க முயன்று இருப்பார்.

அதிகாரங்களைப் பார்த்து கேள்வி கேட்பதே ஒரு சீரிய எழுத்தாளரின் வேலையாக இருக்கும். வெறுமே சமூகம் கட்டமைத்த அதே மரபிலிருந்து பேசுவிட்டுச் செல்வதல்ல. கலாமோகனின் இக்குறுங்கதைகள் அப்படியானவை. சமூகத்தின் மொதுமனநிலையை சீண்டிப் பார்க்கிறது. அதற்குள்ளிருக்கும் அழுக்கை வெளியே இழுத்து கிண்டல் செய்கிறது.

எழுத்தாளர்கள், இடதுசாரிகள், கம்னியயூஸ்டுகள், தேசியவாதிகள் என்று நீளும் பட்டியலில் தம்மை பொருத்திக் கொள்பவர்களுக்கு இடையில் ஊடுருவியிருக்கும் பிற்போக்குத்தனங்களை, ஆண்மையவாத சிந்தனைகளை வெளியே இழுத்து தர்மடி கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிறுக்கிறது. அதாவது பிரச்சாரம் இன்றி அதன் மநிலையை வெளியே காட்டிவிடுதல். முடிவில் நீதிநெறி புகட்டும் முற்போக்கு எழுத்துக்குச் சென்று இலக்கிய ஸ்தானத்தை இழக்கவில்லை.  இதைத்தாண்டி, அகதிகளின் ஆரம்பகால வாழ்கையை ஆணவம் செய்வதோடு அதன் வலிகளை இலக்கிய பூர்வமாக அணுகியும் உள்ளன இக்கதைகள். இங்கே கையாலும் மொழிநடையில் இருக்கும் பகிடித்தன்மை கசப்பின் கறைபடிந்தது. அதன் உள்ளே ஏராளம் வலிகள், குறிப்பாக அகதிகளின் வலிகள் அழுத்தமாக இருக்கின்றன. இந்த எழுத்துமுறையின் தொடர்ச்சியாகவே ‘காலம் செல்வம்’ எழுதிய ‘எழுதித்தீரா பக்கங்கள்’ புத்தகத்தையும் பார்க்கவேண்டியுள்ளது. கலாமோகனின் குறுங்கதைகளையே என் அவதானத்தில் ‘எழுதித்தீரா பக்கங்களின் முன்னோடிப் புத்தகமாக வைப்பேன் (அகதி வாழ்க்கை சார்ந்தும், அதை எள்ளல் கலந்த வலியுடன் சித்தரித்தல்). காரணம், ஆவணப்படுத்தல் என்பதைத் தாண்டி நுணுக்கமான உணர்ச்சிகள் வழியாக உண்டாகும் மன நகர்வு (nuance) இங்கே நிகழ்வதுதான். அதனால்தான் இலக்கியத் தன்மையை இவை அடைகின்றன.

‘நிஷ்டை’ தொகுப்பையும், ‘ஜெயந்தீசன் கதைகளையும்’ ஒப்பிட்டால் இரண்டுக்கும் இடையே சொல்லுமுறையிலும், வடிவச் செழுமையிலும் பல்வேறு வேறுபாடுகளைக் காணலாம். ஆனால், இரண்டுக்கும் இடையே ஒரு பாலம் உள்ளது. அது அவரின் படைப்பிலிருக்கும் பொதுத் தன்மையனா அகத்தின் சிதைவு.

இந்த அகத்தின் சிதைவுகளை, அழுத்தமான உளவியலை சென்று தொடுகிறார். அனால், அவரால் புறக்கட்டமைபை அதேயளவுக்கு என்று தொட முடியவில்லை. பெரும்பாலான கதைகளுக்கு பாரீஸ் இயங்கு களம் என்றாலும், பாரீஸ் சார்ந்த புறவய சித்தரிப்புகளை கதைகளில் காணவே முடிவதில்லை. இதுதான் கலாமோகனின் பலவீனமாக உடனடியாக சொல்ல முடிவது.

புகலிட இலக்கியத்தில் நமக்கு முன்னே பல முன்னோடிகள் இருப்பினும், நான் எனக்கு அணுக்கமாகக் கருதும் முன்னோடி என்றால் அவர் கலாமோகன் தான். அவரே ஆவணப்படுத்தலோடு மட்டும் நின்றுவிடாது, இலக்கியத் தரத்துக்குள் நுழைந்தவர்களில் முதன்மையானவர். வலிகள் நிறைந்த புகலிட வாழ்கை எனும் பறவையிலிருந்து உதிர்ந்து வீழ்ந்து அந்தரத்தில் அலைவுறும் இறகு அவர். நிஷ்டை தொகுப்பு மீள்பிரசுரம் செய்யப்பட்டு (மேலும் தொகுக்கப்படாத கதைகளுடன்), மீண்டும் விவாதிக்கப்பட வேண்டிய தேவை இருப்பதை இலக்கியம் எனும் செயற்பாட்டில் பற்று வைத்தவன் என்ற முறையில் உணர்கிறேன்.

***

பின்குறிப்பு -‘ புலம்பெயர் இலக்கியம்’ என்ற சொல்லைவிட ‘புகலிட இலக்கியம்’ (Exile Literature) என்ற அடையாளப்படுத்தல் பொருத்தமானது என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெருக்கடியால் வேறொரு அந்நிய நாட்டிற்குச் சென்று புகலிடத் தஞ்சம் பெற்றவர்களால் எழுதப்படும் இலக்கியத்தை Exile Literature என்று குறிப்பிடுவதே சிறந்தது. அதேநேரம் ஒட்டு மொத்தமாகப் புகலிட இலக்கியம் என்றால் அடுத்த தலைமுறையினர் தான் வருவார்கள். ஆனால் அவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் இல்லை அந்த நாட்டின் பிரஜைகள். இப்போது இவர்களை Exile Literature க்குள் கொண்டுவர இயலுமா என்று பார்த்தால் சிக்கலாகவே இருக்கிறது. அவர்கள் அந்த நாட்டின் பிரஜைகளாக உள்ளார்ந்து உணர்கிறார்களா என்பதிலிருந்தே அவற்றை உரையாடலாம். இதை ஒட்டி ஓர் உரையாடல் நிகழ்ந்தால் நன்று.

‘காலம்’ இதழில் பிரசுரமாகிய கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *