நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும்.
போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது.
மலரின் கணவன் இலங்கையில் கடத்தப்படுகிறார். திருமணம் ஆகி சில நாட்கள் கழிந்த பின்பே இந்தத் துர்சம்பவம் நடக்கின்றது. அதன் பின்பு மலரின் குடும்பம் கனடாவுக்குப் புலம்பெயர்கின்றது. அங்கிருந்து மீதிக் கதை கனேடிய சூழலில் நிகழ்கின்றது.
மலரின் பெற்றோர், மலரின் கணவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லை என்பதைக்கூட அறிய முடியாமல் இருக்கின்றது. ஏதோவொரு நம்பிக்கையில் தேடல் தொடர்கிறது.
மலரின் இளைய சகோதரன் ஜீவாவும், அவரின் மனைவியும் மலரின் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். மலர் தமிழ் கலாசார மனநிலையில் இருப்பவர். கனடாவுக்குப் புலம்பெயர்ந்தாலும் இன்னும் அச்சமூகத்தின் மைய நீரோட்ட வாழ்க்கை முறையில் இணையவில்லை. வீடு, தோட்டம், தொலைக்காட்சி என்று பொழுதைக் கழிக்கின்றார். உண்மையில் இதற்கான காரணம் அவரின் பெற்றோர்தான். மலருக்கு இதெல்லாம் பிடிக்காது,சரிவராது என்ற முன்முடிவுத் திணிப்போடு பிற்போக்கான மனநிலையில் இருக்கிறார்கள். அதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளும் மலரின் அகவய உலகமும், புறவய உலகமும் தடுமாற்றத்துடன் இருக்கின்றது.
உடலியல் தேவை சார்ந்து எழும் காமம் ஒரு வகையில் மலரை துன்புறுத்துகின்றது. சக உறவினர்கள் காணும்போது மலரின் மேல் காட்டும் பச்சபாதம் இன்னும் துன்புறுத்துகின்றது. இந்தப் புறவய, அகவய சிக்கலில் தடுமாறி உழன்றுகொண்டிருப்பதும், சோதிடம் வழிபாடு என்று செல்வதுமாக நாட்கள் செல்கிறது.
மலரின் சகோதரனின் மனைவி பரந்த சிந்தனை மனப்பான்மையைக் கொண்டவர். மலரின் அகவயமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார், ஊகிக்கின்றார். அவருக்கு மறுமணம் ஒன்றைச் செய்துவைக்கலாம் என்ற யோசனையை மலரின் பெற்றோரிடம் முன்வைத்தும் பார்க்கின்றார். பெற்றோர்கள் வழமைபோல் மலருக்கு இவையெல்லாம் பிடிக்காது, இப்படிப் பேசுவது தெரிந்தாலே செத்துப்போய்விடுவாள் என்று சொல்லிக் கடந்துவிடுகிறார்கள். இயல்பாக மனிதருக்கு ஏற்படக்கூடிய உணர்வுகளின் பக்கம் யோசிப்பதற்குக் கூட அவர்களால் முடியாமல் இருக்கின்றது. கனடாவில் நீண்ட நாள் வசித்து வரும் மலரின் சகோதரன் ஜீவாவினால் கூடக் கலாசாரச் சிந்தனையில் இருந்தே யோசிக்க முடிகிறது. அவரின் மனைவி “அக்காவை வேலைக்கு அனுப்பலாமே, அவரை இந்தச் சமூகத்துக்கு ஏற்றது போல் நாம் பழக்கி எடுக்கலாமே” என்று கேட்கும் போது மலர் அக்காவுக்கு இதெல்லாம் படிக்காது என்கிறார். “அவரை வேலைக்கு அனுப்பினால் அவர் யாரையாவது காதலித்துவிடுவார் என்று பயப்படுகின்றீர்கள்” என்று போட்டு உடைக்கின்றார் ஜீவாவின் மனைவி. அதைக் கேட்டு ஜீவா கடும் சினம் கொள்கிறார். கலாசாரத்தின் கொடுக்குப் பிடிக்குப் பின் மறைந்திருக்கும் கசப்பான உண்மையைத் தட்டிப்பார்த்த கேள்வியாக அதனைக் கொள்ளலாம்.
தோட்டம் செய்வதும் அதில் மலரும் பூக்களைக் கண்டு ஆனந்தம் கொள்வதுமாக மலரின் வாழ்க்கை செல்கிறது. அடிக்கடி முகம் தெரியாதவர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது. ஆரம்பத்தில் அந்த அழைப்பைத் தவிர்த்தாலும் அவரின் தனிமையும் அன்புக்கான ஏக்கமும் அதை விரும்பச் செய்கிறது. தடுமாற்றத்துடன் ரசிக்க ஆரம்பிக்கிறார். தவிர்க்கிறார் என்பதாக நீள்கிறது.
கணவனை இழந்து வாழ்பவர்கள் சுகந்திரமாகச் சமூகத்தில் தனித்தே இருக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பெரும் பட்டியலில் சேரும். அதேபோல் கணவனை இழந்து குடும்பத்துக்குள் வாழும் பெண்களுக்குக் குடும்ப அதிகாரம் உணர்வுகளை மதிக்காத இயந்திரமாக அவர்களை நசிப்பதை நடுக்கத்துடன் அவன்தானிக்க வேண்டியுள்ளது.
ஒரு கட்டத்தில் அதிகம் வெறுப்புக்குள்ளாகி மலர் கணவன் தொடர்பாகத் தன்னிடமுள்ள அனைத்து ஆவணங்களையும் நெருப்பூட்டி எரிக்கின்றார். அவரின் அகவய உணர்வின் உக்கிரத்தை அக்காட்சி வெளிப்படையாகக் காட்டுகின்றது. இறுதியில் குடும்பத்தின் கரிசனையை மீறி ஏதோவொரு வகையில் கர்ப்பம் தரிக்கின்றார். அதைக் குடும்பத்தின் மத்தியில் பகிரங்கப்படுத்துகிறார். அடுத்து வரும் காட்சிகளில் சில வருடங்களின் பின்னர்க் கனேடிய வாழ்க்கைக்கு இலகுவில் ஒவ்வக்கூடிய உடையுடன் தன் மகளுடன் சிரித்துப் பேசியவாறு பூங்காவில் இருக்கிறார். அத்துடன் திரைப்படம் முடிவடைகின்றது.
மலருக்கு எழும் காம இச்சைகள் சார்ந்த உடலியல் வெளிப்பாடுகள் குறியீடுகள் ஊடாகவும், வெளிப்படையாகவும் காண்பிக்கப்படுகின்றன. ஆனால், அவருக்குக் குழந்தை பேறுதான் பிரச்சினையா என்பதைத் தெளிவுற அவை சொல்லப்படவில்லை. உடலுறவும், வம்ச விருத்தியும் வெவ்வேறானவை. உடலுறவு இணைகளுக்கான கொண்டாட்டத்துக்கு உரியது. அதற்கூடாக வம்ச விருத்தியை மேற்கொள்ளலாம். ஆனால் உடலுறவு அதற்கு மட்டும் உரியதல்ல.
மலர் கர்ப்பம் அடைகிறார். ஆனால், எந்த வழியில் என்று தெரியவில்லை. செயற்கை கருவூட்டலாகக் கூட இருக்கலாம். இந்த இடத்தில் யோசிக்கும்போதே படத்தின் தலைப்புக் கைகொடுக்கின்றது. நியோகம் என்பது கணவருடன் இணைந்து குழந்தையைப் பெற முடியாத பெண் மற்றொரு இணையுடன் உடலுறவுகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளுதல் என்பதாகும். இது உடலில் ஏற்படும் காம இச்சைகளைத் தவிர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறையல்ல. குழந்தை வேண்டும் என்பதற்கா தேர்ந்து எடுக்கும் முறையாகும். இத்திரைப்படத்தில் மலரின் காமம் பற்றிய வெளிப்பாடுகள் தெளிவாக இருந்ததே தவிர அவருக்கு வம்ச விருத்தி மீது இருந்த கரிசனை காட்சிப்படுத்தப்படவில்லை. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு நியோகா என்கிற பெயர் அதன் நேரடி அர்த்தத்தில் பொருந்தவில்லை என்றே தோன்றுகின்றது. மீண்டும் காமத்தை வம்ச விருத்திக்கான சமாச்சாரமாகக் கருதும் ஆபத்தையே இது விதைப்பது போல் தோன்றினாலும், குழந்தை ஒன்றையும் பெற்றுக்கொள்வது மலரின் சுய தெரிவாக இருக்கலாம் என்று ஒதுங்கிக்கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இத்திரைப்படத்தில் அதிகம் கவர்ந்தது நடிகர்களின் தேர்வும், அவர்களின் மிகைப்படுத்தப்படாத நடிப்புமாகும். இந்த இடத்தில் நெறியாள்கையைச் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. அற்புதமாக அவை இருக்கின்றன.
திரைக்கதையைச் சுமதி பலராமனும், ஷோபா சக்தியும் எழுதியிருக்கிறார்கள். திரைக்கதை உச்சத்தை நோக்கிச் செல்வதில் கொஞ்சம் அமர்முடுகின்றது. அதில் உணர்வுக்குவியல்களின் குவிமையைம் கூர்மையாக இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகின்றது.
இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்பட விழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் உட்பட மேலும் சில திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது.
ஈழத்துக் கலை இலக்கிய வெளியில் இயங்கும் சுமதி பலராமனின் நெறியாள்கையில் வெளியாகிய இத்திரைப்படம் ஈழத்துக் காண்பியக்கலையில் தனித்துவமான இடத்தில் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உறவுச்சிக்கல்களையும், மனித உணர்வுகளின் வெளிப்பாட்டையும் ஈழத்து பொது மனநிலையில் இருந்து பட்டவர்த்தமாகப் பேசும் கலைப்படைப்பு ஆகின்றது. இத்திரைப்படத்தின் உருவாக்கத்துக்கு பின்னுள்ள அனைவரையும் வாழ்த்தாமல் இருக்க இயலவில்லை.