தேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்!

j

பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிகயியல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது தாய்மார்கள். எங்கள் அப்பாமார்கள் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றுவிடுவார்கள், பொழுதுபடவே வீடுவருவார்கள். வீடுவந்தபின்கூடப் பேச்சுவார்த்தை அவர்களுக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் இடையில் பெரியளவில் இருப்பதில்லை. பல குடும்பங்களில் ஆண்கள் இல்லை. ஆண்கள் யுத்தத்தின் அழுத்தப்பிடியில் கொல்லப்பட்டுவிட்டனர். எஞ்சி இருப்பவர்களையும் இராணுவம் பிடித்துவிட்டது. தாய்க்குலமே எம்மைச் சீராட்டி வளர்த்தது. தாய்குலந்தின் வளர்ப்பிலிருந்து வந்த ஆண்கள் எப்போதும் பெண்களை ஒருவகையில் அடக்கி ஒடுக்கும் பார்வையை இயல்பில் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். எப்படிப் பெண்ணின் வளர்ப்பில் வந்த ஆண், பெண்ணையே அடக்கிவைக்கும் அணுகுமுறையோடு இயங்குகின்றான்? அதற்கான விடை மிக எளிது. அவற்றைத் தாய்மார்களே மகன்மாரிடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஜெயமோகன் எழுதிய தேவகிச் சித்தியின் டயரி சிறுகதை வாசித்தபின்பு, அக்கதையின் பல்வேறு உள்மடிப்புகளைப் பற்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். மிக எளிய இயல்பான கதைபோன்று தோன்றும். ஆனால், கதையில் ஊடுபாவியிருக்கும் மிகநுணுக்கமான தகவல்கள் வெவ்வேறு தாளத்தில் கதையை அளக்கத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவை.

கிராமத்துச் சூழலில் வசிக்கும் கூட்டுக்குடும்பம். சிறுவன் ஒருவனின் தன்னிலைப் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. அவனின் தாய் தந்தையரோடு சித்தப்பாவும் சித்தியும், பாட்டியும் தாத்தாவும் வசிக்கிறார்கள். சித்தி நகரச்சூலில் இருந்து வந்தவள். தினமும் வேலைக்குச் செல்கிறாள். ஒருவகையான மெலிதான சுதந்திரம் அவளுக்கிருக்கின்றது. சொந்த சம்பாத்தியத்தில் நல்ல சேலை உடுக்கின்றாள். அவள் மீதான பொறாமை மற்றைய குடும்பப் பெண்களுக்கு இயல்பிலே உறைந்துபோய் இருக்கின்றது. எலிசபெத் ராணி என்று தங்களுக்குள் அவளை நகைத்துக்கொள்கிறார்கள்.

ஒரு சமயத்தில் அவள் டயரி ஒன்றைத் தனிமையில் எழுதுவதை மற்றைய பெண்கள் சிறுவன் மூலமாக தற்செயலாகத் தெரிந்து கொள்கிறார்கள். அதில் எப்படியென்ன எழுதி வைத்திருக்கிறாள் என்பதையறிய அவர்கள் மனம் துடிக்கிறது. மாலைவரை காத்திருந்து ஆண்கள் விடு வர மிகமுக்கிய பூதாகரமான தகவலாக அதைச் சொல்லி தூண்டிவிடுகின்றார்கள். சித்தியின் டயரி தேடப்படுகின்றது. அவள் முன்னாலேயே அவளின் பீரோவிலுள்ள டயரி எடுத்துவரப்படுகின்றது. சித்தி அதைப் பொதுவில் மற்றவர்கள் வாசிக்கக் கடுமையாக மறுக்கிறாள். அம்பில் வீழ்த்தப்பட்ட புறாபோல் துடிக்கின்றாள். அவளின் குரல் நடத்தைகள் எல்லாம் வழமைக்கு மீறியதாக இருக்கின்றது. அதில் ஏதும் விரோதமாக இல்லை தன்னை நம்பச் சொல்கிறாள். கணவன் மட்டும் படித்துப்பார்த்துவிட்டு சொல்லட்டும் என்று குடும்ப உறுப்பினர்கள் சலுகை கொடுக்கிறார்கள். ஆனால், சித்தி தன்னுடைய டயரியை மற்றவர்கள் படிக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள். தன்னுடைய மனைவிமேல் வீழ்ந்த பழியை இலகுவில் சிறியதான பிரச்சனையாகக் கடந்துவிடவே சித்தப்பா விரும்புகிறார். ஆனால் சித்தி “இல்லை. யாரும் படிக்கக்கூடாது” என்கிறாள். சித்தப்பா முகம் மாறுகிறது “அப்படியா சங்கதி? அப்படியானால் படித்துப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை” என்று டயரியை வாசிக்கச் செல்கிறார். ஆனால், மூர்க்கமாகத் தன்னுடைய டயரியை வாசிப்தபை மறுக்கும் சித்தி அதைப் பறித்துத் தீயிட்டு எரித்துவிடுகிறாள். குடும்பமே திகைக்கின்றது. பின்பு சித்தப்பா சித்தியை விவாகரத்து செய்துவிடுகிறார் என்பதோடு கதை முடிகின்றது.

உண்மையில் அந்த டயரி என்ன? அது ஒரு பெண்ணின் அந்தரங்கம். அவளில் புதையுண்டிருக்கும் ரகசியம். எல்லோருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால், யாருக்குமே தெரியாத பலரகசியங்கள் ஆழ்ந்த சமுத்திரம் போன்ற அவள் மனதின் அடியாழத்தில் புதையுண்டிருக்கும். தன்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் கணவனுக்கும் அவள் சொல்வதில்லை. சொல்லவேண்டிய தேவையும் அவளுக்கு இல்லை. அது அவளுக்கே உரித்தானது. அதையறிய எப்போதும் மற்றைய மனம் சலடையிட்டுக் கொண்டிரும். தேவிகிச் சித்தி மீதான பொறாமை மற்றைய பெண்களை, அவள் மீதான ரகசியத்தை அவளின் முழு அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ள அலைக்கழிக்கவைகின்றது.

அதையறிந்து கொள்ளமுடியாத ஆண் மனம்கூடப் பெண்ணை நிராகரிக்கின்றது. தன்னிடம் அவள் மறைக்க எவையும் இருக்கக்கூடாது என்பதே அவனின் அகங்காரமாக இருக்கின்றது. அந்த அகங்காரம் தோற்கடிக்கப்படும்போது தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண்ணை முற்றிலும் புறந்தள்ளுகின்றான். அந்தப் புறந்தள்ளுதல் அவனுக்கு ஒருவித மமதையைத் தந்தாலும் அடியாழத்தில் ஒரு பெண்ணை வெல்ல முடியவில்லை என்ற வடு கூர்மையாகக் குத்திக்கொண்டேயிருக்கும். அவ்வியல்புகள் அவனின் இயல்பிலே புதையுண்டிருப்பவை. அந்த இயல்பை ஓர் ஆணிடம் உருவாக்கிவிடுவதில் பெரும்பங்கை அவள் தாயாரும், அவனது வளர்ப்பில் சார்ந்த மற்றைய பெண்களும் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

ஒரு சிறுவனின் பார்வையில் கதை நிகழும்போது அவனின் கண்ணோட்டத்தில் கிளைக்கும் அவதானங்கள் அவன் இயல்பில் இருப்பவை. ஜெயமோகன் என்ற கதை சொல்லி சிறுவனின் இயல்பில் ஊடுருவி முழுக்கதையையும் புனையும் தன்மை ஆகச்சிறப்பாக இருக்கின்றது. திருவள்ளுவர் தினம் அன்று பாடசாலை விடுமுறை. ஆனால், சித்தி வேலைக்கு அலுவலகம் செல்கிறாள்; அதற்கான காரணம் அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் கிடையாது அதனால் அலுவகங்களுக்கு விடுமுறைகிடையாது என்பதாக அவன் பார்வையில் குறிப்பிடப்படும் இடங்கள் சிறுவனுக்கே உரியவை. தாத்தாவின் தலை ஓணான் போல வெடவெடத்தது போன்ற சிறுவர்களின் பார்வையில் வரும் ஒப்பீடுகளும் வர்ணனைகளும் எண்ணற்று நிறைந்து இருக்கின்றன. சித்தியின் உடல் மீது அவனுக்கு இருக்கும் கவர்ச்சி விவரிப்புகள் இல்லாமல் கதையின் ஓட்டத்தில் புகுத்தப்பட்டிருக்கும். நுட்பமான இடங்கள் அவை.

சிறுவன் கையில் துடைப்பம் வைத்திருக்கும்போது, அதனைக் கண்ணுற்ற அவனின் அம்மா “முகரையைப்பார். ஆண்பிள்ளை உனக்கு எதற்குத் துடைப்பம்? போடா…” என்று அதட்டுகின்றார். ஒட்டுமொத்தக் கதையில் கவனத்தைக் குவிக்க வேண்டிய மிகப்பெரிய புள்ளியது. ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் சிறுவயதிலிருந்தே வேறுபடுத்தித் தாய்க்குலம் பிள்ளைகளை வளர்க்கும் இடம் நுட்பமாகப் பதிவாகியிருக்கும். ஒட்டுமொத்த கதையின் மையவியக்கம் இங்கிருந்துதான் பிறக்கின்றது.

தாத்தா வரும்போது பாட்டி அவரைக்கண்டதும் காலை மடக்கிவிட்டு, அவர் போனதும் காலை நீட்டிக் கொண்டாள். என்று குறிப்பிடும் இடங்கள் மிகக்கூர்மையாகக் குறிப்புணர்த்துபவை. தன்னுடைய ஆண் துணை இல்லதா நேரத்தில் கிடைக்கும் சுதந்திரமும் அதன் சௌகரியமும் தடைப்பட்டு நீளும் இடங்கள் அவை. தமிழ் குடும்பச் சூழலின் வழமையான பிடியில் வாழப்பழகிய பெண்களுக்கு ஆண்கள் இல்லாதபோது கிடைக்கும் சுதந்திரத்தின் வீரியம் இன்னும் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை தன் அகங்காரம் மூலம் சீண்டுவதிலே இன்பப்படுகின்றது.

 நானிலம் இணையத்தளத்தில் வெளியாகிய கட்டுரை ( http://www.nanilam.com/?p=10649 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *