சிறுவர்களுக்கான திரைப்படங்களும் மியாசகியும்

hegykvvedeijj8gt44qe

சிறுவர் சினிமா என்றால் சிறுவர்கள் நடிக்கும் சினிமா என்ற அபிப்பிராயம் நம்மில் பலருக்கு இருகின்றது. அது தவறான புரிதல். சிறுவர் சிறுவர்களுக்குரிய சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவை சிறுவர்களின் கனவுகளையும், கற்பனைகளையும் காட்சிப்படுத்தி அதன் வழியே அவர்களின் உலகம் எப்படித் தென்படுகிறது என்பதை வெளிப்படுத்தவேண்டும். சிறுவர்கள் உலகை புறவயமாகவும் அகவயமாகவும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், தங்களது ஆசைகள் அபிலாஷைகள் எவ்வாறு பெரியவர்களால் பாதிப்படைய வைக்கப்படுகின்றது என்பதை அவை தெளிவாக ஒப்பேற்ற வேண்டும். அவையே சிறுவர் சினிமாவாகக் கொள்ள முடியும்.

சிறுவர்கள் வசிப்பதற்கான அடிப்படை வாழ்வாதாரங்களையே சரிவர வழங்காதகீழைத்தேய நாடுகளில்சிறுவர்களுக்கான திரைப்படங்களை மட்டும் எப்படி சரிவர வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியும்?சிறுவர்களின் உலகம் மிக விலாசமானது. மிக நுண்மையான கற்பனைகள் வண்ணமயமாக உருவாகி வெடித்துச் சிதறி குதூகலமாகப் பறக்கும் பருவம். குழந்தைப் பருவத்தில் கற்பனைகள்முளைவிட்டு வளரும் சமயத்தில், சிலபல வருடங்களுக்கு முதல் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது தாத்தா பாட்டியினரால் கதைகள் சொல்லப்பட்டு சிறுவர்களின் கற்பனை உலகம் புது அர்த்தத்துடனும்,அறங்களுடனும் பரிமாணிக்க வழிகோலியது. ஆனால் தற்போது பெரும்பாலானோர் வீட்டில் தாத்தா பாட்டிகள் இருப்பதும் இல்லை, கதைகள் சிறுவர்களுக்குச் சொல்லப்படுவதும் இல்லை. கிடைக்கும் பெரும்பாலான நேரத்தினை சிறுவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கழிக்கிறார்கள். ப்ளேயஸ் ஸ்டேஷனோடும், எக்ஸ் பொக்ஸ்சோடும் அவர்களின் நேரங்கள் கரைகின்றது. மிச்ச சொச்ச நேரங்களில் பார்பதற்கு நிறையத் திரைப்படங்கள் இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் அவர்களுக்கு உகந்ததாக இல்லாமல் இருகின்றன. வயது வந்தவர்களுக்கே தமிழ் திரைப்படங்கள் உகந்ததாக இல்லாமல் இருக்கும்போது சிறுவர்களுக்கு அவை உகந்ததாக இருக்கும் என்று எப்படிக் கருத முடியும்.

சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை பண்படுத்தப்பட்ட முறையில் விருத்தி செய்ய நல்ல கதைகள் சொல்லப்பட வேண்டிய தேவை இருக்கும் இடத்தில், அவை கிடைக்காமல் கடந்துவிடும் சூழலாக சமகாலச் சூழல் இருகின்றது. சிறுவர்களுக்கான சிறந்த உலகத் திரைப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், கார்டூன்கள் போன்றவை எக்கச்சக்கமாக உலகம் முழுவதும் குமிந்து கிடக்கின்றன. அவை வீட்டிலுள்ள சிறுவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகின்றனவா என்று நோக்கினாலும் கூட ஏமாற்றமே மிஞ்சுகின்றது. தொலைக்காட்சிக்கு முன்னமர்ந்து உதட்டை உதட்டால் கவ்வும் காட்சிகளை பெற்றோருடன் சேர்ந்து சிறுவர்களும் பார்த்து ரசிக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் அவை தொடர்பான எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கான திரைப்படங்கள் முழுமையாக உருவாகப்படாத தமிழ்ச் சூழல் இருக்கின்றபோதும், உலகமொழிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உரிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டு இருகின்றன. அவற்றை தருவித்து சிறுவர்களுக்குக் காட்சிப்படுத்துவது உகந்தவொன்று.

கொழும்பில் அமைந்திருக்கும் “சாவோய்” திரையரங்கில் அடிக்கடி சிறுவர்களுக்கான திரைப்படங்கள் ஒருவேளை மாலைக்காட்சியாகக் காட்சிப்படுத்தப்படும். தந்தைமாரின் விரல்களை பிடித்துக்கொண்டு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரிசையில் சிறுவர்கள் குதூகலமாக நிற்பதை கண்ணுற்றிருக்கிறேன். சில பணக்கார சிறுவர்களுக்கு அதிஷ்டவசமாக அவர்கள் பருவத்துக்குரிய சிறுவர்களுக்கான திரைப்படங்களை திரைக்கூடத்தில் பார்க்க வாய்ப்புக்கள் கிடைகின்றன. அப்படியாக வாய்ப்புக்கள் கிடைத்த சிறுவர்கள் பார்வையிட்ட திரைப்படங்கள் ஹாலிவுட் தயாரிப்புக்களாகவே இருக்கின்றன. ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே மீண்டும்மீண்டும் திரையரங்கில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலும் சிறுவர்கள் விரும்பிப்பார்ப்பது அனிமேஷன் வகையினைச் சார்ந்த படங்களாகவே இருகின்றன. அனிமேஷன் துறை சமகால சினிமாவை புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பாதிப்புக்கள் தொடர்ச்சியாக வீறுகொண்டு எழுகின்றது. ஹாலிவூட்டில் இருந்து வெளியாகும் அனிமேஷன் திரைப்படங்கள் அதிகம் அனைத்து டீவிடி கடைகளிலும் கிடைக்கக்கூடியதாகவும் இருகின்றது.

ஹாலிவூட் அனிமேஷன் சிறுவர் திரைப்படங்கள் பெரும்பாலும் மரபான ஓவிய வகையையைக் கொண்டவை. கதாப்பாத்திர கட்டமைப்புக்கள் மிகநலிவடைந்து இருக்கும். உடல் சார்ந்த வேடிக்கையும் நகைச்சுவையுமே பிரதானமாக காட்சிப்படுத்தப்படும். கற்பனையைத் தீண்டிவிட்டு சிறார்கள் தங்களின் உலகை அதில் புதிதாக கண்டடைய வைக்கும் ஒன்றாக அவை இருக்காது. மேம்போக்காக குதூகலிக்க வைப்பதும், இரண்டு பாத்திரங்கள் ஒன்றோடொன்று சாகசமாக மோதவைப்பதுமாகவே ஹாலிவூட் அனிமேஷன் திரைபடங்களின் தயாரிப்புகள் இருக்கிறன. அதிகாரக் கட்டமைப்புக்களை சிறுவர்களிடம் நுணுக்கமாக விதைக்கின்றன. நல்லவர்கள் வாழ கெட்டவர்களை கொல்லலாம் என்பதை தீவீரமாக சிறுவர்களிடம் நம்பவைகிறார்கள். அரசுக்கு எதிரான சக்திகளை துடைத்தெறிய வேண்டும் என்பதை ஹாலிவூட் அமரிக்க சிறுவர் திரைப்படங்களை மீண்டும்மீண்டும் வலியுறுத்த முயல்கின்றன.

சிறுவர்களுக்குரிய பன்மைத்தன்மையான கதை சொல்லல் முறையை ஹாலிவூட் சிறுவர் திரைப்படங்கள் கொண்டிருப்பதும்இல்லை. ஒற்றைத்தன்மையான நேரடியான கதை சொல்லல் முறைமையே பெரும்பாலும் கையாளப்படும். கதாப்பாத்திரங்களின் ஊடாக இன்னுமொரு தளத்தில் மௌனமாக இழையோடும் உணர்ச்சித் தருணங்கள், மிகைப்படாத உணர்வுகளின் அழுத்தமான சித்தரிப்புகள் இல்லாமல் வெறும் சாகச செயற்கையாக அவையிருக்கும்.

அதிகம் ஹாலிவூட் அனிமேஷன் திரைப்படங்களைப் பார்வையிட்ட சிறுவர்கள், வழமையான கதை சொல்லல் முறையில் இருந்து விலத்தி இன்னும் அகச்சிக்கல் நிறைந்த நெருக்கமான படங்களையே பார்க்கவும் விரும்புகிறார்கள். நன்மை தீமையின் போராட்டங்களை மீண்டும்மீண்டும் வெறும் சாகசமாகப் பார்காமல் அதில் மெய்தேடலையும் தேடவிரும்புகிறார்கள். அவ்வாறு சிறார்கள் தங்களுக்குரிய திரைப்பட தரத்தினை தீர்மானிக்கமுடியாமல் இருக்கும்போதும், அவர்களுக்குத் தகுந்த படங்களை காட்சிப்படுத்த முயல்வது சிறார்களுக்கு கொடுக்கப்படும் சிறந்த கௌரவம்.

இவ்வாறான ஹாலிவூட் அனிமேஷன் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள். மிக உயர்வான கற்பனையோடு சிறுவர்களின் உளவியலோடு நெருக்கமடையச் செய்யும் தன்மைகொண்டவை. ஜப்பானிய பழங்கதைகளையும் நவீனத்துவ சிந்தனைகளையும் ஒன்று சேர்ப்பவை ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள். கதாப்பாத்திரங்களின் கட்டமைப்புகளும் குணவியல்புகளும் மிகச்சிறந்த மானுட அறங்களைக் கொண்டதாக இருக்கும். அவை பௌத்தத்தின் அன்பையும் கருணையும் புகட்டுபவையாகவும் இருகின்றன. சிறுவர்களின் அறம் சார்ந்த போதாமைகளின் இடைவெளிகளை நிரப்பும் திறனை ஜப்பானிய சிறுவர் திரைப்படங்கள்கொண்டிருக்கின்றன. சிறார்களுக்காக உருவாகப்பட்ட திரைப்படங்களில் ஜப்பானிய திரைபடங்களுக்கு தனியிடமுண்டு. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அவ்வாறான சிறார் திரைப்படங்கள் எமது நாட்டு திரைக்கூடங்களுக்கு வருவதில்லை. அவ்வாறான திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் கூட எழுத்துவடிவில் பிரசுரமாவதும் இல்லை என்பது மிகத்துன்பமான ஒன்று.

சிறார்களுக்கான ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களின் முன்னோடியென்று மியாசகியை விளிப்பார்கள்.இவர் இதுவரை பதினொரு முழுநீளத் திரைப்படங்களையும் ஏராளமான குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மியாசகி ஜப்பானியர்களின் மங்கா காமிக்ஸ் கலைஞரில் ஒருவர். பால்ய காலத்தில் மங்கா காமிக்ஸில் படம் வரையவேண்டும் என்ற கனவில் இருந்து, ஓவியக் கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்று மங்கா காமிக்ஸ் வரைஞராக உருவாகினார். அதன்பின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் அனிமேஷன் பிரிவில் வேலைபார்த்துவிட்டு 1979 இல் தன் முதல் படமான The Castle of Cagliostroவை இயக்கி வெளியிட்டு புகழ்பெறுகிறார். இதன்பின் அனிமேஷன் உலகத்தில் அவரது பாய்ச்சல் பெருவாரியாக நிகழ்கிறது.

தன்னுடைய படங்களுக்கான கதையினை அவரே புனைந்து கொள்கிறார். அவரின் கதைகள் அடுத்து என்ன நடக்கும் என்று ஊகித்து அறியாதவண்ணம் மிகநுட்பமாக இருக்கும். வாழ்வின் யதார்த்தத்துக்கு வெளியே சிந்தித்து குதூகலித்து திரியும் சிறுவனாக மியாசகிஇருந்தார். அவ்வாறான காலப்பகுதியில் தான் சிந்தித்த கூறுகளில் இருந்து தனது படத்துக்கான கதைகளை உற்பத்திசெய்துகொள்கிறார். அவரின் படங்களின் அடிநாதமே அங்கேயிருந்துதான் பிறக்கின்றது. அவர் அனிமேஷன்களை உருவாக்குவதற்கு கணினியைப் பயன்படுத்துவதில்லை. இன்றுவரை இவர் படங்களில் வரும் அத்தனைக் காட்சிகளையும் சித்திரங்களாக தன் கைகளினால் வரைகிறார்.மியாசகியின் நெறிப்படுத்தலில் 2001 இல் வெளியாகிய “ஸ்பிரிட்டட் அவே”(Spirited Away)ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம் உலகம் முழுவதும் சிறுவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமன்றி பெரும்பாலான அனிமேஷன் விருதுகளையும் பெற்றது. அதில் ஆஸ்காரும் ஒன்று.

images

“ஸ்பிரிட்டட் அவே” திரைப்படத்தில் “சிஹிரோ” என்கிற பத்து வயதுச் சிறுமி பெற்றோர்களின் வேலை மாற்றத்தால் அவர்களுடன் புதிய ஊருக்கு வருகிறாள். வழியில் தந்தை பாதையை மாற்றி காரைச் செலுத்திவிட வினோத உலகம் ஒன்றுக்குள் நுழைந்து விடுகின்றார்கள். வெறிச்சோடிப்போய் இருக்கும் அந்த நகரத்தைப் பார்க்கும் சிஹிரோவுக்கு என்னவோ பிழையிருக்கிறது என்பது புரிகிறது. நகரம் மிக அழகாகப் பெரிய கட்டிடங்கள், நீண்ட அகலமான கடைவீதிகள், உணவகங்கள் என்று பளிச்சிடுகின்றது. உணவகங்களில் புதிய உணவுகள் சுடச்சுட இருக்கின்றன. ஆனால் கடையில் மனித நடமாட்டமே இல்லை. நகரம் பேரமைதியாகத் தனித்திருக்கின்றது. சிஹிரோவின் தந்தையும் தாயும் அங்கிருக்கும் உணவுகளை உண்ண ஆரம்பிக்கிறார்கள். சிஹிரோவையும் உணவருந்தச் சொல்கிறார்கள். சிஹிரோ பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.

சாப்பிட ஆரம்பிக்கும் சிஹிரோவின் பெற்றோர்கள் வெறித்தனமாக வேகமாக படிபடியாகத் தங்களை மறந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். சற்று நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தையும் தாயும் பன்றிகளாக உருமாறிவிடுகிறார்கள். அதனைக் கண்டு அதிர்சியடைந்து சிஹிரோ அங்கிருந்து தப்பி ஓட நினைக்கிறாள். ஆனால் அங்கிருக்கும் ஒரு பெரிய ஆறு அந்நகரத்தை தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றது. அந்நகரம் மாயத் தோற்றங்களைக்கொண்ட ஆவிகளுக்கு சொந்தமானது. அங்கு ஒரு புகழ்பெற்ற குளியல் விடுதி ஒன்று இருக்கிறது. அந்தக் குளியல் விடுதியையும் அந்த விநோத நகரத்தையும் ஒரு மூக்கு நீளமான சூனியக்காரி நிர்வகிக்கிறாள்.

சிஹிரோவை ஹகு என்பவன் சந்திக்கிறான். அவளுக்கு உதவிசெய்து, அந்நகரத்திலேயே குளியல் விடுதியிலேயே வேலை வாங்கித் தருகிறான். சூனியக்காரி சிஹிரோவின் பெயரை சென் என மாற்றுகிறாள். சென் அங்கே வேலைபார்க்கும் மற்றவர்களுக்கு பிடித்தமானவளாக இருக்கிறாள். நோ ஃபேஸ் என பெயர் கொண்ட ஒரு ஆவி அங்கு வேலை செய்யும் நபர்களுக்கு தங்க ஆசை ஏற்படுத்தி அவர்களை விழுங்கிவிடும். நோ பேஸ் தன்னை மிக தனியனாக உணருபவர்களை விழுங்கி தனக்குள் அடைத்துக் கொண்டால் தனிமை போய்விடும் என நம்புகின்றது. ஆனால் சென் தங்கத்திற்கு மயங்காமல் நோ ஃபேஸையும் நல்வழிப்படுத்துகிறாள். சென் சூனியக்காரியின் பிடியிலிருந்து மீண்டு சிஹிரோவாக மாறி தன்னையும் தன் பெற்றோர்களையும் அந்த விநோத உலகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் மீதிக்கதை மிக சுவாரசியமாக நெகிழ்ச்சியான பின்னணியிசையில் சொல்லப்பட்டிருக்கும்.

நட்புணர்வையும், நல் ஒழுக்கத்துக்குறிய பண்புகைளையும் கொண்டவளாக சிஹிரோவின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருக்கும். இயலாமையில் அழும்போது கிடைக்கும் ஆறுதல்கள், ஹகு நட்புணர்வோடு உணவைக்கொடுக்க அவள் மறுப்பதும், பின் சாப்பிடும்போது கண்களில் இருந்து கட்டற்று வழியும் கண்ணீர் என்று சிறுவர்களுக்கான இயல்பையும் உலகத்தையும் மிகைப்படாமல் பிரதிபலிக்கின்றது. சூனியக்காரியின் பாத்திரமும், பறவையாக அவள் பறப்பது போன்ற காட்சிகளில் மியாசகி கையாளும் உத்திகள் சிறுவர்களின் கற்பனை உலகை இன்னும் தீண்டிவிடும்.

பேராசையின் தூண்டுதல்கள் ஏற்படுத்தும் சிக்கல்களை தெளிவாகப் “ஸ்பிரிட்டட் அவே” திரைப்படம் பேசியிருகின்றது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாத பாத்திர உருவாக்கங்களும் அதன் கட்டுமானங்களும் இன்னும் குதூகலப்படுத்தும். புத்தம்புதிய உலகத்தை உருவாக்கி பத்து வயதுச்சிறுமி ஒருவரின் பார்வையில் முழுக்கதையையும் நகர்த்தியிருக்கிறார்கள்.

புதிய ஊருக்குக் குடிவரும்போது சிறுமியான சிஹிரோவுக்கு ஏற்படும் இயல்பான பதற்றங்கள், அதனை சரிவர புரிந்துகொள்ளாமல் கடந்துவிடும் பெற்றோர்களின் பொதுப்படையான இயல்பு கட்சிதமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். புற உலகுச் சூழலில் அவள் அடையும் மிரட்சியும், அன்புக்காக ஏங்கும் தருணங்களும் மிகைப்படுத்தப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் சிஹிரோ புதிய பள்ளிக்கூடத்தில் நான் எவ்வாறு படிக்க போகிறேன் என்று புலம்பிக் கொண்டே வருவாள். படம் முடிகையில்அவளின் பேச்சுத்தொனி முற்றிலும் மாறுபட்டு அதிகம் தன்னம்பிக்கையோடு இருக்கும். சிறார்களின் கற்பனையை நன்கு தூண்டிவிடுவதோடு நன்னெறிகளையும் அவர்களின் பார்வையில் போதிக்கின்றது. ஆறுவயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.

மியாசகியின் இயக்கத்தில் “இளவரசி மோனோநோகி” (Princess Mononoke) அனிமேஷன் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியாகியது. சிறார்கள் மட்டுமில்லாது அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்பட வரிசையிலும் சேர்க்கலாம். அடிப்படையில் சாகசக் கதையைக்கொண்டது. இளவரசன் “அஷிதஹா” காட்டில் வாழும் எமிஷி என்ற பழங்குடி இனக்குழுவை சேர்ந்தவன். ஒரு நாள் அவர்களின் கிராமத்தைநோக்கி விநோதமான இராட்சத கரடி ஒன்று வருகின்றது. அழிவை ஏற்படுத்திக்கொண்டு வரும் அக்கரடி கிராமத்தை நெருங்குவதற்கு முன்னரே இளவரசனான அஸ்தகா மிருகத்துடன் போர் புரிந்து அதைக் கொன்று விடுகிறான். அந்தக் கரடியின் உடலில் இருந்த மயிர்கள் அவன் கையைப் பற்றிக் கொண்டுவிடுகின்றன. அந்தக் கறுப்புரோமம் அவனது கையில் மாறாத அடையாளமாகிவிடுகிறது. அந்தக் கரடி சாகும்போது அவர்களை அழிப்பேன் என்று சாபமும் கொடுத்துவிடுகிறது. கிராமத்தில் உள்ள குறி சொல்லும் வயதான பெண் அந்த கரடி தீமையின் உருவம் என்று அதன் சாபம் அஷிதஹாவின் மீது படிந்துவிட்டது. அவன் அந்த சாபத்தின்படியே கரடியால் ஏற்படுத்தப்பட்ட கருந்தேமல் வளர்ந்து அவனை கொன்றுவிடும் என்கிறாள். இந்தச் சாபம் நீங்க மேற்குத் திசை நோக்கி பயணம் செய்து மான்களின் கடவுளை சந்திக்குமாறும் கூறுகிறார்.

அஸ்தகா மேற்கு நோக்கி பயணம் செய்யத்தொடங்குகின்றான். போகும் வழியில் சாமுராய் வீரர்களை ஒரு கும்பல் விரட்டி துன்புறுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவர்களிடமிருந்து சாமுராய் வீரர்களைக் காப்பாற்றுகிறான்.சாமுராய் வீரர்களை தாக்கியவர்கள் யபோஷி என்ற பெண்மணியின் ஆட்கள். அவள் காட்டை அழித்துவிட்டு முற்றிலும் இரும்பிலான வலிமையான நகரத்தை கட்ட முனைகிறாள். அதற்காக கிராமத்து மக்களை ஏவி சுரங்கம், நிலக்கரி மற்றும் இரும்புத் தாது பொருற்களை எடுத்து அந்நகரத்தைக் கட்ட முயல்கிறாள். யபோஷியிடம் ஆயுதங்கள் இருப்பதால் அங்கிருக்கும் இனக்குழுக்களால் அவளை எதிர்த்துப் போரிட முடியாமல் இருகின்றது.

இளவரசன் அஸ்தாவுக்கு ஓநாய்களின் இளவரிசியின் அறிமுகம் கிடைகின்றது. அவளின் மீது காதலும் கொள்கிறான். அவள் இரும்பு நகரத்தை நிர்மாணிக்கும் யபோஷிகாவை அழிப்பதே தன் இலட்சியம் என்கிறாள். இதற்கிடையில் காட்டின் கடவுளால் தழும்பு மறையப் பெறுகிறான். இளவரசியும் அஸ்தகாவும் ஒரு படையைத் திரட்டி யபோஷிகாவை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுகிறார்கள். காட்டின் அழிவு தடுக்கப் படுகிறது.

ஒநாய் குலத்தின் வீழ்ச்சிதான் கதையின் முக்கிய மையமாக இருகின்றது. மனிதர்கள் தங்களை வெறுப்பதாக அவை புகார் கூறுகின்றன. படம் முழுவதும் அன்பின் உன்னதங்கள் கற்பிக்கப்பட்டுக்கொண்டு இருகின்றன.

அதிகாரப்போட்டிகள் ஆயுதங்கள் உருவாக்கி அதிகாரமையத்தில் இருப்பது பற்றியும், அதற்காக தொழுநோயாளிகளை பிடித்துவைத்து வற்புறுத்தி வேலை வேண்டுவது என்பது சமகால உலகின் வன்முறையின் நீட்சியைப் பேசுகின்றது.

சாபம் அதிலிருந்து மீள்வது யுத்தத்தில் வெல்வது என்று கதையின் ஒரு தளம் நகர்ந்தாளும் மற்றைய இழை இயற்கையின் உன்னதங்களையும் மனிதர்களும் இயற்கைக்கும் இடையிலான உறவையும், மனிதர்களின் இயற்கை மீதான புரிதல் அற்ற தன்மையும் பேசுகின்றது.

தொழுநோயாளிகளை சமூகம் ஒதுக்கிவைத்திருக்கும்போது, இரும்பு நகரத்தினை நிர்மாணித்துவரும் யபோஷி பெண்மணி அவர்களை தன்னுடைய அரவணைப்பில் எடுத்துக் கொள்கிறாள். அவர்கள் யபோஷிவுக்கு இறுதிவரை விசுவாசமாய் இருக்கிறார்கள். அந்த உறவும் நெருக்கமும் சிறப்பாக படத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது. அவ்நகரத்தில் பெண்களே கடினப்பட்டு வேலை செய்கிறார்கள். ஆண்கள் அவர்களைச் சார்ந்து இருபதும் கவனத்துக்குரியது.

சாகச அனிமேஷன் படம் போல் தோன்றினாலும் இப்படம் சொல்லும் விடயங்கள் மிகமுக்கியமானவை. காட்டை அழித்து இயற்கை வளங்களை சுரண்டி அங்கிருக்கும் இனக்குழுக்களை விரட்டியடிக்கும் நாச வேலைகள் இன்றும் பல்வேறு பிரதேசங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கையும் காடும் அன்பு ஊற்றெடுக்கும் பிரதேசம். இயற்கையின் மீதான நேசிப்பையும், அன்பின் உன்னதத்தையும் இத்திரைப்படம் வலுவாய் முன்வைக்கிறது.

பெரும்பாலான சிறார்கள்போல் அம்புலிமாமா புத்தகங்களை வாசிப்பதினூடாகத்தான் பால்ய கால வாசிப்பில் நுழைந்தேன். அந்தக் கதைகள் தந்துவிட்டுப்போன பரவசங்கள் துகள்களாக மனதின் அடியாழத்தில் புதையுண்டு இருக்கின்றன. இக்கட்டுரையை எழுதுவதட்கா மீண்டும் மியாசகியின் படங்களைப் பார்த்தபோது குழந்தைக்கால குதூகலம் என்னில் மீண்டும் துளிர்த்ததை உணரமுடிந்தது. மியாசகியின் ஒவ்வொரு திரைப்படமும் மீண்டும் என் பால்யத்தை குதூகலம் குன்றாமல் பெற்றுத்தருகின்றது. கற்பனையில் சஞ்சரிக்கும் எல்லையற்ற பெருவெளியை அவை உற்பத்தி செய்துகொண்டே இருகின்றன. தூய்மையான அன்பையும் உயிர்களின் மீதான நேசத்தையும் அவை நினைவூட்டுகின்றன.

மியாசகியின் அனிமேஷன் திரைப்படங்கள் நமது குழந்தைகள் பார்க்கும் வகையில் தொலைக்காட்சியிலோ அரங்கிலோ ஒளிபரப்பப்படவேண்டும். அவை சிறார்களுக்கான புதிய கற்பனையுலகைத் திறந்துவிடும். அவர்களுக்குத் தேவையான கூறுகளை அவர்களே அப்படங்களில் இருந்து சுவீகரித்துக்கொள்வார்கள்.

2016 மார்ச் படச்சுருள் இதழில் வெளியாகிய கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *