17th January 2026
மதிப்புரை

தீக்குடுக்கை : பேராசிரியர் க. பஞ்சாங்கம்

அனோஜன் பாலகிருஷ்ணன் தமிழ் மொழிக்குத் தந்துள்ள இந்த193 பக்க முதல் நாவலை இரண்டு அமர்வில் வாசித்து விட்டேன்.ஏற்கெனவேமூன்று சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார் என்பதனால் நாவலிலும் சரளமான மொழியில் எடுத்துரைப்பை நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனிலேயே சூழலியல் பொறியியல் படித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டார் என்றாலும் எங்கள் புதுச்சேரி மண்ணின் மருமகன் என்பதனால் கூடுதலான ஆர்வத்தோடு அவர் நாவலை வாசித்தேன்.

ஈழத்தில் தாயகத்திற்கான யுத்தம் முடியும் தறுவாயில் இருந்தஒரு காலகட்டத்திற்கான நாவல் என்பதால், அது நான் வாசிக்காத புதிய களம் என்பதாலும் நாவல் என்னைப் பெரிதும் இழுத்துப் போட்டுக் கொண்டது. அனோஜன் பெரிதும் அழகியல் பிரஞ்ஞையோடுதன் எழுத்தை நடத்திச்செல்லுகிறார்.எனவே ஆரவாரம் இல்லாத எளிய மொழியில் கூடுதலாக ஒரு வார்த்தை கலந்து விடாமல்கண்காணித்துக் கொண்டே எழுதுகிறார் .என்னைப் போன்ற முதுமையான வாசகர்களுக்கு அது பெரிதும் ஈர்ப்பைத் தருகிறது.

பேரினவாதம் பேசும் அரசாங்கத்தின் இராணுவம், முள்ளிவாய்க்காலில் நந்திக் கடலோரத்தில் புலிகளின் படையைச் சுற்றி வளைத்து விட்ட பிறகு சரணடையும் நிகழ்ச்சிகளை இந்த நாவல் மிகவும் நிதானமாக வர்ணிக்கிறது என்றாலும் அதற்குள்ளே உடம்புக்குள் இருந்து வெளியே பிடுங்கிப்போட்டாலும் துடித்துக் கொண்டு கிடக்கும் ஆட்டின் இருதயம் போலத் துடிக்கும் கதை சொல்லியின் துடிப்பை வாசகனும் கேட்க முடிகிறது.இது ,நாவல் மொழியின் மாபெரும் வெற்றியாகப் படுகிறது.எப்பொழுதுமே மொழியைச் சுருக்க சுருக்கத்தான் அதன் வீரியம் பன்மடங்கு வெளிப்படுகிறது என்பதுஇத்தகைய இடங்களில் பளிச்செனப்புலப்படுகிறது.

நாவலின் கதை என்று பார்த்தால் முன்னமே கொழும்பிலிருந்து லண்டனுக்குப் புலம்பெயர்ந்த தம்பதியினர் குறிப்பாகக் கணவர் தன் மகனைத் தமிழ் மொழி தெரியாமலேயே வளர்க்கிறார்.ஈழத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரைக் குறித்த தகவல் எதுவும் அவன் காதில் விழாமலும் பார்த்துக் கொள்கிறார். ஆனால் அவன் பெரியவனானவுடன் நூலகம், இணையம் என்று ஒரு சுற்று சுற்றி வந்து உலக அரசியல் எல்லாம் கற்றவனாக வளர்கிறான்.ஒரு பின் காலனித்துவ மனநிலைக்குள் வந்து சேர்கிறான். அவனுக்குள் காலனிய நீக்கம் நடந்தேறுகிறது.தான் காதலிக்கும் எரிகா என்ற பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணிடம் இப்படிப் பேசுகிறான். இந்த நாவலின் உயிரான பகுதி அது.

“உனக்குத் தெரியுமா? இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த போலீஷ் மக்களின் இரண்டாவது தலைமுறை பிறக்கும்போதே பிரிட்டிஷ் ஆகவே பிறந்தார்கள் .ஆனால் நாங்கள் பத்துத் தலைமுறையானாலும் அப்படி ஆக முடியாது. எங்கள் நிறத்தில் அது எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது……

உங்க அம்மாவின் கைகளில் இருக்கும் இரத்தத்தைத் துடைக்கச் சொல்லு. நீங்கள் ருசித்த செல்வங்கள் எல்லாம் அடித்துப் பறித்தவை. ஆப்பிரிக்கா, தெற்காசியா முழுவதும் இருந்து சுரண்டியவை “

“நான் சொல்வது உனக்கு உளறலாக இருக்கிறதா ?இருக்கும். இரண்டாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தாங்க. ஆனால் இதுவரை பிரான்ஸ் ,அல்ஜீரியன் சுக்கு செய்த கொடுமைகளுக்கு ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை. பிரிட்டன் காலனிய காலத்தில் செய்த அட்டூழியங்களுக்கு ஒரு மன்னிப்புக் கூடக் கேட்டதில்லை. இதெல்லாம் உங்களுக்கு உளறலாக உள்ளது. “

இப்படிப் பேசுகிறவன் எங்கே போய்ச் சேர்வான் என்பதை நம்மால் யூகிக்க முடியும்தானே.புலிகளுக்கு ஐரோப்பாவில் பணம் திரட்டி அனுப்பும் ஒரு குழுவின் தொடர்பு கிடைத்து இலங்கை வந்து சேருகிறான். புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடவும் துணிகிறான். ஆதனின் இத்தகைய கற்பனவாத முடிவை வாசகர்கள் எப்படி ஏற்பார்கள் என்ற ஒரு வினாவை எழுப்பிக் கொண்டு அதை நியாயப்படுத்த அன்றைக்கு லண்டனில் இருந்து போஸ்னியா, வியட்நாம், நிகரகுவா முதலிய நாடுகளில் நடந்து கொண்டிருந்தஆயுதப் புரட்சிகளில் கலந்து கொள்ள பல இளைஞர்கள் புறப்பட்டுச் சென்ற வரலாற்றுப் பதிவுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

இறுதியாக ஆதனைத்தேடி அலையும் காதலி எரிகா,செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இலங்கைக்குள் வந்துஆதனைத் தேடிக் கண்டுபிடித்து பிரிட்டிஷ் தூதரகம் மூலமாக மீண்டும் லண்டனுக்கு வந்து சேர்வதோடு நாவல் முடிகிறது.

இதுவரை போரின் கொடூரங்கள் புறத்தே நிகழ்த்திக் காட்டிய காட்சிகளைத்தான் பலரும் ஈரம் கசிய எடுத்துரைத்துள்ள நிலையில் இந்த நாவலில் கதை சொல்லி, போரின் கொடூரங்கள் மனிதர்களின் அகத்துக்குள் நிகழ்த்திக் காட்டும் காட்சிகளின் மேல் கவனம் குவிய வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல் தெரிகிறது.

இறுதிப்போரில் சரணடையாமல் மடிந்திருக்க வேண்டிய ஆதன், அப்படிச் செய்யாமல் தான் சரணடைந்தது குறித்து இப்படிப் புலம்புகிறான்:

“உயிர் பிழைத்தல் என்பது ஒவ்வொரு உயிரினத்திலும் அடிப்படை ஆசை. அதற்கு ஏற்றாற் போலவே எண்ணற்ற விதிகள் பின்னப்பட்டுள்ளன. உலக இயக்கம் என்பதே அந்த ஆசையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒவ்வொரு உயிரினமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு அதிலிருந்து வென்று மேல் எழுந்து செல்வதற்குப் போட்டி, உயிர் பிழைத்தல், அகங்காரம், மோதல் என்று பல்வேறு விஷயங்களும் -அன்பு, கருணை, பாசம் என்கிற பல்வேறு சமாச்சாரங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரு கலவையாகப் படிந்து உள்ளது. இதனிடையே எங்கோ ஓரிடத்தில் அகப்பட்ட ஒரு சின்னஞ் சிறிய உயிர்தான் நான். அடிப்படையில் உயிர் வாழ விரும்புகிறேன். நான் தப்பிக்க விரும்புகிறேன். அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டுப் பார்த்தால் நான் மிக மிகச் சிறிய ஓர் உயிரினம் .தூங்கும் போதெல்லாம் எனக்குள் படியும் இந்தக் குற்ற உணர்வை எப்படி வெல்வது என்று எனக்குத் தெரியவில்லை .இதை நான் வெல்ல முடியாமல் கூட போகலாம். அதை வெல்வதைப் பற்றியே என் அந்திமக் காலம் முழுவதும் நான் யோசிக்கலாம். என் அருகே பதுங்கு குழியில் அமர்ந்திருந்த சின்னஞ்சிறு சிறுமிகள் மிக உறுதியுடன் நீர்க்குமிழி போல மிதந்து சென்று வெடித்ததை என் அந்தரங்கத்துக்குள் யோசித்துக் கொண்டே உள்ளேன். அவர்களிடமிருந்து என்னை மாற்றி அமைத்தது எது, அதற்கான விடையை எனது ஆயுட்காலம் முழுவதும் யோசித்துக் கொண்டே இருப்பேன்”.

ஓரிடத்தில் இப்படி வருகிறது. தமிழ், சிங்களம் என்று மொழி தானே வேறு வேறாக இருக்கிறது. மற்றபடி மனிதர்கள் என்ற முறையில் எல்லாரும் ஒன்றுதானே! எனவே தமிழர் – சிங்களவர் என்ற இருமையில் இருந்து ஏன் இத்தனைக் கொலைகளை நடத்திக் காட்ட வேண்டும்?

இப்படிப் பல இடங்களில் வாசகர்களை யோசிக்கத் தூண்டும் மொழியாடல்கள் இந்த நாவலின் பக்கங்களில் நிரம்பிக் கிடக்கின்றன.

000

Related posts

தீக்குடுக்கை : விமர்சனங்கள்

Annogen