கார்த்திக் பாலசுப்பிரமணியம்
ஈழப் போராட்டத்தைப் பின்புலமாகக்கொண்டு இதுவரை சொல்லப்பட்டவற்றிலிருந்து அனோஜனின் ‘தீக்குடுக்கை’ புதிதாக எதைச் சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமே இப்புத்தகக் காட்சியில் வாங்கிய நூல்களில் முதல் நூலாக இதை வாசிக்கத் தூண்டியது.
நான் வாசித்தவரையில், போரில் வன்முறைக்குட்பட்டவர்களின் பக்கம் நின்று யுத்தத்தின் அவலங்களைப் பேசும் படைப்புகளே அதிகம். போரின் துயரமும் அவலமும் சக மனிதனின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் மனநிலை உட்பட எல்லாமும் இதிலும் பேசப்பட்டாலும் அவற்றை இந்நாவல் முற்றிலும் புதிய கோணத்திலிருந்து அணுகுகிறது.
ஈழத்திலிருந்து யுத்தம் காரணமாக இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டவர்களின் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்த ஆதனின் குற்ற உணர்வே நாவலின் மையச் சரடு. அதிலும் வெவ்வேறு காலங்களில் மூன்றுவிதமான குற்ற உணர்வுகள் அவனைப் பீடிக்கின்றன. இலங்கையின் போருக்கும் இங்கிலாந்தின் பிரஜ்ஜையாக வளரும் அவனுக்கும் பூர்வீகத்தைத் தவிர வேறெந்த பிணைப்புக் கண்ணியும் இல்லையெனினும் அவன் தீவிரமான குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுகிறான். அவ்வுணர்ச்சியின் காரணமாகப் போரில் ஈடுபடச் சென்றாலும் அவன் விட்டுவிட்டுப் போகும் காதலி எரிகாவின் நினைவுகள் அவனை வேறொரு குற்ற உணர்வுக்கு ஆட்படுத்துகின்றன. இறுதி யுத்தத்தில் பிடிபட்டுத் தப்பும்போதும் பிழைத்திருக்க வேண்டிப் பொய் சொல்ல நேர்ந்ததற்காக மறுபடியும் தீராத குற்ற உணர்வுக்கு ஆளாகிறான்.
போர்க் காலப் பின்புலத்தில் வீரம், தியாகம், துரோகம் எனப் பல்வேறு உணர்வுத் தளங்களுக்கு இடமிருந்தாலும் அதில் தோன்றும் குற்ற உணர்வை முக்கிய இழையாக எடுத்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார் அனோஜன். ரிமாஸ் மற்றும் காந்தன் வரும் பகுதிகள் நாவலின் மைய ஓட்டத்திலிருந்து விலகியிருக்கின்றன. காந்தனின் கதை இங்கே திரும்பத் திரும்ப எழுதப்பட்ட கதை. மேலும் அவனுடைய இருப்பு, இந்நாவலுக்கு மேலதிகமாக எதையும் சேர்க்கவில்லை. மாறாக, காந்தன் வரும் ஆரம்ப அத்தியாயங்கள் கவனத்தை வேறு பக்கமாக நகர்த்தி கதையின் மையத்திலிருந்து வாசகனை விலக்கவே செய்கின்றன. ரிமாஸினுடைய கதை புதியது என்றாலும் இடையில் ஆரம்பித்து முழுமை கூடாமலேயே அந்தச் சரடு முடிகிறது.
போர் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்ததன் பின் விளைவா என்று தெரியவில்லை. சில காட்சிகளை வாசிக்கும் முன்னரே யூகித்துவிட முடிகிறது. ஆதன் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இலங்கை செல்லும் நிகழ்வே பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு வாய்ப்புள்ள நாவலின் மிக முக்கியமானதொரு இடம். ஆனால், அதற்குரிய அழுத்தமான காரணம் உணர்வுத்தளத்தில் நிறுவப்படாமலிருப்பது நிறைய தர்க்க ரீதியான கேள்விகளுக்கு இடமளிக்கிறது.
ஆதனின் போர்க் கால நிகழ்வுகளையும் அதற்கு முந்தைய இங்கிலாந்து வாழ்வின் நிகழ்வுகளையும் மாறி மாறி வருமாறு வைத்திருப்பது இந்நாவல் கடத்த விரும்பும் உணர்வுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது.
தான் இழைக்காத ஒரு குற்றத்துக்கு ஆதன் ஏன் பொறுப்பேற்கிறான்? மிகப் பாதுகாப்பான ஒரு வாழ்வை மீறி அவனைப் போர்முனை வரை இழுத்துச் செல்வது எது?
ஐரோப்பிய நாடுகளில் அதுவும் குறிப்பாக பிரிட்டன் போன்ற தேசத்தில் வெளியிலிருந்து வரும் ஒருவன் எத்தனை தலைமுறையைக் கடந்தாலும் இரண்டாம்கட்ட குடிமகனாகவே பார்க்கப்படுகிறான். தன் ஒரு காலைக்கூட அழுத்தமாக ஊன்ற முடியாமல் தவிக்கிறான். அப்படியான நிலத்தில் அவன் சந்திக்கும் அடையாளச் சிக்கலே ஆதனை இலங்கையை நோக்கி விரட்டுகிறது. அங்கே நேரும் தோல்வி அவனை ரப்பர் பந்தைப் போல மறுபடியும் இங்கிலாந்தில் கொண்டு சேர்க்கிறது. ஒரே நேரத்தில் ஒரு தீக்குச்சியின் இரண்டு பக்கமும் எரிகிறது.
O
அனோஜனின் முதல் நாவல்/குறுநாவல் : ஹரிஷ் கணபதி
கதையின் மையக்கரு ஈழ இலக்கியத்தைப் பொறுத்தவரை இதுவரை அவ்வளவாகத் தொடப்படாத ஒரு இடத்தைத் தொடுவதாக அமைந்திருப்பது சிறப்பு.
ஆதன் என்னும் கதாபாத்திரத்தின் அலைக்கழிப்புகள்,குற்றவுணர்ச்சிகள், ஆகியன போர்ச் சூழலின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக எடுத்தாளப் பட்டிருக்கிறது.
ஆதன் இயக்கத்தில் சேர்வது, அங்கிருந்து பல்வேறு பிரிவுகளுக்கு மாறிக்கொண்டே இருப்பது போன்ற விஷயங்கள் கதைக்கு மிக முக்கியமானவை என்றாலும் அவ்விடங்கள் ஒரு செய்தி அறிக்கை போலச் சொல்லிச் செல்லப்படுகின்றன. அம்மாதிரி இடங்களில் ஆதனின் மன ஓட்டம் என்ன அவனது தடுமாற்றங்கள் என்ன , கற்றல்கள் என்ன என்பது போன்ற விஷயங்கள் இன்னும் விரித்து எழுதப்பட்டிருந்தால் இந்தக் குறுநாவல் இன்னமுமே அடர்த்தியாக அமைந்து வந்திருக்கக் கூடும்.
மாறாக காந்தன், ரிமாஸ் போன்ற கதாபாத்திரங்களின் மேல் கதை தேவைக்கு அதிக நேரம் பயணித்தாலும் இறுதியில் கதையின் மையச் சரடுக்கு பெரும் வலு எதையும் சேர்க்காமல் முழுமையின்றி முடிகின்றன.
சிறப்பான கதைக்களமாக இருந்தாலும் இன்னமும் கூர்மையாக மெருகேற்றப்பட்டு மெய்ப்பு பார்க்கப்பட்டிருந்தால் ( வாக்கியப் பிழைகள், எழுத்துப் பிழைகள் ) பல மடங்கு சிறப்பாக வந்திருக்கக் கூடிய படைப்பு.
எனினும் எடுத்துக் கொண்ட கதைக் களத்தைச் சரியாகச் சொன்னதற்காக நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் தான்.