சதைகள் – சிறுகதைகள் : நோயல் நடேசனின் விமர்சனப் பதிவு

காவியங்கள் எல்லாம் காமம் காதலும் பற்றியவை. இவை மூளையின் ஒரே பகுதியான ரெம்போரல்(Temporal lobe) பகுதியில் இருந்து உதயமாகின்றன. இராமாயணம் சீதை மேல்கொண்ட காமத்தின் விளைவு. மகாபாரத்தில் நேரடியான காமம் போருக்குக் காரணமற்ற போதிலும் தேவைக்கதிமாக அங்குள்ளது. ஐந்து ஆண்களின் மனைவியான சித்தரிப்பு இதையே நமக்குணர்த்துகிறது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளாது அவற்றை மதபீடத்தில் வைத்துவிடுகிறோம்.

ஹோமரின் இலியட் உலகத்திலே அழகி ஹெலன் 12 வயத்துச்சிறுமியாக கடத்தப்படுகிறாள். இரண்டாவதாக மணமான பின்பு ரொய் இளவரசன் பரிசால் கடத்தப்படுகிறாள். ஓடிசியில் பத்து வருட யுத்தம். அதன் பின் கடல் பயணம் என்று வரும்போது இருபது வருடத்தின் பின்பாக குறைந்தது 40 வயதாகிய ஒடிசியஸ் பிச்சைக்காரனாக வேடமிட்டுவரும் ஓடிசியசை அவனது மனைவி பெனிலெப்பிக்குத் தெரியவில்லை. அவனைச் சோதிப்பதற்காக அவர்களது கட்டிலை வேலையாளை நகர்த்தும்படி கேட்கிறாள். அவர்களது கட்டில் நிலத்தில் இருந்து வளர்ந்த ஒற்றை ஒலிவ் மரத்தைக் கொண்டு செய்யப்பட்டது. அந்த மரத்தையே மத்தியில் காலாக கொண்டது. எனது படுக்கையை யார் நகர்த்தமுடியும் என்கிறான் ஒடிசியஸ். வந்தது ஒடிசியஸ் என்பதை பெனிலெப்பை புரிந்து கொள்கிறாள். இருபது வருடங்கள் மறுமணம் முடிக்கத் தயாராக இருந்த மற்றவர்களைப் புறக்கணித்து பெனிலெப்பை காத்திருக்கிறாள். கட்டில் நகர்த்த முடியாதது, பெனிலெப்பையின் அசைக்கமுடியாத காதலையை மட்டுமல்ல அவர்களது காமத்தையும் காட்டுகிறது

காவியங்கள், காதலையும் காமத்தையும் பேசியளவு நவீன தமிழ்நாவல்களில் காணமுடியவில்லை. தமிழில் ஜி நாகராஜனும் ஜானகிராமனும் ஓரளவு பெண்களைப் புரிந்து கொண்டவர்கள். எஸ். பொன்னுத்துரை, சாருநிவேதிதா போன்றவர்கள் காதலையும் காமத்தையும் ஆண்குறி பெண்குறியில் கொண்டு வைத்துவிட்டார்கள். தீயில் எஸ்பொவின் வர்ணனை எனக்கு வயிற்றைக் குமட்டியது. அதேபோல் சாரு, தூசணவார்தைகளைப் பாவித்து ஒரு சிறுகதை எழுதுகிறார். இந்த மொழியைப் பாவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் சொல்புதிதிலும் ஒருவர் எழுதியிருந்தார்.காமம், ஆண் பெண்குறிகளில் இல்லை. இருப்பது எமது தலையிலே, சிற்பிக்கு உளி தேவைப்படுவதுபோல.

காமத்தை DS லாரன்ஸ் ஆன்மீகமாக்கியவர். நாற்பது வருடங்களுக்கு மேல் அவரது புத்தகம் சாட்டலிஸ் லவர் தடைசெய்பட்டிருந்தது. சமீபத்தில் படித்த புத்தகங்களில் கபிரியல் மார்கஸின் “லவ் இன் இன் த கொலரா ரைம்“ பிடித்தது. ((Love in the Time of Cholera is a novel by Colombian author Gabriel García Márquez

தமிழ் இலக்கியப்பரப்பில் நுணுக்கமான காம இலக்கியம் வராததுதற்கு என்ன காரணம் என்றால் எமது சமூகத்தில் ஆண் பெண் உறவில் சமத்துவமில்லை. ஒரு நாளுமே அறிந்து பழகாத ஆணைத் திருமணம் செய்யும் பெண்ணின் மனத்தில் எவ்வளவு அச்சம், தயக்கம், ஏன் சந்தேகமே இருக்கும்? அவற்றால் முதலிரவு மட்டுமல்ல பிற்பாடு நடக்கும் உறவுகள் கூட இரண்டு சமமற்றவர்களுக்கு காமம் உச்சத்தில் வெளிப்படாது என்பதற்குப் பல ஆதாரங்கள் மருத்துவத்தில் உள்ளது. மனிதர்கள் பரிணாமத்தில் ஒரு நன்மையைப் பெற்றிருக்கிறார்கள். என்ன தெரியுமா? மிருகங்களில் பெண்மிருகம் உச்சத்தை அடையும்போது மட்டுமே முட்டை வெளிவரும். அதன் பின்பு கருக்கட்டம். ஆனால் அப்படியான உச்சமில்லாமலே மனிதர்களில் அதாவது பெண்களில் மாதமொருமுறை முட்டை வெளியேற்றம் நடக்கும். இதனால் மனித உயிர்கள் தொடர்ந்து பெருகுகிறது.

                         எழுத்தாளர் நோயல் நடேசன்

இலக்கியம் எழுதப்போய் உயிரியல் வந்துவிட்டது. காமத்தை நுட்பமாக எழுதுவதற்கு ஒரு எழுத்தாளர் அதுவும் இலங்கையில் உருவாக முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் கதையொன்று படித்தேன்.

“சதைகள்“ என்ற சிறுகதைத்தொகுப்பில் “அசங்கா“ எனும் சிறுகதை மிகவும் நுண்மையாக காமத்தைப் பேசுவது. இங்கு மனத்தில் எழும் காமம் எப்படி அலைக்களிக்கறது. திருமணமான பெண்ணைக் காதலிக்கும்போது இங்குக் காமத்தில் ஒரு சம உரிமை வந்து விடுகிறது. முக்கியமாகப் பெண், அதிக உரிமையுடன் இந்த உறவை முன்னேக்கி செலுத்தமுடியும். அதே வேளையில் நான்கு சக்கரத்திற்கும் பிரேக்கை போட்டு ஆணை உறவில் இருந்து கழட்டமுடியும். அப்படியான உறவில் அசங்காவின் பெண்குழந்தையும் அவளது பூனைக்குட்டியும் இந்த உறவில் பிறேக்குகளாக வருவதும் மிகவும் கச்சித்தமானது. இந்தக் கதையில் விரசமற்ற காமம் வெளிப்படுகிறது

சதைகள் என்ற அனோஜனினன் சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது சில கதைகள் எனக்குப் பிடித்தன. அவற்றில் சிற்றப்பா குடும்பம் என்பது புலம் பெயர்ந்தவர்கள் இலங்கை வரும்போது நடந்து கொள்ளும் முறையைக் கண்ணாடியாக காட்டியிருந்தது. பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு போராடிய ஐரிஸ் மக்கள் தங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது உங்களது விடயங்களைத் திருத்திக் கொள்ளவேண்டுமென்றார் அயர்லாந்து நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜொய்ஸ். அது போல் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோரும் படிக்கவேண்டிய சிறுகதை இது.

வேறையாக்கள் என்ற கதை, யாழ்ப்பாணத்து சாதிப் பிரிவினையை எதுவித ஆக்ரோசமுமற்றுக் காட்டுவது. இதுவரைக்காலமும் முற்போக்குவாதிகள் எழுதியதிலிருந்து வேறுபட்டது. எழுத்தாளன் சமூகம் என்ற நீர்பரப்பில் ஒரு கல்லைப் போட்டு அலையை ஏற்படுத்துவான். போராளி தண்ணீரை இறைக்க முற்படுவான்.

நமது நாட்டில் உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் எங்வளவு கேவலமானது என்பதைக் (Incest)காட்டுகிறது. வேறுசாதியில் திருமணம் முடிக்க கூடாது, ஆனால் உறவுக்குள் நடந்த திருமணம் ஊனமான குழந்தையை பரிசாக்குகிறது.

எமது போலித்தனத்திற்கு செருப்பால் அறைந்தது போன்று இல்லையா?

சதைகள் என்ற முகப்பின் கதை பழைய பாணி. ஆனால் எழுதியவிதம் நன்றாக உள்ளது.

அனோஜனின் கதைகளில் உட்கருக்கள், மனித ஆசைகள் அவற்றுடன் போலியற்று அதேவேளையில் சமூகப் பொறுப்பாக வாழ்வதும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல என்பதும் எந்த இடத்திலும் இனவாதம் பேசாததும் எனக்குப் பிடித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *