நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை

ஆனந்தபுர பொக்ஸ் சண்டை விடுதலைப்புலிகளின் இறுதி எத்தனமாகக் கொள்ளப்படக் கூடியது. அத்தோல்வி போரை முள்ளிவாய்கால்வரை இழுத்துச்சென்று, பெரும் மானுட பேரழிவுடன் கொடூரமாக முடித்து வைத்தது. அந்த அழிவின் பின்னர் போர் ஓய்வுக்கு வந்துவிட்டதாகக் கருதினாலும் போரின் பின்னாலிருக்கும் மானுடவாழ்வின் அவலங்களை காய்ந்த இரத்தக்கறையோடு கலந்திருக்கும் சொல்லமுடியாத இரகசிய வலிகளின் முனகல்களையும் ஷோபாசக்தியின் BOX – கதைப் புத்தகம் பேச விளைந்திருக்கின்றது. ஷோபாவின் கொரில்லா(2001), ம்(2004) வரிசையோடு மூன்றாவதாக நீண்ட இடைவெளிக்குப்பிற்பாடு இணைந்திருக்கும் நாவல் Box கதைப் புத்தகம்(2015).

“கொரில்லா” தமிழ் இலக்கியச் சூழலில் மகத்துவமான நாவல்களில் ஒன்று. அவரது “ம்” நாவல் உணர்ச்சிகரமான தருணங்களையும், வாசிப்பவர்களுக்கு திகட்டாத மனவெழுச்சியைக் கொடுத்தாலும் முழுமைத்தன்மையை  அடைந்துவிடாத முயற்சி என்றே தோன்றியது. இந்த இரண்டு முன்னைய நாவல்களில் இருந்து வேறுபட்டு இன்னுமொரு தளத்தில் ஆழமாகவும் விரிவாகவும் சிறுகச்சிறுகச் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நாவலாக Box கதைப் புத்தகம் அமைத்திருக்கிறது.

box-new[7]

இதனை ஓர் உணர்ச்சிகரமான நல்ல நாவலாகக் கொள்ள முடியுமா என்று கேட்டால் அதற்கான பதிலினை இறுதியில் சொல்கிறேன்.போரின் மிகப்பெரிய மானுடப் பேரழிவினை இந்நாவல் புனைவின் மொழியின் வசீகரத்தில் மிக அருகில் புனைவின் உச்சத்துடன் சொல்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக போர் மானுட இச்சைகளையும் வலிகளையும் மாறிமாறி  ஒருதரப்புமேல் இன்னொரு தரப்பு கட்டவிழ்த்தி அரங்கேற்றவைக்க, சரியான தரப்பு பிழையான தரப்பு என்று எவையும் இல்லாமல்அனைத்தையும் எல்லாத்தரப்பும் செய்ய, மிகக்கொடூரமான விளைவுகளையும் அதன் எதிரொலிகளையும் இனிவரும் சிசுக்களும் பின்பற்ற அல்லது அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இருதரப்புகளால் அவை நியாயப்படுத்தப்படவும் செய்கின்றன. ஒரு கட்டத்துக்குமேல் மனங்களின் அடியாழத்தின் கொடூரங்கள், அதன் இச்சைகள் இன்னும் பயமுறுத்துகின்றன.வன்முறையின் எச்சங்கள் ஊடாக அன்பையும் கருணையையும் தூய ஆன்மபலத்தையும் இந்நாவல் சொல்லவருகின்றது.

பெரியபள்ளன் குளம் என்ற கற்பனையான கிராமம் ஒன்றினைக் கட்டமைத்து அதன்மேல் ஒரு இனத்துக்காக வாழ்ந்தவர்கள்,வீழ்ந்தவர்கள்,வீழ்த்தப்பட்டவர்களை உருவாக்கி இந்நாவலில்நடமாடவிடப்பட்டுள்ளது. நேரடி சாட்சியங்களையும் புனைவின் அதிசிறந்த நுட்பத்தையும், சிக்கலில்லாத தெளிந்த நீரோடையைப் போன்ற மொழியில் பிணைத்து வாசிப்பவர் மீது செலுத்தி அடைநீரோட்டத்தில் இழுத்துச்சென்று நாவலின் மையத்தில் நிறுத்துகின்றார்.

பெரிய பள்ளன் குளம் கிராமத்தை நோக்கிச் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் வந்துசேர்கிறான். வாய்பேச முடியாத சிறுவனாக அவனது வெளிப்பாடுகள் இருக்கின்றன. இராணுவமும் காவல்துறையும் அவனை இன்னுமொருபக்கத்தில் தீவிரமாகத் தேடுகின்றனர். அவன் அந்தக் கிராமத்தின் மக்களோடு கலந்துவிடுகிறான். அமையாள் கிழவியின் அரவணைப்பு அவனுக்கு இலகுவில் கிடைத்துவிடுகின்றது. அங்குள்ள ஒரு கல்லறை வீட்டைத் தன் இருப்பிடமாக்கிக்கொள்கிறான். ஷெல் வீச்சிலும் பொஸ்பரஸ் குண்டு வீச்சிலும் சிதையுற்று கைகால்களை இழந்த பெரியன்பள்ளத்துச் சிறுவர்களும் சிறுமிகளும் போர்முனைக் காட்சிகளையே நாடகமாக்கி நிகழ்த்தி விளையாடுகிறார்கள்.

அந்த அந்நியச் சிறுவன் அப்பேரவலத்தைக் கண்டு அஞ்சி அவதியுற்று நாடகத்தை நிறுத்தச்சொல்லி கூக்குரல் இடுகிறான். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல பேரவலத்தில் சிக்கிப்பிணைத்த மக்களின் வாழ்வியலுடன் தன்னை இறுக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றான். அந்தக் கிராமத்தின் கதையினூடே யுத்தத்தின் கதைகள் பல பிரதியூடாகச் சொல்லப்படுகின்றன, அவை பல்வேறு காலங்களின் அலைக்கழிப்பாக இருக்கின்றன. ஒவ்வொரு கதைமாந்தருக்குப் பின்னும் ஒவ்வொரு வாழ்வு. யுத்தவாழ்வின் கற்பனைக்கு எட்டாத வலிகளையும் மானுட அவலங்களையும் சிறிய சிறிய பெட்டிகளாக உருவாக்கி நாவலின் மையப்பெட்டியை உருவாக்குகின்றன.

பலமாந்தர்களின் எண்ணற்ற பிரதிகள் போரின்வடுவில் எஞ்சியிருந்தாலும் அவற்றில் பொறுக்கியெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையூடாக நாவலின் கட்டுமானம் உருவாகின்றது. பொறுக்கியெடுக்கப்பட்டவர்களின் கதைகளை கதைசொல்லியே உருவாக்குகின்றார். நேரடிச்சாட்சியங்கள் மூலமும் புனைவின் மேம்படுத்தப்பட்ட உருவாக்கம் மூலமும் வெற்றுக்கோப்பையில்சூடாகவழியும் தேநீரைப்போல அவற்றை நிரப்பிச் செல்கின்றார் ஷோபாசக்தி.

பல்வேறுபிரதிகளைக் கோர்க்கும் நுட்பத்திறன் உத்தி சார்ந்து இப்புத்தகத்தின் அழகியலினை மகத்துவமாக ஒப்பேற்ற விளைகின்றது. கார்த்திகை என்ற பெயருக்குப்பின்னாலுள்ள அல்லது அந்தப்பெயருக்கு உரித்தானவர் மீதான அர்த்தங்கள் பெரியபள்ளன் குளத்துக்கு புதிதாக வந்த அந்நியச்சிறுவனுக்கு கரிசனை காட்டும் அமையாள் கிழவியின் தொடுதலுக்கு வித்திட்டுக்கொடுக்கின்றது. “கோமத” என்ற வார்த்தையைக்கண்டு கடும் வன்மமான மனவெழுச்சியில் உந்தப்பட்டு வளர்ப்புக் கிளியினை அமையாள் கிழவி கொன்றுவிடுவது தொடர்பான அத்தியாயங்களும் அந்த கோமத என்ற சிங்கள வார்த்தையினை யார் கற்பித்தது என்ற சந்தேகத்தினையும் இறுதியில்வரும்அத்தியாயங்கள் அதற்கான அர்த்தங்களை வாசிப்பவரின் மனதின் ரகசிய இடங்களில் கடற்கரை மணலில் ஏற்படும் மெலிதான கால்தடம்போல பதித்து விட்டுச்செல்கின்றன. இந்த இரண்டு பிரதிகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் பேசும் பல்வேறு கதைகள் வெவ்வேறு இடங்களில் பயணித்து பல்வேறு இடங்களின் முழுமையடைந்து மையத்தினை வந்தடைகின்றது.

கொரில்லா- குஞ்சன்வயல்  ம் – பனைதீவு போன்ற புனைவுக் கிராமங்களை சித்தரித்ததுபோல் பொக்ஸ் பிரதியின் புனைவில் பெரியபள்ளன் குளம் என்ற கிராமத்தைப் புதிதாக வன்னி நிலப்பரப்பில் உருவாக்கும்போது நம்பகத்தன்மையின் அளவு அக்கிராமத்துக்கு கொடுக்கும் மானுடர்களின் வரலாறுகளிலும் பண்பாடுகளிலும் இணைந்து பிரஸ்தாபிக்கின்றது. ஷோபாசக்தியின் மொழியே கதையின் பிரதிக்குள் இழுத்து மீந்தவைக்கின்றது. நிஜம் ஏது புனைவேது என்று வித்தியாசம் இலகுவில் கண்டுபிடிக்க முடியாதவண்ணம் நிஜத்தில் புனைவைச் சிதிலமடைந்த சுவர்களின் பின்னும் சிலந்திவலை போல் கோர்த்து கதைப்பிரதியை ஒருகட்டத்தில் வாசிப்பவர்களை முழுமையாகவே நம்ப வைக்கின்றார் ஷோபாசக்தி.

விவிலியத்தினை வாசிப்பதினை ஒத்த அழகிய மொழியை உள்ளெடுக்கும் இனிய அனுபவத்தினை ஷோபாவின் மொழி மேன்மையாக வழங்குகின்றது. நடக்கலாயிற்று, நிகழலாயிற்று, எழுதலாகிற்று என்று “லாகிற்று” என்ற மொழிவழக்கை ஷோபா தனது தனது கதைசொல்லல் புனைவுமொழியில் கையாள்வார். இனம்புரியாத மொழியின் கவர்ச்சி அதில் உண்டு. ஒரு சம்பவத்தின் உச்சத்தினை இவ்வாறு அந்தச் சம்பவம் நிகழலாயிற்று என்று முதலிலே சொல்லிவிட்டு ஒரு மூலையில் இருந்து கதையினை ஆரம்பித்துப் பல்வேறு சுழலுக்குள் சுழன்று வேறோர் தளத்தில் கதை சொல்லலை உணர்ச்சிகரமாக முடித்துவைப்பார். உரையாடல்களில் பயன்படுத்தும் மொழி மிகக்கச்சிதமான வட்டார வழக்கைப் பிரயோகிக்கின்றது. மிகக்கூர்மையாகப் பேச்சுவழக்கு மொழியினை எஸ்.பொவுக்குப் பிற்பாடு பிரதியில் எழுத ஷோபாவினாலேயே முடிகிறது. உரையாடல்களில் வரும் தூஷண வார்த்தைகள் கச்சிதமாக வரவேண்டிய இடத்தில வருகின்றன. அவை இன்னும் யதார்த்தத்துக்கு அருகில் கொண்டு செல்கின்றன. மிகைப்படுத்தப்பட்டோ வலிந்தோ அவ்வார்த்தைகள் சேர்க்கப்படவில்லை. இலக்கியப்பிரதிகள் சமூகத்தின் செயற்பாடுகளையே பிரதிபலிக்கமுடியும். மிக யதார்த்தமாக அவற்றைப் பிரதியில் வடிக்க எழுத்தாளன் சமரசங்களை மேற்கொள்ளமுடியாது. தூஷண வார்த்தைகள் பிரயோகிக்கப்படும் பாத்திரங்களின் அந்த நேரத்துக்கான மனவெழுச்சியையும் சம்பவங்களையும் வைத்துப்பார்த்தல் அப்பாத்திரங்கள் நிஜத்தில் பேசியாக வேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றன.அவைகள் பிரதியில் பேசுகின்றன. யதார்த்தத்தின் விளிம்பில் நிற்கின்றன.

நாவலின் மையம் யுத்தத்தின் பின்னரான மனிதவாழ்வின் அவலங்களாக இருக்கின்றது. இந்த அவலங்களைப் பல்வேறு பிரதிகளாக உருவாக்கும்போது பல பிரதிகள் சிறுகதைக்கான பண்புகளையும் குறுநாவலுக்கான அனுபவத்தினையும் அளிக்கின்றது. அவற்றினை உடைத்து உடைத்து தொடர்ச்சியற்ற முறையில் கோர்த்து முழுமையான நாவலாக உருவாகப்பட்டுள்ளது. இந்தக் கோர்த்தல் ஓர் உத்திசார்ந்து புத்திசாலித்தனமாகக் கட்டமைக்கப்படுகின்றது. நுட்பமாக நுண்ணிய கூறுகளுடன் அழகியல்தனமாக உருவாகும்வண்ணம் அவை தங்களைத்தாங்களே வாசிப்பவர்களின் ஊகத்தில் நிரப்பிவிட்டு மௌனமாகப் பேசிக்கொள்கின்றன.

பாலியல் வணிகத்துக்காகக் கடத்தப்படும் சிறுமிகளையும் பெண்களையும் பற்றி எழுதிவரும் சைபீரிய எழுத்தாளன் ஒருவன் இலங்கையில் நடக்கும் பாலியல் தொழிலைப்பற்றிக் கேள்விப்பட்டு, அதனை எழுத இலங்கை வருகின்றான். காலி நகரில் பாலியல் தொழில் நடைபெறும் பிரபலமான விடுதியொன்றைப் பற்றி விநோதமான தகவல்களைக் கேள்விப்படுகின்றான். மிக இரகசியமானதும் பாதுகாப்பானதுமான விடுதி அது. உள்ளூர்ச் செல்வந்தர்களாலும் பணக்காரர்களாலும் அதிகம் கொண்டாடப்படும் விடுதி. அந்த விடுதியில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் அனைவரும் புலிகள் அமைப்பில் முக்கியமான தளபதிகளாகவும் போராளிகளாகவும் இருந்தவர்கள் என்றும், அவர்கள் வீரமும் தன்னகங்காரமும் மிக்கவர்கள், அவர்களுடன் உடலுறவுகொண்டு அகங்காரம்மிக்க அவர்களது வாய்க்குள் விந்துகளைப் பாய்ச்சி விடுவது மிகுந்த கிளர்ச்சியைத்தரும், உங்களை முழு ஆண்மகனாக உணர வைக்கும் என்றும் அந்த எழுத்தாளனுக்குச் சொல்லப்படுகின்றது.

ஆனால், அவர்கள் யாரும் புலிகள் அல்ல என்பதையும், மலையக,வன்னிக் கிராமப்புறங்களிலிருந்தும் சிங்கள நாட்டுப்புறங்களில் இருந்தும் வீட்டு வேலைக்கென்று ஏமாற்றி அழைத்துவரப்பட்ட பெண்களும், கடத்திவரப்பட்ட பெண்களும் அவர்கள் என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் அறிகிறான். பிறகு எதற்காக இப்படிச் சித்தரித்துச் சொல்லப்படுகின்றது என்பதுக்கு பின்னே கற்காலத்தில் இருந்துவரும் கொடூர காரணம் ஒளிந்திருக்கின்றது. அது ஒரு இனம் அல்லது ஒரு போராட்டம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட உணர்வை அடைய வேண்டும் என்றால் அதற்கு, தோற்றவர்களின் பெண்களைப் பாலியல்ரீதியாக வென்று சீரழித்துத் துடிக்கவிட்டு இன்பப்படுவதும், அதுதொடர்பாகபேசுவதும் சிலாகிப்பதும் கிளர்ச்சியை வென்ற இனத்துக்கு தந்துகொண்டேயிருக்கும் மானுட அடியாள கொடூர இச்சை என்பதே.

இடையறாத பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண் போராளிகளினதும் வன்புணர்ச்சிக்குப் பின் சிதைக்கப்பட்டு உயிர்பிழைத்த பெண்போராளிகளின் வாக்குமூலங்களின் கதைகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் உயிர்விடும் இளைஞர்களின் கதைகள், புலிகளின் இரகசியச் சிறைச்சாலைகளில் மண்டை உடைத்துக் கொடூரமாகக் கொல்லப்படும் இளைஞர்களின் கதைகள் என பல்வேறு பிரதிகள் பொக்ஸ்க்குள் சிறிதாகவும் பெரிதாகவும் அடக்கப்படுகின்றன. இந்த மானுடர்களின் வாழ்க்கையினை புனைவினூடாக எழுதும்போது அனுபவங்களில் இருந்து எழுத்து உருவாகும்போது வந்துசேரும் நுண்மை இன்னும் அதிசிறப்பாகக் கைகூடி பிரதியில் வரவில்லை. கொரில்லா,ம் நாவல்களில் இந்தக் குறைபாடு இல்லாமல் இருந்தது. இதில் தான்கேட்டறிந்த தகவல்களை புனைவினூடாக உண்மைக்கு மிகஅருகில் எழுதப்படும்போது வந்து கூடும் ஒரு சின்ன செயற்கையைக் கொண்டுள்ளது. ஒரு பட்டாம்பூச்சி மெல்லிய இலை நுனிகளில் வந்தமர்வதுபோல ஷோபாசக்தியின் கைகளிலும் சிறிய செயற்கைத்தனம் எழுதும்போது வந்தமர்ந்து விட்டது.

வேறுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் இந்த நுண்மைகள் படிப்பவர்களுக்குத் தெரியாமல்போகலாம், ஆனால் இந்தமண்ணைத்தெரிந்த தேர்ந்த வாசகன் இவ்வழகியல் செயற்கையின் உணர்வை வாசிப்பில் அடைந்து கொள்ளுவான்.பண்டாரவன்னியனின் வரலாறுகளுடன் ஷோபாசக்தி தனது புனைவுகளை சேர்த்து நீட்டிச்செல்கின்றார். ஷோபாவின் புனைவு மிகநெருக்கமாக நம்பவைக்கின்றது. வாசித்த சிலர் நிஜவரலாறுகளாக அவற்றைக் கருதத்தொடங்கும் அபாயமும் இருந்துகொண்டே இருக்கின்றது. ஷோபா இதில் வல்லவர். நிஜமான சம்பவங்களில் மிகத்தெளிவாக புனைவினை அழகாகக்கலப்பார். கதைப்பிரதியில் இவற்றைத் தன் இஷ்டம் போல் எழுதுவது கதைசொல்லல் முறைக்கு ஏற்றவொன்றாக இருக்கலாம், இலக்கியப் பிரதிகள் எதன் உத்தியோக பூர்வ சாட்சியங்களாகவும் இருப்பதில்லை. அதுபோல பாவனையே செய்கிறது. அதன் வேலை யூகங்களை நமக்கு அறிமுகம் செய்வது மாத்திரம்தான். ஆனால் நமது சூழலில் இலக்கியம் என்பது ஒரு வகையான வரலாறாகவும் இருந்துவிடுகின்றது. அதனால் பொய்யை மெய்யென நம்பவைக்கவும் முடியும். இன்னும் ஒரு ஐம்பது வருடங்களில் இன்று நடந்தவற்றை ஆய்வாளர்கள் தேடித்தான் கண்டறியவேண்டியிருக்கும். அன்று கையில் கிடைக்கும் நாவல்களை வைத்து அவர்கள் வரலாறுகளை எடை போடமாட்டார்கள் தான் எனினும், சாதாரண எளிய வாசகர்களுக்குப் புனையப்பட்ட வரலாறுகளை உண்மையென நம்பச்செய்துவிடும் ஆபத்தையும் தன்னகத்தே வைத்திருக்கும். இவ்வாறு உண்மையோடு கலக்கப்பட்ட எண்ணற்ற கதைகளை பொக்ஸ் பிரதி கொண்டுள்ளது.

ஒரு கிராமத்தைச் சித்தரிக்க கொடுக்கப்படும் வரைபடங்கள், ஆதாம் சாமியின் கல்லறைகள், இது ராணுவத்தின் பூமி என்ற பெயர்ப்பலகைகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் பெற்று பெரியபள்ளன் குளம் என்ற கனவுக் கிராமத்தில் தன் புனைவுக்கு ஏற்றவகையில் நுட்பமாக மிகுந்த யதார்த்தத்திற்கு அருகில்கொண்டுவர ஷோபாசக்தி மிக முயன்றாலும் படிக்கும் வாசகனுக்கு கற்பனையை விரிவாக்கிநிகர்வாழ்க்கை வாழச்செய்யும் இடத்தில சிறிய செயற்கையையும் துவித்துவிட்டுள்ளது. வன்னி மண்ணை இப்புத்தகத்தை எழுதிய ஷோபாசக்தி தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்தபின் நேரில் பார்க்கவில்லை. கேட்டறியும் செய்திகளிலும் தரவுகளிலும் இருந்து அந்த மண்ணுக்கு மிகவருகில் புனைவுலகத்தில் சென்று கற்பனைசெய்து பிரதியில் கொண்டுவந்துள்ளார். ஆழ்ந்து படிக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தில் திட்டுத்திட்டாக உணரவைக்கும் அழகியல்சார்ந்த வலிகளின் சித்தரிப்பிலுள்ள செயற்கைதனத்தின் உணர்வுகளைக் தருவதற்கு அதுவொரு காரணமாக இருக்கலாம். இக்குறைபாட்டைத்தவிர அழகுணர்வைத் தீட்டி வாழ்க்கையை நோக்கியிழுக்கும் படைப்பாகவே பொக்ஸ் உள்ளது.

எந்த ஒரு படைப்பையும் நாம் அழகியல் நோக்கிலேயே முதலில் அணுகத்தொடங்கவேண்டும். ஒருவருக்கு உடன்பாடான கருத்துக்களோ அல்லது சமகாலக் கருத்துக்களோ ஒரு காரணம் அல்ல. நல்ல படைப்பென்பது அதன் கருத்தியல் மைய எல்லைகளையும் தேச, இன, மொழி, பால் எல்லைகளைத் தாண்டிச்சென்று வாசகனைப் பாதிக்கவேண்டும். அந்த ஆதாரசுழற்சியிலே இலக்கியமென்னும் செயற்பாடு சுழல்கிறது. ஷோபாசக்தியினை வெறும் புலியெதிர்ப்பாளராகச் சித்திரித்து அவரின் புனைவின் அழகியலைப் பற்றி வியக்காமல், விமர்சனம் செய்யாமல் கருத்து நிலைப்பாட்டை வைத்து விமர்சனம் செய்பவர்கள், புறக்கணிப்பவர்கள், கடந்து செல்பவர்களை என்னவென்று சொல்லவது?

இலக்கியத்தினை உணரத் தெரியாத வாசிப்பனுவத்தினை உணராத மழுங்கடிக்கப்பட்ட சிந்தனையைக் கொண்டவர்க்ளாகவே கருதவேண்டும். இலங்கைத் தமிழ் எழுத்தில் மட்டுமல்ல உலகத்தமிழ் இலக்கியத்திலும் இந்த நூற்றண்டின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் ஷோபாசக்தி.இப்புத்தகத்தில் “அம்மா! ஒரு நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை.” என்றொரு வரிவரும்.கொடூரமான இனவெறுப்புக்கும் போர்வலிகளுக்கும் அப்பால் பெளத்தத்தின் மகத்தான மானுடப் பேரன்பின் பெருங்கருணையையும் அளவிலா அன்பையும் ஒரு கட்டத்தில் ஒரு சிறுவனூடாகப் புகட்டும்இதனை ஓர் உணர்ச்சிகரமான நல்ல நாவலாகக்கொள்ள முடியுமா என்று கேட்டால் ‘ஓம்’ என்றே சொல்வேன். சிறிய கலைக்குறைபாடு இருந்துகொன்டே இருந்தாலும் அதிர்ச்சியும் விழிப்பும் அளிக்கும் நாவல்தான்.

Box – கதைப் புத்தகம் ஒரு கொடுங்கனவின் சித்திரம்.

2016 ஆக்காட்டி ஜனவரி – மார்ச் இதழில் வெளியாகிய கட்டுரை.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *