அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி..

அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது.

எனது பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தேன். இந்தக் காலப்பகுதியில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்க வாய்ப்பு கிடைத்தது. ஓரளவுக்குச் சிங்களம் பேசவும் பழகிக்கொண்டேன். தற்பொழுது ‘சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள Nottingham பல்கலைக்கழகத்தில் கற்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆதர்ச/ தாக்கம் செலுத்திய தமிழ்/ உலக எழுத்தாளர்கள் ?

அனோஜன்: முகமாலையில் போர் ஆரம்பித்தவுடன் வடக்கும் தெற்கும் துண்டிக்கப்பட்டது. பின் தொடர்ச்சியான மின்வெட்டு ஊரடங்குச் சட்டத்தால் யாழ்ப்பாணம் இருளிலும் மௌனத்திலும் வீழ்ந்திருந்தது. வெறுமை பீடித்திருந்த அக்காலத்தில் கிடைத்த நேரத்தில் வாசிப்பை இன்னும் கூட்டினேன். ஊரடங்குச் சட்டம் பகலில் நீக்கப்பட்டபின் எதேச்சையாக நூலகத்தில் ஜெயமோகனின் புத்தகங்களைக் கண்டு வாசித்தேன். எனக்குள்ளிருந்த நிறைய அகப்பிரச்சினைகளை, inferiority complex போன்ற சிக்கல்களுக்கான விடைகளை அவர் எழுத்திலிருந்து கண்டுபிடித்து என்னை மீட்டேன். மிகப்பரவசம் தந்த இனிய நாட்கள் அவை. சுற்றிலும் வன்முறையும் படுகொலைகளும் நிகழ்ந்தபோதும் என் அக உலகம் கற்பனையால் பல எல்லைகளைத் தகர்த்துக்கொண்டிருந்தது. ஜெயமோகன் அதற்கு முக்கிய காரணம். பல எழுத்தாளர்களை அந்த நேரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாலும் ஜெயமோகன் எனக்குரிய அந்தரங்கத்திற்கு நெருக்கமான எழுத்தாளராக இருந்தார். எழுத்தாளர் என்பதைத் தாண்டியும் அவர் மேல் பற்றிருக்க அதுவுமொரு காரணம்.

ஆதர்சம் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டிருக்கலாம், எனக்கு ஆதர்சம் என்றால் ஜெயமோகன், அ. முத்துலிங்கம், சு. வேணுகோபால், ஷோபாசக்தி, எம். கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை உடனடியாகச் சொல்வேன். இவர்கள் என் மேல் நிறைய தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள்.

முதல் சிறுகதை எப்போது வெளியானது? சிறுகதையை வெளிப்பாட்டு வடிவமாக தேர்ந்தது ஏன்?

அனோஜன்: ஆரம்பத்தில் எழுதிப்பார்த்த சில கதைகளை இணைய இதழ்கள் பிரசுரித்து இருந்தாலும் என்னுடைய முதல் சிறுகதையாகக் கொள்வது ‘இதம்’ என்கிற கதையைத்தான். ‘ஆக்காட்டி’ என்கிற சிற்றிதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ‘இதம்’ சிறுகதையை அவ்விதழ் 2015 இல் பிரசுரமாக்கியது. தவிர நிறைய எழுத களம் அமைத்துத் தந்ததும் அவ்விதழ்தான்.

இதுதான் சிறுகதை வடிவம் என்று பொதுமைப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன், ஒவ்வொரு காலகட்டத்திலும் உடைத்தும் வார்த்தும் நகர்ந்தவாறே இருக்கின்றது. ஆனால், அதற்குள் இருக்கும் கூர்மை எனக்கு மிகப்பிடித்தது. அதனாலே நான் அதிகம் விரும்பும் வெளிப்பாட்டு வடிவமாகச் சிறுகதை இருக்கிறது.

தற்கால ஈழ இலக்கியத்தின் போக்கு என்ன ? சவால் எவை ?

அனோஜன்: அதிகம் போர் என்பதுதான் முன்னிறுத்தப்படுகிறது. பெரும்பாலான படைப்புகள் சூடான அரசியல் கருத்துகளோடு மட்டும் நின்று விடுகின்றன. இலக்கியம் அதற்குரிய இடம் அல்ல என்பதை இன்னும் பெரும்பாலானோர் புரிந்துகொள்ளவில்லை. அதைச் சுற்றி எழும் விவாதங்கள் அரசியலை முதன்மைப்படுத்திப் பேசி பரபரப்பை உண்டு செய்து ஓய்கின்றது. அரிதாகவே இலக்கியம் சார்ந்து பேசப்படுகிறது.

கழிவிரக்கத்தை உண்டு செய்யும் ஆக்கங்கள் ஒரு பக்கம் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் அவை ஒருவகை பண்டப் பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது.

இங்கு போர் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதைத்தாண்டி நிறையவே வித்தியாசப்பட்ட பரிமாண வாழ்க்கை இங்கேயுண்டு. இலங்கையை ஓரளவுக்கு அதிக பயணங்கள் ஊடாக சுற்றிப்பார்த்தவன் என்ற முறையில் நான் காணும் கோணம் வேறொன்றாகவே இருக்கின்றது.

எண்பதுகளின் போரின் கதைகளை ஓரளவுக்கு ஷோபாசக்தி எழுதிவிட்டார், அதன் பின்னைய கதைகளை சயந்தன், குணா கவியழகன் போன்றோர் எழுதியுள்ளார்கள். எனினும் ஒருசேரப் பார்க்கும்போது 2009-க்குப்பின் ஏற்பட்ட மாற்றமும் அது தந்த சூழலில் எழுந்த மற்றுமொரு வாழ்க்கையையும் யாரும் எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை.

தமிழர்களின் வாழ்க்கை தனியே வடக்கிலும் கிழக்கிலுமோ, மலையகத்திலுமோ இல்லை. சிதறுண்டு வாழும் தமிழர்களின் வாழ்க்கை இலங்கையின் பல பாகங்கள் வரை பரவியிருக்கிறது. அவர்களுடன் பேசிப்பார்க்க அவர்களின் தேடலும் மனநிலையும் முற்றிலும் வேறோர் தளத்தில் இருப்பதைப் புரிந்துகொள்ள இயலுகிறது. இங்கேயிருக்கும் அரசியல் கொந்தளிப்புகள் அற்ற, நாம் அறியாத மற்றோர் உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் படைப்புகளில் இன்னும் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். அவர்களை அணுகிச் செல்லும் எழுத்தாளர்கள் இல்லை என்பது சவாலானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும்.

சீரான விமர்சனச் சூழல் இங்கில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. எழுதப்படும் அழகியல் விமர்சனங்களை அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் அணுகும் மனநிலை பெரும்பாலும் இன்னும் விட்டுப் போகவில்லை. சில எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களுக்குக் கிடைக்கும் கறாரான அழகியல் விமர்சன மதிப்பீட்டை, விமர்சனம் எழுதியவரை புலி எதிர்ப்பு / புலி ஆதரவு என்ற சட்டகத்தில் வைத்து எதிர்வினை ஆற்றி தம் மீதான நிராகரிப்புக்குச் செயற்கையான அனுதாபம் கோருவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது. சமீப காலமாக இந்தப் போக்கு அதிகமாகியுள்ளதாகவும் தோன்றுகின்றது. முக்கியமாக ‘புலி எதிர்ப்பு’ எனும் சாயத்தை விமர்சகர்களிடமும், படைப்பாளிகளிடமும் பூசி தம்மைத் தற்காத்துக் கொள்ளும் போலி மனோபாவம் ஒருபக்கம் வலுப் பெறுகிறதோ என்று அச்சம் கொள்கிறேன். படைப்பில் இருக்கும் அரசியலும் விவாதிக்கப்பட வேண்டியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கு படைப்பிலக்கியத்திற்கு உகந்ததல்ல. அழகியல் என்பது இலக்கியத்தின் முதல் இடம் என்பதே என் புரிதலாக இருக்கிறது.

இலங்கை தமிழ் சூழலில் தோற்றம் பெற்ற மிக முக்கிய படைப்பாளிகளின் படைப்புலகம் சார்ந்த விரிவான கட்டுரைகள் இன்னும் இங்கிருந்து எழுதப்படவில்லை. வெறுமே ஒற்றை வரி ஆதரிப்பும் நிராகரிப்புமே அதிகமாகவுள்ளது. எதிர்காலத்தில் விரிவாகப் பல முன்னோடிகளின் படைப்புலகம் சார்ந்து கட்டுரைகள் எழுதி புத்தகமாக்கும் எண்ணமுண்டு.

காமத்தை எழுதுவதன் சவால் / தேவை என்ன? கிளர்ச்சியுடன் நின்றுவிடாமல் காமம் அக விசாரணையாக, மனித இயல்புகளின் மீதான விசாரணையாக திகழ வேண்டும் என்று நம்புகிறேன்.

அனோஜன்: ஏன் காமத்தை எழுதவேண்டும் என்று கேட்டால், நமது வாழ்க்கையை எழுத காமத்தை எழுதவேண்டும் என்றுதான் சொல்வேன். நீங்கள் குறிப்பிடும் கருத்துகளுடன் நூறுவீதம் உடன்படுவேன். காமத்தை எழுதுதல் என்பது காமத்துக்கு பின்பே இருக்கும் வாழ்க்கையை எழுதுதல் என்பதுதான். சித்தரிப்புகளில் வெறுமே அதிர்ச்சியூட்டும் விவரணைகளுடன் நின்று விடுதல் ஒருபோதும் காமத்தை எழுதுதல் என்பதாகாது. அதன் தருணங்களுக்கு பின்பேயுள்ள உணர்வுகளைத் தொட்டு எடுக்க வேண்டும், இங்கே வாசகர் வாசிப்புக்கு வேலை கொடுக்கும்போது கொஞ்சம் பிசகினாலே வெறும் சித்தரிப்புகளாக எஞ்சிவிடும். அந்த இடங்களே சவாலானவை.

போர் உங்கள் கதைகளில் அதிகம் விவரிக்கப்படாமல் பின்னணியில் சித்தரிப்பதற்கு ஏதும் காரணங்கள் உண்டா ?

அனோஜன்: போருக்குள் பால்யத்தில் இருந்திருந்தாலும் எங்களுக்குள் குதூகலமான வாழ்க்கையும் ஒருபக்கம் இருந்தது. இறப்புகள் மத்தியிலும் கிரிக்கெட்டும், கால்பந்தும் எல்லோரையும் போல நண்பர்களுடன் இணைந்து விளையாடியும் இருக்கிறோம். வெற்றுச் சன்னங்களை விதம்விதமாக போட்டி போட்டு சேர்த்திருக்கிறோம். காதல், காமம், பிரிவு, உறவுச் சிக்கல் எல்லாம் சராசரி வாழ்க்கையில் இருக்கும் இயல்புடன் நம்மிடமும் இருந்தன. போர் மேலதிகமான ஒன்றுதான். புறநிலையான ஒன்றாகவே போரின் வெளிப்படை அழிவுகளை பார்க்கிறேன். போரின் உக்கிரம் பிரம்மாண்டமானதாக இருப்பினும் அகவயச் சிதைவே எனக்கு இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறது. போர் தந்த அகவய உணர்வை என்னைச் சுற்றியிருந்த மனிதர்களிடம் தேடுவதிலே எனக்கு அதிக நாட்டம். உள்மனதைத் தேட எனக்குக் கிடைக்கும் திறப்புகள் அவ்வாறே எழுத வைக்கின்றன.

நாவல் எழுதும் உத்தேசம் உண்டா ? களம் என்ன ?

அனோஜன்: உண்டு. ஆரம்பித்திருக்கிறேன். இப்போதிருக்கும் உலகமயமாதல், பொருளாதாரச் சூழல் விதைத்திருக்கும் வாழ்க்கை புறவயமான இயங்குதலை இலகுவாக்கி இருந்தாலும் அகப்பிரச்சினைகள் இன்னும் அதே இறுக்கத்துடன்தான் இருக்கின்றன. கூர்ந்து பார்த்தால் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அந்நியமாதல். சமூக வலைத்தளங்கள் கூட்டாக இருப்பது போன்ற மாயையைத் தந்தாலும் இன்னும் இன்னும் தங்களுக்குள் அந்நியமாகிக் கொண்டே இருக்கிறார்கள். உறவுச்சிக்கல் அந்நியமாதலில் அதிகம் சிக்கி அடிவாங்கியுள்ளது. இந்தக் கோணத்தில் ஒரு உறவுச்சிக்கல் சார்ந்த நாவலுக்கான கருவே உதித்தது. பார்க்கலாம் எவ்வாறு வரும் என்று. எழுத எழுதவே என்ன எழுதுகிறேன் என்று எனக்கே தெளிவாகும்.

நவீன தொழில்நுட்பம் படைப்பூக்கத்தை சிதைக்கிறது, சமூக ஊடகங்கள் கவனச் சிதைவை ஏற்படுத்துகின்றன என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே. .அதைப் பற்றி ?

அனோஜன்: இவற்றைப் பொதுமைப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். அவர்கள் அவர்கள் நவீன தொழில்நுட்பத்தை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறையிலே தங்கியுள்ளது. சமூக வலைத்தளம் நம்மைப் புனையும் இடம். நிஜ வாழ்க்கையில் கிடைக்காத வாழ்க்கையை அதில் செய்து பார்க்கலாம்/ காட்டிக் கொள்ளலாம். அதனூடாக ஒரு அகச் சமநிலையை உருவாக்கி நமக்குள் திருப்தியடையலாம். அங்கேயே மூழ்கி வெற்று வம்புகளுக்குள் சுழன்றவாறிருந்தால் கவனச்சிதைவை ஏற்படுத்தும்தான். அதன் எல்லையைத் தெரிந்து வைத்திருந்தால் நம் இடத்தைத் தொலையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்பத்தை படைப்பூக்கத்தை அதிகரிக்க அதிகம் பயன்படுத்தலாம். இன்றுள்ள தொடர்பாடல்களை துரித கதியில் சாத்தியப்படுத்தித் தந்தது தொழில்நுட்பம்தான். மின்மடலில் உடனுக்குடன் விரிவாகப் பேசிக்கொள்ள முடிகிறது. நண்பர்களுடன் வாட்ஸப் குழுவை ஏற்படுத்தி இலக்கியம் பேச முடிகிறது. இதெல்லாம் முன்னைய தலைமுறைக்கு சாத்தியம் இல்லாதவொன்று. அவர்கள் நண்பர்களைத் திரட்டவும் பேச இடமும் தேடி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார்கள். கடிதங்கள் எழுதி நாட்கணக்காக பதிலுக்கு காத்திருந்திருக்கிறார்கள். நமக்கு தொழில்நுட்பம் அதை மிக எளிமைப்படுத்தியுள்ளது. கிண்டிலில் இன்று பல புத்தகங்களை உடனே வாங்கி வாசிக்க இயலுகிறது. சில காலங்கள் முதல் தமிழ்நாட்டில் இருந்து புத்தகங்கள் தருவிக்க அதிகளவான நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று பெரும் உடைவை தொழில்நுட்பம் செய்து தந்திருக்கின்றது.

காட்சி ஊடகங்கள் இன்றைய புனைவெழுத்தின் மீது என்னவிதமான தாக்கம் செலுத்துகின்றன ?

அனோஜன்: கலைகள் தொடர் நெருப்பு போல ஒன்றிலிருந்து ஒன்று பற்றி எரிந்து செல்லும். காட்சி ஊடகங்களில் முதன்மையாக இருக்கும் திரைப்படங்கள் புனைவெழுத்தை அதிகம் பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. காட்சி மொழி அகத்துடன் மேம்போக்காகவே உரையாடும் என்பதே என் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலிருக்கும் சிக்கல் என்பது நமது சொந்த அவதானிப்புகளை அழிக்கலாம். புனைவில் சம்பவங்களை கோர்க்கும்போது ஆசிரியனின் கோணம் அங்கேயிருக்கும், காட்சியூடகம் தரும் தாக்கம் அக்கோணத்தை அழித்துவிடலாம். இதனால் நுட்பமான தழுவல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனை அனைவருக்கும் உரிய ஒன்றாகப் பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும் சிலரிடம் இந்தச் சிக்கலை அவதானிக்க முடிகிறது.

அதே நேரம் காட்சி ஊடகங்கள் காட்டும் காட்சிகள் பல்வேறு கற்பனைகளைத் திறந்தும் விடுகின்றன. அதிலிருந்து பற்றி மேலேறிச் செல்வதே புனைவு எழுத்தாளரின் தனித்துவம்.

எழுதுவது சார்ந்து ஏதும் தனிப்பட்ட வழக்கங்கள் உண்டா? (இடம்)

அனோஜன்: இல்லை. எச்சூழலிலும் எழுதவேண்டும் என்பதையே விரும்புகிறேன். அதனால் அவ்வாறானவொன்றுக்குள் சிக்க விரும்பவில்லை. அதில் கவனமாகவே இருக்கிறேன்.

கதைகளை திருத்துவது உண்டா?

அனோஜன்: நிச்சயம் உண்டு. குறிப்பிட்ட சிலரிடம் அனுப்பி பிரசுரத்துக்கு முதல் அபிப்பிராயம் கேட்பதும் உண்டு. உடன்படக்கூடிய இடங்களைத் திருத்துவதுண்டு.

ஒரே அமர்வில் கதை எழுதி முடித்து விடுவீர்களா?

அனோஜன்: பொதுவாக இரண்டு அமர்வில் எழுதி முடிப்பதுண்டு. சில நேரங்களில் அதிகம் எடுத்துக் கொள்வதும் உண்டு. மூன்றாம் அமர்வில் பெரும்பாலானவற்றை திருந்தி செப்பனிட்டு விடுவேன்.

‘எதற்காக எழுதுகிறேன்’? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

அனோஜன்: ‘கவிஞர் இசை’ ஒரு கட்டுரையில் இவ்வாறு சொல்வார், “எழுத்துக்காரனுக்கு இயல்பிலேயே ஒரு கோணல் இருக்கிறது. அவன் தன் கோணலை இரசிக்கிறான். அந்த கோணலின் வழியே அவன் இந்த சலித்த உலகத்தை புதிதாக்கிப் பார்த்துக் கொள்கிறான். நான் எல்லோரையும் போல அல்ல என்று அவன் முதலில் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான். பிறகு ஊருக்குச் சொல்ல முனைகிறான்.” இசையின் இந்த வரிகள் எனக்கு மிக நெருக்கமானவை. எனக்குள் சொல்ல ஒன்றுள்ளது. என் கோணத்தில் நான் கண்ட ஒன்றை, அதை எழுதிப்பார்க்கும்போது அதுவே எனக்கு ஒரு விடையைத் தருகிறது. அது கொஞ்சம் புதிராகவும் இருப்பதோடு என் அகங்காரத்தையும் உசுப்பிவிடுகிறது. அதனாலே மேலும் எழுதத் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டு தமிழ் இலக்கிய சூழல், ஈழத் தமிழ் இலக்கிய சூழல் சமகால ஒப்பீடு?

அனோஜன்: ஈழ இலக்கியம் முற்போக்கு, லட்சியவாதம், தேசியவாதம் என்பதற்கூடாக வளர்ந்தது. கலைகளைப் பிரச்சாரத்துக்கு உபயோகித்தமையே அதிகம். இப்போதுதான் அதில் மாற்றம் காண முனைகிறது. படைப்புலகம் சார்ந்து, இலக்கியத்தின் அடிப்படையான நுண்மையான நுண்ணுணர்வுகள் மீதான விவாதங்கள் எல்லாம் இங்கு எழும்பவில்லை. இப்போது அதற்கான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டு இலக்கிய சூழல் நல்ல இடத்திலே உள்ளது என்பதே என் கணிப்பு. இலக்கியம் என்ற போர்வையில் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கப்படும் வெகுஜன எழுத்துகள் கடும் அயர்ச்சியைத் தருகின்றன. புதிதாக வாசிப்பவர்கள் முதலில் அங்கு சென்று வீழ்ந்தாலும் கணிசமானவர்கள் போகப்போக விலகி தீவிரமான இலக்கிய பக்கம் வருகிறார்கள்.

‘சதைகள்’ ‘பச்சை நரம்பு’ தொகுதிக்கு என்ன விதமான வரவேற்பு/ விமர்சனங்கள் கிட்டின?

அனோஜன்: ‘சதைகள்’ தொகுப்பு இலங்கையிலே அச்சாகி வெளியாகியது. விநியோகம் சிக்கலாகவே இருந்தது. இலங்கையிலுள்ள சில மூத்த எழுத்தாளர்கள் தனிப்பட்ட சந்திப்பில் நிறை குறைகளை குறிப்பிட்டுப் பேசியிருந்தார்கள். ‘ஆக்காட்டி’ இதழ் மட்டும் அச்சில் ஒரு விமர்சனக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. ‘நோயல் நடேசன்’ தன் வலைத்தளத்தில் ‘சதைகள்’ தொகுப்பை குறிப்பிடத்தக்க தொகுப்பாகச் சுட்டி எழுதியிருந்தார். பெரிய வரவேற்பு இருக்கவில்லதான். ஒரு அறிமுக எழுத்தாளனுக்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு இருந்தது. ‘அசங்கா’, ‘ஜீட்’ என்கிற கதைகளை அதிகளவானோர் பாராட்டி இருந்தார்கள். அதே நேரம் பெண்களின் மீதான உவமைகள், வர்ணனைகள் அவர்களை பண்டப் பொருட்களாக சித்தரிக்கின்றன என்று பெண்ணிய தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்திருந்தது.

‘பச்சை நரம்பு’ இப்போதுதான் வெளியாகியுள்ளது. விநியோகத்தில் தடங்கல் இல்லை. அதனால் என்னை ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் புத்தகத்தை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. விமர்சனங்கள் இனிமேல்தான் வெளிவரத் தொடங்கும் என்று நினைக்கிறேன். ‘போகன் சங்கர்’ பாராட்டி இருந்தார், மேலும் சகவயது சமகால எழுத்தாளர்கள் சமூக வலைத்தளத்தில் நிறைகுறைகளைச் சுட்டி எழுதியிருந்தது மகிழ்வளிக்கின்றது.

‘சதைகள்’ தொகுதியில் இருந்து ‘பச்சை நரம்பு’க்கு என்னவிதமான பரிணாமம் நேர்ந்திருக்கிறது?

அனோஜன்: ‘சதைகள்’ தொகுப்பிலுள்ள கதைகளைத் திரும்பிப் பார்க்க முதிராத வயதில் சில கதைகளை எழுதியது போல் தோன்றவும் செய்கிறது. எனக்கான புனைவு மொழியை என் முன்னோடிகளில் இருந்தே பெற்றேன். ‘சதைகள்’ தொகுப்பில் அவர்களின் தாக்கம் நேரடியாக அதிகமாக இருந்ததாக தோன்றுகின்றது. தவிர, எனக்கான தனித்துவ பார்வையிலும் முன்னோடிகளின் தாக்கம் இருந்ததை உணர்ந்திருக்கிறேன். ‘பச்சை நரம்பில்’ முன்னோடிகளிடம் இருந்து மேவி எனக்கான தனித்துவ மொழியையும், என் தனித்துவ பார்வையையும் கண்டடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.

நன்றி பதாகை, அம்ருதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *