சேரநாட்டு விஜயம்

01- கன்னிப் பயணம்

காட்டுநாயக்கா விமானநிலையத்தை இதுவரை வெளியே நின்று வேடிக்கை பார்த்த சந்தர்பங்களே எனக்கு அமைந்திருந்தது. முதல் தடவையாக கடல்தாண்டி நாடு கடக்கப் போகின்றேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னிப் பயணம் நிகழவிருந்தது. முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லவேண்டும்.

15.04.2016 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை ருத்திரதேவி புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டேன். கொட்டுவை போய்ச்சேர ஒன்றரை ஆகியிருந்தது. புதுவருடப்பிறப்பை ஒட்டிய விடுமுறையாக இருந்ததினால் கொட்டுவை வழமையான நெரிசலற்று வெறிச்சோடியிருந்தது. முதுகுப்பையையும், இழுத்துக்கொண்டு செல்லும் பயண மூட்டையையும் கடினப்பட்டு தூக்கிக்கொண்டு நெஞ்சுவலிக்க ஒரு சாப்பாட்டுக்கடையில் நுழைந்து மதியவுணவை முடித்துக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றேன். நீர்கொழும்பு சென்று நீர்கொழும்பில் இருக்கும் “சுபுன் அனுராத ஹேரத்” வீட்டுக்குச் செல்லவேண்டும். நீர்கொழும்புக்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணமாகும் அந்தப்பேருந்து வழமைக்கு மாறாக அதிவேகமாக நீர்கொழும்பு பேருந்து நிலையத்தை அடைந்தது என்னை ஆசுவாசப்படுத்தியது. நண்பன் பேருந்து நிலையத்துக்கு காரில் வந்து அழைத்துச் சென்றான். அவன் ஓட்டிவந்த கார் சத்தம் எதனையும் எழுப்பவில்லை. கேட்டபோது முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் கார் என்றான். இப்போது இலங்கை முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகச் சொன்னான். எரிபொருள் நிலையங்களுக்குச் செல்லத்தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே மின்சாரத்தை மின்னேற்றிக் கொள்ளலாம். பொது இடங்களிலும் மின்சாரத்தை மின்னேற்றிக் கொள்ளும் நிலையங்கள் அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினான். ஒருமுறை மின்னேற்றினால் 176Km ஓடும். அடடே என்று வியந்துகொண்டு அவனது வீட்டுக்குச் சென்றேன்.

அதிகாலை நான்கரைக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நிற்கவேண்டும். அன்றைய இரவு உணவை சுபுன் வீட்டில் ஆறுதலாக முடித்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றேன். அதிகாலை அனைத்தையம் சரிபார்த்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி நகரத் தொடங்கினேன். சுபுனின் குடும்பமே என்னை வழியனுப்பத் தயாராகிக்கொண்டிருந்தது. அதிகாலையில் எழும்பி சிற்றுண்டிகள், தேநீர் தந்து விமானநிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் சாப்பிடவும் பொதிசெய்யப்பட்ட உணவுகளையும் தந்து என்னை அனுப்பி வைத்தார்கள். சுபுனின் தந்தையாரும், சுபுனும் தங்களது காரில் என்னை அழைத்துச்சென்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் என்னை விட்டுவிட்டு கையசைத்து டாட்டா காட்டிவிட்டிச் சென்றார்கள்.

அனைத்து பாதுகாப்பு பரிசோதனைகளும்,நெறிமுறைகளும் முடிவடைந்த பிற்பாடு விமானத்துக்குள் ஏறிக்கொண்டேன். யன்னல் இருக்கை எனக்காக காத்திருந்தது. எனதருகில் தமிழ்நாட்டுக் செல்லும் சிங்களப் பெண்! ஒருவர் வந்து அமர்ந்துவிடுவார் என்ற நாட்பாசையும் வழமைபோல் பொய்த்துவிட சரி பரவாயில்லை தமிழ்பெண்கள் யாராவது என்றாலும் பரவாயில்லை என்று தூய தமிழ்தேசியவாதியாக என்னை மாற்றிக்கொண்டபோதும் எவரும் என்னைச் சீண்டவில்லை. விமானம் புறப்பட்டது. பக்கத்து இருக்கை வெறுமையாகவே இருந்தது. முன்னிருக்கையின் பின்பக்கத்திலுள்ள எல்.சி.டி திரையில் திரைப்படங்கள் பார்க்கலாம். எக்கச்சக்கமான திரைப்படங்கள் இருந்தன, எதனைத் தேர்வு செய்யலாம் என்று யோசித்து கண்டுபிடித்துக்க முதலே, விமானம் சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

plan 1 குடியகல்வுப்பகுதியில் வரிசையில் காத்திருக்க எனக்கு சரிநேராக மற்றொரு வரிசையில் நீலச் சட்டையுடனும் அவர் நின்று கொண்டிருந்தார். உற்றுப்பார்க்க அவரேதான்! சயந்தன். உற்சாகமாக கையசைத்து என்னை அடையாளம் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொண்டார். அவர் சுவிஸ்லாந்தில் இருந்து வந்திருந்தார். நானும் கையசைத்து பெருமூச்சை விட்டுக்கொண்டேன்.

இருவரும் சேர்ந்து வெளியேவந்து பயணப் பைகளை எடுத்துக்கொண்டு விமானநிலையத்தை விட்டு வெளியேறினோம். அப்போது தலையை சிலுப்பி வளர்ந்திருந்த தலை முடியை இடக்கையால் கோதிக்கொண்டு ஒருவர் தனக்குரிய பாணியில் அறிமுகமாகினார். அவர்தான் சோமிதரன்.

somee

சோமிதரனுடன் நானும்  சயந்தனும்.

யாழ்பாணத்தில் பிறந்து, மட்டக்களப்பில் வளர்ந்து கொழும்பில் இளமைக்காலத்தின் முக்கிய பகுதிகளைக் கழித்தவர். பொறியாளர் ஆவதை தனது லட்சியமாகக்கொண்டிருந்தபோதும் பத்திரிகை துறைக்குள் நுழைந்துகொண்டார். தினக்குரலில் வேலை பார்த்து பின் சிவராமோடும் , திசநாயகத்தோடும் இணைந்து “நோர்த் ஈஸ்டன் ஹெரல்” ஆங்கில பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிரபல ஊடகவியலாளர் சிவாரமுக்கு மிகப்பிடித்த ஊடகவியலார் பையனாக சோமிதரன் இருந்தார். அப்போதைய நாட்டின் அசாதாரண சூழலில் சிவராமன் கடத்திக் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து திசநாயவும் கைதுசெய்யப்பட சோமிதரன் நிலைமை சரியில்லை என்று 2004-இல் இந்தியாவுக்குப் பறந்தார்.

சென்னை வரும்போது அவருக்கு சென்னையில் பெரிதாக யாரையும் தெரியாமல் இருந்தது. அவர் தங்கியிருந்த அறைதான், நீங்கள் அறை என் 365-ல் பார்த்த அறை. சென்னையில் லோயலால் கல்லூரியில் படித்தார். யாழ் வந்து “எரியும் நினைவுகள்” என்ற தலைப்பில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நிகழ்வை ஆவணப்படமாக முக்கிய தரவுகளுடன் உருவாக்கியிருந்தார். கீழ் கண்ட இணைப்பில் அதனைப் பார்க்க முடியும்.

இவ்வாவணப்படம் யாழ் நூகலத்தில் திரையிடப்படவிருந்தபோது முன்னால் பாதுகாப்புச் செயலாளரினால் தடுக்கப்பட்டது.

சோமிதரன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனரகாக பணியாற்றிய பெருமையையும் கொண்டவர். ஜெயமோகன் எழுதிய “அனல் காற்று” நாவலை பாலுமகேந்திரா படமாக்க இருந்தபோது, அதன் முழு கதையையும் திரைக்கதையாக்கியதில் முக்கிய வகிபாவம் வகித்தவரும் இவரே. தயாரிப்பாளர் சிக்கலினால் இறுதியில் அப்படம் படமாகப்படவில்லை. இதில் எனக்கு ரொம்பவே சோகம்தான்.

சயந்தனையும் என்னையும் விமானநிலையத்தில் இருந்து சோமிதரன் அவரது காரில் அவரது வீட்டுக் அழைத்துச்சென்றார். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகில் அவரது குடியிருப்பு வீடு அமைந்திருந்தது. மரங்கள் சூழ சிலு சிலுப்பாக சோமிதரனின் குடியிருப்பு வீடு ஜொலித்தது. அவரது வீடு முழுவதும் பெருவாரியான புத்தகங்கள் குமிந்திருந்தன. ஈழ வரலாற்றை தொகுத்து ஆவணப்படமாக்கும் முக்கிய முயற்சியில் அவர் இப்போது இருக்கிறார், அதற்காக சேகரித்த ஈழம் சார்ந்த புத்தகங்கள் எக்கச்சக்கமாக அறையெங்கும் பரவியிருந்தன. அவரது மனைவி மதுரையைச் சேர்ந்தவர். சென்னையில் துணை ஆணையாளராகப்  பணிபுரிபவர். அவர் ரவை தோசை சுடச்சுட எங்களுக்குச் சுட்டுத்தந்தார். அதனை உண்டுகொண்டு நான் மௌனமாக இருக்க, சயந்தனும் சோமிதரனும் தங்களது பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தனர். பெரிதாக ஆதியந்தம் தெரியாதுவிடினும், இரண்டுபேருக்கும் நிறையக் காதல் தோல்விகளென்று ஊகித்துக்கொண்டேன். அப்போது சோமிதரனின் ஒருவயது மகள் எங்களைப்பார்க்க வந்தார். என்ன பெயர் என்று கேட்க “ஆதிரை!!!!!!” என்றார் சோமிதரன். ஆதிரை என்னைப் பார்த்து கண்டித்துச் சிரித்தது.

இந்தியா வந்தபின்பு சயந்தன் இணையம் பக்கமே செல்லவில்லை. அவரது கை நடுங்கிக்கொண்டிருந்தது. சயந்தனுக்காக ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 2GB SIM Card ஐ அவருடைய நண்பர் இளவேனில் கொண்டுவந்து கொடுத்தார். அப்போதுதான் அவரது கைநடுக்கம் அமர்முடுகி ஓய்வுக்கு வந்தது. அதை வாங்கிப் போட்டு தன்னுடைய WhatsApp, FB messenger தொடர்பு எல்லைக்குள் வந்துவிட்டபிறகுதான் சயந்தன் அந்தரமில்லாமலிருந்தார். எப்படி பின்நேரப் பொழுதை சிறப்பளிப்பது என்று நாங்கள் மூவரும் யோசித்தோம். காய்கறிகள் வேண்ட வேண்டி இருப்பதினால் சோமிதரனின் துணைவியார் உற்பட நால்வரும் மீண்டும் காரில் சென்னை வீதியில் உலாசென்றோம். பாணிப்பூரியை நீங்கள் சாப்பிடவேண்டும் என்று வாங்கித்தந்தார்கள். பாணி என்றாலே இனிப்புத்தான் என்று நானும் சயந்தனும் அவசரப்பட்டு அள்ளி எடுத்து வாயில்போட்டுக்கொண்டு கண்கலங்கி நின்றோம். மதியம், சோமிதரன் வீட்டில் சாப்பாடு. நீண்ட மீனை வேகவைத்து பொறித்து தந்திருந்தார்கள். அதன் சுவையைப்பற்றி தனியாகவே எழுதலாம், அப்படி அட்டகாசமான சுவை.

அதன் பின் சயந்தன் தலைமையில் திட்டம் போட்டோம். நாலு மணிக்கு இயக்குனர் ராம் அலுவகத்துக்கு செல்வது, அதன் பின் தமிழினி வசந்தகுமார் அலுவலகம் சென்று சந்திப்பது, அதன்பின் இளவேனில் நண்பர்களை சந்திப்பதோடு அவர்களுடன் இரவு உணவை உண்பது, என்றவாறு அத்திட்டம் இருந்தது. நாலுமணிவாக்கில் “வெறும் 30 நிமிடம் முதலில் ராமை சந்திப்போம்” என்ற சயந்தனின் திட்டப்படி மூவரும் புறப்பட்டோம். விருகம்பாக்கத்திலுள்ள அவரது அலுவகத்திற்குச் சென்று சேர்ந்தோம். மாமரத்தின் இலைகள் சூழ அமைதியாக அவரது அலுவலகம் இருந்தது. முன் போர்டிக்கோவில், மேசையின் முன்னால் சுதந்திரமாக அமர்ந்துகொண்டு அருகிலுள்ள ஸ்டூலில் இரண்டு காலினை போட்டவாறு தாடியை வருடிக்கொண்டு அமர்ந்திருந்தார். எங்களைக் கண்டவுடன் வரவேற்று உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார். காலில் சிறுவிபத்து ஏற்பட்டதால் அவ்வாறு அமர்ந்திருப்பதாகக் குறிப்பட்டார். எங்களுடன் வந்திருந்த சோமிதரன் ராமின் அலுவகத்தையும், ராம் அமர்ந்திருக்கும் விதத்தையும் பார்த்துவிட்டு “டக்ளசின் ஒபிஸில்” அமர்ந்திருப்பது போன்று தோன்றுவதாகச் சொன்னார்.

மிக நீண்ட வாசிப்புப்பழக்கம் கொண்ட ராமின் அலுவகத்தில் எக்கச்சக்கமான புத்தகங்கள் இருந்தன. சமீபத்தில் வெளியாகியிருந்த ஒரு கூர்வாளின் நிழலில் உட்பட பல ஈழம் சம்பந்தமான புத்தகங்கள் மேசையில் இருந்தன. கூர்வாளின் நிழல் பற்றி ராம் கேட்டபோது சயந்தன் கையைக் கூப்பி “என்னை எதுவும் கேட்காதீங்க.. எனக்கெதுவும் தெரியாது..” என்று கண்கலங்கிச் சிரித்தார். பதிலுக்குச் சோமிதரன் “என்னபா அடி பலமோ..” என்று நக்கலடித்தார்.

நான்கு கருப்பு தேநீரோடு மட்டும் உரையாடல் தொடர்ந்தது. ஆதிரையை ஒரு காலையில் படிக்கத்தொடங்கியதாகவும், இரவே முடித்துவிட்டு அப்பொழுதே சயந்தனை அழைத்துப் பேசியதையும் ராம் நினைவு கூர்ந்தார். ஆச்சிமுத்து பயணம் போகிற அந்தப்பகுதி உட்பட சில பகுதிகளைக் குறிப்பிட்டு அவை அருமையான திரைக்கதைகளாக மாற்றப்படக்கூடியவை என்றார்.

அவரது உதவியளார்கள் பலருக்கும் புத்தக வாசிப்பு ஒரு பயிற்சியாகவே இருக்கிறது. அவர்களை அவ்வப்போது நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பாலுமகேந்திரா தனது உதவி இயக்குநர்களை எப்படி வாசிப்பு என்னும் அறிவியக்கத்தில் ஈடுபடவைத்தாரோ, அதே வழிகாட்டல் அவர்களது உதவி இயக்குநர்களிடமும் தொடர்கிறது. ஒரு தலைமுறையின் நீட்சி அது.

தரமணி பாருங்களேன் என்றார் ராம். நாமளும் கிளுகிளுப்பில் சரியென்றோம். அன்ரியாவை திரையில் பார்த்தால் கிளுகிளுப்பு வருவது இயல்புதானே என்று நீங்கள் கேட்கலாம், அது உண்மையாக இருக்கலாம், ஆனால் இது வேறு. அதைப்பற்றி நான் சொல்வதாக இல்லை. இன்னமும் வெளிவராத ராமின் அடுத்த திரைப்படமான தரமணியிலிருந்து சில காட்சிகளைப் பார்த்தோம். சென்னையின் yo yo boyz, yo yo girlz பற்றிய படம்போலிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப யுகம் வாழ்வில் ஏற்படுத்திய சிதைவுகளென ஊகித்துக்கொண்டேன். நான் சயந்தனை திரும்பிப் பார்தேன். இடையிடையே மாங்காய்க் கீலங்கள், கடலை உருண்டைகள், ஊறுகாய் எனத் தீனிகள் வந்தன. அப்பொழுது ஓர் இளம் உதவியாளர்.. அவருக்கு இருபது வயதிருக்கும், சயந்தனுக்கு அருகில் நின்று தயங்கி.. “அண்ணா.. விநோதினிக்கும் லெட்சுமணனுக்கும்.. என்னவாகிவிட்டது” என்று சிக்கல் படிந்த முகத்துடன் கேட்டபோது.. சயந்தன் தட்டுத்தடுமாறியெழுந்து அவரைக் கட்டியணைத்து உச்சிமோர்ந்து.. “எனக்கும் தெரியாதப்பன்..” என்றபோது சோமிதரன் போகலாம் என்றார். அப்போது 30 நிமிடங்களைக் கடந்து ஐந்து மணிநேரமாகியிருந்தது. வெளியே இருள் மூடிக்கவிந்திருந்தது.

தொடரும்..

One thought on “சேரநாட்டு விஜயம்

  1. RAMJIYAHOO

    பொதுவாக 1970, 1980 களில் நடந்த படைப்பாளிகளின் பயணத்தை/ சந்திப்பைத் தான் புகழ்ந்து பேசுவோம்.
    திஜா சிட்டி கரிச்சன் சந்திப்பாக இருக்கட்டும், சுந்தர ராமசாமி, ஜெமோ, நீல பத்மநாபன் சந்திப்பு,
    கலாப்ரியா வண்ண நிலவன் மாமல்லன் சந்திப்பு என்று புகழுவோம்.
    அதே சுவாரஸ்யத்திற்கு இணையாக / மேலாக – இவர்களின் சந்திப்பும் உரையாடலும் நிகழ்ந்து இருக்கிறது.

    Reply

Leave a Reply to RAMJIYAHOO Cancel reply

Your email address will not be published. Required fields are marked *